Monday, October 5, 2015

வசிகரப் பொய்கள்

அத்தியாயம் 41
காலண்டரில் நாள் தாள்கள் படபடத்து உயரே எழும்பிப் பறக்கின்றன அகாடின் வாத்தியம் போல.
வங்கி. கடந்தகாலம். மகா என்கிற மகா லெட்சுமி. முகம் மங்களகரமாய்ப் பொலிகிறது. நெற்றியில் குங்குமத்தின் மேல் சிறு விபூதி தீற்றியிருக்கிறாள். பட்டுப் புடவையில் பளிச்சென்று இருக்கிறாள். “ஆச்சர்யமான பொண்ணும்மா நீ. சுடிதார் போட்டால் நவீனப் பொண்ணா ஆயிர்றே. புடவை கட்டினால் அசல் தமிழ்ப் பொண்ணா ஆயிர்றே….‘ என்கிறார் கிருஷ்ணராஜ்.
“இன்னிக்கு உன் கொண்டாட்டத்தில் மகா, ஒரு விசேஷம் தெரியுதே…“ என்கிறான் ரமேஷ். “என்ன வித்தியாசம்?“ என்று கண் விரியச் சிரிக்கிறாள் மகா. “இல்லை. காலைலயே கோவில் கீவில்லாம் போயிருக்கே. ஸ்வாமிக்கு ஐஸ் வெச்சியா?“
மகா சிரிக்கிறாள். “லன்ச் அவர்ல அந்த சஸ்பென்சை உடைக்கிறேன்…“
“உனக்கு எதுவும் தெரியுமாடா?“ என ராமசாமி பக்கம் திரும்புகிறான் ரமேஷ்.
“தெரியல்லியே…“ என்கிறான் ராமசாமி சிரிக்காமல். “ஆனால் அதை நீ சிரிப்போட சொல்லி யிருக்கலாம்…“ என்கிறான் ரமேஷ். மகா தாண்டிப் போனதும், “உனக்குத் தெரியும் தானே?“
“என்னது?“
“உனக்கு விவரம் தெரியும்ன்றது எனக்குத் தெரியும்“ என்கிறான் ரமேஷ்.
“அது எதுக்கு உனக்கு? மதியம் வரை காத்திரு…“ என்கிறான் ராமசாமி.
“அது எங்களுக்கும் தெரியும்…“ என விரைத்தபடி எழுந்து போகிறான் ரமேஷ்.
மதிய நேரத்தில் ஸ்ரீநிவாஸ் திடீரென்று பாங்க் வருகிறான். மகா சிரித்தபடி அவனிடம் போகிறாள். அவன் கையில் கட்டுக் கட்டாய்ப் பத்திரிகைகள்.
“இதுதான் சஸ்பென்சா?“ என சிரிக்கிறான் ரமேஷ்.
மகாவும் ஸ்ரீநிவாசும் மேனேஜர் அறைக்குள் நுழைகிறார்கள். கூடவே ரமேஷும் ராமசாமியும் நுழைகிறார்கள். மகா முகம் மலர்ச்சியாய்க் காண்கிறது. ஸ்ரீநிவாஸ் ஒரு கல்யாணப் பத்திரிகையை எடுத்து அதில் மேனேஜர் பெயர் எழுதுகிறான். “அவசியம் வந்து சிறப்பா நடத்திக் குடுக்கணும் சார்“ என்று பணிவாய் முன் குனிந்து வேண்டிக் கொள்கிறான். ரமேஷும் ராமசாமியும் கை தட்டுகிறார்கள். ராமசாமியின் முகம் அத்தனை சுரத்தாக இல்லை.
“ரமேஷ்… கல்யாணத்தில் எதும் குறை வெச்சே உன்னை ஒரு வழி பண்ணிருவேன்…“ என்று ஒரு விரல் காட்டி மிரட்டலாய்ச் சிரிக்கிறாள் மகா. “ஆகா. அதுக்கென்ன மகா… ராது கல்யாணம் எப்பிடி நடத்தினோம்? அது மாதிரி இதுவும் எங்க பொறுப்பு தான்… என்னடா?“ என ராமசாமியை இடிக்கிறான் ரமேஷ்.
ராமசாமி தலையாட்டுகிறான்.
“சார்கிட்ட கேட்டால் நம்ம கல்யாணம் எப்பிடி நடந்ததுன்னே கூட விலா வாரியாச் சொல்லிருவார்…“ என ஸ்ரீநிவாசிடம் சொல்லிச் சிரிக்கிறாள் மகா.
“அப்பிடியா?“ என தோளைக் குலுக்குகிறான் ஸ்ரீநிவாஸ். “அதெப்பிடி?“
“அவர் மிஸ்டர் முக்காலம்… அவருக்கு நடந்தது, நடக்கறது, நடக்கப் போறது… முக்காலமும் தெரியும்“ என்கிறான் ரமேஷ்.
“எங்களுக்கு எத்தனை குழந்தைகள் சார்?“ என்று கண் விரியக் கேட்கிறான் ஸ்ரீநிவாஸ். மகா விரலால் வாயைப் பொத்திச் சிரிக்கிறாள். “அது மகா கிட்டக் கேளுப்பா… எங்க கிட்ட கேட்டு என்ன புண்ணியம்?“ என்கிறான் ராமசாமி. மேனேஜர் சிரித்து “அதானே…“ என்கிறார். “ஒரு ஏ ஜோக் சொல்லவா?...“ என்றவர், “வேணாம். மேனேஜரா லெட்சணமா இருக்கேன்…“ என முடிக்கிறார்.
மத்தவர்களுக்குப் பத்திரிகை வைக்கப் போகிறார்கள். “மகா எப்பிடியும் அவன் கூடத் தான் வெளியே போயிச் சாப்பிடுவாள்…“ என்கிறான் ரமேஷ்.
“நாம சாப்பிடப் போகலாமா?“ என்று கேட்கிறார் மேனேஜர். “என்ன ராமு ஒரு மாதிரி இருக்கே போலுக்கே. உடம்பு சரியில்லையா?“ என விசாரிக்கிறார்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை சார். எதோ COUNT DOWN ஆரம்பிச்சிட்டா மாதிரி…“ என சொல்லும்போதே அவன் உதடு துடிக்கிறது. அவன் கையைப் பற்றி மெல்ல அழுத்துகிறான் ரமேஷ்.
“என்ன COUNT DOWN? அப்படின்னா என்ன?“ என்கிறார் மேனேஜர். பிறகு அவர் சிரிக்கிறார். “COUNT DOWN, ராக்கெட்லாம் பறக்க விடறதுக்கு முன்னாடி தயாரிப்பு வேலைகள் நடக்கும். 48 மணி நேரம்னு சொல்லி நேரத்தைக் குறைச்சி கணக்குப் பண்ணிக்கிட்டே வருவாங்க… அது மாதிரிச் சொல்றே?“
“ஒண்ணும் இல்ல சார். மகா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தானே இருக்கு? இப்பவே கல்யாணம் நெருங்கி வர்றா மாதிரி அவனுக்குத் தோணுது…“ என்கிறான் ரமேஷ்.
“கல்யாணம் ஆனால் மகா நம்மை விட்டு, ஐ மீன், நம்ம ஆபிசை விட்டுப் போயிருவா… அந்த வருத்தமா இவனே உனக்கு?“
“நம்மை விட்டுப் போயிருவான்ற வருத்தம்தான்“ என்கிறான் ராமசாமி. மீண்டும் அவன் உடல் குலுங்குகிறது. அவன் கையை அழுத்துகிறான் ரமேஷ்.
“நானும் ரமேஷும் வெளிய சாப்பிடப் போறோம் சார்…“
“அப்ப நான் இங்க என் சீட்லயே சாப்பிட்டுர்றேன்“ என்கிறார் மேனேஜர்.
“என்னடா நீ. அவர்கிட்ட என்ன பேசறதுன்னு இல்லியா? திடீர்னு COUNT DOWN  அது இதுன்னுட்டே…“
“என்னால அடக்க முடியல்ல ரமேஷ். இது நிசம்மாவே COUNT DOWN தான். பத்திரிகை குடுத்தாளா? இன்னும் நாலு நாள்… அவ்வளவுதான் அவள் ஆயுசு…“
“அதை நான் நம்ப விரும்பல்லடா. சாரி“ என முகம் திருப்பிக் கொள்கிறான் ரமேஷ்.
“நான் என்ன பண்ணட்டும். I KNOW HER FATE. எனக்கு அவள் முடிவு தெரியும்…. என்னால… அதை… தாங்க முடியல்லடா… எனக்கு மாத்திரம் ஏண்டா இத்தனை கஷ்டம் வருது வாழ்க்கையில். எனக்கு அந்த விஷயம் தெரியாமலேயே இருந்திருக்கக் கூடாதா?“
“உனக்குத் தெரிஞ்ச விஷயம். அதை நீ எனக்குச் சொல்லாமலாவது இருந்திருக்கலாம்.“
ராமசாமி அவனைப் பார்க்கத் தலையாட்டுகிறான். “இப்ப உன்னை நம்பறதா வேண்டாமான்னே எனக்குத் தெரியலடா…“ பேசாமல் மௌனமாக நிற்கிறான் ராமசாமி. “உன் காரியம்லாம் சில சமயம் ஒண்ணும் விளங்க மாட்டேங்குது…“
“எனக்கே வௌங்கலியே… இது எல்லாம் எப்ப எப்பிடி முடிவுக்கு வரும் தெரியல்ல. நான் பாம்புன்னு அடிக்கவும் முடியாமல் பழுதுன்னு தாண்டவும் முடியாமல் ஒவ்வொரு கட்டத்திலும் தவிக்கிறேன் ரமேஷ்.“
“அன்னிக்கு என்னடான்னா திடீர்னு என்னை அகர்வல் ரத்த வங்கிக்கு வரச் சொன்னே… என் ரத்தம் எடுத்துக்கிட்டே.“
“ஆமாம். அது ரொம்ப உபயோகமா இருந்தது.“
“அந்த மட்டுக்கு சந்தோஷம்…“
“இங்க பாரு. நான் சொல்கிற விஷயங்கள் நம்ப முடியாமல் இருந்தால், நான் சொல்லும்போது கேட்டுக்கிட்டு  அதை விட்டுரு…“
“சரி…“ என்று தலையாட்டுகிறான் ரமேஷ். “என்னால முடியணுமே…“
“சாப்பிடப் போகலாமா?“ என்கிறான் ராமசாமி. “உனக்குப் பசிக்கிறதா?“ என்று கேட்கிறான் ரமேஷ். “இல்ல. பசியாவது கிசியாவது? என்னால் சாப்பிட முடியாது…“ என்கிறான் ராமசாமி. “என்னாலும்…“ என்கிறான் ரமேஷ்.
“COUNT DOWN. மகா. பயங்கரமான வார்த்தை. சாவை நோக்கி மெல்ல மெல்ல அவள் அடியெடுத்து வைக்கிறாள்… என்ன பயங்கரமான கற்பனை“ என்கிறான் ரமேஷ்.
“எனக்கு அப்பிடியே ஞாபகம் இருக்குடா… விபத்து…“‘
“வேணாம்…வேணாம்…“ என்கிறான் ரமேஷ்.
“உனக்கு தான் தொலைபேசியில் சேதி வரும். நீதான் எடுப்பே….“
“அன்னிக்கு நீ எழுந்து போனியே…. அது மாதிரி நானும் எழுந்து போயிறவா ராமு?“
“அவள் காலம் முடிஞ்ச பின்… வருது சேதி. நீ அதைக் கேட்க… இருந்தால் என்ன இல்லாட்டா என்ன ரமேஷ்?“ என்கிறான் ராமசாமி. திடீரென்று குலுங்கிக் குலுங்கி அழுகிறான் ரமேஷ்.
“இன்னிக்கு ’ஸ்ரீநிவாசோட அப்பா அம்மா வர்றாங்க அன்க்கிள்…“ என உற்சாகமாக ராமசாமியிடம் சொல்கிறாள் மகா. ராமசாமி சிரித்தபடி “மாமனார் மாமியாரை ஐஸ் வைக்கப் போறியா?“ என அவள் கன்னத்தில் தட்டுகிறான்.
“கொஞ்சம் நெர்வஸா தான் இருக்கு அன்க்கிள்…“
“என்ன எதுக்கு நெர்வஸ்?“
“அவங்க என்னை நேர்ல பாத்தது இல்லை. ரெண்டு பேருமே லண்டன்லேர்ந்து வராங்க. இங்க ஸ்ரீநிவாசோட சித்தப்பா தான் எங்க அப்பா அம்மாவைப் பார்த்துப் பேசி முடிச்சது…“
“அதுனால என்ன?“
“இல்ல. முதன் முதல்ல பார்க்கறோம். அவங்க கிட்ட எப்பிடி நடந்துக்கணும், எப்பிடிப் பேசணும்னு ஒண்ணும் தெரியல…“
“ஸ்ரீநிவாஸ் கூட வரல்லியா?“
“அவன் வரேன்னான். நாந்தான் நானே மேனேஜ் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டேன்…“
“அதெல்லாம் ஜமாய்ச்சிருவே நீ…“ என தட்டிக் கொடுக்கிறான் ராமசாமி.
ஸ்கூட்டி பிளஸ் உற்சாகமான குலுக்கலுடன் கிளம்பிப் போகிறது. சாலைகளில் வேகத் தடைகளில் சீராகச் செல்கிறது. சிக்னல்களில் நின்று கடக்கிறது. கூலிங் கிளாஸ் போட்ட மகா. ரோசா நிற உடைகளில் தேவதை போல. ஒரு திருப்பத்தில்… சர்ர் சர்ர் என்று பிரேக்குகள் போடப் படுகிறான். கடைசியில் நிற்கிற காரில் இருந்து யாரோ இறங்கி ஓடி வருகிறான். என்னாச்சி? என்னாச்சி? என்னாச்சி?... என குரல்கள்.
“அந்த விபத்தைப் பத்திச் சொல்லு…“ என்கிறான் ரமேஷ் திடீரென்று.
“ஏன்?“
“இருக்கட்டும். இன்னும் எத்தனை நாள்?“
“நாலு நாள்…“
“சொல்லு…“
“என்ன சொல்லணும்?“
“உனக்கு அந்த விபத்து பத்தி… என்ன தெரியுதோ சொல்லு…“
“இன்னிக்குத் தேதி என்ன?“
“அக்டோபர் 1.“
“நாலாம் தேதி. அந்த விபத்து. ஆஸ்பத்திரி. மார்ச்சுவரி. நாங்க… மகாவோட அப்பா அம்மா… எல்லாருமா போலிசு கிட்ட கெஞ்சறோம். பாடி ஏற்கனவே ரொம்ப மோசமா சிதைஞ்சி போயிருக்கு… போஸ்ட்மார்ட்டம் வேணாம்னு சொல்லிப் பார்த்தோம்.“
“விபத்தைப் பத்திச் சொல்லு…“
“விபத்து நடந்து முடிஞ்ச பிறகு நான் அந்த ஸ்பாட்டுக்கபப் போனேன்டா.“ ரமேஷ் தலையாட்டுகிறான். “அந்த பச்சை ஸ்கூட்டி பெப்… அது அப்படியே சப்பளிஞ்சு…“
“அது கூட மோதியது என்ன வண்டி?“
“ம்….“ என யோசிக்கிறான் ராமசாமி. “வெள்ளைக்கலர் ஐ டென்.“
“அது எப்பிடி உனக்குத் தெரியும்?“
“மகா வண்டி பக்கத்தில் கொஞ்சம் தள்ளி… அதுவும் நின்னுட்டு இருந்தது. அதுக்கு சின்ன நெளிசல் தான்…““
“வண்டி நம்பர் ஞாபகம் இருக்கா?“
“இல்ல…“
“உன்னை நம்பறேன் ராமு. இது ESP யோ, டெலி பதியோ… உன்கிட்ட ஒரு சக்தி இருக்குடா. யோசி. யோசி…“ ராமசாமி சிந்திக்கிறான். “திரும்ப அந்த நிகழ்ச்சியை மனசில் கொண்டு வா.“ அவன் தலையாட்டுகிறான். “விடாதே ராமு… அந்த இடம் இதுதான். சரியா… இதுதான் அந்த இடம்…“ ராமசாமி அந்தப் பொட்டலைப் பார்க்கிறான். “இங்க எங்க கெடக்கு மகா வண்டி?“
“அதோ அங்க…“
“அந்த ஐ டென்?“
சற்று தள்ளி காட்டுகிறான். “வேற எதுவும் அப்ப… நீ பார்த்தப்ப தெருவில் இருந்ததா? தரையில் விழுந்தாப் போல… அந்த மாதிரி?“ ராமசாமி யோசிக்கிறான். “இல்ல“ என்கிறான்.
“இப்ப அந்தக் காரைப் பார்க்கிறாய் இல்லியா?“
“பார்க்கிறேன்…“ என்கிறான் ராமசாமி. “அதையே உத்துப் பார்… அதன் நம்பர்? நீ கவனிச்சியா?“
“அப்ப கவனிச்சேன். இப்ப ஞாபகம் இல்லை.“
“சரி. அதை விடு. வேற அடையாளம்?...“
“இரு. எதோ ஒரு அடையாளம்… ஒரு வித்தியாசமான தன்மை அதில் இருந்தது.“
“என்ன அது? என்ன அது?“
“ஐயோ ஞாபகம் வரல்லியே…“ என துடிக்கிறான் ராமசாமி.
“விடாதே. விடாதே ராமு…“ என்று தூண்டுகிறான் ரமேஷ்.
“ஆ GOT IT.“
‘கமான் ராமு.“
“அந்தக் காரின் முகப்பில் ஒரு பெயர்…“
“வெரி குட்… “
“வித்தியாசமான பேர் அது…“
“என்ன அது?“
“ஐயோ வாய் கிட்டத்தில் இருக்குடா.“
“துப்பு அதை.“
“தெரியல்லியேடா…“ என குலுங்குகிறான் ராமசாமி. “விடாதே… என்ன மாதிரிப் பேர் அது?“
“முன்னே ஒரு டிராஃப்ட். பார்ட்டி… பையனோட பேர் சொன்னேன் நினைவு இருக்கா?“
“ஆமாம்… நல்லா நினைவு இருக்கு.“
“அவன் பேர் என்ன?“
“விஷ்வக்சேனன்.“
“கரெக்ட். வித்தியாசமான பேரா இருக்கேன்னு நான் நினைவில் குறிச்சிக்கிட்டேன். இல்லியா?“
“ஆமா.“
“அதைப்போல… இந்தக் காரிலும் ஒரு பேர்… என்ன அது? என்ன அது?“ சிறிது நேரம் அப்படியே மௌனமாய் இருக்கிறார்கள். “திடீர்னு அது முன்னாடி வரும்டா. கவலைப்படாதே…“
“வேற எதாவது பேசலாமா?“ என்கிறான் ராமசாமி. “வேணாம். இந்த அழுத்தத்தை விட வேண்டாம்னு படுது எனக்கு…“ அதுவும் சரிதான், என்கிறாப் போல ராமசாமி தலையாட்டுகிறான். “ரைட்“ என்கிறான் ரமேஷ். ராமசாமி யோசித்தபடியே நெற்றியைச் சுருக்கிக் கொள்கிறான். “ஒரு ஆணோட பேர். அதுல எழுதியிருக்கு. அந்தளவுக்கு நிச்சயம்.“
“ரைட்“ என்கிறான் ரமேஷ்.
ராமசாமி யோசிக்கிறான். “அது ஒரு மாதிரி வித்தியாசமான பேர். அதுவும் புரியுது…“ ரமேஷ் அவன் தோளைப் பற்றுகிறான். “ச்சே… டைரி இலலியேடா…“ என்கிறான் ராமசாமி. “என்ன டைரி?“
“இவள்… திலகா… என் டைரியை எரிச்சிட்டாள்.“
“அதுல என்ன இருக்கு?“
“இரண்டு வருஷத்துக்கு முந்தைய டைரியில் நான் எழுதி வெச்சிருப்பேன்…“
“விபத்து பத்தியா?“
“நிச்சயமா… எழுதாமல் எப்பிடி விட்டிருப்பேன்…“
ரமேஷ் அவனையே பார்க்கிறான். “அதுல நிச்சயம் அந்த காரின் எண் இருக்கும். இல்லாட்டி கூட அந்த வித்தியாசமான பேர்… எழுதாமல் விட்டிருக்காது…“
கரெக்ட்… இப்ப டைரி இல்லை. அதை விட்டுரு. நாம நினைவில் தான் தேடணும்.“
“ஹா“ என்கிறான் ராமசாமி. “இப்ப இந்தத் தகவல் எல்லாம் எதுக்குடா?“
“ஹ்ம்“ என்று பெருமூச்சு விடுகிறான் ரமேஷ். “தேவையா இல்லியா? எனக்கே தெரியவில்லை…“ என்கிறான். “விஷ்வக்சேனன். அதே மாதிரி…“ என நெற்றியில் அடித்துக் கொள்கிறான் ராமசாமி. “வித்தியாசமான பேர்… ஒரு மாதிரி கவர்ச்சியான பேர்…“
“கவர்ச்சியா?“
“ஆம்பளைகள்ல கவர்ச்சிகரமான பேர்?“
“ஆமாம். கவர்ச்சிக்கு இன்னொரு வார்த்தைடா…“
“விடாதே….“
“ம். சிகாமணி ஒரு வார்த்தை சொன்னான்…“
“என்ன அது?“
“அவன் என் கதையையே ஒரு சினிமா மாதிரி சொல்கிறான். நீ என்னை மிஸ்டர் முக்காலம்னு கூப்பிட்டியே?“
“ஆமாம்…“
“அதைப்போல என் சம்பவங்களைக் கேட்டுட்டு அவன் ஒரு தலைப்பு சொன்னான்… ம்… ஞாபகம் வந்திட்டது…“
“என்ன?“
“வசிகரப் பொய்கள்.“
“நல்லா இருக்கே? நம்ம பேசிக்கிட்டிருக்கறதே வசிகரப் பொயக்ள் தானே?“
“வசிகர உண்மைகள்.“
“அவை வசிகரப் பொய்களா இருந்தால் நல்லது…“ என்கிறான் ரமேஷ்.
“கவர்ச்சி… அதான். அதேதான்…“
“என்னடா? யுரேகா யுரேகா மாதிரிக் கத்தறே…“
“அந்தக் காரில் எழுதியிருந்த பெயர் வசிகரன்.“
“கவர்ச்சின்னால் வசிகரம் தான்…சரிதான். பிடிச்சிட்டியே கண்ணா.“
“இந்தத் தகவல் பயன்படுமா ரமேஷ்?“
“தெரியல்லியேடா…“
“COUNT DOWN ஆரம்பிச்சிட்டதுடா. எதாவது செய்யணும்.“
“நம்மால என்ன செய்ய முடியும் ராமு?“
“கடந்த காலத்தை மாத்த முடியாது. முடியவே முடியாது… அப்பிடி முயற்சி பண்ணி… நான் தோத்திருக்கேன்டா.“
“ஹ்ம்“ என பெருமூச்சு விடுகிறான் ரமேஷ். “நினைச்சாலே நடுங்குதுடா…“ என்கிறான். “நான் அதைப் பார்த்தவன். நேரில் அனுபவிச்சவன்…“ என்கிறான் ராமசாமி. “இப்ப ரெண்டாவது தடவை…“
“வசிகரப் பொய்கள்.“
“உண்மைகள்…“
“ஐயோ. பேசாமல் நீ… எதிர்காலத்திலேயே இருந்திரேண்டா?“
“அதுதவும் என்னால முடியும்னு தோணல்லே…“ என்கிறான் ராமசாமி. அப்போது மகா ஸ்கூட்டி பெப்பில் அவர்களைக் கடந்து போகிறாள். பின்னால் ஸ்ரீநிவாஸ் அமர்ந்திருக்கிறான். “டாடா“ காட்டிப் போகிறாள் மகா.
“அவ டாடா காட்டறதே என்னமோ மாதிரி இருக்குடா…“ என்கிறான் ராமசாமி.
“வசிகர பயங்கரமான பொய்கள்“ என்கிறான் ரமேஷ். “உண்மைகள்“ என்கிறான் ராமசாமி.

அத்தியாயம் 42

அலுவலகம் முடிந்து வீட்டைப் பார்க்க ராமசாமி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அந்த மரத்தடி சோசியனைத் தாண்டிப் போகையில் அவன் புன்னகை செய்கிறான்.
“வணக்கம் சார்…“
ராமசாமி தலையாட்டுகிறான். “என்கிட்ட இத்தனை பேர் கை ரேகை பார்த்திருக்காங்க சார்… அந்தக் காலத்தில் ரஜினி கமல் இவங்களுக்கெல்லாம் பலன் சொல்லியிருக்கேன்…“
“அதனால தான் அவங்க முன்னுக்கு வந்தாங்களா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“அது அப்பிடி இல்லை சார்… அவங்க முன்னுக்கு வந்திருவாங்கன்னு ரேகைல தெரியும் இல்லியா?“ என்கிறான் சோசியக்காரன்.
“எதிர்காலத்தைத் தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்ய ஐயா?“ என்கிறான் ராமசாமி.
“அதென்ன அப்பிடிச் சொல்லிட்டீங்க… ராசி பலன் தெரிஞ்சிக்கறது வேஸ்ட்ன்றீங்களா?“
“தெரியல…“
“நிச்சயமா வேஸ்ட் இல்லை சார்.“
“விதின்னு ஒண்ணு இருக்கா இல்லியா?“
“இருக்குது.“
“விதியை மாத்த முடியுமா முடியாதா?“
“முடியும். அதே சமயம் முடியாது…“
“எதாவது ஒண்ணு சொல்லுங்க சார்…“ என்று ராமசாமி சிரிக்கிறான்.
“ஜோசியம்லாம்… எப்பிடித் தெரியுங்களா? நடக்கப் போறதை அது சொல்லும் போது… அதில் இருந்து அந்தக் காரியத்தை எப்படிச் செய்யணும், அந்தத் துன்பத்தை எப்படிச் சமாளிக்கணும்…. அப்பிடி அதுபத்தி ஒரு முன் தயாரிப்பா நாம இருக்கலாம். இல்லீங்களா?“
“எப்பிடி?“
“அதாவது… விதியை மாத்த முடியாது சார்… நீங்க சொல்றதை நான் ஒத்துக்கறேன். இன்னிக்கு மழை வரும். இது விதி. நாம அதை மாத்த முடியுமா?“
“முடியாது.“
“ஆனால் மழை வரும்னு தெரிஞ்சால்? நாம என்ன செய்யலாம்? குடை எடுத்திட்டுப் போலாமே? நனையாமல் வீடு திரும்பலாமே? இல்லிங்களா?“
“சோசியமும் வெதர் ரிப்போர்ட்டும் ஒண்ணுன்றீங்க?“
சோசியக்காரன் புன்னகை செய்கிறான்.
“தினப்படி பார்க்கிறோம்… உங்ககூட பேசல்லியேன்னு இன்னிக்கு நின்னேன்….“
“ரொம்ப சந்தோஷம்…“ என்கிறான் சோசியக்காரன். “உங்க மேனேஜர்… அவருக்குப் புரோமோஷன் வருது… அவர் கையைப் பார்த்துச் சொன்னேன்…“
“அவரா? இஙக வந்தாரா?“ என்கிறான் ராமசாமி ஆச்சர்யத்துடன்.
“நான் உங்க பாங்க்குக்கு வந்திருந்தேன் சார்…“
“மதிய நேரத்திலயா?“
“ஆமாம்.“
“மனசாற புரோமொஷன் வருதுன்னு சொன்னால்… அவருக்கு சந்தோஷம் தான்“ என்று சிரிக்கிறான்.
“அவருக்கு புரோமோஷனும் பதவி இட மாற்றமும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள வருதா இல்லியா பாருங்க…“
“வருது வருது. அது எங்களுக்கே தெரியும்…“ என்கிறான் ராமசாமி. “சோசியக்காரங்களைப் பத்தி ஒண்ணு சொல்லுவாங்க…“
“என்ன அது?“ என்று புன்னகை செய்கிறான் சோசியக்காரன்.
“யாரைப் பார்த்தாலும் நீங்க 90 வயசு வரை வாழ்வீங்கன்னு பெரிய வார்த்தையாப் போட்டுருவாங்க. அவன் 70 வயசு வரை வாழ்ந்தாலும் கூட சோசியம் சொன்னது சரின்னு சந்தோஷமா எப்ப சோசியனைப் பார்த்தாலும் கையில இருக்கிற பணத்தைக் குடுப்பான்…“
சோசியன் சிரிக்கிறான். “சொன்ன வயசுக்கு முன்னமேயே அவன் செத்துட்டான்னு வெய்ங்க..“ என தொடர்கிறான் ராமசாமி. “அவன் தான் இல்லியே. நீ சொன்னது தப்புன்னு வந்து கேட்கவா முடியும்?“
“சார் அப்படி யெல்லாம் இல்லை. நான் சொன்னால் துல்லியமா இருக்கும். ஒருநாள் கையை என்னாண்ட நீங்க காட்டணும்… மேனேஜரைப் பார்க்க வந்தேனே… அது போல உங்களுக்கும்… ஒரு மதியம் வரேன்… பாத்திறலாம்…“
“எனக்கே என் எதிர் காலம் தெரியும்…“
“என்ன தெரியும் சொல்லுங்க. அதுக்கு மேல நான் சொல்றேன்… சரிதானா?“ என்கிறான் சோசியக்காரன்.
அவன் பதில் சொல்லாமல் சிரித்தபடி தாண்டிப் போகிறான்.
ராமசாமி நடந்து போய்க் கொண்டிருக்கிறான். திடீரென்று அவன் போகும் வழியில் “தெய்வமே…“ என்று மரத்தில் இருந்து குதிக்கிறான் சின்னக்கனி. சட்டென பயந்து பின்வாங்குகிறான் ராமசாமி. “என்னய்யா தெய்வத்தையே பயமுறுத்தறியே…“ என்கிறான். “என் பேர் ராமசாமி. நீ மரத்தில் இருந்து குதிக்கறதுக்கும் அதுக்கும்… உன் பக்தி… சரியாத்தான் இருக்கு“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“என்ன சொல்றீங்க?“
“அதுவா? ஒரு ஜோக்.“
“ஜோக்கா? இருக்கட்டும் இருக்கட்டும்“ என்றவன் வயிறு குலுங்கச் சிரிக்கிறான்.
“ஜோக் சொல்லும்போது சிரிக்க மாட்டேங்கறே. சொன்னது ஜோக் அப்டின்னு சொன்னால் அதற்கு அப்பறமாச் சிரிக்கறே…“
“இது ஜோக்கா சார்?“
“ஏன் சிரிக்கப் போறியா?“
“என்ன சார்… உன்னைத் தேடித் தேடிப் பார்க்கிறேன்… எங்க, நீ கண்ணுல…  தட்டுப்படறதே இல்லை.“
“கண்ணுல ‘தட்டு‘ பட்டால்… காயம் பட்டுரும் கனி“ என்கிறான் ராமசாமி. “என்னது?“ என்று கேட்டவன் தானே புரிந்து கொண்டாப் போல, “ஜோக்கு. இல்லியா? சரி சரி…“ என்றபடி குலுங்கிச் சிரிக்கிறான். “சார் ரொம்ப தமாசு சார் நீ.“
“என்ன வேணும் சின்னக்கனி… ஏன் என் பின்னால சுத்தி வர்றே?“
“என்ன சார் அப்பிடிச் சொல்லிட்டே? நான் நாய் சார். நன்றியுள்ள உன் வீட்டு நாய்… “
“எனக்கு நாய் வளர்க்கவே பிடிக்காது கனி…“
சின்னக்கனி புரியாமல் பார்க்கிறான். சிரிக்கவில்லை. “கவலைப்படாதே சார். உனக்கு என்ன வேணும்? என்ன உதவி வேணும்? இந்த நாய் கிட்ட சொல்லு…“ விரலைச் சுண்டுகிறான்.
“நாய் கிட்ட சொல்ல நாங்கதான் விரலைச் சுண்டுவோம்…“
சின்னக்கனி சிரிக்கவில்லை. “வால் இருந்தா ஆட்டுவேன். நான் மனுசன். விரலைச் சுண்டறேன்… என்ன உபகாரம் எதுன்னாலும் கேளு… இதோ கொண்டு வந்து உன் கால்ல சமர்ப்பிக்கிறேன்…“
“ஏன்? கையில குடுக்கக் கூடாதா?“
“என்னது? ஓ…“ என குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறான். “சார் தமாசுக்கார ஆளு…“
“பாரு சார்.. இப்பதான்… ஒரு வாரம் முன்னாடி…“
“தெரியும் கனி.“
“தெரியுமா?“
“தெரியும்“ என புன்னகை செய்கிறான். “உனக்குப் பொறந்த நாள் வந்ததா?“
“சார்… பெரிய ஆளு சார் நீ. எப்பிடி சார் உனக்குத் தெரியும்?“
“அதான் உன் சிஷ்யப் பிள்ளைங்க போஸ்டர்… அது இதுன்னு…“
“அட ஆமா சார். சொன்னால் அவங்க கேட்கறது இல்லை…“ என வெட்கமாய் உடலை நெளிக்கிறான். “அதான் சார்… உன்னைக் கூப்பிடலாம்னு… தேடினேன்.“
“நான் எதுக்கு?“
“என்ன சார் அப்பிடிச் சொல்லிட்டே… யார் நீ?“
“அடிக்கடி கேட்காதே. எனக்கே குழம்பிருது.“ ராமசாமி புன்னகை செய்கிறான். “நான் வந்திருந்தேன் சின்னக்கனி…“
“என்னது?“
“ஆமாம். கனி. உன் பொறந்த நாளுக்கு… நான்… வந்திருந்தேன்.“
“ஹோ ஹோ…“ என குலுங்கிச் சிரிக்கிறான் சின்னக்கனி. “இது… தமாசுதான் சார். நல்ல பகிடி இது.“
“வந்து நான் பட்ட பாடு…“
“என்னாச்சி?“
“அதை விடு கனி…“
“ஏன் சார்? வர்ற வழியில உன்னை, என் ஆளுன்னு தெரியாமல்… கை வெச்ட்டானா எவனாவது?“
“நீதான்.“
“என்ன சார் சொல்றே?“
“அதை விடு சின்னக்கனி.“
“இது ஜோக்கா சார்? என்னாண்ட வந்து கஷ்டப் பட்டேன்றா மாதிரி… என்னா வார்த்தை சார் அது… நெஞ்சு அடைக்குது சார்.“
“சரி. சரி. அதான் விட்டுருன்னு சொன்னேனே சின்னக்கனி…“
“அதெப்பிடி சார்?“ நெஞ்சைத் தொட்டுப் பேசுகிறான். “நெஞ்சை அடைக்குது சார்.“
“அப்ப டாக்டர் கிட்டே போ.“
“நான் உன்னைப் பார்க்கல்லியே சார்…“
“அதை விடு சின்னக்கனி.“
“எப்பிடி சார் விடறது? என்னை ஒரு மனுசன்னு மதிச்சி நீ இம்மாம் பெரிய மனுசன் பார்க்க வந்திருக்கே. அது எனக்கே தெரியல்ல…“ என்கிறான்.
“அன்னிக்கு ராத்திரியாயிட்டது இல்லியா? அதான்…“
“ராத்திரி தான் சார் எங்களுக்குக் கண்ணு நல்லாத் தெரியும். தெரியணும்… கேட்டியா? சரி… சார் வந்திருக்கே. நான் உன்னை கவனிக்கல்லன்றே… எம்மாம் பெரிய தப்பு அது...“ என்றவன் திடீரென்று சிரிக்கிறான்.
“என்னது?“
“நீ சொன்னீங்களே ஜோக்கு. அது… இப்பதான் புரிஞ்சது.“
“இல்ல சின்னக்கனி. உன்கிட்டச் சொல்லாமல் நானா வந்தேனே? அதான் தப்பு.“
“என்னா சார் தப்பு. என்னைப் பார்க்க வரணும்னு உனக்குத் தோணிச்சே சார்? அது இல்லியா பெரிய விஷயம்? நான் ஒரு மடையன்… நம்ம ஆளுங்க கிட்ட சார் ஒருக்கால் வருவார்டா. கவனிச்சிக்கங்கன்னு சொல்லியிருக்கணும்…“
“அவங்க வேற விதமா என்னை கவனிச்சிட்டாங்க.“
“என்ன சார் சொல்றே?“
“சரி. கனி… நான் கிளம்பறேன்…“
“இரு சார்.“
“என்ன?“
“இன்னிக்கு சாரை நான் கவனிக்காமல் அனுப்ப முடியுமா?“
“‘என்ன பண்ணப் போறே“ என்று சிரிக்கிறான்
”ஆட்டோ…“ என்று கூப்பிடுகிறான் கைதட்டி. “அண்ணே நீங்களா?“ என ஒரு ஆட்டோ வந்து நிற்கிறது. “வா சார். ஏறு சார்…“
“எங்க?“ என்கிறான் ராமசாமி குழப்பமாய். “வா சார். அன்னிக்கு… என் பொறந்த நாள் அன்னிக்கு நான் உன்னைப் பார்க்கல. இன்னிக்கு… இப்ப… பாத்திட்டேனே?“
“அதுக்கு?“
“பாரு சார் தமாசை…“
“என்ன தமாசு கனி?“
“ஏறு சார்… வண்டில.“
“ஐயோ என்ன கனி? கனி?“ என்று அவன்  மறுப்பதற்குள் வம்படியாய் அவனை ஆட்டோவுக்குள் ஏற்றிக் கொள்கிறான் சின்னக்கனி. ஆட்டோ விர்ர்ரென்று கிளம்புகிறது.
ஆட்டோ ஓடிக் கொண்டிருக்கிறது.
“ஐயோ நான் இப்பதான் சாப்பிட்டேன்…“ என்று மறுக்கப் பார்க்கிறான் ராமசாமி. “சரி. சாப்பாடு வேண்டாம்.“
“தண்ணி கிண்ணி…எந்தப் பழக்கமும் கிடையாது எனக்கு…“
“அதுவும் வேண்டாம்…“ என்று புன்னகை செய்கிறான் சின்னக்கனி.
“பின்ன என்ன? என்னை விட்டுரு… நான் வீட்டுக்குப் போகணும்…“
“ஆ தினசரி தான் வீட்டுக்குப் போறே…“
“என்ன சொல்றே?“
“இன்னிக்கு ஒரு நாளைக்கு…“
“ஒரு நாளைக்கு?“
“ஒரு மாறுதலுக்கு…“
“மாறுதலுக்கு?... என்ன கனி?“
“பாரு சார் தமாசை… ஆட்டோ. நிறுத்து நிறுத்து.“
இறங்குகிறார்கள்.
ஒரு சின்ன வீடு அது. “இது யார் வீடு சின்னக்கனி?“
“நம்ம வீடுதான் சார்.“
“உன் வீடு இன்னும் பெரிசா இருக்கும்னு பார்த்தேன்…“
“இது சின்ன வீடு… உள்ள வா சார்…“
“இல்ல. இன்னொரு நாளைக்கு…“
“இன்னொரு நாளைக்கும் வா சார். எத்தனை தபா வேணா வரலாம். வரணும்…“
“என்னப்பா நீ. புதிர் போடறே…“ என்றபடியே உள்ளே போகிறான் ராமசாமி.
உள்ளே அந்தப் பெண் இருக்கிறாள். மனோன்மணி. “வாங்க…“ என்று வணக்கம் வைக்கிறாள்.
பதறிப் போகிறான் ராமசாமி. “வணக்கம் எனக்கா இவருக்கா?“
“அவருக்குதான்“ என்கிறான் சின்னக்கனி. அவள் தலையாட்டுகிறாள்.
“என்ன கனி இதெல்லாம்?“ என திரும்புகிறான் ராமாசமி. அதற்குள் சட்டென சின்னக்கனி வெளியே போகிறான். கதவு வெளியே தாளிடப் படுகிறது.
தட் தட் என்று கதவைத் தட்டுகிறான் ராமசாமி. “நம்மாளு அவரு… ந்ல்லா கவனிச்சிக்கோ…“ என்று வெளியே இருந்து சின்னக்கனியின் குரல்.
“அதைத் தனியா நீங்க வேற சொல்லணுமா?“
“ஐயோ…“ என்று நடுங்குகிறது அவனுக்கு. “என்ன இதெல்லாம்?“
“அட தெரியாத மாதிரிதான்…“ என்று இப்படியும் அப்படியுமாக அசைகிறாள் மனோன்மணி. கையை மேலே உயர்த்தி சோம்பல் முறிக்கிறாள். “சோம்பல் முறிக்கும் ஆம்பல். ஐயோ…“
“ஆம்பலாவது…“ என நிறுத்துகிறாள். “சாம்பலாவது… ஆம்பளைங்க நல்லாவே நடிக்கிறாங்க…“ என்று கன்னத்தில் கை வைத்துச் சிரிக்கிறாள் மனோன்மணி.
“நான் அப்பிடி ஆள் இல்லை மனோன்மணி…“
“யோவ். நீ படா கில்லாடிய்யா.“
“ஏன்?“
“நான் அப்பிடி ஆள் இல்லன்றே. என் பேரை எப்பிடி நீ தெரிஞ்சி வெச்சிக்கிட்டே?“
“அது…என்னன்னா…“ என அவன் சொல்லும்போதே “ததரீ…னன்னா“ என்று கிட்ட வருகிறாள்.
“அங்கியே நில்லு மனோ…“
“அதுக்குள்ள பேரையே சுருக்கிக் கூப்பிட ஆரம்பிச்சிட்டே…“
“வேணாம் மனோ… மனோன்மணி…“
“என்ன வேணாம்?“ என கிட்டே, இன்னும் கிட்டே வருகிறாள். “இப்பிடிச் சொல்ற எத்தனையோ ஆளை நான் பார்த்திருக்கேன்…“
“நான் பார்த்ததே இல்லை…“
“அதான் வந்திட்டியே. இப்ப பாரு…“
“ஐயோ… என்ன பண்றே?“ என்கிறான் பதட்டமாய். “இதெல்லாம் உனக்குத் தெரியாத சமாச்சாரமாக்கும்?“
“சமாச்சாரம் தெரியும். ஆனால் இதெல்லாம் தெரியாது… இங்க பார் என்ன பண்றே நீ?“
“வா.“
“வேணாம்.“
“என்னய்யா சின்ன முள்ளு ஆறுல நிக்குது. பன்னெண்டுல நிக்க வேணாமா?“
வெளியே சின்னக்கனி சிரிக்கிறான். “என்னது?” என்று திகைத்தவன் பிறகு அவனுக்கும் வெட்கம் வருகிறது. “இதெல்லாம் உடனே கனிக்குப் புரிஞ்சிருது…“ என்கறின். “எனக்கு தான் லேட்டா புரியுது.“
“இப்ப?“ என்கறின் சின்னக்கனி.
“ஒன்பது…“ என்கிறாள் மனோன்மணி.
தரை மீது அவளது துணிகள் அடுத்து அடுத்து என விழுகின்றன. “துணி துவைக்கப் போறியா?“ என்கிறான் ராமசாமி.
“ஆமாம்.“
“சரி.“
“உன்னிதையும் கழட்டிரு…“
“ஐயோ…“
“கழட்டுய்யா…“
“என்ன இது?“
அவனது சட்டை அவளது உடைகள் மேல் விழுகிறது.
வெளியே இருந்து குரல். “மனோன்மணி?“ சின்னக்கனியின் குரல். “பார்ட்டி எகிறிரப் போகுது.“
“நான் பாத்துக்கறேன்…“ என்கிறாள் இங்கேயிருந்து.
 சுவரில் ஓரமாய் பயந்து தன்னை, சட்டையில்லாத உடம்பை மறைத்துக் கொண்டு ராமசாமி. “என்னத்ததைப் பாக்கப் போறே?“
“எல்லாத்தையும் தான்…“
“ஐயோ…“ என்கிறான் ராமசாமி.
“விளக்கை அணைச்சிறவா மனோன்மணி…“ என்று வெளியே இருந்து சின்னக்கனியின் குரல்.
“ஐயோ வேணாம்… வ்வே…“ என பாதியில் ராமசாமியின் குரல் உள் வாங்கிக் கொள்கிறது. யாரோ உதட்டைக் கடித்து மூடினாற் போல.
விளக்கு அணைந்து இருள் சூழ்கிறது.


அத்தியாயம் 43
ரமேஷ் வீடு. அவனிடம் உடல் நலம் விசாரிக்க வந்திருக்கிறான் ராமசாமி. காபி எடுத்து வருகிறாள் கீதா. “எப்பிடிம்மா படிக்கிறே?“ என்று புன்னகையுடன் காபியை ராமசாமி வாங்கிக் கொள்கிறான். “அவள்தான் கிளாஸ் பர்ஸ்ட்டு“ என்று சந்தோஷமாய்ச் சொல்கிறான் ரமேஷ். படுக்கையில் படுத்திருக்கிறான். பலவீனமான, தெம்பு இல்லாத குரல். அதை வெட்கத்துடன் அங்கிகரித்தபடியே “சர்க்கரை சரியா இருக்கா அன்க்கிள்?“ என்று கேட்கிறாள்  கீதா.
“சேதி இனிப்பா இருக்கே…“ என்று சிரிக்கிறான் ராமசாமி. பின் ரமேஷ் பக்கம் திரும்பி “உனக்கு திடீர்னு இப்பிடி ஆனதும் இவதாண்டா ரொம்ப பயந்திட்டா“ என்கிறான். ரமேஷ் அவளைப் பார்த்து கரிசனமான புன்னகை ஒன்றை வீசுகிறான். “நல்லாப் பாத்துக்கறா என்னை…“
“இப்ப எப்பிடி இருக்குடா உனக்கு?“
“I JUST FEEL NORMAL.“ என்கிறான். “டாக்டர்தான் இந்த வாரம் ரெஸ்ட் எடுத்துக்கோ. அடுத்த வாரத்துலேர்ந்து வேலைக்குப் போகலாம்னு சொன்னாரு.“
“அப்ப கூட வண்டி எடுக்க வேணாம். ஒரு மாசம் போகட்டும்…“ என்கிறான்  ராமசாமி. அவனுக்குப் பின்னால் சுவரில் ரமேஷின் அப்பாவின் பெரிய படம். அதில் சருகாய்க் காய்ந்த மாலை ஒன்று ஆடிக் கொண்டிருக்கிறது. மினுக்கிக்கொண்டு சிரியல் பல்ப் ஒன்று.
“நான் கிளம்பறேன்…“ என எழுந்து கொள்கிறான் ராமசாமி. வாசல்வரை கூடவே வருகிறாள் கீதா. “வீட்ல அம்மா அப்பா யாருமே இல்லியா?“
“எல்லாருமே வெளியே போயிருக்காங்க. நான் இப்பதான் ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சி வந்தேன். ஏன் அன்க்கிள்… என் காபி நல்லா இல்லியா?“
“NAUGHTY“ என சிரித்தபடி “வெண்ணிற ஆடை மூர்த்தி காபி நல்லா யிருந்தது.“
“என்ன அது? வெண்ணிற ஆடை மூர்த்தி காபி?“
“ப்ரூஊ…“ என நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி போலச் சொல்லிக் காட்டுகிறான் ராமசாமி. கீதா சிரிக்கிறாள். “வரேன்“ என்கிறான் ராமசாமி.
நல்ல மதிய வெயில். ராமசாமி ரமேஷ் வீட்டில் இருந்து கிளம்பி தெருவில் போகிறான். அவன் ஒரு டீக்கடையைத் தாண்டும்போது ரெண்டு பேர், மீசை தாடிக்காரர்கள், அங்கே பென்ச்சில் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறான். அவர்களை எங்கேயோ பார்த்த ஞாபகம் வருகிறது. சற்று தாண்டிப் போய் நின்று தற்செயல் போல திரும்பிப் பார்க்கிறான்.
அவர்கள் இவனையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பதறிப் போய் உடனே எழுந்து நிற்கிறார்கள்.
உடனே ஒருவன் பரபரப்பாகி அலைபேசியில் பேசுகிறான். “மாமா… இப்ப வேணாம். நேரம் சரியில்ல. மாட்டிக்கிறாப்ல இருக்கு. எங்க சந்திப்போம்னு நானே இன்னொரு இடம் சொல்றேன்… நான் சொல்றவரை வெயிட் பண்ணு. எங்களைச் சந்திக்க முயற்சி பண்ண வேண்டாம்.“
“ஆகா. மழை விட்டும் தூவானம் விடல்லன்றாப்போல… சின்னக்கனி இன்னும் என்னை வேவு பார்க்கிறானா தெரியல்லியே…“ என்று சொல்லிக் கொள்கிறான்.
அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். “நம்மைப் பார்க்காத மாதிரி அவன் பார்த்தான் பாத்தியா சிங்காரம்?“ என்கிறான் ஒருத்தன். “ஐயோ போலிசுக்கே தகவல் சொல்லி ஒரு பெரிய கொள்ளைக்காரனைப் பிடிச்சிக் குடுக்கறான்னால்…  நாம எல்லாம் அவன்கிட்ட ஜுஜுபி. அவன்கிட்ட நாம உஷாரா இருக்கணும் அப்பா“ என்கிறான் அடுத்தவன்.
“இப்ப நாம அவன் பிடிச்சிக் குடுத்து போலிஸ்ல மாட்டினம்னால், பேப்பர்ல நம்ம படம் வருமா, இவன் படம் வருமாடா?“
“அதுவாடா இப்ப முக்கியம்?“ என்கிறான் சிங்காரம். “இப்ப என்ன செய்யலாம் குமார்?“
“தலைவரு என்ன சொல்லியிருக்கார்?“
“ஆமா ஆமா…“
“அவன் மேல ஒரு கண்ணு இருக்கறது எப்பவுமே நல்லது.“
தலையைத் தூக்கிப் பார்க்கிறார்கள். “ஏய் அதுக்குள்ள ஆளு மாயமாயிட்டான்டா…“ என ஆச்சர்யப் படுகிறார்கள். “டேய் சந்தேகமே இல்லை. இவன் சாதாரண ஆள் இல்லை. இவனை விடக் கூடாது“ என்கிறான் சிங்காரம்.
டீ கிளாஸை அப்படியே வைத்து விட்டுக் கிளம்புகிறார்கள். “டீக்காசு?“ என கை நீட்டுகிறான் கடைக்காரன். “கடையை உடைக்காமல் போனமேன்னு சந்தோசப் படுடா“ என்கிறான் குமார். கடைக்காரன் திகைப்பாய்ப் பார்க்க அவள் விறுவிறுவென்று போகிறார்கள்.
நாலு தெரு மூலையில் நின்று தேடுகிறார்கள். நாலு திசையிலும் தேடுகிறார்கள். “பாருடா. பட்டப் பகல். இத்தனை வெளிச்சத்தில் அவன் ஆளு எங்கயோ ஒளிஞ்சிக்கிட்டான். தப்பிச்சிட்டான்டா…“
“பார்ட்டி படா கில்லாடியா இருப்பான் போலுக்கே…“
“தலைவருக்கு ஃபோன் போட்டுச் சொல்லலாமா?“
“ஆமாம். உடனே சொல்லணும் போலத்தான் இருக்கு.“
“டேய் அங்க பாரு…“
ஒரு மரத்துக்குப் பின் ராமசாமி. யாருக்கோ செல் ஃபோனில் பேசுகிறான். “நம்மைப் பத்திதான் யாருக்கோ தகவல் சொல்கிறான் போல இருக்குடா…“
“நாம எத்தனையோ பேரை கண்காணிச்சிருக்கோம். இவன் நம்மளையே மிஞ்சிருவான் போலுக்கேடா…“
“பேசாமல்… எதுக்கும் தலைவர் காதுல தகவலைப் போட்டுறலாம்.“
“அடி அவருக்கு…“
அவர்கள் சின்னக்கனி எண்ணுக்குத் தொடர்பு கொள்கிறார்கள்.
சின்னக்கனி ஒரு வீட்டுக்குள் பதுங்கி யிருக்கிறான். வெளியே ரெண்டு பேர் திண்ணையில் இருக்கிறார்கள். அவர்கள் பக்கத்தில் அரிவாள்.
அலைபேசி அடிக்கிறது.
“அண்ணே நாந்தான் சிங்காரம்.“
“தெரிது. ஒம்பதுன்னு முடியற நம்பர் உன்னிது தான். போன காரியம் என்னாச்சி?“
“அண்ணே… ஒரு ஆபத்து.“
“என்னடா சொல்றே? நானே ஒரு ஆபத்துன்னு தான் இங்க வந்து கிடக்கேன்…“
“அன்னிக்கு நம்மளை வேவு பார்க்க வந்தான் இல்லே?“
“நம்மளை யாருடா வேவு பார்க்கறது? பாத்திருவானா எவனாவவது?“
“அவன்தாண்ணே. அந்த பேங்க் பார்ட்டி…“
“ஏ அவனா? அவன் டம்மி பீசுடா.“
“இல்லண்ணே.“
“இல்லியா?“
“ஆமண்ணே.“
“ஆமாமா இல்லியா?“
“அவன் சாதா ஆள் இல்லைன்றது… ஆமா அண்ணே.“
“ஐயோ. என்னாச்சி?“ என்றபடியே எழுந்து நின்று, நெகிழ்ந்த வேட்டியைக் கட்டிக் கொள்கிறான்.
“மரத்துக்குப் பின்னால நின்னு… யாருக்கோ செல்ஃபோன்ல பேசிட்டிருக்கான்…“
“அட ஒண்ணுக்கு வருதுன்னு ஒதுங்கிருப்பான். அது ஒரு மேட்டரா?“
“அப்பிடி இல்ல அண்ணே… அந்த டீக்கடை பக்கமா ஒதுங்கி நாங்க இருந்தமோ…“
“சரக்கு வந்ததா இல்லியாடா?“
“வரல்ல அண்ணே…“
“ஏண்டா?“
“இந்தாளைப் பாத்தமா? அவனுக்கு ஃபோன் பண்ணி வர வேண்டாம்னுட்டோம் அண்ணே…“
“அட மடப்பயலே… ஏண்டா அப்பிடிப் பண்ணினே?“
“நாங்க கூட அவன் தாண்டிப் போறதைப் பார்த்து சாதாரணமா நினைச்சோம் அண்ணே.“
“அப்பறம் என்ன?“
“போறாப்ல போயி… தெரியாத மாதிரி… திரும்பி… எங்களை நோட்டம் பார்க்கறான் அண்ணே.“
“அவனா?“
“ஆமா அண்ணே.“
“என்னடா சொல்றே?“
“ஆமா அண்ணே.“
பேசிக் கொண்டே அவர்கள் தெருவில் நோட்டம் பார்த்தபடியே போகிறார்கள். “இப்ப என்ன பண்றது அண்ணே?“ என்றபடி வேறொரு தெருவில் திரும்புகிறார்கள்.
“டேய் எப்பிடியும் சரக்கு நம்ம கைக்கு வந்தாகணும். சாயந்தரம் நாம அதை டெலிவரி குடுக்கணும். தெரியுதா?“
“அப்ப இவனை… விட்டுர்றதா?“
“கவலைப் படாதே… அவன் டம்மி பீசு.“
“பார்த்தால் அப்பிடித் தெரியல அண்ணே.“
“நான் சொல்றேன் இல்லே? அவனை விடு…“
“சரி அண்ணே…“ என அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள். சற்று தள்ளி இவர்கள் பின்னால் ராமசாமி வந்து கொண்டிருக்கிறான். ஒருவரை ஒருவர் நேருக்குநேர் பார்த்துக் கொள்கிறார்கள். இப்போது அந்த ரௌடிகள் பயந்து ஓட்டம் எடுக்கிறார்கள். அவனும் அவர்களைப் பார்த்து விட்டு எதிர்த் திசையில் ஓட்டம் எடுக்கிறான். மூச்சு வாங்குகிறது. நேரே கிருஷ்ணா கபேக்குள் நுழைகிறான்.
அந்த ரௌடிகள் திரும்பிப் பார்க்கிறார்கள். அவனைக் காணவில்லை. “யப்பா, தப்பிச்சோம்டா“ என்கிறான் ஒருத்தன்.
“பயங்கரமான ஆள்டா அவன்… எத்தனை சாமர்த்தியம் பாத்தியா? நாம பைத்தியம் மாதிரி அவனை முன்னால தேடிட்டிருக்கோம். அவன் நம்ம பின்னால வந்திட்டிருக்கான்.“
“அவனுக்கு ஏண்டா இந்த வேண்டாத வேலை?“
“ஆசைடா. ஆசை. ஆசை யாரை விட்டது?“
“என்ன ஆசை?“
“இப்பிடிப் பிடிச்சிக் குடுத்தால் போலிசுல பணங் கிணங் குடுப்பாங்க.“
“பணம் கிணம் பெரிய சமாச்சாரம் இல்லடா. அவன் பாங்க் காரன்.. பணம் அவனுக்கு முக்கியம் இல்லை.“
“சரி. பேப்பர்ல படம் வருதே? புகழ் வருதே…“
“அது சரி. இப்ப சொன்னியே. அது கரெக்ட்டு.“
திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொள்கிறார்கள்.
பழக்கமான சர்வர் வருகிறான். “என்ன சார் உங்களை ஆளையே காணோம்…“
“என்னை ஆளையே காணோம்னு வேற ஆட்கள் தேடிக்கிட்டு இருக்காங்க“ என்கிறான் ராமசாமி.
“உங்க பார்ட்டி… ரொம்ப குஷியா ஆயிட்டானே சார்? இப்ப ஒரு ஒண்ணேகால் வயசில் அவங்களுக்கு ஒரு பையன்…“ என சர்வர் சிரிக்கிறான்.
“ஆமா. இனி அவன் இப்பிடி தற்கொலை கிற்கொலைன்னு பைத்தாரத்தனம் லாம் பண்ணாது…“ என சிரிக்கிறான்.
“நேத்தி அவங்க ரெண்டு பேருமே வந்திருந்தாங்க சார்…“ என்று சிரிக்கிறான்.
“என்னப்பா?“
“அந்தப் பையனுக்கும் நல்லா காபியைப் பழக்கி விட்டுட்டாங்க. செம உறிஞ்சு உறிஞ்சறான்.“
“அப்பிடியா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “ஒரு காபி கொண்டு வா.“
சர்வர் போகிறான்.
ரௌடிகள பேசிக் கொள்கிறார்கள். “எங்கடா அவன்பார்வை லேர்ந்து நாம தப்பிச்சிட்டமா?“
“அப்பிடிதான் தெரியுது…“
“சரி. இப்ப ‘நம்ம‘ ஆளைப் பார்த்து சரக்கை வாகிக்கலாமா?“
“எதுக்கும் தலைவர் கிட்ட கேட்டுக்கோ.“
கட்டிலில் படுத்திருக்கிறான் சின்னக்கனி.. அலைபேசி ஒலிக்கிறது. பதறிப் போய் தாவி எடுக்கிறான். “அடிக்கடி போன் பண்ணாதீங்கடா… பதறுது இல்லே?“ என்கிறான்.
“எங்களுக்கு ஆபத்து விலகிட்டது அண்ணே.“
“அப்பிடியா?“
“நாங்க சொல்லல? அவன் சாதாரண ஆள் இல்லேன்னு…“
“அட அவன் டம்மி பீசு அப்பா.“
“அது அப்படி இல்ல அண்ணே. நாங்க உங்க கூட பேசிக்கிட்டே வந்தம் பாருங்க. தெருவில் முன்னால அவனைத் தேடிப் போறமா… பார்த்தால்…“
“என்னாச்சி சொல்லித் தொலைங்கடா.“
“அவன்… எங்க பின்னாடி எங்களைப் பார்த்துக்கிட்டே வரான் அண்ணே.“
“ஐயோ.“
“நாங்க டேக்கா கொடுத்திட்டோம்.“
“இப்ப அவன் எங்க?“
“ஆளையே காணம்…“ என ஒருத்தன் சிரிக்கிறான். “நாய்ங்களா, அப்ப மாதிரி உங்க பின்னாடி வரப் போறான்…“ என்று கத்துகிறான் சின்னக்கனி.
“ஒரு நிமிஷம் அண்ணே.“ அலைபேசியை அப்படியே வைத்துக் கொண்டு 360 டிகிரி சுற்றி ராமசாமியைத் தேடுகிறார்கள் இருவரும். பின் சிங்காரம் அலைபேசியில் “இல்லண்ணே…“
“நல்லா பாத்திட்டியா?“
“பாத்தாச்சி அண்ணே…“
“ஹா“ என்று பெருமூச்சு விடுகிறான் சின்னக்கனி. “எனக்கு நேரம் சரி இல்லை. நம்ம கங்காதான் சொல்றான்.. திரும்ப என்னை… ரெண்டு வருஷம்  முன்னாடி காலி பண்ணப் பாத்தாங்க இல்லே? அந்தப் பார்ட்டி தேடறாங்களாம்…“
“யார் சொல்றது அண்ணே?“
“கங்கா.“
“அவன் சொன்னா சரியான தகவலாத்தான் இருக்கும் அண்ணே.“
“நீங்க வேற இவனைப் பத்தி புரளியைக் கிளப்பறீங்க.“
“இப்ப என்ன பண்றது அண்ணே?“
“அவன் இல்லைன்னு நல்லா பாத்துக்கிட்டீங்களா?“
“பாத்துட்டம். அவன் ஆளைக் காணம்.“
“சரி சரக்கு வாங்கிட்டு வந்து சேருங்க.“
“சரி அண்ணே….“ என அலைபேசியை அணைக்கிறான். பிறகு திரும்ப அடுத்த எண்ணைத் தொடர்பு கொள்கிறான். “மாமா?“
சரக்கு பார்ட்டி பொறுமையில்லாமல் காத்திருக்கிறான்.
“ஹ்ரும். எத்தனை நேரம்டா நான் வெயிட் பண்றது?“
“இல்ல மாமா. இங்க ஒரு சிக்கல்… எங்களை ஒருத்தனை வேவு பார்த்தாப் போல தெரிஞ்சது…“
“சரி சரி. இப்ப என்ன?“
“சரக்கு வாங்கிக்கறோம் மாமா.“
“எங்க வரணும்?“
“நீ வர வேணாம் மாமா. நாங்களே வரோம்.“
“எங்க வரீங்க?“
“கிருஷ்ணா கபே வாசல் பக்கமா வர்றோம். சரியா?“
“சீக்கிரம் வாங்க. நான் அந்தப் பக்கம்தான் இருக்கேன்.“
“இதோ பறந்து வந்றோம்.…“
“இப்ப மணி என்ன?“
“ரெண்டே முக்கால்.“
“பத்து நிமிஷத்தில் வாங்க.“
சரக்கு வைத்திருப்பவன் சுற்று முற்றும் பார்த்தபடி கிருஷ்ணா கபே பக்கம் வருகிறான். ராமசாமி காபி சாப்பிட்டு விட்டு வெளியே வருகிறான். சரக்கு வைத்திருக்கும் ரௌடியுடன் லேசாய் இடித்துக் கொள்கிறான்.
தூரத்தில் இருந்து அதை சிங்காரமும் குமாரும் பார்க்கிறார்கள். தூக்கிவாரிப் போடுகிறது அவர்களுக்கு. “ஐயோ… அவன் நமக்கு முன்னாடியே இங்க வந்து சேர்ந்திட்டானே…“
“இப்ப போயி சரக்கு வாங்கறது ஆபத்து குமாரு…“ என்கிறான் சிங்காரம்.
இடித்துக்கொண்டதற்கு “சாரி“ சொல்கிறான் ராமசாமி. “இருக்கட்டுங்க“ என்கிறான் ரௌடி. பிறகு அவனிடம் “மணி என்ன?“ என்று கேட்கிறான்.
““நம்மாளு கிட்ட என்னவோ கேட்கிறாண்டா. அவனும் எதோ பதில் சொல்றாண்டா…“
“வேணாண்டா. ஓடிருவோம்…‘ என அவர்கள் ஓடுகிறார்கள். “குமாரு… எவ்வளவு விவரமான ஆளு அவன் பாத்தியா? நம்ம மொத்த வட்டத்தையுமே வளைச்சிருவான் போலுக்கே…“வழியில் ஒரு கடையில் சோடா குடிக்கிறான் சிங்காரம். அந்தப் பக்கமாக விறுவிறுவென்று வருகிறான் ராமசாமி. சோடாவை அப்படியே வைத்துவிட்டு ஓட்டம் எடுக்கிறார்கள். “காசு?“ என்று கைநீட்டியபடி திகைக்கிறான் கடைக்காரன்.
ராமசாமியும் அப்போது அவர்களைப் பார்த்து விடுகிறான். “நாம எங்க போனாலும் இவங்க பின்னாடியே எப்பிடியாவது வந்திர்றாங்கடா…“ என்றபடி வேறு தெருவில் நடக்க ஆரம்பிக்கிறான். கால் போன போக்கு. விறுவிறுவென்று நடை. அவனை ஒரு நாய் துரத்துகிறது. ஓட ஆரபிக்கிறான். சட்டென ஒரு வீட்டின் சுவர் ஏறி உள்ளே குதிக்கிறான். நல்ல உயரமான சுவர். நாய்கள் கீழே காத்திருக்கின்றன.
தடதட வென்று கதவைத் தட்டுகிறான். உள்ளே யிருந்து வெளியே வரும் ஆள்… சின்னக்கனி.
அவனைப் பார்த்ததும் சின்னக்கனியும், சின்னக்கனியைப் பார்த்ததும் அவனும் ஒரே சமயத்தில் “நீயா?“ என்கிறார்கள். சின்னக்கனி பாய்ந்து அவனை உள்ளே இழுக்கிறான். சட்டென அவனைத் தள்ளி அவன் கழுத்தில் கால் செருப்பால் மிதிக்கிறான்.
“என்னத்தை மிதிச்சியோ…செருப்பை எடு கனி… இநத நாத்தத்தில் நானே செத்திருவேன்…“
“என்ன தைரியம் இருந்தால் நான் பதுங்கி யிருக்கும் இடத்தையே கண்டுபிடிச்சி வருவேடா நீயி?“
“மொதல்ல காலை எடு…“
சின்னக்கனி காலை எடுக்கிறான். “இது யார் வீடு?“
“ஏன்?“
உடலின் தூசியைத் தட்டியபடி எழுந்து நிற்கிறான் ராமசாமி. அங்கே சுவரின் படத்தைப் பார்க்கிறான். அந்தப் படத்தைக் காட்டிக் கேட்கிறான். “இது யார்?“
“கங்கா“ என்கிறான் சின்னக்கனி.
“இங்க எப்பிடி வந்தே?“
“என்னைக் காப்பாத்தி இங்க கொண்டு வநது ஒளிச்சி வெச்சிருக்கான்…“
“யாரு?“
“கங்கா.“
“ஒண்ணு சொல்லட்டா… நான் இங்க வந்தது உனக்கு நல்ல வேளை…“
“ஏன்?“
“அன்னிக்கு உன்னை… ரெண்டு வருஷம் முன்னாடி தாக்க வந்தாங்க ஒரு கும்பல். இல்லியா?“
சின்னக்கனி அவனையே பார்க்கிறான்.
“அப்ப என் மண்டைல அடிச்சவன்… இவன்தான்.“
“என்ன சொல்றே?“
“இப்ப இவன்… தன் ஆட்களைக் கூட்டி வரப் போயிருக்கான். எல்லாருமா இப்ப இங்க வந்து… உன்னைப் போட்டுத் தள்ளப் போறாங்க…“
“ஆகா…“ என அவன் பரபரப்போடு சில எண்களுக்கு அலைபேசியில் தகவல் பரப்புகிறான். “வா“ என அவனையும் வெளியே இழுத்துப் போகிறான்.
கங்கா ஆட்களுடன் வருகிறான். கத்தி அரிவாளுடன் அவர்கள் கங்கா வீட்டுக்குள் பாய்கிறார்கள். “ஆகா…“ என சின்னக்கனி கை கொடுக்கிறான் ராமசாமிக்கு. “பயமா இல்லியா கனி?“
“இப்ப பார்…“ என அவன் ஒரு விசில் அடிக்கவும், அவன் ஆட்கள் திமுதிமுவென்று அந்த வீட்டுக்குள் பாய்கிறார்கள்.
“அவங்க பாத்துக்குவாங்க…“ என சிரிக்கிறான் கனி. “பரவால்ல. உன்னை நம்பறா மாதிரி ஒரு காரியம் பண்ணிட்டே…“ என்றபடி தன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை திரும்ப அவனுக்கு அணிவிக்கிறான். “போயிட்டு வா…“ என்கிறான். “உன்னை நம்பறேன்…“
உள்ளே யிருந்து ஐயோ, என்று சத்தம். “கண்டுக்காதே“ என சிரிக்கிறான் சின்னக்கனி. “உனக்கு என்ன உதவி வேணுமோ கேளு… இப்ப போலாம் நீ“ என்கிறான்.
“இல்ல. நம்ம பையன் ஒருத்தன்.“
“யாரு அந்த காமெடி பீசா?“
“ஆமாம்“ என சிரிக்கிறான் ராமசாமி. “அவன்தான் உன் கூட பழகணும்னு துடிக்கிறான்.“
“எதுக்கு?“
“என்னவோ நாயகன் பார்ட் ட்டூ எடுக்கப் போறானாம்.“
“நாயகனா?“
“கமல்ஹாசன் படம்.“
“நான் கமல் மாதிரி இருக்கேனா?“
“கமல் வேஷம் போட்டால் உன்னை மாதிரி ஆயிருவார்…“
“ஐயோ…“ என இன்னொரு சத்தம். “கண்டுக்காதே“ என்கிறான் சின்னக்கனி. சிரிக்கிறான். “போ. பையனை வரச் சொல்லு…“ என்கிறான் சின்னக்கனி.


அத்தியாயம் 44
அக்டோபர் 03 என்று காட்டுகிறது நாட்காட்டி.
வங்கி. மேனேஜர் கிருஷ்ணராஜ் உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருக்காய் இனிப்பு வழங்குகிறார். அவருக்குப் பதவி உயர்வோடு இட மாற்றம் வந்திருக்கிறது.
“என்ன சார்? உங்க பதவி உயர்வு… சேதி கன்ஃபர்ம் ஆயிட்டதா?“
“ஆமாப்பா“ என்றபடி ரமேஷிடம் இனிப்பை நீட்டுகிறார்.
“நல்ல விஷயம் சார்…“ என்று எடுத்துக் கொள்கிறான். “எந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் சார்?“
“அது இன்னும் தெரியல்ல… ஆனால் இட மாற்றம் உறுதின்னு சொல்லிட்டாங்க. ஒரு மாசத்துக்கு உள்ள… நான் பையங்க படிப்பு இத்தியாதி ஏற்பாடுகளை யோசிச்சிப் பார்க்கறதுக்குன்னு தகவல் மாத்திரம் சொல்வாங்க… நமக்கு எந்த ஊரானா என்ன?“
“இப்படி பெட்டியைத் தூக்கித் தூக்கியே சாருக்கு ஏழு எட்டு மொழிகள் தெரிஞ்சாச்சி. இல்ல சார்?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
கிருஷ்ணராஜ் புன்னகைக்கிறார். “இதுநாள் வரை உங்க எல்லார் கிட்டேயும் ரொம்ப கண்டிப்பா நான் நடந்துக் கிட்டதா தோணலாம்… அதுக்குப் பலனும் கிடைக்காமல் இல்லை. நம்ம கிளை சிறந்த கிளைன்னு விருது வாங்கியது. ஆனாலும் மனசாறச் சொல்கிறேன். நீங்க எல்லாரும் அதுக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருந்தீங்க. இந்த மாதிரி ஒத்துழைப்பான கம்ப்பானியன்சை நான் சந்திச்சதே இல்லை…‘‘ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.
“ஒவ்வொரு இடத்தில் வேலை மாற்றம் வரும் போதும் சார் இப்பிடித்தான் சொல்வீங்கன்னு நினைக்கிறேன்..“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“மகா எங்கே?“ என்று கேட்கிறான் ரமேஷ். “பத்திரிகை வைக்கன்னு ஸ்ரீநிவாஸ் கூட கிளம்பிப் போனாள்… கல்யாணம்னு வந்திட்டாலே எப்பிடி உற்சாகமா ஆயிர்றாங்க இந்தப் பெண்கள்…“ என்றபடியே திரும்பி ராமசாமியைப் பார்க்கிறான்.
அப்போது வாசலில் ஸ்கூட்டி பெப் வந்து நிற்கிறது. மகா மாத்திரம் தனியே வந்து இறங்குகிறாள். சுடிதாரில் ஓரங்களில் ஜரிகை பளபளக்கிறது. தலையை கேரள பாணியில் உலர்த்தி விட்டிருக்கிறாள். கை கால்களில் மருதாணிப் பூச்சு புது மெருகுடன். “இப்பவே அவளுக்குக் கல்யாணக் களை வந்திட்டதுய்யா…“ என்கிறான் ரமேஷ். “அநேகமா நாளை நாளைமறுநாள் லேர்ந்து அவள் லீவு போட்டுருவான்னு தோணுது.“
ராமசாமி மேசைமேல் இனிப்பு அப்படியே கடிக்கப் படாமல் முழுசாய் இருக்கிறது. மகா வந்ததும் ராமசாமி எழுந்து போகிறான். கிருஷ்ணராஜ் இனிப்பை எடுத்துக்கொண்டு மகாவிடம் வருகிறார். ராமசாமி எழுந்து போனதை ரமேஷ் கவனிக்கிறான். அவன் முகம் மாறுகிறது. அவனும் எழுந்து ராமசாமி போன திசையில் வெளியேறுகிறான்.
ராமசாமி உணவு அறையில் முதுகைக் காட்டியபடி. “என்னாச்சிடா?“ என அவன் முதுகைத் தொடுகிறான் ரமேஷ். ராமசாமி முதுகு குலுங்குகிறது. “COUNT DOWN மூடை விட்டு நீ வரணும் இவனே. பழைய காலத்தை நாம மாத்த முடியுமா?“
முடியாது என்கிறதாய் திரும்பிப் பாராமலேயே தலையாட்டுகிறான் ராமசாமி.
“பின்னே?“
“நான் ஒருத்தன்… இந்த வாரம் நான் வேலைக்கு, ‘இங்க‘ வந்திருக்கவே கூடாது.“
“ஏன் வந்தே?“
“அதான் எனக்கும் புரியல…“ என்றவன் சட்டென பிரகாசம் ஆகிறான். “இதுவும் விதியின் ஒரு கூறு தாண்டா. அது எப்பவும் மனுசனுக்கு எதாவது சங்கேதமான சேதி சொல்லிக்கிட்டே தான் இருக்கு. நாம தான் அதை கவனிக்காமல் விட்டுட்டு பின்னாடி வருத்தப் படுகிறோம்.“
“என்ன திடீர்னு?“
“எனக்கே தெரியல.“
“நான் ஏன் இப்பிடி கடந்த காலத்துக்கு வரணும் சொல்லு?“
“உனக்கே தெரியல. எனக்கு எப்பிடித் தெரியும்?“
“வாழ்க்கை அநேக வாய்ப்புகளால் ஆனது. WITHIN ALL PROBABILITIES AND POSSIBILITIES IT IS RUNNING.“
“ஆமாம். NOBODY KNOWS WHAT IS NEXT…“ என எடுத்துக் குடுக்கிறான் ரமேஷ்.
“நாளைக்கு…. அக்டோபர் 4. மாலை சுமார் 4 மணி அளவில்…“ என்கிற போதே ரமேஷ் அவனை கிட்ட வந்து பிடித்துக் கொள்கிறான். அழ வந்தவன் யாரோ வரும் சத்தம் கேட்டு நிறுத்திக் கொள்கிறான். அது மகா. “என்ன சார் ரெண்டு பேரும் இங்க நின்னுக்கிட்டிருக்கீங்க?“
“உன்னைப் பத்தி தான் பேசிட்டிருக்கம்…“ என்கிறான் ரமேஷ். “என்னைப் பத்தியா? என்ன?“ என புருவம் தூக்குகிறாள் மகா. ராமசாமி என்னவோ சொல்ல வருமுன் ரமேஷ், “உன் மாமனார் மாமியார் வந்தாச்சா?“ என்று இடை மறிக்கிறான்.
“நாளைக்கு மூணு மூணரை வாக்கில் வர்றாங்க… ஏர் போர்ட்டுக்குப் போகணும்…“ என்கிறாள் மகா. ராமசாமியின் முதுகு குலுங்குகிறது. அவனை மறைத்தபடி நின்று கொள்கிறான் ரமேஷ்.
“என்ன ராமு சார் பேசவே மாட்டேங்கறார்…“
“அதெல்லாம் இல்ல. எனக்கு… கொஞ்சம் உடம்பு சரியில்ல…“ என்று சமாளிக்கிறான் ராமசாமி.
மகா போகிறாள். “இல்ல ரமேஷ். இனியும் என்னால இங்க தாக்குப் பிடிக்க முடியாது…“ என்கிறான் ராமசாமி. “நான் வெளியே போகிறேன்…“
“பிரச்னையைத் தவிர்க்க முடியாது ராமு. நீதானே சொன்னே…“
“நான் அதுக்கு பயந்து விலகி ஓடறேன்றியா?“
“ஆமாம்“ என அவன் கையைப் பிடித்துக் கொள்கிறான் ரமேஷ். “பரவால்ல…“ என பிடியை உருவிக் கொள்கிறான் ராமசாமி. “மேனேஜர் கேட்டால் யாரோ வந்து கூப்பிட்டாங்கன்னு நான் வெளியே போயிருக்கறதாச் சொல்லு…“
“இங்க பார். நான் சொல்றதைக் கேளுடா… இவன் ஒருத்தன் பாதி கனவுலயே பயந்து சாகறான்…“
ராமசாமி போகிறதையே பார்க்கிறான் ரமேஷ்.
சாலை. நடக்க முடியவில்லை அவனால். தள்ளாடுகிறது. அழுகை வருகிறது. அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சிறிது நிற்கிறான். “என்ன சார்?“ என்று கேட்கிறான் அந்த மரத்தடி சோசியக்காரன். “ஒண்ணில்ல…“ என அவனைக் கைகாட்டி விலக்கிவிட்டுப் போகிறான். கொள்கையில்லாமல் நடந்து போகிறான்.
தெரு இயல்பான போக்குவரத்து நெரிசலோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அவன் மனக் கண்ணில் ஒரு காட்சி. ஒரு கல்யாணப் பத்திரிகை.
மகாலெட்சமி WEDS ஸ்ரீநிவாஸ்.
சர்ரென்று அதன் மேல் இரத்தம் பீய்ச்சி அடிக்கிறது. அப்படியே நிற்கிறான் ராமசாமி. தலையை உதறிக் கொள்கிறான்.
மனசில் இன்னொரு காட்சி. மகா அவனிடம் சிரித்து வெட்கமாய்ப் பேசுதல். அவன் வங்கிக்கு வெளியே வந்து உற்சாகமாய் அவளை வழியனுப்புதல். அவள் ஸ்கூட்டி பெப் எடுத்தல்.
அப்படியே WHY SHOULD BOYS HAVE ALL THE FUN… என்கிற பாடல் காட்சியின் பதிவுகள்.
வாய்விட்டு WHY SHOULD SHE SUFFER ALL THE SIN? – என மனசில் சொல்லிக் கொள்கிறான் ராமசாமி.
சர்ர் சர்ர் என்று பிரேக்குகள் ஒலி. வரிசையாய்க் கார்கள் வாகனங்கள் நிற்கின்றன. யாரோ நாலாவது வரிசையில் இருந்து வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடுகிறான். “யாரோ வயசுப் பொண்ணுப்பா.. ஸ்பாட்ல ஆள் அவ்ட்…“ அந்த நாலாவது வரிசை ஆள் திரும்ப வந்து வாந்தி எடுக்கிறான். ராமசாமி அப்படியே வயிற்றைப் பிடித்துக் கொண்டு நிற்கிறான். உவ்வே… என முயற்சி செய்கிறான். வாந்தி… வரவில்லை.
அது ஒரு நாற் சந்தி. அவன் மனசில் இன்னொரு காட்சி. விபத்து நடந்த இடம். இந்தப் பக்கம். மகாவின் ஸ்கூட்டி பெப் சப்பளிந்து மோசமாக உரு குலைந்து கிடக்கிறது. சாலையின் மறு ஓரம். அந்த ஐ டென் வண்டி. முகப்பில் பெயர். வித்தியாசமான பெயர். வசிகரன்.
இப்போது சட்டென அவன் சுற்று முற்றும் பார்க்கிறான்.
அந்த சந்திப்பில் வாகனங்கள் நிற்கின்றன.
முதல் வரிசை. நாலைந்து வாகனங்கள் தள்ளி ஒரு வாகனம். உற்றுப் பார்க்கிறான். அது ஒரு ஐ டென். ஆகா. சட்டென சுதாரித்து அதன் முகப்பைப் பார்க்கிறான். அதில்… ஆமாம். சந்தேகமே இல்லை! அந்தப் பெயர்.
வ சி க ர ன்.
“வசிகரா?“ என பைத்தியம் மாதிரி அந்த சந்திப்பில் மற்ற கார்களை மறித்துப் பாய்கிறான் ராமசாமி. அதற்குள் சிக்னல் விழுந்து கார்கள் கிளம்பி விட்டன. க்ரீச். க்ரீச். என வரிசையாய்க் கார்கள் அதிர்ந்து பிரேக் அடிக்கின்றன.
“ஏய்யா சாகறதுக்கு நல்ல நேரம் பார்த்தான்யா இவன்…“ என ஒரு குரல். போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. நாலாவது வரிசையில் இருந்து ஒருவன் ஓடிவருகிறான்.
மாலை ஐந்து மணி. வங்கிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மகா தான் எடுக்கிறாள்.
அவசர ஊர்தி. 108. பீய்ங் பீய்ங் என்று போக்குவரத்தைப் பிளந்து கொண்டு வருகிறது. வாகனங்கள் வழி விடுகின்றன. அடிபட்டுக் கிடக்கும் ராமசாமி. அப்படியே வந்து தூக்குகிறார்கள். “நினைவு இருக்காய்யா?“
“இல்ல. மயக்கமாத் தான் இருக்காரு…“
“தலைல அடி… கொஞ்சம் ரத்தம் போயிருக்கு.“
“தூக்கு.“
சற்று தள்ளி ஒரு கார். சிவப்பு வண்ணம். அவனை விபத்துக்கு உள்ளாக்கிய வாகனம் நிற்கிறது.
வாகனம் பரபரப்புடன் சாலைப் போக்குவரத்தைக் கிழித்தபடி போகிறது. தனியார் ஆஸ்பத்திரி ஒன்று. அதன் வாசலில் ஆம்புலன்ஸ் நிற்க சிப்பந்திகள் ஓடி வருகிறார்கள். “நினைவு இருக்கா?“
“இல்ல…“
ஸ்ட்ரெட்சரில்  ராமசாமியை மாற்றுகிறார்கள். அப்படியே விறுவிறுவென்று உள்ளே போகிறது ஸ்ட்ரெட்சர். காத்திருக்கிற நோயாளிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
“என்னாச்சி?“
“இப்ப நின்னு உன் கிட்ட எல்லாம் சொல்லணுமாய்யா?‘ நகருங்க…“ என்றபடி ஸ்ட்ரெட்சரைத் தள்ளிப் போகிறார்கள்.
அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் போகிறது ஸ்ட்ரெட்சர். வார்டு கதவுகள் சாத்திக் கொள்கின்றன. குரல்கள்.
“எதும் ஐடி கார்டோ செல்ஃபோனோ இருக்காய்யா?“
“செல்போன்ல டவர் இல்லை சார்.“
“ஐ டி கார்டு எதுவும்…“
ஸ்ட்ரெட்சர் போனபடி இருக்கிறது. “ஒரு பாங்க் ஐடி கார்டு சார்.“
“என்ன பாங்க்?“
“நேஷனல் பாங்க்.“
“அப்ப சரி. இவனை நல்லபடியா அட்டென்ட் பண்ணுவாங்க. எப்பிடியும் இனசூரன்ஸ் வெச்சி4ருப்பான். இல்லாட்டி கூட வங்கி பாத்துக்கும்…“
“வங்கிக்கு போன் போடுய்யா…“
ஐ சி யூ வில் டாக்டர் ராமசாமியை வாங்கிக் கொள்கிறார். அவன் முகத்தில் ரத்தம் வழிந்திருக்கிறது. “தலைல அடி பட்டிருக்கு… கபாலத்தில் விரிசல் இருக்கா பார்க்கணும்“ என்கிறார். வாசலில் எட்டிப் பார்க்கிற நபர்களை “கூட்டம் போடாதீங்க“ என வார்டுபாய் ஒதுக்குகிறான்.
“ஆபரேஷன் தியேட்டருக்கே எடுத்துக்கிட்டுப் போங்க“ என்கிறார் டாக்டர்.
“ஹலோ.. நேஷனல் பாங்க்கா?“ என ஒரு தொலைபேசி அழைப்பின் குரல்.
“எஸ்…“ என ஒரு பெண் குரல் எடுத்துப் பேசுகிறது.
தலையில் முடியைக் கத்தரித்து விடுகிறான் ஒரு உதவியாள். அடிபட்ட இடத்தை சோதிக்கிறார் டாக்டர்
தையல் போடப் படுகிறது.
நேரம் அரை மணி கழிகிறது.
ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வருகிறான் ராமசாமி. தலையில் கட்டு.
ஐ சி யூ வுக்கு மாற்றப் படுகிறான்.
பக்கத்து பெட் பேஷன்ட் “என்னாச்சி?“ என நர்சைக் கேட்கிறார். “விபத்து“ என்கிறாள் நர்ஸ். “ஐயோ. எப்பிடி?“ என்கிறார் அவர்.
“தெரியல.“
“நினைவு இருக்கா?“
“மயக்கமாத் தான் கிடந்தாரு.“
“இப்ப நினைவு வந்திட்டதா?“
‘இப்ப செடேடிவ் குடுத்திருக்காங்க. மெல்லதான் நினைவு வரும்…“
“அப்பன்னா?...“ என அவர் மேலே பேசுமுன், “கொஞ்சம் தொணதொணக்காம இருக்கீங்களா?  என்கிறாள் நர்ஸ். பிறகு அவர் வாயை மூடிக் கொள்கிறார்.
ராமசாமி அப்படியே கண்மூடிப் படுத்திருக்கிறான். குளுக்கோஸ் ஏறுகிறது.  அவ்வப்போது வந்து நாடி பார்க்கிறார்கள். அருகே ஈ சி ஜி ஓடுகிறது. ஆக்சிஜன் முகமூடி ஒரு மணி நேரம் வைத்திருக்கிறார்கள். பெரிய டாக்டர் வந்து பார்க்கிறார். அவர் வேணாம், என்பது போல எதோ சொல்கிறார். ஆக்சிஜன் கொடுப்பது எடுக்கப் படுகிறது.
அப்படியே மெல்ல பொழுது சாய்ந்து இருள் சூழ்கிறது.
காலை விடிகிறது. “அந்தாளுக்கு இன்னும் நினைவு வரல்லியே…“ என்கிறார் அடுத்த பெட்காரர். நர்ஸ்  உதட்டைப் பிதுக்குகிறாள். “கடுமையான அடியா?“ என்கிறார் அவர். அவள் காதில் வாங்கிக் கொள்ளாமல் போகிறாள்.
மெல்ல வெளிச்சம் உக்கிரம் ஆகிறது. மாலை மணி 4 என்று காட்டுகிறது ஆஸ்பத்திரி கடிகாரம்.
மெல்ல கண் திறக்கிறான் ராமசாமி. அருகில் யாருமே இல்லை. மெல்ல தலையை அசைக்கப் பார்க்கிறான். தலை கனக்கிறது. தலையில் கட்டு போட்டிருக்கிறது. கையால் தலையைத் தொட்டுப் பார்க்க முயல்கிறான். கையில் குளுக்கோஸ் ஏறுவது தெரிகிறது. குழப்பமாகிறான். மெல்ல கஷ்டப்பட்டு தலையைத் திருப்புகிறான்.
பக்கத்துப் படுக்கை ஆசாமி திரும்பி இவனைப் பார்க்கிறார். “கண்ணைத் திறந்திட்டீங்களா?“
“இல்ல“ என தலையாட்டுகிறான்.
“இப்ப திறந்துக்கிட்டு தானே பேசறீங்க?“ என அவர் முகம் மாறுகிறது.
“பின்ன ஏன்யா கேக்கறே மூதேவி“ என்கிறான் ராமசாமி.
“நர்ஸ்?“ என்று கத்துகிறார் பக்கத்துப் படுக்கை ஆள்.
“யாரைக் கூப்பிடறே?“
“மூதேவியை… ச்சீ நர்சை“ என்கிறான் அவன். நர்ஸ் வருகிறாள்.
“சார் கண்ணைத் திறந்திட்டார்…“
“டி வி நியூஸ்ல சொல்லணுமா?“ என்கிறாள் அவன் பக்கமாக வந்தபடியே.
ராமசாமி அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “மொபைல்ல பேசிட்டிருந்தீங்களா?“
“ஆமாம்.“
“உங்க லவர் கூடவா?“
அவள் சிரிக்கிறாள்.
“எப்பிடி எனக்கு அடி பட்டது?“ என மெல்லக் கேட்கிறான்.
“நீயே அடி பட்டுக்கிட்டு வந்து படுத்துக்கிட்டு.. அவளைக் கேட்கிறியேய்யா?“
“எப்பவுமே.. விபத்துன்னால், அடிபட்ட அந்த நேரம்… அவங்களுக்கு ஞாபகம் இருக்காது“ என்கிறாள் நர்ஸ்.
“தலைல எப்பிடி அடி பட்டது?“ என்று கேட்கிறான் ராமசாமி.
அப்போது ஐ சி யூ சிறு சதுர கண்ணாடி சன்னல் வழியே மகா எட்டிப் பார்க்கிறாள். அவளைப் பார்த்து பலவீனமான புன்னகை ஒன்றை வீசுகிறான் ராமசாமி. அவள் வெளியே யாருக்கோ அவன் கண் விழித்து விட்ட தகவலைச் சொல்கிறாள். திடீரென ஞாபகம் வந்தாப் போல அவன் முகம் கலவரமாய் மாறுகிறது.
மகா திரும்ப எட்டிப் பார்க்கிறாள். அவளை தன் அருகே உள்ளே வரும்படி கண்ணால் அழைக்கிறான் ராமசாமி.
அவள் உள்ளே நுழையப் போகையில் நர்ஸ் தடுக்கிறாள். “அவர்தான் கூப்பிட்டாரு…“ என்கிறாள் மகா. நர்ஸ் அவனைப் பார்க்கிறாள். ராமசாமி நர்சிடம் அவளை அருகே வரச் சொல்லி கண்ணால் கேட்கிறான். “பெரிய டாக்டர் ரவுணட்ஸ் வர நேரம்….“
“ரவுண்ட்ஸ் ன்னால் எப்பிடி? தன்னைத் தானே சுத்திக்கிட்டே வருவாரா டாக்டர்?“ என்கிறான் பக்கத்துப் படுக்கைக் காரன்.
“இவருக்கு நினைவு திரும்பிட்டதுன்னு சொல்லியிருக்கேன். பார்க்க வந்திட்டே இருக்கார்…“ என்கிறாள் நர்ஸ். “ம். சீக்கிரம் பாத்திட்டுப் போங்க…“ என அனுமதி அளிக்கிறாள்.
“தாங்ஸ்“ என மகா உள்ளே வருகிறாள்.. கூட ஸ்ரீநிவாஸ். “ஆகா. ஒரு வழியா கண்ணைத் திறந்தீங்களா?“
“இன்னிக்குத் தேதி என்ன?“
“ஏன்?“
“சொல்லு மகா…“
“அக்டோபர் 04.“
“மணி என்ன?“
“நாலரை.“
“ஆகா…“ என வாய் நிறைய சிரிக்கிறான் ராமசாமி. “இவங்க அப்பா அம்மா வந்தாச்சா?“
“வந்திருப்பாங்க…“
“மகா.. நீ… நீங்க பார்க்கப் போகல்லியா?“
“எப்பிடி அன்க்கிள்… நேத்து இன்னிக்கு… ரெண்டு நாளா நீங்க கண்ணே திறக்கல்ல  உங்களை இந்த நிலைமையில விட்டுப் போக எப்பிடி முடியும்?“
“தேங்ஸ் ஸ்ரீநி. தேங்ஸ் மகா… நீ ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல காரியம் பண்ணினே…“
“ஏன் அன்க்கிள்…“
“HA! ALTERNATE REALITY…“ என்கிறான் ராமசாமி. குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறான். “உண்மை பொய்யாகி விட்டது. பொய் வசிகரமாகி விட்டது…“ கண்ணில் நீர் வழியச் சிரிக்கிறான். அவன் கண்ணில் காட்சி விரிகிறது. மகா கழுத்தில் தாலி கட்டுகிறான் ஸ்ரீநிவாஸ். அட்சதைகள், மலர்கள் நாலாபுறமும் தூவப் படுகின்றன.


அத்தியாயம் 45
காலண்டரில் நாள் தாள்கள் மேலெழும்பிப் பறக்கின்றன… அகாடின் வாத்தியம் விரிகிறதைப் போல.
வங்கி. மாலை நேரம். திடீரென்று “நமஸ்காரம் சார்,“ என்று குரல். ராமசாமி தலையைத் தூக்கிப் பார்க்கிறான். அந்த சோசியக்காரன். ரமேஷிடம் திரும்பி “விடமாட்டேங்கறான் அப்பா என்னை…“ என சிரிக்கிறான். ரமேஷ் “என்னையும் தான்டா…“ என்கிறான். சோசியக்காரன் மேனேஜரைப் பார்க்க உள்ளே போகிறான். “அவருக்கு எதிர்காலத்தைக் கரெக்டாச் சொல்லிட்டானாம். புரோமோஷனும் இட மாற்றமும். என்கிட்ட அதைச் சொல்லி பீத்திக்கறான்“ என்கிறான் ராமசாமி.
“அது பலிச்சிட்டதா இல்லியான்றான். இதெல்லாம், பொறந்தா ஆம்பளை, இல்லாட்டி பொம்பளை – அப்டின்றா மாதிரி யூகம்“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
“சோசியம்ன்றது வாக்கு சாமர்த்தியம். அவன் பாட்டுக்கு எட்டு பத்துன்னு பலன் அடுக்குவான். அதுல ஒண்ணு நமக்கு ஒத்து வராப்ல இருக்குமா? அத்தோட நாம அவனை நம்ப ஆரம்பிச்சிருவோம்.“
“சொல்ற முறைதான் சோசியம்னு சொல்வாங்க. ஒரு கதை கேள்விப் பட்டிருக்கியா?“
“சொல்லு.“
“ஒரு ராஜாவுக்கு சோசியம் சொல்ல நிறைய சோசியக்காரர்கள் வந்திருந்தாங்க.“
“ம்.“
“அதுல ஒருத்தன் அவர் கையைப் பார்த்தான். உங்க ராசிப்படி உங்களுக்கு முன்னாடி உங்க உறவுக்காரங்க எல்லாருமே செத்துப் போயிருவாங்க… ன்னானாம். ராஜாவுக்கு அபார கோபம் இவனைப் பிடிச்சி சிறையில் அடைங்க. இப்பிடி மோசமான பலன் சொல்றானேன்னு உத்தரவு போட்டுட்டான்.“
சிரிக்கிறான் ராமசாமி.
“அடுத்த சோசியன். அவன் வந்து கையைப் பார்க்கிறான். முதல் சோசியன் சொன்னது கரெக்ட்டு அப்டின்னு இவனுக்குப் புரிஞ்சிட்டது. பலனும் சொல்லணுமே? என்ன பண்றது? சட்னு ஆரம்பிச்சான்… ஆகா...ன்னான் உங்க உறவு சனம் எல்லார்த்தையும் விட நீங்க அதிக ஆயுசோட இருப்பீங்க மகாராஜா – அப்டின்னு ஒரு போடு போட்டான்.“
“ராஜா நல்லா பரிசு கொடுத்து அனுப்பிச்சார். அப்பிடித்தானே?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“எனக்குக் கூட பலன் சொன்னாண்டா“ என்கிறான் ரமேஷ். “உனக்குமா?“ என ஆச்சர்யமாய்த் திரும்பிப் பார்க்கிறான் ராமசாமி. “எதிர்காலமா?“
“ஆமாம்.“
“என்னன்னு?“
“எனக்கு இதய சம்பந்தமா… வலி மாதிரி எதாவது வருமாம்…“ சிரிக்கிறான் ரமேஷ். ராமசாமி முகம் மாறுகிறது. ரமேஷ் சிரிக்கிறான். “எனக்காவது நெஞ்சு வலியாவது?“
“அப்பிடியா சொன்னான்?“
“என்னடா சீரியசாயிட்டே?“
“உனக்கு நெஞ்சு வலி வரும்டா…“
“என்னடா உளர்றே?“
“அன்னிக்கு உன்கிட்ட அவசரமா நான் BLOOD COLLECT பண்ணிட்டுப் போனேனே…“
“அகர்வால் ரத்த வங்கில… ஆமாம்.“
“அது உனக்கே தாண்டா.“
“அட ஆமடா. அதை நம்பல  என்னை வெச்சி காமெடி பண்றேன்னு நினைச்சேன்.“ ரமேஷ் அவனையே பார்க்கிறான். “இர்றா…“ என அவனை ஒதுக்கிவிட்டு ராமசாமி மேனேஜர் அறைக்குள் போகிறான். “இவனுக்கும் சோசியப் பைத்தியம் பிடிச்சிட்டதா?“ என்கிறான் ரமேஷ்.
மானேஜர் அறையில் காபி அருந்திக் கொண்டிருக்கிறான் சோசியக்காரன். ராமசாமியைப் பார்த்து “என்ன சார் வேலையெல்லாம் முடிஞ்சாச்சா?“ என்று சிரிக்கிறான். “மேனேஜர் ரூம்ல இருந்துக்கிட்டு மேனேஜர் மாதிரியே கேள்வி கேக்கறியேய்யா“ என்கிறான் ராமசாமி. கிருஷ்ணராஜ் புன்னகை செய்கிறார்.
“எனக்கும் கை ரேகை பாக்கறீங்களா?“
“என்ன திடீர்னு?“
“விதி சார்… விதி“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “இப்ப உங்க கிட்ட எனக்கு கை நீட்டணும்னு தோணுதே…“
“விதியைத் தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்றதுன்னீங்களே?“ என்று சிரிக்கிறான் சோசியக்காரன். மேனேஜர் புன்னகையுடன் ராமசாமியைப் பார்க்கிறார்.
“இப்ப மழை வரும்ன்றது விதி. கேட்டீங்களா?“ என்கிறான் ராமசாமி. “மழையை வராமல் மாத்த முடியுமா? முடியாது. ஆனால்… மழை வரும்னு தெரிஞ்சிக்கிட்டால்? குடை எடுத்துக்கிட்டுப் போகலாம் இல்லே? நனையாமல் வீடு திரும்பலாம் இல்லே?“
“நான் சொன்னதை எனக்கே திருப்பிச் சொல்றீங்களா?“ என்கிறான் சோசியக்காரன். “திருநவேலிக்கே அல்வாவா?“
மேனேஜர் சிரிக்கிறார். “டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்… முன்னாள் ஜனாதிபதி தெரியும் இல்லியா? அவர் ஒருமுறை வேடிக்கையாச் சொன்னாரு…“ என்கிறார்.
“சோசியம் பத்தியா?“
“விதி பத்தி.“
“ஓகோ.“
“சீட்டு விளையாடறோம் இல்லியா? இதுல நம்ம கைக்கு எந்த சீட்டு வருது… இது விதி. ஆனால் இந்தச் சீட்டுக்களை வெச்சி இதை அங்க அதை இங்கன்னு மாத்தி அடுக்கி செட்டு சேர்த்து ஜெயிக்கிறோம் இல்லியா. அது மதி…“
“சூப்பர்“ என்கிறான் ராமசாமி. “பாக்கறீங்களா?“ என கையை நீட்டுகிறான் ராமசாமி.
“உங்க விதி. யாரை விட்டது?“ என்று சிரிக்கிறான் சோசியக்காரன். ராமசாமி உள்ளங்கை ரேகைகளை தன் தோள்ப் பையில் இருந்து ஒரு லென்சை எடுத்துப் பார்த்தபடி ஆராய்கிறான். ஆள் காட்டி விரல் மேட்டை அழுத்திக் காட்டுகிறான். “புதன் மேடு நல்லா இருக்கு. நீங்க புத்திசாலி…“
ரமேஷும் ஆர்வப்பட்டு அறைக்குள் வருகிறான். “முதல் பாயின்ட்டே எப்பிடி அடிக்கிறார் பார்…“ என்று ரமேஷ் சிரிக்கிறான்.
“உங்க வாழ்க்கையில் அநேக சம்பவங்கள் நம்ப முடியாத அளவில் புதுசு புதுசா நடக்கும்.“
“ஆமா சார்…“ என்கிறான் ரமேஷ். “அவர் சொல்லல்லியே…“ என்று சிரிக்கிறான் சோசியக்காரன். “ஆமா“ என்கிறான் ராமசாமி.
திடீரென்று அவன் முகம் மாறுகிறது. “சார்…“ என நிறுத்துகிறான் சோசியக்காரன். மூக்கை உறிஞ்சுகிறான். “சார்.. ஆபத்து“ என்கிறான். “இதுக்கு நேரா ரெண்டு வருஷத்தில்… ஹா“ என்கிறான்.
“தீ… தீ எரியுது…“ என்கிறான் சோசியக்காரன் பதட்டமாய். “என்ன சொல்றீங்க?“ என்கிறான் ராமசாமி. அவனுக்குப் பதறுகிறது. “தீ விபத்து சார்… உங்களுக்கு தீயில கண்டம். யாராவது சொன்னாங்களா?“
“சொல்லியிருக்காங்க.“
“ரெண்டு வருஷம். இதே நாள்… உங்க வீட்ல… தீ விபத்து சார்…“
அந்தக் கையை உருவிக் கொண்டு ஓடுகிறான் ராமசாமி. மேனேஜர் பதறி எழுந்து கொள்கிறார். அவன் ஓடுவதை எல்லாரும் கலவரத்துடன் பார்க்கிறார்கள். “இருங்க…“ என்று சோசியக்காரன் திரும்பி ராமசாமியைக் கூப்பிடுகிறான். அங்கே ராமசாமி இல்லை.
ஆட்டோவில் வீடு நோக்கி விரைகிறான் ராமசாமி. தூரத்திலேயே அவனது அடுக்ககம். தீ விபத்து மாதிரி ஜாடையே இல்லை. “பொய் கிய் சொல்லிட்டானா?“ என சத்தமாய்ச் சொல்லிக் கொள்கிறான். “என்ன சார்?“ என்கிறான் ஆட்டோக்காரன். “ஒண்ணில்ல நீ போ…“
வாசல் பக்கம் இறங்கிக் கொள்கிறான். “பொய்யா இருக்குமோ?“ என்று சொலலிக் கொள்கிறான். “ஐயோ… நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இல்லே இருக்கேன்…“
பதறி லிஃப்ட்டுக்கு ஓடுகிறான். எண் ஏழு பொத்தானை அழுத்துகிறான். லிஃப்ட் மேலே ஏற ஆரம்பிக்கிறது. மூக்கை உறிஞ்சி எதும் தீ எரியும் வாசனை எட்டுகிறதா பார்க்கிறான். லிஃப்ட் கதவு திறக்கிறது. ஏழாவது மாடி. பக்கத்து வீடு கணபதி வாசலில் காத்திருக்கிறார். “என்ன சார்… வேலை முடிஞ்சாச்சா?“ என சிரிக்கிறார். அவனுக்கே சந்தேகம். “தப்பா வந்திட்டேனா?“ என்கிறான்.
“என்ன சொல்றீங்க?“ என்கிறார் கணபதி.
அப்போது அவன் வீட்டுக்குள் இருந்து பட்டென எதோ வெடிக்கும் சத்தம் கேட்கிறது.
வீட்டுக்கு உள்ளே அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது. மேலே சுட வைத்த பாத்திரம் நீர் வற்றிப் போய் தகதகவென்று கனலாகி சிவப்பு பொலிகிறது. மெல்ல தீ அதன் GAS குழாயில் பரவுகிறது. தீப்பொறிகள்.
“எதோ சத்தம் கேட்டது இல்லே? எங்க வீட்ல இருந்து…“
“சத்தமா?“ என்கிறார் கணபதி.
“தீ… தீ சார்… குழந்தைகளோட கீழே போங்க சிக்கிரம்…“
“சீக்கிரம் போங்க“ என்று பதறுகிறான் ராமசாமி. அவர்களைப் பலவந்தமாக லிஃப்ட்டுக்குள் அனுப்புகிறான். அப்படியே தடதடவென்று மேல் மாடிக்கு ஓடுகிறான். எட்டாவது மாடி. கதவுகளைத் தட்டுகிறான். கதவைத் திறக்கிறவர்களிடம் “தீ… தீ…“ என்கிறான். நா வரள்கிறது. “எல்லாரும் கீழ போங்க… லிஃப்ட் வழியா கீழ இறங்குங்க. சீக்கிரம் சீக்கிரம்… கரண்ட் கட் பண்ணணும்.“
ஏழாவது மாடி வெளி சன்னல் கதவு சட்டென வெடிக்கிறது. தீயும் புகையுமாய்ப் பரவுகிறது வெளியே. கிழ்த்தளத்தில் இறக்கப் பட்டவர்கள் தலை தூக்கிப் பார்க்கிறாகள். “நிசம்மாதான் சொல்லியிருக்கிறார்.“ நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறார் கணபதி. அவர் பக்கத்தில் ராணி. பயப்படுகிறாள். அவளை அணைத்துக் கொள்கிறார் கணபதி. “நல்லவேளை மேகலா… அம்மாவோட வெளிய போயிருக்கா“ என்கிறாள் ராணி. “உனக்கு… நான் கூட இருக்கேன்…“ என்று அவளுக்கு முத்தம் தருகிறார் கணபதி.
ராமசாமி அப்படியே கீழே ஓடி வருகிறான். செல்ஃபோனில் தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்கிறான். “இங்க… சாந்தி டவர்ஸ். ஏழழவது மாடி. தீ. உடனே வாங்க.“
“எந்த இடம் சார்…“
“விநாயகர் நகர். நாலாவது மெய்ன் ரோடு.“
வெளியே பொழுது இருட்டு கவிய ஆரம்பிக்கிறது. அதற்குள் எதோ டி.வி. சேனலில் இருந்து வண்டி வந்து அங்கே நிற்கிறது. “இன்னும் தீயணைப்பு வண்டியே வரல்ல. இவஙக வந்திட்டாங்க பாரு…“ என்கிறார்கள் யாரோ.
இன்னொரு பந்தாய்ப் புகை ஏழாவது மாடியில் இருந்து வெளியே வருகிறது. நெருப்பு வயர்களுக்குப் பரவி அப்படியே ராமசாமி வீட்டின் ஃப்ரிட்ஜ் படாரென்று வீட்டுக்குள் வெடிக்கிறது.
டிவி நியூஸ் சேனல் வண்டியின் மேகொண்டை விளக்கு பளீரென்று எரிய ஆரம்பிக்கிறது.
அவசர அவசரமாக மாடிப் படிகளுக்கு அடியில் இருக்கும் மெய்ன் போர்டைத் திறக்கிறான். எல்லா மெய்ன் சுவிட்சுகளையும் டக் டக்கென்று அணைக்கிறான். “தீ விபத்துக்குப் பிறகு அது மின்சார வயரில் பத்திக்கிட்டு ஏற்படும் விபத்து தான் பெரிய விபத்து சார்…“ என்கிறான் கணபதியிடம்.
“யூ மே பி ரைட்“ என்கிறார் கணபதி.
இருட்டு அதிகம் ஆகி தெரு விளக்குகள் எரிய ஆரம்பிக்கின்றன. அப்போது சைரனுடன் தீ வண்டிகள் இரண்டு அந்த வளாகத்துக்குள் நுழைகின்றன.
“டிவிக்காரன் வன்ட்டான். இவன் இப்பதான் வரான்…“
“டிவிக்காரனுக்கு தகவல் இவன்தான் சொல்லிருப்பான் போல இருக்கே.“
இபபோது தீயணைப்பு வண்டியின் உச்சி விளக்குகள் வேறு எரிய விடப் படுகின்றன.
“இந்த இடமே வெளிச்சக் காடா ஆயிட்டதேய்யா…“
நிறையப் பேர் வந்து கூட ஆரம்பிக்கிறார்கள். “என்னடா தீ வண்டி நிக்குது?“
“அட தீ வண்டியா… சத்தம் கேட்டு நான் நான் பஞ்சு மிட்டாய்க்காரன்னு நினைச்சேன்.“
ஒரு பெண் பேசாமல் பார்த்தபடி நிற்கிறாள். டிவி காமெரா நாலா பக்கமும் திரும்புகிறது. அவளைப் பார்க்கிறாப் போல அது தெரிந்ததும் அவள் “ஐயோ ஐயோ…“ என்கிறாள். கூட இருக்கிறவள் சிரிக்கறிள். “நல்லா ஆக்ஷன் பண்றேடி நீ.“
சில பேர் ஓடி வருகிறார்கள். இறங்கும் தீயணைப்பு டிரைவரிடம் ஒருவன் “என்ன படம் சார்?“ என்று கேட்கிறான்.
“என்னது?“
“சினிமா ஷுட்டிங் தானே?“ என்கிறான் அவன்.
“யோவ்… போய்யா வன்ட்டான்“ என அவசரமாக கூட்டம் பார்க்க ஓடுகிறான் தீயணைப்பு டிரைவர்.
“இது டி வி சீரியல் போலத்தாண்டா இருக்கு.“
“ராதிகா சீரியலா?“
என்ன சார் ஆச்சி?“ என்று கூட்டத்திடம் வருகிறார் அதிகாரி.
“டேய் இவரை ஒரு சிரியல்ல நான் பாத்திருக்கேன். வில்லனா வருவாரு… வந்து இவரே ஒரு வைக்கப் படப்புக்குத் தீ வெச்சிருவாரு.“
அதிகாரியை நோக்கி ராமசாமி முன்னே வருகிறான். “ஏழாவது மாடி சார். எங்க வீடுதான்…“
அப்போது ஏழாவது மாடியில் இருந்து இன்னொரு புகைப் பந்து வெளியே வருகிறது. “மின்சாரத்தை நானே துண்டிச்சிட்டேன் சார்…“ என்கிறான் ராமசாமி.
“வெரி குட். நல்ல காரியம் பண்ணினீங்க.“
“உள்ள யாராவது கிழடு கட்டை மாட்டியிருக்குமாடா?“
ஒருவன் ராமசாமியைக் காட்டி “அவன்தான் ஹீரோவா?“ என்கிறான்.
“மேக் அப் போடாமல் இருக்கானே…“
“தனுஷைப் போட்டிருக்கலாம்டா.“
“ஃபயர் சரிவிஸ் ஆளா அவன் நடிச்சதே இல்லை.“
“லோ பட்ஜெட் போல…“
ராமசாமி பேசுகிறான். “பின் பக்கமா தண்ணிக் குழாய் மேல வரை போகுது. அது வழியா ஏறலாம் சார்…“
அதிகாரி உத்தரவுகளை இடுகிறார். “ஏய் ஒராளு பின் வழியா மேல ஏறு… சன்னல் உடைஞ்சிருக்கு. அது வழியா உள்ளே நுழைய முடியுமா பாரு. பாத்து… GAS CYLINDER வெடிக்காமல் இருக்கணும்.. கவனம்.“
இன்னொருத்தரை வாசல் வழியா உள்ளே போங்க நீங்க… வீட்டை உடைக்கணும்னால் உடைச்சிக்கலாம்.“
“சாவி இருக்கு சார்…“ என நீட்டுகிறான் ராமசாமி. அவன் வாங்கிக் கொள்கிறான். மேலே மாடிப்படி வழியாக உள்ளே ஓடுகிறான். தீயணைப்பு இயந்திரம் வசம் பார்த்து நின்று கொள்கிறது. அதில் இருந்து சர்ர்ரென்று மேலே ஏறும் ஏணி. அதில் ஒரு நபர் உச்சத்தில் நிற்கிறான். அவன் கையில் நீர்க் குழாய். அவன் ஏணியில் ஏறி மேலே ஸ்வைங்கென்று போவதைப் பார்த்து ராணி கை தட்டுகிறாள்.
“ஏய் அந்த ஆள் ஹீரோ இல்லைடா. அவன் ஹீரோன்னால் அவன்தானே ஏணியில் மேல ஏறணும்?“
“பாயின்ட்.“
டமார் என்று பெரும் சத்தம் ஏழாவது மாடி உள்ளே யிருந்து கேட்கிறது. அதிகாரி ராமசாமியிடம் வருத்தப் படுகிறான். “ச். சிலிண்டர் தான்… அந்த அறைச் சுவரே அப்படியே வெடிச்சிச் சிதறியிருக்கும்…“ என்கிறான். ஏழாவது மாடி சமையல் அறை வெளியே திறந்திருக்கும் ஜன்னல் அப்படியே பிய்ந்து விழுகிறது.
தூரத்தில் இருந்து திலகா பார்க்கிறாள். அவளும் கோகுலும் வந்து கொண்டிருக்கிறார்கள். “என்ன இது? ஓ தீ விபத்துடா…“ என்று கோகுலை இழுத்துக் கொண்டு ஓடி வருகிறாள். ராமசாமி அவளைப் பார்த்து “பயப்படாதே… சரியான சமயத்தில் நான் பாத்திட்டேன்…“ என்று அவளை அணைத்துக் கொள்கிறான்.
“நாந்தாங்க அடுப்புல தண்ணியை வெச்சிட்டு அப்பிடியே கதவைப் பூட்டிக்கிட்டு வெளியே போயிட்டேன்.“
“எங்க போனே?“
“ஆட்டோக்காரன் வரல்லன்னுட்டான். திடீர்னு நாலு மணிக்கு ஃபோன் பண்றான். நான் வேற கோவிலுக்குப் போயிட்டு வரலாம்னு கிளம்பிட்டிருந்தேன். சரின்னு கோகுலை நானே கூட்டிக்கிட்டு…“
“ஆஞ்சநேயர் கோவிலுக்கா?“
“ஆமாம்.“
“லங்கா தகனம்.. இங்கயே பார்க்கறே நீ…“ என சிரித்தவன், அவள் அழுகிறதைப் பார்த்து, “இட்ஸ் ஆல்ரைட். வேணுன்னு பண்ணுவாங்களா… பதறாதே…“ என்கிறான்.
ராணி கோகுலிடம் வந்து நிற்கிறாள். மேலே ஏணியில் ஏறி ஒருவன் ஏழாவது மாடி  சன்னல் வரை போய்க்கொண்டே தண்ணீரைப் பீய்ச்சுவதைக் காட்டுகிறாள்.
“சர்க்கஸ்“ என்கிறான். “எங்க மிஸ் கூட நாங்க போய்ப் பார்த்தோம்“ என்கிறான் கோகுல்.
“வீட்ல தீ விபத்துன்னு உங்களுக்கு எப்பிடித் தெரிஞ்சது?“ என்று அவனைக் கேட்கிறாள் திலகா. “எப்படிப்பா தெரிஞ்சது?“ என்று கேட்கிறான் கோகுல். “எனக்கு உங்க அம்மா பத்தித் தெரியும்டா…“ என்று சிரிக்கிறான் ராமசாமி. கோகுல் சிரிக்கிறான்.
“தீயை அணைச்சி முடிச்சிட்டாங்க போலுக்குடா…“ என்கிறான் கூட்டத்தில் ஒருவன். “இன்னும் ராதிகா வர்லியடா?“ என்கிறான் இன்னொருவன். “கதைப்படி அவதான் உள்ளே மாட்டிக்கிட்டு செத்துட்டாளோ என்னமோ?“
தண்ணீர்க் குழாய் அணைக்கப் படுகிறது. ஏணி மெல்ல தரைக்குச் சுருங்குகிறது.  மாடியில் இருந்து இறங்கி வரும் ஒரு தீயணைப்புத் துறைக்காரன். ஏணியில் இருந்து தண்ணீர் பீய்ச்சி விட்டு இறங்கும் இன்னொருவன். பின் குழாய் வழியே ஏறிப் போனவன். மூவரும் திரும்பி வருகிறார்கள்.
தண்ணீர்க் குழாய் சுருங்கச் சுருங்க அதைப் பாய் போல சுருட்டிக் கொண்டே வரும் ஒருவன்.
அதிகாரி வீட்டுக்குள் நுழைந்தவனிடம் “மேல இவங்க வீட்ல மெயினை ஆஃப் பண்ணிட்டியா?“
“ஆச்சி சார்“ என்கிறான் அவன். “சரி அப்ப மத்த மெய்னை எல்லாம் ரிலீஸ் பண்ணிறலாம்…“
படபடவென்று விளக்குகள் வருகின்றன.
அந்த ஏணிக்காரனிடம் கோகுல். “உங்களுக்கு பயமா இல்லியா அன்க்கிள்? அவ்ள உசரம் ஏணில ஏறிட்டீங்களே?“ என்கிறான். “எனக்கு யானை மேல ஏறவே பயம்.“
அவன் சிரிக்கிறான்.
“வீடுதான்.. சமையல் அ8ற முழுக்க மோசமா இருக்கு…“ என்கிறான் அடுத்தவன்.
“ஐயோ“ என்கிறாள் திலகா.
தீயணைப்புக்காரன் ஒருவன் கையில் ஒரு படம். சுவரில் மாட்டி வைத்திருந்த அவன் அப்பாவின் படம். அதன் கட்டை ஃப்ரேம்கள் பாதி எரிந்து. “ச். அப்பாவுக்குதான் ரெண்டாம் முறை கொள்ளி வெச்சாப்ல ஆயிட்டது..“ என்கிறான ராமசாமி.
“வீடு இப்ப நார்மலா ஆயிட்டது. தீயை அணைச்சிட்டம் சார்“ என்கிறார் அதிகாரி.  “சரியான நேரத்தில் தகவல் தந்தீங்க. அரை மணி முக்கால் மணியில வேலை முடிஞ்சது.. உங்களாலதான்.“
“இதுல கையெழுத்து போடுங்க“ என சில காகிதங்களை நீட்டுகிறார் அதிகாரி. அவன் குனிந்து கையெழுத்து இடுகிறான்.
“சார்… உங்க பெரு?“
ராமசாமி திரும்பிப் பார்க்கிறான்.
“ஏய், நீ தினத்தந்தி தானே?“
“ஆமா சார் போன வாட்டி வந்திருந்தேனே… அந்த BANK ROBBERY MATTER. நீங்கதானே?“
“யோவ் BANK ROBBERY இல்லைய்யா. அதைக் கண்டுபிடிச்ச மேட்டர்.“
“சாரி சார்.“
“நீ பாட்டுக்கு நானே ராபரி பண்ணினா மாதிரிச் சொல்றே?“ என்கிறான் ராமசாமி. “யார் உன்னை இங்க வரவழைச்சது?“
“நான்தான் அத்தான்…“ என பின்னால் இருந்து வருகிறான் சிகாமணி. “எப்படா வந்தே?“
“நான் வரும்போது அதிகாரி உங்க கிட்ட கை கொடுத்திட்டிருந்தார். ஃபுல் மேட்டரும் புரிஞ்சிட்டது. சட்னு இவனுக்கு ஃபோன் போட்டேன்.“
“காலைல வந்துரும் சார்…“ என்கிறான் ரிப்போர்ட்டர்.
அடுக்ககத்தில் வசிக்கிறவர்கள் அவனைச் சூழ்ந்து கொள்கிறார்கள். “சரியான சமயத்தில் வந்து நல்லா சமயோசிதமாக் காரியம் பண்ணினீங்க…“ என்று அவனுக்குக் கை குலுக்குகிறாரகள். ராணி வந்து “அன்க்கிள்“ என்று கை நீட்டுகிறாள். சந்தோஷமாய்க் கை குலுக்குகிறான். திலகா ஒரு வெட்கமான பெருமிதத்துடன் அவனைப் பார்க்கிறாள்.
“இந்தப் புகழ் எல்லாம் திலகாவையே சாரும்“ என்கிறான் ராமசாமி. எல்லாரும் சிரிக்கிறார்கள். ராமசாமி திரும்பி ரிப்போர்ட்டருடன் “எங்க நாலு பேரையும் ஒண்ணா படம் எடுத்துப் போடுவியா?“ என்று கேட்கிறான். “நில்லுங்க…“ என காமெராவை சரி செய்கிறான் ரிப்போர்ட்டர். சிகாமணி. திலகா. ராமசாமி. கோகுல். க்ளிக்… என்கிறது கேமெரா.
“வீடு என்ன லெட்சணத்தில் இருக்கோ“ என்றபடியே உள்ளே நுழைகிறார்கள். உள்ளே மின்சாரம் இல்லை. கணபதி டார்ச்சுடன் கூடவே வருகிறார். அப்பா படம் இருந்த சுவர் கரிந்து கிடக்கிறது. ஃப்ரிட்ஜ் அப்படியே உருமாறித் தெரிகிறது. சமையல் அறையில் சன்னலே இல்லை. சுவர்களில் தரையில் தண்ணீர். ஈரம். “ஐயோ உள்ளே நாம மாட்டியிருந்தோம்னா?“ என்கிறாள் திலகா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “மாட்டியிருந்தாலும் தினத்தந்தியில படம் வந்திருக்கும்“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “அந்த சோசியக்காரன்…“
“யாரு?“ என்கிறாள் திலகா. “உனக்கு அவனைத் தெரியாது…“ என்கிறான். “HE IS SOMEBODY.’’
சோசியனை மரத்தடியில் பார்த்து ஒரு பொன்னாடை போர்த்துகிறான் ராமசாமி. “இருக்கட்டும் சார். ஒரு தீ விபத்து… ஆனால் சமாளிச்சிருவீங்கன்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள ஓடிட்டீங்க…“ என்று சிரிக்கிறான்  அவன்.
சிதிலம் அடைந்த சமையல் கூடம்.
மறுபடியும் சீராகிறது.
கூடத்தில் புதிய ஃப்ரிட்ஜ். மேலே அப்பாவின் வேறொரு படம். அதில் மினுக்கும் சிரியல் பல்ப்.
சிகாமணியுடன் பேசிக் கொண்டிருக்கிறான் ராமசாமி. “வாழ்க்கை புதிரானது தான்டா. ALTERNATE REALITY பத்தி எனக்கே அனுபவப் படாமல் நான் நம்பியிருக்கவே மாட்டேன். உனக்கு அனுபவப் படாத அளவில் உன்னாலும் இந்தக் கதையை நம்ப முடியாது சிகாமணி…“ என்கிறான் ராமசாமி.
“அது உண்மைதான் அத்தான். ஒரு பொண்ணு போன ஜென்மத்துப் புருஷன் இவன்தான்னு சரியாச் சொல்லி அவனைத் தேடிப் போய்ப் பார்க்கறான்னு படிக்கிறோம். நிகழ்கால இந்தச் சின்னப் பெண் வாழ்க்கை, போன ஜென்ம வாழ்க்கை, ரெண்டுமே அவள் வாழறாளே?“
“அதை எப்பிடி நம்ம கைக்குள்ள பயன்படுத்தணும்னு… நீங்க சரியா கணக்கு போட்டீங்க அத்தான். அதான் விசேஷம்“ என்கிறான் சிகாமணி.
“புதன் மேடு…“ என்று கையைக் காட்டுகிறான் ராமசாமி. “அறிவாளி“ என்று சிரிக்கிறான். “சின்னக்கனியைப் போய்ப் பார்த்தியா?“
“பார்த்தேன் அத்தான்…“
“நாயகன் பார்ட் ட்டூ. எத்தனை தூரம் வந்திருக்கு?“
“ஓபனிங் சொல்லவா?“
“சொல்லு…“
“நாட்டின் பெரிய தாதா அவன். கோபாவேசமா நடந்து போகிறான். வழியில் ஒரு மரம்… அது மறிச்சி நிற்கிறது அவன் வழியை… ஹ்ரூம்… என உருமுகிறான்…“
“என்ன? வயித்தை வலிக்குதா அவனுக்கு?“
“மரம் பயந்துருது. அப்படியே மடியுது… சட்னு நகர்ந்து தள்ளிப்போய் நிக்குது. வழி விட்டுருது மரம்… ஹா ஹா. எப்பிடி அத்தான்…“
“டேய்… என் கதை… அது உனக்கு சுவாரஸ்யப்படல்லியா?“
“நான் அதை எடுத்தால்…“
“சொல்லு சிகாமணி…“
சிகாமணி சொல்கிறான்.
வசிகரப் பொய்கள் 2
ராமசாமி லிஃப்ட்டுக்குள் போகிறான். லிஃப்ட் பிளஸ் 1. காட்டுகிறது. பிளஸ் 1. ராமசாமி அதிர்ச்சி4 அடைகிறான். அவன் மூளையில் பல்பு எரிகிறது. நட்சத்திரங்கள் சிதறுகின்றன. பயந்தபடியே அவன் பிளஸ் 1 அழுத்துகிறான்.
ஒரு குகை போன்ற வழி. ஆனால் இருட்டாய் இல்லை. இது மகா வெளிச்சமாய் இருக்கிறது. அதைக் கடந்து போகிறான் ராமசாமி.
அலுவலகம். அந்த லோன் பார்ட்டி காத்திருக்கிறான். ஆச்சர்யமாய் இருக்கிறது அவனுக்கு. “என்ன வேணும்…“
“மேனேஜரைப் பார்க்கணும்.“
“என்ன விஷயம்?“
“ஒரு லோன் விஷயமா…“
“நீங்க எத்தனை வருஷமா லோனுக்கு அலையறீங்க?“
“நாலு வருஷமா அலையறேன் சார்…“
வியப்புடன் அருகில் இருக்கும் பியூன் ரத்தினத்திடம் “இது எந்த வருஷம்?“ என்று கேட்கிறான். “2018 சார்….“ என்கிறான் அவன்.
“ஓகோகோ…“ என்கிறான் ராமசாமி. “இது… நான் எதிர்காலத்துக்கு வந்திட்டேன்“ என்கிறான். பின் லோன் பார்ட்டியிடம் திரும்பி “போங்க. போயி மேனேஜரைப் பாருங்க“ என்கிறான்.
பியூன் ரத்தினம் அவன் பக்கம் குனிகிறான். “சார்…“
“என்னய்யா?“
“நீங்கதான் சார் இப்ப மேனேஜர்“ என்கிறான் ரத்தினம்.

மு ழு து ம்

91 97899 87842