Friday, September 25, 2015

bulk chapters 31 to 35 திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்
வசிகரப் பொய்கள்

எஸ். சங்கரநாராயணன்
 அத்தியாயம் 31

நான்கு சந்துகள் பிரிகிற நடு இடம் அது. ரௌடி ஒரு யோசனையின் தீவிரத்துடன் நிற்கிறான். கை தன்னைப் போல மீசையை முறுக்குகிறது. தாடியைத் தடவுகிறது. அவன் கூட ஒரு அடியாள். அங்கே யிருந்தே தூரத்தில் தெரிகிறது கிருஷ்ணா கபே வாசல். சனங்கள் நடமாட்டம். உள்ளே போகிறார்கள். காபி அருந்திவிட்டு வெளியே வருகிறார்கள். ரௌடி காத்திருக்கிறான். வேறு எங்கெல்லாமோ தேடி அவன் கண் துறுதுறுவென்று அலைகிறது. கிருஷ்ணா கபே வாசல். ராமசாமியும் சிலரும் வெளியே வருகிறார்கள். அவனைப் பார்த்ததும் சட்டென ரௌடியின் கண்கள் விளக்கேற்றிக் கொள்கின்றன. கூட இருக்கும் அடியாள். “என்னண்ணே?“ என்கிறான்.
“கண்டு பிடிச்சிட்டேன்…“
“அதே ஆள் தானா?“
“சந்தேகமே இல்லை.“
“இந்த தடவை விட்டுறக் கூடாது அண்ணே.“
“டேய் மணி… நீ இந்தப் பக்கத்துக்குத் தெருவுக்குப் போ. ஆளைக் கண்டுக்கிட்டியா?“
“கண்டுக்கிட்டேன் அண்ணே.“
“யாரு?“
“அந்த… கோடு போட்ட சட்டை…“
ராமசாமி கோடு போட்ட சட்டை அணிந்திருக்கிறான்.
“கரெக்ட்டு. நீ அடுத்த தெருப் பக்கமா ஜாக்கிரதையா இரு. ஒருவேளை நான் நேத்தி மாதிரி அந்தாளை விட்டுட்டால்…“
“அடுத்த தெரு பக்கம் தான் வரும். நான் லபக்குனு மடக்கிக்கறேன் கவலைப் படாதே அண்ணே…“
“ஜுட்…“ என ரௌடி சொல்ல அவனது அடியாள் மணி விறுவிறுவென்று பக்கத்துச் சந்துப் பக்கமாகப் போகிறான். “எதுக்கு இந்த ஆளைத் துரத்துறான் அண்ணன் தெரியல… ஹ்ம். அண்ணனுக்கு இப்பிடி பல வேலைகள்…“
ராமசாமி முதலில் ரௌடியை கவனிக்கவில்லை. திடீரென்று கவனித்து விடுகிறான். அவனுக்கு குப்பென்று ஆகி விடுகிறது. திரும்ப ஹோட்டலுக்குள் நுழைந்து விடுகிறான். அந்த பழக்கமான சர்வர் அவனைப் பார்க்க வருகிறான்.  “என்ன சார்? எதையாவது விட்டுட்டுப் போயிட்டீங்களா?“
“இல்ல. இங்க டாய்லெட் இருக்கா?“
“ஓ விட்டுட்டுப் போலாம்னு வரீங்க…“
“BAD JOKE. டாய்லெட் எங்க?“
“மாடில சார்…“
“எப்பிடிப் போறது?“
“டாய்லெட் எல்லாரும் எப்பிடிப் போவாங்க? அப்பிடித்தான்.“
“யோவ் நிலமை தெரியாமல் நீ வேற…“
“அவ்ள அவசரமா சார்.“
“விஷயம் அவசரம்.“
“லிஃப்ட் இருக்கு சார்.“
“லிஃப்ட்ல டாய்லெட் போலாமா?“
“இல்ல சார். லிஃப்ட்ல டாய்லெட்டுக்குப் போலாம்…“
“நாக்கு தப்பா சுழட்டி விட்டுட்டது… அது தமிழ் இலக்கணப்படி சரிதான். நாலாம் வேற்றுமைத் தொகை.“
“எனக்கு பில் தொகை தான் சார் தெரியும்.“
“லிஃப்ட் என் வாழ்க்கையில் ரொம்பதான் விளையாடுது.“ ராமசாமி கிறுகிறுவென்று லிஃப்ட்டைப் பார்க்கப் போகிறான். முதல் மாடியை அடைகிறான். லிஃப்ட் கதவைத் திரும்பச் சாத்தாமல் விட்டு விடுகிறான். உள்ளே வெளிச்சமாய் லிஃப்ட் நிற்கிறது. அதை யாரோ கீழே கூப்பிடுகிறார்கள். கிர்ர் என்று பொத்தானை அழுத்தும் சத்தம். அங்கே யிருந்தே ராமசாமி கீழே கடையைப் பார்க்கிறான். அந்த ரௌடி கடையின் உள்ளே வந்து… தேடுவது தெரிகிறது. “ஈஸ்வரா?“ என நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறான். சட்டென ரௌடி மாடி பார்க்கத் திரும்புகிறான். ஐயோ, என தலையைக் குனிந்து கொள்கிறான் “நிசம்மாவே டாய்லெட் வந்திரும் போலுக்கேய்யா?“
ரௌடி கீழே ஒரு முறை பார்த்து விட்டு ஆகா… மெல்ல மாடியேறுகிறான்.
ராமசாமி. திரும்ப லிஃப்ட்டுக்குள் புகுந்து தரைத் தளத்துக்குப் போகிறான். கதவைத் திறந்த ஜோரில் ஒரு பெரியவர் அவனை இடித்துக் கொண்டு உள்ளே நழைகிறார். “மேல டாய்லெட் இருக்கா?“ என்று கேட்கிறார்.
பதில் சொல்லாமல் தாண்டி கடைக்கு வெளியே பாய்கிறான் ராமசாமி.
“எனக்கு தான் அவசரம்னால் இவருக்கு என்ன அவசரம்?“ என்றபடி பெரியவர் லிஃப்ட் கதவைச் சாத்துகிறார்.
ரௌடி திரும்ப கீழே வருமுன் காணாமல் போய்விட வேண்டும் என அடுத்த தெருவில் விறுவிறுவென்று நடக்கிறான்.
ரௌடி டாய்லெட் பக்கம் போய்த் தேடுகிறான். டாய்லெட் கதவைத் திறந்து பார்க்கிறான். உள்ளே யாரும் இல்லை. ச்சே, என கையைக் குத்திக் கொள்கிறான். அதற்குள் அந்தப் பெரியவர் அந்தப் பக்கம் வருகிறார். “என்ன?“ என அவனைப் பார்க்கிறார். “டாய்லெட்ல தண்ணி வரல்லியா?“ என்று விசாரிக்கிறார். “அதான் நீயே ஊத்தப் போறியே நயினா?“ என அவன் திரும்ப வெளியே வரும்போது லிஃப்ட்டைப் பார்க்கிறான். தலையாட்டிக் கொள்கிறான். விறுவிறுவென்று வாசலுக்கு வந்து தேடுகிறான்.
ராமசாமி பக்கத்துச் சந்தில் நடக்கிறான். அவனுடன் இன்னொரு கோடு போட்ட சட்டைக்காரன். ரௌடியின் அடியாள் மணி காத்திருக்கிறான். ராமசாமியைப் பார்த்ததும் சட்டென அவன் சுதாரித்தாப் போலத் தெரிகிறது. கவனிக்காமல் ராமசாமி அவன் மேலேயே மோதிக் கொள்கிறான். மணியோ ராமசாமியை விட்டுவிட்டு அந்த அடுத்த கோடு போட்ட சட்டையைக் கண்காணித்தபடியே கூட விறுவிறுவென்று நடக்கிறான். திரும்பிப் பார்த்த அவன் கலவரமாய் நடையில் வேகமெடுக்கிறான். “என்ன நடக்குது இங்க?“ என தன்னையே கேட்டுக் கொள்கிறான். “நடு ரோட்டுல யாரும் லிஃப்ட் கிஃப்ட் வைக்கப்டாதா?“
அவன் பதட்டமாய் சுற்று முற்றும் தேடுகிற பாவனையில் இருப்பதால் ஒருத்தன் நின்று ராமசாமியிடம் “என்ன சார் தேடறீங்க?“ என விசாரிக்கிறான்.
“இல்ல. சட்டைப் பையில் இருந்து பணம்…“
“பணமா?“
“ஆமாம்.“
“கீழ விழுந்திட்டதா சார்?“
“ஆமாம்.“
“பாத்து கவனமா வெச்சிக்கக் கூடாதா சார்?“
“இனிமே கவனமா வெச்சிக்கறேன்…“
“எவ்வளவு சார்?“
“நூ…“ என்று அவன் வாயைத் திறக்குமுன் வந்தவன் வாய் அதைவிடப் பெரிதாய்த் திறக்கிறது. “நூறா?“
“ஐந்நூறு…“ என்கிறான் ராமசாமி.
“என்ன சார் நீங்க. இவ்ளவு அலட்சியமாவா இருப்பீங்க? இந்தக் காத்துல எங்க விழுந்ததோ… லேசா இருட்ட வேற ஆரம்பிச்சிட்டது.“ என அவன் பரபரப்பாகத் தேட ஆரம்பிக்கிறான்.
“தேடுப்பா. கிடைச்சால் என்னாண்ட குடு. கிடைக்காட்டி நீயே வெச்சிக்கோ.“
ராமசாமி விறுவிறுவென்று நடந்து போகிறான். தெரு முனையில் திரும்புகையில் ராமசாமி பார்க்கிறான். பணத்தைத் தேட கும்பல் கூடி விடுகிறது. கூட்டத்தில் யாரோ ஒருத்தன் “எவ்வளவு?“ என்று கேட்க, “ஆயிர ருவ்வா நோட்டு“ என்று யாரோ பதில் சொல்கிறார்கள்.
அப்போது அவசர நடையில் ரௌடி அங்கே வருகிறான். அவனைப் பார்த்ததும் ராமசாமி அங்கே யிருந்து நடக்க ஆரம்பிக்கிறான். ரௌடி விசாரிக்கிறான். “ஒரு கோடு போட்ட சட்டைக்காரர் இந்தப் பக்கமா வந்தாரா?“ எல்லாருமா பணத்தைத் தேடிக் கொண்டு மும்முரமாய் இருக்கிறார்கள். அதில் குனிந்து தேடும் ஒருத்தனின் பர்ஸ் பேன்ட்டின் பின் பாக்கெட்டை விட்டு வெளியே பிதுங்கித் தெரிகிறது. கை துறுதுறுக்க ரௌடி அந்தப் பர்சை லூட் அடிக்கிறான்.
“எவ்வளவு ரூபா காணம்?“
“முழுசா ஆயிர் ரூவா தாளுய்யா…“ என்கிறான் பர்சை இப்போது இழந்த அந்தப் பையன்.
“நிறையத் தாள் இருக்கும் போலருக்கே“ என்கிறான் ரௌடி. “போயித்தான் எண்ணிப் பார்க்கணும்“ என்றபடியே தாண்டிப் போகிறான்.
அதற்குள் பர்சைப் பறி கொடுத்த அந்தப் பயைன் தன் பின் பாக்கெட்டில் பார்த்து விட்டு, “ஐயோ என் பர்சு…“ என அலறுகிறான். “அதையும் சேர்த்துத் தேடுங்கடா முண்டங்களா…“ என்றபடியே ரௌடி போகிறான்.
ராமசாமிக்கு என்ன பண்ண தெரியவில்லை. பஸ் நிறுத்தத்தில் காத்திருக்க பயமாய் இருக்கிறது. எந்த பஸ் வந்தாலும் ஏறி விடலாம், என நினைத்துக் கொள்கிறான். பீச் பக்கம் போகிற பஸ் வருகிறது. “ஐயோ அங்க போனால் தலைல அடி விழும்…“ என தலையைத் தடவிப் பார்த்துக் கொள்கிறான். அதற்குள் ரெளடி வருவதைப் பார்த்து விடுகிறான். சட்டென பஸ்சில் தாவி யேறுகிறான். ரௌடி பஸ்சுக்கு ஓடி வருகிறான். அவன் ஓடும் வண்டியில் பாய்ந்து ஏறுகிறான். ராமசாமி முன் வழியாக பாய்ந்து இறங்குகிறான். ரௌடி இறங்குமுன் பஸ் வேகம் எடுத்து விடுகிறது. பஸ் வாசல் பக்கம் இருந்து ரௌடி எட்டிப் பார்க்கிறான். டாடா… என்று கையசைக்கிறான் ராமசாமி.
“தாதா உனக்கு டாடா.“
அப்பாடா, என பஸ் நிறுத்தத்துக்குத் திரும்ப வந்து உட்கார்ந்து ஆசுவாசப் படுகிறான். ‘யாரு இவன்? எதுக்கு என்னை விரட்டறான்? ஒரு இழவும் புரியல்லியேய்யா?“ என்கிறான்.
சர்ர்ரென்று ஒரு ஆட்டோ வந்து அவன் முன்னால் நிற்கிறது. அதில் இருந்து ரௌடி இறங்குகிறான். பதறிப்போய் எழுந்து நிற்கிறான் ராமசாமி. “நான் வெச்ச குறி தப்பாது… ஹா ஹா“ என சிரிக்கிறான் ரௌடி. “பயமா இருக்கா சார்?“
“உன்னைப் பார்க்கப்…பரவாயில்லை. உன் சிரிப்பு தான் பயமா இருக்கு.“
ஆட்டோ போய் விடுகிறது.
“த பார். நான் பிள்ளைக் குட்டிக் காரன்…“
“எத்தனை பிள்ளை எத்தனை குட்டி?“
“உனக்கு என்ன வேணும் சொல்லு. என்கிட்ட இப்ப பணம் இல்லை. உனக்கு வேணுன்னால் பேங்க்ல லோன் போட்டு தான் உனக்கு எடுத்துத் தரணும்.“
“பணமா. ஹா ஹா“
“இப்பதானே சிரிக்காதேன்னேன்?“
“எனக்கு நீ தான் சார் வேணும்… நீ சாதாரண ஆள் இல்ல.“
“பார்க்க விநோதமா இருக்கேனா?“
“தெய்வம் சார் நீ. தெய்வம்… என்னோட தெய்வம்.“ ரௌடி நெகிழ்கிறான். அப்படியே ராமசாமியின் கையைப் பிடித்துக் கொண்டு கலங்குகிறான். “அன்னிக்கு….“
“என்னிக்கு?“
“நீ மட்டும் அந்த சமயத்தில் பீச்சுக்கு வந்திருக்கா விட்டால் …“
“எனக்கு அடி பட்டிருக்காது.“
“அது உனக்கு விழ வேண்டிய அடி இல்ல அய்யா.“
“அது உனக்கும் தெரியுமா?“
“எனக்கு விழ வேண்டிய அடி அய்யா அது…“
“ஓ கதை அப்பிடிப் போவுதா?“ என ராமசாமி சிரிக்கிறான்.
“ஆமய்யா. தெய்வம் நீ எனக்கு. என் தங்கமே. தியாகச் செம்மலே…“
“மெழுகுவர்த்தியா உருகறியேய்யா…“
“தபார் இனிமே நாம ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணு. கண்ணுக்குள்ள கண்ணு.“
“மண்ணுக்குள்ள மண்ணா?“
“உனக்கு என்ன உதவின்னாலும் கேளு. என்ன காரியம்னாலும் சொல்லு. நான்… நான் செய்யறேன் தலைவா…“ என நெஞ்சைத் தட்டுகிறான் ரௌடி.
“நீ என்னை ஆளை விட்டால், அதுவே பெரிய உதவி.“
“அப்பிடிச் சொல்லாதே கண்ணு. என்ன உதவியோ… கேளு… கேளு… நான் இருக்கேன்.“
ராமசாமிக்கு வேடிக்கையாய் இருக்கிறது. “உன் பேர் என்ன?“
“கனி. சின்னக்கனி. கேட்டியா? நீ அவசியம் என்னாண்ட வரணும்…“ என்கிறான். “நீ வராட்டி கூட நான் உன் கூடவே இருப்பேன்.“
“வராட்டி எரு… எனக்கு ஒரு உதவியும் வேணாம் கனி.“
“ஆ அப்பிடிச் சொல்லக் கூடாது. யார் நீ?“
“தெய்வம்.“
“கண் கண்ட தெய்வம்… அன்னிக்கு… நல்ல வசம்மா திட்டம் தீட்டியிருக்கானுங்க…“
“உனக்கு யார் எதிரி கனி?“
“நிறையப் பேர் இருக்கான். எப்பவுமே என் தலைக்கு மேல கத்தி தொங்குது.“
“கத்தி இல்ல, சத்தம் இலலாம தொங்குது.“
“என்ன சொல்றே?“
“சும்மா ஜோக். தெரியாத்தனமா உன்னாண்ட ஜோக் அடிச்சிட்டேன்…“
“ஜோக்கா? சரி சரி. ஹா ஹா“ என சிரிக்கிறான்.
“புரியுதோ புரியல்லியோ சிரிச்ச்சிட்டே.“
“பின்னே? யார் நீ? நம்மாள் நீ. இந்த பார்….“
“எனக்கு ஒரு உதவியும் வேணாம் கனி.“
“இப்ப வேணாம். அதை ஒத்துக்கறேன். ஆனால் எதிர்காலத்தில்….“
“அதாவது நிகழ் காலத்தில்…“ என்கிறான் ராமசாமி.
“இல்ல. எதிர்காலத்தில்… நான் சரியாத்தானே சொல்கிறேன். தண்ணியடிச்சாலும் நான் நிதானம் தவற மாட்டேன்.“
“நீ தண்டியடிச்சி நிதானமாப் பேசறே. நான் தண்ணி யடிக்காமல் உளர்றேன்… இல்லியா கனி?“
“எதிர்காலத்தில்…“
“சரி எதிர்காலத்தில்…“
“உனக்கு என்ன தேவைன்னாலும் என்னாண்ட வா. நான் நினைச்சால் முடிக்க முடியாத வேலையே கிடையாது. வேலையை முடிப்பேன். ஒத்து வரர்ல்லியா...“
“ஆளையே முடிப்பே. அப்பிடித்தானே கனி?“
“கரெக்ட். எப்பிடிக் கண்டுபிடிச்சே? அதான் என் வேலை…“
“அது சினிமாக்கள்ல பன்ச் டயலாக் இப்பிடி தான் இருக்கும்.“
“தெயவமே… என் தெய்வத்துக்கு ஒரு சின்னப் பரிசு…“
அவன் தன் கழுத்தில் இருந்து ஒரு தங்கச் சங்கிலியை எடுத்து ராமசாமி கழுத்தில் போடுகிறான்.
“ஐயோ இதெல்லாம் வேணாம்…“
“இருக்கட்டும் தலைவா.“
“யாராவது என் நகைன்னு சண்டைக்கு வரப் போறாங்க கனி…“
“இது அடகுக்கடைல அடிச்சது… வர மாட்டாங்க. கவலைப் படாதே. இது எனக்கு ரொம்ப ராசி. இதை மாட்டிக்கிட்டதுல இருந்து….“
“நீ மாட்டிக்கிட்டதே இல்லை. அதானே?“
“கரெக்ட்டு“ என ரௌடி ஆச்சர்யப் படுகிறான்.
“பன்ச் டயலாக்“ என்கிறான் ராமசாமி. சிரித்தபடி “கனி, ரெண்டு நாளா ஆளைக் கதி கலங்க அடிச்சிட்டே… சரி. சந்தோஷம். என்னை விட்டுரு…“
“அப்பிடிச் சொல்லாதே கண்ணு. யார் நீ?“
“அதெல்லாம் வேணாம். நீ தப்பிச்சது பத்தி சந்தோஷம்… அவங்க முகம்லாம் எனக்கு ஓரளவு ஞாபகம் இருக்கு கனி.“
“விடப்டாது அவங்களை. தொழில்னு வந்திட்டால்… அது வேற கணக்கு.“
‘கணக்கு எல்லாம் பேசற கனி. நீ எதுவரை படிச்சிருக்கே?“
“கணக்கு வாத்தியாரை மண்டைய ஒடைச்சிட்டுப் பள்ளிக்கூடத்துல இருந்து ஓடி வந்தேன்…“ என்று சிரிக்கிறான் கனி. “அத விடு. நம்ம கணக்கு எல்லாம் ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு. அவ்ளதான். கேட்டியா? உனக்கு எதும் தேவையா? எப்ப வேணா எந்த நேரம் வேணா… கேட்டியா? ராத்திரி பன்னெண்டு மணியின்னால கூட நீ என்னைத் தேடி வரலாம்….“
“தேடி வர்றதா?“
“ஆமாம். சைதாப்பேட்டை பக்கம் வா. சண்முகா டாக்கீஸ் தெரியுதா? அந்த ஏரியா பக்கம் வந்தாலே சின்னக்கனின்னா எல்லாருக்கும் தெரியும்.“
“நான் வராட்டி சின்னக்கனின்னா அவங்களுக்குத் தெரியாதா?“
“என்ன பேசற நீ… நீ பேசறது எனக்குப் புரியல.“
“ஜோக்.“
“ஆ ஜோக்கா? இருக்கட்டும் இருக்கட்டும். ஹா ஹா“ என சிரிக்கிறான் சின்னக்கனி.
“திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்னு பாட்டு… உன் சிரிப்பில் அது ஞாபகம் வருது கனி.“
“சரி தலைவா. வரட்டா? இன்னிக்கு என் தெய்வத்தைக் கண்டேன்…“
அப்போது சின்னக்கனியின் அடியாள் மணி ஓடி வருகிறான். “அண்ணே நீ இங்கியா இருக்கே?“
“என்ன மணி?“
“ச்சே. எவ்வளவோ முயற்சி பண்ணினேன் அண்ணே. அந்தாளு… தப்பிச்சிட்டாரு.“
“ஏய் என்னடா சொல்றே?“
“அந்தக் கோடு போட்ட சட்டை…“
“நான் இவரைத் தாண்டா தேடினேன்… நீ யாரைப் பார்த்துப் போனியோ. எழவெடுத்தவன்டா நீயி. உனக்குப் பகல்லியே பசமாடு தெரியாது. ராத்திரி எருமைமாட்டை எங்க தேடுவே…“
மணி சிரிக்கிறான். “அது அப்பிடி ஆயிப் போச்சா… நான் துரத்திம் போனேனே, அந்தாளு இன்னிக்கு ராத்திரி தூங்க மாட்டான்…“
“உங்களால நான் ரெண்டு நாள் தூங்கல“ என்கிறான் ராமசாமி.
“ஒண்ணு செய்யி மணி. நீ நாளைப் பின்ன அதே ஆளைப் பாத்தியானால், சாரி, தப்பா உங்களைத் துரத்திட்டேன்னு மன்னிப்பு கேட்டுரு. என்ன?“
“அவ்ளதான் திருப்பியும் ரெண்டு நாள் தூங்க மாட்டான்…“ என மணி சிரிக்கிறான்.
“நான் தூங்குவேன்…“ என்கிறான் ராமசாமி.
“சார் தானா?“ என மணி அவரை ஏற இறங்கப் பார்க்கிறான்.
“நான் இவனோட தெய்வம்…“ என்கிறான் ராமசாமி சிரித்தபடி.
“கும்பிட்டுக்கோ“ என்கிறான் சின்னக்கனி. “சாருக்கு இனிமே என்ன உதவி வேணாலும்.. என்ன? நாம செஞ்சி குடுக்கோணும்.. கேட்டியா? சார்தான்டா…“ அவனுக்குத் தொண்டை அடைக்கிறது. “அவர் மட்டும் இல்லாட்டி….“
“நீ மட்டும் இல்லாட்டி… எனக்கு அடியே விழுந்துருக்காதே கனி“ என்கிறான் ராமசாமி.

அத்தியாயம் 32
SONG NO 5
இளமைத் திருவிழா. WHY SHOULD BOYS HAVE ALL THE FUN? மகா. ஸ்கூட்டி பெப். தாவி வந்து ஏறிக் கொள்கிறாள். பின்னால் கூட அமரும் ஸ்ரீநிவாஸ். நாடு நகரமெங்கும் உற்சாக உலா. ஒரே சமயம் நாலு விதமான உடைகளில் அவனும் அவளும் போகிறாப் போல கலகலப்பான இளமைக் காட்சிகள்.
ஒரு வீதியில் அவளை ரமேஷ் பார்த்துக் கையாட்டுகிறான். ஜவுளிக்கடை ஒன்றில் மேனேஜர் கிருஷ்ணராஜ் அவர்களைச் சிரிப்புடன் எதிர்கொள்கிறார். அவர் வெளியே வர அவர்கள் உள்ளே போகிறார்கள். இன்னொரு தியேட்டர் காம்ப்ளெக்சில் ராமசாமியும் திலகாவும் அவர்களைச் சந்திக்கிறார்கள்.
வாகனத்தில் போகிறார்கள். அவளது துப்பட்டா பறந்து பறந்து காற்றில் எழும்பி அவனை வருடி மூடுகிறது. அவளது கூந்தல் பின்னால் பிரிந்து கிடக்கிறது. தலை நிறையப் பூக்கள். பூக்களை விலக்கி கூந்தல் வாசனை பிடிக்கிறான் ஸ்ரீநிவாஸ்.
பாடலின் இடையே அடிக்கடி இடம் பெறும் வாக்கியம். WHY SHOULD BOYS HAVE ALL THE FUN…
ஒரு பூங்காவில் அவள் வீசிய தொப்பி அவன் தலையில் வந்து உட்கார்கிறது. அவனது குளிர் கண்ணாடியை அவள் எடுத்து மாட்டிக் கொள்கிறாள். அவனும் அவளும். குளியல் அறை ஷவர். சட்டென ஷவரைத் திறக்கிறாள் மகா. மேலே யிருந்து தண்ணீருக்கு பதிலாக பூக்கள் அவர்கள் மேல் சொரிகின்றன. முழுசுமான இருட்டு வெளி. மகா நடந்து போகிறாள். அந்தப் பகுதியே வெளிச்சமாகிறது. ஒரு மேசை. ஒரே ஒரு நாற்காலி. அதில் ஸ்ரீநிவாஸ் உட்கார்ந்திருக்கிறான். மகா வருகிறாள். கிடுகிடுவென்று ஓடிப்போய் ஒரு நாற்காலி எடுத்து வந்து போட்டு அவளைக் கைகாட்டி உட்கார், என்கிறான். பிறகு அவன் தன் நாற்காலியில் உட்கார்ந்து கொள்கிறான். மகா வந்து காலி நாற்காலியில் அமராமல் அவன் மடி மேல் அமர்கிறாள். இருவரும் ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார்கள். அவன் ருசி அத்தனைக்கு இல்லியே என்று பாவனை காட்டுகிறான். சட்டென அவள் தன் ஐஸ் கிரீமை அவனிடம் தருகிறாள். அதை ஒரு ஸ்பூன் எடுத்து சுவைத்து கண்ணை அகல விரிக்கிறான்.
அவன் உதட்டில் ஒட்டி ஈஷிக் கிட்க்கும் ஐஸ் கிரீம். துடைக்க அவளிடம் ககைக்குட்டை கேட்கிறான். அவள் தன் நாக்கால் அவன் உதட்டில் துழாவி சத்தம் செய்கிறாள். அவள் உதடுகள் சுத்தமாகவே இருக்கின்றன. அவன் நான் துடைக்கட்டுமா என்று கேட்க அவள் அவனைச் செல்ல அடி அடித்துவிட்டுச் சிரிக்கிறாள்.
மகாவும் ஸ்ரீநிவாசும் அந்த மரத்தடி சோசியம் பார்க்கிறார்கள். அவன் என்னவோ சொல்கிறான். அவள் முகம் ஜிவு ஜிவு என்று கோபம் பொலிகிறது. சட்டென எழுந்து கொள்கிறாள். ஸ்ரீநிவாஸ் அவளை சமாதானப் படுத்த அவள் பின்னால் ஓடுகிறான்.
தினசரி காலண்டரின் நாள்கள் மேலெழும்பி அகாடின் வாத்தியம் போல பறக்கின்றன.
மகாவுக்கு அருகில் ராதிகாவின் இருக்கை காலியாக இருக்கிறது. ரமேஷ் பக்கமாகத் திரும்பி மகா “ராது ஞாபகமாகவே இருக்கு எனக்கு… கல்யாணம் ஆன ஜோரில் இவ்வளவு சீக்கிரம் அவளுக்கு வேலை மாற்றல் கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கல ரமேஷ்“ என்கிறாள். “அவளுக்கு எங்கே நம்ம ஞாபகம் இருக்கப் போறது. வீட்டுக்காரரைப் பத்தி யோசிக்கவே 24 மணி பத்தாது இப்ப…“ என சிரிக்கிறான் ரமேஷ்.
ராமசாமி எதோ ஃபைலை எடுத்துக் கொண்டு வருகிறான். “என்னாச்சி ராமு? எதும் டேலி ஆகல்லியா?“
“ஒரு இடத்தில் மூணு போட்டு நானே எட்டுன்னு கூட்டும் போது ஆயிட்டது. மேனஜேர் கத்தாறரு…“ சோகமாகச் சிரிக்கிறான். “அது உன் ஜாதக விசேஷம்டா கூடவே வரும்“ என்கிறான் ரமேஷ். “கால்குலேட்டர்ல கூட்டலாம். அப்ப கூட கையெழுத்தைப் பார்த்துக் கூட்டணும்னு பிரச்னை இருக்கு. பேசாமல் கம்பியூட்டர்லியே பார்த்து கம்பியூட்டர் கால்குலேட்டர் பயன் படுததேன்டா?“
“நல்ல யோசனை தான். சட்னு கைல இருக்கிற கால்குலேட்டரை எடுக்கதான் வருது“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“என்ன மகா… ஒரே உற்சாகம் போல இருக்கு. ஸ்கூட்டி பெப் கிட்ட கேட்டால் கதை கதையாச் சொல்லுது.“
“அவள் ஸ்கூட்டி பெப் வாங்கினதே அதுக்கு தானே?“
“அப்படியா?“ என மகா சிரிக்கிறாள்.
“ஸ்ரீநிவாஸ் இப்பல்லாம் பைக் ஓட்டறதையே விட்டுட்டான்…“
“ஏன்?“
“அதுல இடம் நிறைய இருக்கு…“
“அப்டின்னா?“
“இதுல இன்னும் நெருக்கமாப் போகலாம் இல்லே?“ என்கிறான் ராமசாமி.
மகா வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கிறாள். “ஸ்ரீநிவாஸ் இஸ் QUITE NAUGHTY.“ என்கிறாள். “எங்க பாத்தீங்க சார்?“
“ஐஸ் கிரீம் பார்லர்ல, பார்க்ல. ரெஸ்ட்டாரண்ட்ல. ஜவுளிக்கடைல… எங்க பார்க்கல்ல? எல்லா இடத்திலயும் பச்சை ஸ்கூட்டி பெப் தான்…“
“நல்ல கதையா இருக்கே. நாட்ல எத்தனையோ பேர் கிட்ட… இதே கலர்ல வண்டி இருக்கக் கூடாதா?“ என்று புன்னகை செய்கிறாள்.
“அதுல வாசகம். WHY SHOULD BOYS HAVE ALL THE FUN. அது இருக்கே. உன்னைத் தவிர யாரு இப்படிச் சொல்லுவா?“ என்கிறான் ராமசாமி.
“இது ஆண்களின் உலகம். ஒரு பொண்ணு சந்தோஷமா இருந்தாலே அதுக்கு நாங்க தான் காரணம்னு வந்துருவாங்க…“ என போலியான கோபத்துடன் வம்புக்கு வருகிறாள் மகா.
“ஆண்கள் சந்தோஷமா இருந்தால் அதுக்கு ஒரு பொண்ணு தான் காரணம்னு நாங்க சொல்லணுமாக்கும்?“ என இடைப் புகுகிறான் ரமேஷ்.
“அவரவர் சந்தோஷத்துக்கு அவரவரே காரணம். நாம சந்தோஷமா உணரணும் முதல்ல. அப்ப… கூட இருக்கறவங்க தங்களையும் சந்தோஷமா உணர்வாங்க. ரைட்?“ என்கிறாள் மகா.
“மகா இஸ் ஆல்வேஸ் ரைட்…“ என்கிறான் ரமேஷ்.
மகா வெட்கத்துடன் தலையை சிலுப்பியபடி எதற்கோ எழுந்து போகிறாள். “என்ன இப்ப உனக்கு எதுவும் சொல்லணும்னு தோணல்லியா?“ என்று அவனை வம்புக்கு இழுக்கிறான் ரமேஷ்.
“ஏன் தோணாமல்?“ என்கிறான் ராமசாமி. “உனக்கு எல்லாம் விளையாட்டா இருக்கு இல்லே?“
“நோ நோ. உன்னை சங்கடப் படுத்தறேனா?“
“அதெல்லாம் இல்லை. கேட்கலாம். நான் பதில் சொன்னால் உனக்குக் குழப்பம்தான் அதிகம் ஆகுது இல்லியா?“
“இல்ல. முன்ன ஒரு தடவை… இந்த நாள் எனக்கு அப்பிடியே மனசில வருதுன்னு டக் டக்குனு எடுத்து விட்டே… அப்பறம் அப்படி நாம பேசிக்கல.“
“ஏன் நான் நிம்மதியா இருக்கறது பிடிக்கல்லியா?“
“மூடு சரியில்லையாடா. நான் எது சொன்னாலும் சட்னு இப்ப சீரியசா ஆயிர்றியே… சரி. வேற ஏதாவது சொல்லுடா.“
“ஹா ஹா…“ என சிரிக்கிறான் ராமசாமி. “என்னடா சொல்லிட்டுச் சிரி“ என ரமேஷ் புன்னகை செய்கிறான்.
“சின்னக்கனின்னு ஒருத்தன். சைதாப்பேட்டைப் பக்கம் தாதா போல இருக்கு… அவனோட அன்னிக்கு ஒரே கூத்து.“
“அடிக்கடி அவனை வாழ்த்தி போஸ்டர் எல்லாங் கூட நான் பார்த்திருக்கேன். உனக்கு எப்பிடி அவன் பழக்கமானான்?“
“அது அதைவிடப் பெரிய கூத்து… நான் அன்னிக்கு பீச்சுக்குப் போனப்ப…“ என்றவன் மகா வருவதைப் பார்த்து விட்டு “அப்பறம் பேசலாம்“ என்கிறான்.
மகா வந்து ஒரு பேப்பரை அச்சிட்டு எடுத்துக் கொண்டு போகிறாள். “பார் இப்ப மகாவுக்கு ஃபோன் வரும்“ என்கிறான் ராமசாமி.
“ஃபோனா?“
“அவள் கல்யாண நிச்சயதார்த்தம் பத்தி…“
“ஓகோ.“
“ஸ்ரீநிவாசோட அப்பா அம்மா லண்டன்ல இருக்காங்க. அவங்க கல்யாணம்னு நேரடியா வந்திர்றோம். அதுக்கு முன்னால அவனோட சித்தப்பாகிட்ட சொல்லி நிச்சயதார்த்தம் ஒரு நல்ல நாள்ல பண்ணிறலாம்னு பேசுவாங்க.“
“அவங்க பொண்ணைப் பார்க்க பேச வேண்டாமா என்ன?“
“அட ரமேஷ். நீ எந்தக் காலத்தில் இருக்கே? இப்ப ஸ்கைப் இருக்கு. இப்படியே முகத்தைப் பார்த்துப் பேசிக்கலாம். ஸ்கைப்லயே, ஃபேஸ்புக்லயே லவ் பண்ண ஆரம்பிச்சாச்சி…“
“பிள்ளை எப்பிடிப் பெத்துப்பாங்க? ஸ்கைப்லயேவா?“ என்கிறான் ரமேஷ்.
“இது கொஞ்சம் ஓவர். நம்ம கதையப் பேசுடா.“
“இல்ல இவனே. மகா கல்யாணத்துக்கு இப்ப என்ன அவ்வளவு அவசரம்?“
“ஸ்ரீநிவாசஸ் அவசரப் படறானோ? இல்ல சித்தப்பாவே இவங்க ஒண்ணா படு போடு போடறாங்கன்னு நிச்சயம் பண்ணிறலாம்னு எடுத்துச் சொன்னாரோ தெரியலடா…“ என்று சிரிக்கிறான்.
“SO THIS IS WHAT YOU GUESS. RIGHT?’’ என்கிறான்.
“ஆல்வேஸ் ரைட்“ என்கிறான் ராமசாமி.
மகா வருகிறாள். முகம் மலர்ந்து கிடக்கிறது. “என்ன மகா? போகும்போது மொட்டாப் போன. வரும் போது பூவா வர்றே?“ என்று சிரிக்கிறான்.
“அப்படியா? நான் எப்பவும் போலத்தானே இருக்கிறேன்?“ என்கிறாள் போலியான பாவனையுடன்.
“ஆகா. ராதிகா கல்யாணம் நடக்கிற போதே உன் பார்வை யெல்லாம் ஸ்ரீநிவாஸ் மேலதான்…“
“அதாவது, நீயும் கல்யாணத்துல என்னியே தான் நோட்டம் பாத்திட்டிருந்திருக்கே. இல்லியா?“ என மகா ரமேஷைப் பார்த்துச் சிரிக்கிறாள். “ஆனால் சும்மா சொல்லக் கூடாது. நீங்களும் ரமேஷும் ராது கல்யாணத்தை எப்பிடி எடுத்துச் செஞ்சீங்க…“ என்று பாராட்டுகிறாள் மகா.
“உன் கல்யாணம் எப்ப மகா?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“இப்பதான் அப்பா ஃபோன் பண்ணினார்.“
ரமேஷ் ஜாடையாய் ராமசாமியைப் பார்க்கிறான். ராமசாமி சிரிக்கிறான். “என்ன விசேஷம் மகா?“
“எனக்கு கல்யாணத்தை நிச்சயம் பண்ணிறலாம்னு அவங்களுக்கு ஒரு இது…“
“அப்ப…“ மகாவைக் காட்டிப் பேசுகிறான் ரமேஷ். “இவங்களுக்கு ஒரு இது இல்லியா?“
குப்பென்று அவளுக்கு ஒரு வெட்கம் முகத்தில் தாவுகிறது.
“இவங்க என்ன சொல்றாங்க?“
“அவங்க என்ன சொல்றாங்கன்னா….“ என மகா ஆரம்பிக்க, ரமேஷ் விடவில்லை. “அவங்க இல்லை. இவங்க, இவங்க…“ என மகாவைக் காட்டுகிறான்.
“எனக்கு என்ன, தாலி ரெடின்னால் கழுத்தை நீட்டிற வேண்டிதான்.“
“எப்ப நிச்சயதார்த்தம் மகா?“ என்கிறான் ராமசாமி.
“உனக்கே தெரியுமேடா?“ என்கிறான் ரமேஷ்.
“என்னது?“ என்கிறாள் மகா. “அவருக்கு எப்படித் தெரியும்?“ என்கிறாள். “எனக்கே இப்பதான் தெரியும்.“
“மிஸ்டர் முக்காலம் அவன். அவனுக்கு எல்லாமே தெரியும்…“
“அப்பிடியா?“ என முகம் மலர்கிறாள். “சொல்லுங்க. என் கல்யாண நாள் உங்களுக்குத் தெரியுமா?“
ராமசாமி எதோ சொல்ல வருமுன், அவளுக்குப் பின்னால் இருந்து தலையை அசைத்து, இரகசியத்தை உளறி விடாதே, என்பது போல எச்சரிக்கிறான் ரமேஷ்.
“தெரியும்“ என்கிறான் ராமசாமி.
“ஆகா…“ என்கிறாள் மகா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. “எப்பிடித் தெரியும் உங்களுக்கு?“
“சஸ்பென்ஸ்“ என்கிறான் ரமேஷ். பிறகு அவள் அறியாமல் வாயைப் பொத்துடா, என்கிறாப் போல ரமேஷ் கெஞ்சுகிறான்.
“ஆமாம். நீங்க ராதிகா கல்யாணம் பத்தி முன்னாடியே சொன்னதா ராதிகா சொல்லீர்க்கா…“
“எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லாமல் அவளுக்குத் தூக்கம் வராது…“ என்று ரமேஷ் சிரிக்கிறான்.
“என் கல்யாணம்… எங்க நடக்கும் சார்?“ என அவள் திரும்பவும் கேட்கிறாள். “நல்லா நடக்கும் மகா. நாங்க ரெண்டு பேரும் கூட இருந்து ஜாம் ஜாம்னு நடத்தி வைப்போம்…“ என்கிறான் ரமேஷ் அவசரமாக.
ராமசாமி தலையாட்டுகிறான். “நிச்சயதார்த்தம் சேலத்துல இல்லியா? சாதாரணமா பையன் வீட்ல தான் பண்ணுவாங்க. இது சேலத்துல நடக்குது…“
“கரெக்ட் சார்.“ மகா விழிகளை விரித்து ஆச்சர்யப் படுகிறாள். “உங்க பேச்சை நம்பறேன் சார்… ஆனால்…“
“என்ன ஆனால்?“ என்கிறான் ராமசாமி.
“அந்த சோசியக்காரன்…“ அவள் முகம் மாறுகிறது.
“அட அவனை நம்பாதே…“ என்கிறான் ரமேஷ்.
“என்னையும் நம்பாதே“ என்கிறான் ராமசாமி. எழுந்து போகிறான்.
ராமசாமியின் அப்பாவின் படம் மாலை போட்டு. நிகழ் காலம். இரவு. தூங்க முடியாமல் தவிக்கிறான். திலகா நல்ல உறக்கத்தில் இருக்கிறாள். அவன் அசைவதைப் பார்த்து அவள் தூக்கம் கலைகிறது.
“என்னங்க? தூக்கம் வரல்லியா?“
“இல்ல தூங்கிட்டு தான் இருக்கேன்.“
“தூங்கிட்டிருந்தால் பேச்சே வராதே…“ என அவனைப் பார்க்கத் திரும்புகிறாள். “கண்டதையும் நினைச்சிக்கிட்டு படுக்க வந்தால் அதே தூங்க விடாதபடி தொந்தரவு பண்ணும்.“
“மகாவோட நிச்சயதார்த்தம் பத்தி அவள் அப்பா இன்னிக்குப் பேசினார் அவ கூட.“
“ஆமா அதுக்கென்ன? நம்ம ரெண்டு பேரையுமே கண்டிப்பா வரணும்னு அவள் கூப்பிட்டாள். நம்ம வீட்டுக்கே வந்தாள். நாம போயிருந்தோமே…“
“ம். நல்ல பொண்ணு. பாவம் அநியாயமா…“
“ஐயோ அது பழைய கதை அப்பா. இப்ப எதுக்கு அதெல்லாம்…“
“இப்ப வேணாம் திலக். ஆனால் என் மனசில் COUNT DOWN HAS STARTED. 30 29 28 அப்டி அவளோட நாட்கள், தலை கீழா எண்ணப் பட்டுக்கிட்டே வருது. அவளோட முடிவு நெருங்கிட்டே வருது இல்லியா?“
“உங்களை யாரு மைனஸ் 1 அழுத்தச் சொன்னா?“
“என் மனசிலயே அவள் நாட்கள் மைனஸ் ஆயிட்டே வருது…“
அவள் அவன் கன்னத்தை அழுத்திப் பிடிக்கிறாள். “இங்க பாருங்க. இது உங்களோட போறது இல்லை. நீங்க வந்து இப்படி நிம்மதி யில்லாமல் அவஸ்தைப் பட்டீங்கன்னா… அதை நான் பாட்டுக்கு வேடிக்கை பாத்திட்டிருக்க முடியாது.“
அவன் பதில் பேசவில்லை. “பாருங்க. இனிமே நீங்களா எதாவது ஏடாகூடமாப் பண்ணிட்டு வந்து… என் தூக்கத்தையும் கெடுக்கக் கூடாது. கேட்டிங்களா?“
“கேட்டேன்.“
“இனிமே எனக்காக… தயவு செய்து… நோ மைனஸ் 1. சரியா?“
“ஹா ஹா… அதுல சில சுவாரஸ்யங்களும் நடக்குதே அம்மணி.“
“ராத்திரி பதினோரு மணிக்கு என்ன சிரிப்பு இது?“
“சிரிக்கறது மணிக்கு மணி வித்தியாசப் படுமா என்ன?“
“படுங்க. காலைல பேசிக்கலாம்…“
“சின்னக்கனின்னு ஒருத்தன். சைதாப்பேட்டைல தாதா.“
“சின்னகனியா?“
“காலைல பேசிக்கலாம்…“
“இல்ல. எதோ தாதான்னு என்னவோ சொன்னீங்க?“
“ஆமாம்.“
“அவனுக்கும் உங்களுக்கும் என்ன?“
“நான் அவனோட தெய்வமாம்.“
“அவன்தெய்வம் னால் முனி, ஐயனார் இப்பிடித்தானே இருக்கும்?“
“கனி அவன் தெய்வம் முனி… நல்லாத்தான் இருக்கு.“
“தூங்கலாம். விஷயம் சொல்லுங்க…“
“காலையில் காலையில்“ என்கிறான் ராமசாமி. “இப்ப மனசு தெளிஞ்சிட்டதுடி. அப்பப்ப இதுக்கும் அதுக்குமா இப்பிடி பென்டுலம் ஆடுது.“
“யாரது சின்னக்கனி?“
“என்னோட பக்த கோடிகள்ல ஒருத்தன்…“
“பக்த கேடின்னு சொல்லுங்க.“
“ரைமிங்கா?“ சிரிக்கிறான். “நான் எதாவது ஜோக் அடிச்சேன்னு வெச்சிக்க. அவனுக்குப் புரியாது. நான் ஜோக்னு சொன்னால், சரின்னு சொல்லிட்டு சிரிக்கிறான்.
“இதெல்லாம் எப்ப?“
“ரெண்டு வருஷம் முந்தி…“
“கருமம் கருமம். உங்களைத் திருத்தேவே முடியாது“ என்கிறாள் மகா. “திரும்ப அடி வாங்கிட்டு வந்தால் தான் உங்களுக்கு அறிவு வரும்.“
“பாயின்டைப் பிடிச்சிட்டே திலக்.“
“என்ன பாயின்ட். மண்ணாங்கட்டி பாயின்ட்.“
“அன்னிக்கு பீச்ல… அடி வாங்க வேண்டியவன் அவன். யாரு? சின்னக்கனி.“
“அவன் அடியை நீங்க வாங்கிக் கிட்டீங்களா?“
“அதுனால.. என்னைப் பார்த்து அப்பிடி உருகறான். நான் அவனுக்கு…“
அப்படியே தலை வரை போர்த்திக் கொண்டு படுக்கிறாள். “வீட்டையே மாத்திறலாம்னு பார்க்கறேன்…“ என்கிறாள். போர்வைக்குள் இருந்து குரல் மாத்திரம் கேட்கிறது.
“சொந்த வீடுடி… மாத்த முடியாது.“ சிரிக்கிறான் ராமசாமி.


அத்தியாயம் 33

காலண்டர் நாள் தாள்கள் மேலெழும்பிப் பறக்கின்றன அகாடின் வாத்தியம் போல.
மாலை போட்ட அப்பா படம். மினுக்கும் சீரியல் பல்ப். காலை எட்டரை மணி. ராமசாமி அலுவலகம் கிளம்புகிறான். டிபன் பாக்ஸை எடுத்து வருகிறாள் திலகா. “பேசாமல் பழைய ஞாபகங்களை யெல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு மைனஸ் 1 போகாமல் சமத்தா வேலைக்குப் போங்க. சரியா?“ என்கிறாள் திலகா.
“அத்தான் சின்னக்கனி கதை… அக்கா சொன்னா. சூப்பர்.“ தலையைத் துவட்டிக் கொண்டபடி வெளியே வருகிறான் சிகாமணி. “அவனால உதவி எதுவும் வேண்டான்னு சொன்னீங்க இல்லியா? கண்டிப்பா அவன் உதவி உங்களுக்குத் தேவைப்படும் பாருங்க.“
“அவன் வாங்க வேண்டிய அடியைத் தான் நான் வாங்கிக் கிட்டேன்…“
“இங்க பாருங்க. இந்த விளையாட்டை இத்தோட நிறுத்திக்கலாம். எனக்கு இதுல ஒரு சுவாரஸ்யமும் இல்லை. கவலைதான் வருது.“
“ஆனால் தெய்வத்தைக் காணாமல் சின்னக்கனி தேடுவானே…“ என சிரிக்கிறான் சிகாமணி. “அவன் தந்த செய்ன் எங்க அத்தான்?“
“கழுத்துலதான் கெடக்கு…“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“கம்னு இருடா. சும்மாவே ஆடுமாம். கொட்டடிச்சா விடுமான்னு பழமொழி. அவரை நீ வேற உசுப்பேத்தி விடறே… இந்தக் கதையெல்லாம் வேணாம்… அத்தோட…“ என சிரிக்கிறாள் திலகா.
“என்ன சிரிப்பு?“ என்கிறான் ராமசாமி. “வர வர நீயும் என்னை மாதிரி ஆரம்பிச்சிட்டியா?“
“இன்னிக்கு என்ன தேதி?“
“ஏன்?“
“சொல்லுங்க…“
“செப்டம்பர் 23.“
“இன்னிக்கு, அதாவது ரெண்டு வருடம் முன்பு, என்ன நடந்தது?“
“என்ன?“ என்றவன் பரபரப்பாகிறான். ’‘ஐயோ செப்டம்பர் 23. இன்னிக்கு தான் எங்க பாங்க்ல ரெண்டு பேர் புகுந்து லூட் அடிச்சது. ROBBERY.“
“ஆமாம்.“ என தலையாட்டுகிறாள் திலகா. “அதனாலதான் சொல்றேன். இன்னிக்கு நீங்க மைனஸ் 1 போகக் கூடாது சொல்லிட்டேன்“ என்கிறாள்  திலகா.
“எப்பிடிடி? ஒரு சேதி, அதும் கொள்ளை நடக்கப் போகுதுன்னு முன்னாடியே தெரியுது நமக்கு. இதை அப்பிடியே விட்டுர்றதா? முடியுமா அது?“
“போன தடவை அவங்க உங்களைப் பிடிச்சிக் கட்டிப் போட்டாங்க. போலிஸ் வந்து அவுத்து விட்டாங்க உங்களை. ஞாபகம் இருக்கு இல்லே?“
“பாவம் செக்யூரிட்டிக்கு தான் தலைல அடி. அவனையும் தூணில் கட்டியிருந்தாங்க…“
“ஆமாம்.“
“அதை வேற அனுபவிக்கணுமா இன்னொரு வாட்டி?“
“நடந்தால், அதே தான் நடக்கும்… சரியா. என் உயிருக்கு ஆபத்து இல்லை. தெரியுதா? அப்பக் கூட நான் இதைத் தடுக்க முயற்சி பண்ணாட்டி எப்பிடி?“
“கடந்த காலத்தை மாத்த முடியுமா அத்தான்?“
“நீ என்னடா சொல்றே?“
“அந்த பிளஸ் டூ பொண்ணு… தற்கொலை பண்ணிக்கிட்டாள் இல்லியா? நீங்க கூட காப்பாத்த ஓடினீங்க. உங்களால அதைத் தடுக்க முடிஞ்சதா?“
“அதுக்கு?“
“வேணாம். சொன்னால் கேளுங்க…“ என்ற திலகாவை “கேட்க மாட்டேன். இன்னிக்கு… ஹா ஹா“ என்கிறான் ராமசாமி. “அந்த டைரிய எடுடி.“
“மாட்டேன்.“
“என்னடி புரியாமல் பேசறே நீ…“ ராமசாமி சத்தமாய்க் கத்துகிறான். கோபத்தில் அவன் உடம்பு நடுங்குகிறது. “கண்ணுக்கு எதிரே நடக்கப் போற விஷயத்தை அப்பிடியே விட்டுருன்னா எப்பிடி முடியும்? கொண்டு வா அதை…“
“நான்தான் சொல்றேனே. அப்பறம் என்ன? அதுல என்ன பார்க்கப் போறீங்க?“
“எதையோ பார்க்கிறேன்… கொண்டா அதை.“
அவள் எடுத்து வருகிறாள். பரபரவென்று செப்டம்பர் 23 தேதியிட்ட பக்கத்தைப் பார்க்கிறான். உரக்க வாசிக்கிறான். “இன்று காலை 11 23 மணிக்கு வங்கியில் கொள்ளையர்கள் இருவர்…“ டைரியை விசிறியடிக்கிறான். “விட மாட்டேன்.“
“எனக்கு பயமா இருக்குங்க.“
“எனக்கும் பயமா தான் இருக்கு. ஆனால்…“ ராமசாமி கிளம்புகிறான். “நானே இந்த முறை இதை முறியடிக்கிறேன்.“ விறுவிறுவென்று போய் அப்பா படத்தின் முன் நிற்கிறான். கண் மூடி வணங்குகிறான்.
“ரெண்டு வருஷம் முன்னாடி போனால் அவரையே பார்க்க முடியாதா?“ என சிரிக்கிறான் சிகாமணி.
“இல்ல. அவர் காலத்துக்குப் பிறகு தான் இது நடந்தது…“
“அத்தான். இது விஷப் பரிட்சை.“
“ஆமாம்.“
“கடந்த காலத்தை மாற்ற நினைக்காதீங்க.“
“சரி.“
“அது முடியாது…“ என்கிறான் சிகாமணி.
“ரொம்ப சரி“ என்கிறான் ராமசாமி.
“உங்களுக்கு என்ன பைத்தியமா? நீங்க வர்ற வரைக்கும்… என் கதி என்ன?“ என்கிற திலகாவை உதறுகிறான். சட்டென வெளியே பாய்ந்து கதவைப் படாரென்று சாத்துகிறான்.
“சே நான் ஒரு மடச்சி. சும்மா கிடந்த சங்கை ஊதினதே நான்தான்.“ திலகா அந்த டைரியை சுக்கு நூறாகக் கிழிக்கிறாள். அப்படியே ஆத்திரமாய் அதில் ஒரு நெருப்புக் குச்சியைக் கொளுத்திப் போடுகிறாள். பற்றி எரிகிறது டைரி.
பகல் மணி பதினொன்று. திலகா சிகாமணியை பயத்துடன் பார்க்கிறாள். “இப்ப என்ன பண்றதுடா?“
“ஆஞ்சநேய ஸ்தோத்திரம் சொல்லு அக்கா. போன வாட்டி உன் பக்தியால தான் அவரையே மீட்டுட்டு வந்தே.“
“நீ கிண்டல் பண்றியா, நிசம்மாச் சொல்றியான்னே தெரியலடா…“ என்கிறாள் திலகா. “நான் ஏன்… பேசாம இருந்திருக்கலாம். அவருக்கு ஞாபகப் படுத்தி விட்டுட்டேன்.“
“பழைய காலத்துக்கு அவரைப் போக வேண்டாம்னு தடுக்கலாம்னு பாத்தே நீ அக்கா.“
“ஆமாம்.“
“ஆதுவே வினையாயிட்டது.“
ராமசாமியை மொபைலில் தொடர்பு கொள்ளப் பார்க்கிறாள். தொடர்பு எல்லைக்கு வெளியே என்கிறது ஒலிப்பதிவு. “அவரு எப்பவாவது தாண்டா தொடர்பு எல்லைக்கு உள்ளே வர்றாரு…“ என்கிறாள். பின்னால் மணி 11 15 காட்டுகிறது. வங்கியின் லேண்ட் லைன் எண்ணுக்குப் பேசப் பார்க்கிறாள். ரமேஷ் தான் எடுக்கிறான். “எஸ்? நேஷனல்?“
“மிஸ்டர் ராமசாமி கூடப் பேசணுமே.“
“அவர் வேலைக்கு வர்லங்க. நீங்க?“
“வர்லியா?“ அவளுக்கு மூச்சே அடைக்கிறாப் போலிருக்கிறது. “ஹலோ…?“ என்று தொலைபேசியில் ரமேஷ் பேசுவது கேட்கிறது. தொலைபேசி அந்தரத்தில் ஆடிக் கொண்டிருக்கிறது. மணி 11 18 காட்டுகிறது.
“எத்தனை மணிக்குக் கொள்ளை நடக்குதுன்னு சொன்னார்டா?“
“11 23ன்னாருக்கா… எனக்கு பயமா இருக்கு அக்கா“ என்கிறான் சிகாமணி. மணி 11 20 காட்டுகிறது.
வங்கி. ராமசாமி தனக்குள் சிரித்துக் கொள்கிறான். வங்கி கடிகாரத்தைப் பார்க்கிறான். மணி 11 21. எழுந்து வாசல் கதவுப் பக்கம் போகிறான். கூட இந்தப் பக்கம் ரமேஷ் எழுந்து கொள்கிறான். வேலை கிடக்கிறது. அதை அலட்சித்து அவன் எழுந்து கொண்டது வாடிக்கயைளர்களுக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. “என்ன சார்?“ என்று கேட்கிறான் செக்யூரிட்டி. “ஒண்ணும் இல்லப்பா…“ என்கிறான் ராமசாமி. கதவுக்கு இந்தப் பக்கம் ராமசாமி. அந்தப் பக்கம் ரமேஷ். ரமேஷைப் பார்த்துத் தலையாட்டுகிறான் ராமசாமி. மணி பார்த்துக் கொள்கிறான்.
ராமசாமி மனசில் காட்சி. இரண்டு ரௌடிகள். முகத்தைத் துணியால் மறைத்துக் கொண்டபடி உள்ளே பாய்ந்து நுழைகிறார்கள். வாசலில் இருக்கும் செக்யூரிட்டியை ஒரே அடி மண்டையில் போடுகிறாரகள். அப்படியே அங்கே இருந்த தூணோடு இறுக்கமாய்க் கட்டுகிறான் ஒருத்தன். அடுத்தவன் நேரே உள்ளே வந்து சி சி டி வி கேமெராக்கள் இருக்கும் இடங்களை சரியாகப் பார்த்துச் சுடுகிறான். உள்ளே பாய்ந்து வருகிறார்கள். அசைய வேண்டாம்… அசைய நினைச்சாலும் சுடப் படுவீர்கள். உங்க உயிருக்கு உத்திரவாதம் கிடையாது. எல்லாரும் அங்கங்கேயே அப்படியப்படியே… ஜன கன மன பாட்டுக்கு நிப்பீங்களே… அப்பிடி நில்லுங்க…
எல்லாரும் அப்படியே நிற்கிறார்கள்.
மனக் காட்சி கலைகிறது. மணி பார்க்கிறான் ராமசாமி. 11 21. மானேஜர் தன் இருக்கையில் இருந்து அவனையே பார்க்கிறார். “என்னய்யா இங்க வந்து நிக்கறே?“
“ஒண்ணில்ல சார்.“
“யாராவது உன்னைத் தேடி வராங்களா?“
இப்ப தெரியாதுடா என் அருமை. பார் நான் போடற பிளானை… வெளியே எட்டிப் பார்க்கிறான். சின்னக்கனி எதிர் பிளாட்பாரத்தில் தான் தயாராய் இருப்பதாய்த் தலையாட்டி கை காட்டுகிறான். கூட சற்று தள்ளி மணி. இவனும் கை காட்டுகிறான்.
நேரம் ஓடுகிறது. மணி 11 22. உச்சகட்ட பரபரப்புடன் நிற்கிறான் ராமசாமி. செக்யூரிட்டி திரும்பிப் பார்த்து, “ஏன் சார் ஒரு மாதிரியா இருக்கீங்க?“ என்று கேட்கிறான். “ராமசாமி? என்ன ஆச்சி உனக்கு?“ என்று கத்துகிறார் மேனேஜர். மணி 11 22 – 30 விநாடிகள். சின்னக்கனி, தான் தயார் என்கிறாப் போல உறுதி தருகிறான். மணி 11 23.
எதுவும் நடக்கவில்லை. “உன் நடவடிக்கை வரவர புரிய மாட்டேங்குது. என்ன ராமசாமி? இத்தனை கஸ்டமர்ஸ் வெயிட் பண்றாங்க… நீங்க பாட்டுக்கு பொறுப்பே இல்லாமல்…“ என கிருஷ்ணராஜ் திட்டுகிறார். அங்கேயிருந்தே சின்னக்கனி பார்க்கிறான். ஏமாற்றத்துடன் உதட்டைப் பிதுக்குகிறான் ராமசாமி. மணி 11 25, “நான் கிளம்பட்டா?“ என ஜாடையாய்க் கேட்கிறான் சின்னக்கனி. சரி, என தலையாட்டி அவனை அனுப்பிவிட்டு சோர்வுடன் திரும்புகிறான் ராமசாமி. மணி 11 26. மகாவே “என்ன சார் ஆச்சி?“ என்று கேட்கிறாள். “எதுவும் ஆகல்ல. அதுதான் பிரச்னை…“ என்கிறான் ராமசாமி. ரமேஷ் “உன்னை நம்பினேனேடா… என் முகத்தில் கரியைப் பூசிட்டே…“ என்றபடி தன் இருக்கைக்குத் திரும்புகிறான். வாசலைப் பார்க்கிறான் ராமசாமி. காலியாய்க் கிடக்கிறது. மணி பார்க்கிறான். 11 27, குனிந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறான். 11 28.
திடீரென்று வாசலில் பரபரப்பு. ஒரு கார் வந்து சர்ர்ரென்று நிற்கிறது. அதில் இருந்து இரண்டு பேர் குதிக்கிறார்கள். முதலாமவன் பாய்ந்து செய்யூரிட்டி மண்டையில் அடிக்கிறான். அப்படியே அவனை இழுத்து அங்கிருந்த தூணில் கட்டுகிறான். சனங்கள் பதறி சிதறுகிறார்கள். ஏ டி எம் கூட்டம் எடுக்கிறது ஓட்டம். அடுத்தவன் உள்ளே பாய்ந்த ஜோரில் சி சி டி வி கேமெராக்களை இங்கே அங்கே என்று குறி தப்பாமல் சுடுகிறான். ஆ வூ என உள்ளே சனங்கள் அலை மோதுகிறார்கள். அப்படியே கவுண்டரைத் தாண்டி உள்ளே பாய்ந்து அடியில் பதுங்கிக் கொள்கிறார்கள். “எல்லாரும் அங்கங்க அப்பிடியப்பிடியே நில்லுங்க…“ என்று கத்துகிறான் ஒருவன். அடுத்தவன் உள்ளே நுழைகிறான். இருவரும் உயர்த்திப் பிடித்த கைத் துப்பாக்கியுடன். மேனேஜர் கிருஷ்ணராஜ் அறையைப் பார்க்க ஒரு குண்டு சீறுகிறது. “ஃபோன் பண்ற வேலை வேணாம்…“
நடுநடுங்கி அவர் அப்படியே கை தூக்கி நிற்கிறார். “எங்களுக்குத் தேவை பணம். உங்க உயிர் அல்ல… யாரும் தேவை யில்லாமல் உயிரை இழக்காதீங்க… சரியா? கமான் கமான்…“ என கைத்துப்பாக்கியை வல இடமாக ஆட்டியபடியே அந்தக் கூட்டத்தை ஒருசேர ஒதுக்குகிறான். அவர்கள் பாய்ந்து துப்பாக்கியைத் தட்டிவிட்டு விடாத தூரத்தில் நின்றபடி அவர்களை அலையென ஒதுக்குகிறான். அப்படியே ஒரு அறைக்குள் அவர்களைத் தள்ளுகிறான் ஒரு திருடன். ரமேஷ். மேனேஜர். மகா. வாடிக்கையாளர்கள்… என ஏறத்தாழ 30 பேர். சிறிய அறைதான். உள்ளே தள்ளி கதவை வெளியே தாள் போடுகிறான் ஒரு திருடன்.
அடுத்தவன் நேரே கேஷ் கவுண்டருக்குள் குதிக்கிறான். கவுண்டரின் உள் இழுப்பறை – கப்போர்டு – பூட்டியிருக்கிறது. ஒரே அடியில் அதை உடைக்கிறான். உள்ளே கத்தை கத்தையாகப் பணம். சிரிக்கிறார்கள்.
“சி சி டி வி இருக்கா?“
“எல்லாத்தையும் நொறுக்கிட்டேன்…“ என்கிறான் ஒருத்தன். மேனஜேர் அறையில் சி சி டி வி புள்ளிகளுடன் அலையோடுகிறது. அவர்கள் முகத்திரையை அகற்றுகிறார்கள். திடீரென சுதாரித்தாப்போல “டேய் இங்க பாரு…“ என லெட்ஜர் பக்கம் படுத்து பம்மிக் கிடக்கும் ராமசாமியை ஒருவன் கண்டு பிடிக்கிறான். திரும்ப முகத்திரையால் மூடிக் கொள்கிறார்கள். அப்படியே காலரைப் பிடித்துத் தூக்குகிறான் ஒருவன். ராமசாமி பெப் பெப்… என குழறுகிறான்.
“தமிழ்ல பேசுறா. என்ன பாஷை பேசறே நீ?“
“பெப் பெப்“ என்கிறான் ராமசாமி மறுபடியும். ஓங்கி அவனை அறைகிறான் ஒருத்தன். அவன் கண்கள் அழுகின்றன. எதுவும் பேசவில்லை ராமசாமி. அப்படியே அங்கேயிருந்த நாற்காலியில் குனிந்து அவனைக் கட்டிப் போடுகிறான் ஒரு திருடன்.
பணத்தை அள்ளி ஒரு மூட்டையாய்க் கட்டி எடுத்துக் கொள்கிறார்கள். திரும்ப ஒரு திருடன் ராமசாமியைப் பார்க்க துப்பாக்கியை நீட்டுகிறான். ராமசாமியின் வாயில் துணி அடைக்கப் பட்டிருக்கிறது. உடம்பே அதிர அவன் துடிக்கிறான்.
ஒரு திருடன் அலைபேசியில் அழைக்கிறான். “வா…“ பாய்ந்து வெளியேறுகிறார்கள். தெருவில் யாருமே இல்லை. திரும்ப எழுந்து கொள்ள முயல்கிறான் செக்யூரிட்டி. அவன் ஒரு உதை விட்டுவிட்டு அவரகள் வந்த காரில் தாவியேறி காணாமல் போகிறார்கள்.
அரை மணி நேரம் தாண்டுகிறது. ஊ ஊ என்று கத்துகிறான் ராமசாமி. சததமே எழும்பவில்லை. வாசல் பக்கத் தூணில் செக்யூரிட்டி.. அவனும் தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடுகிறான்.. உள் அறையில் அடைபட்ட எல்லாரும் தடதடவென்று கதவைத் தட்டுகிறார்கள். ராமசாமி அப்படியே உட்கார்ந்திருக்கிறான். அவன் கண்கள் அழுகின்றன.
போலிஸ் வருகிறது. செக்யூரிட்டியை முதலில் அவிழ்த்து விடுகிறார்கள். பிறகு ஒரு போலிஸ்காரர் அவனைப் பார்த்ததும் ஓடி வருகிறார். அவன் நாற்காலியைச் சுற்றிலும் சிறு நீர்.. ஈரப்பட்டுக் கிடக்கிறது இடம். அவன் வாய்த் துணியை உருவி யெடுக்கிறார்கள். ஓஓஓ என அவன் கத்துகிறான். வாந்தி யெடுக்கிறாப் போல குத்திப் பிடுங்குகிறது அவனுக்கு. உள் அறையில் அடைபட்டிருந்த அத்தனை பேரும் கதவை இடிக்கிற சத்தம். போய்க் கதவைத் திறக்கிறான். கும்பலாய் வெளியே ஓடி வருகிறார்கள் எல்லாரும். மேனேஜர் அறைக்கு வந்து அவர் தன் இருக்கையில் அமர்கிறார். உடம்பே கசங்கி உடையெல்லாம் உருக் குலைந்து தலையெல்லாம் கலைந்து… சி சி டி வி கேமெராவில் அலைகள் ஓடுகின்றன.
பார்க்க சுமாராய் இருந்த ஒரே நபர் மகாதான். “யாரும் வெளியே போக வேண்டாம். உங்க ஒத்துழைப்பு எங்களுக்கு இருந்தால் தான் திருடர்களை நாங்க பிடிக்க முடியும்….“ என்கிறார் இன்ஸ்பெக்டர்.
கை ரேகை நிபுணர்கள் வருகிறார்கள். கேஷ் கவுண்டர் உடைந்து சிதறிக் கிடக்கிறது. அங்கே ரேகை தேடுகிறார்கள். பேசவே ராமசாமி சிரமப்படுகிறான். “க்கை…“ என்கிறான். “க்கைல…“ என்கிறான்.
“கிளவுஸ் போட்டிருந்தாங்களா?“ என்று கேட்கிறார் இன்ஸ்பெக்டர்.
“ம். ம்…“ என்கிறான் ராமசாமி. “எல்லாரையும் விட உங்களுக்கு தான் கிட்டத்தில் அவர்கள் பரிச்சயம்…“ என்கிறார் இன்ஸ்பெக்டர். “தெரியாது…“ என்கிறான் ராமசாமி. அப்படியே அயர்ந்து போய் நாற்காலி ஒன்றில் அமர்கிறான். வாடிக்கையாளர்கள். ஆண்கள், பெண்கனள் என்று எல்லாருமே பாத்ரூம் போக விரைகிறார்கள்….
மணி இரவு பத்து. “இன்னும் இவர் வரல்லியேடா?“ என்கிறாள் திலகா கவலையுடன். “அக்கா உனக்கு அந்த நாள் நினைவு இருக்கா?“ என்று கேட்கிறான் சிகாமணி.
“இருக்கு. ஏன்?“ என்று கேட்கிறாள் திலகா. “எப்ப வந்தார்?“ என்று திரும்ப அவன் கேட்கிறான். “இப்பதான்… கிட்டத்தட்ட பத்து மணி…“ என்கிறாள் திலகா.,
அப்போது கதவு தட்டப் படுகிறது.


அத்தியாயம் 34

ராமசாமி கிளம்புகிறான். திலகா அவனுடன் எதுவும் பேசவில்லை. இரவு பூராவும் அவள் அழுதிருக்கிறாள் என்று முகத்தில் தெரிகிறது. சிகாமணி அக்காவிடம் வருகிறான். “நாம என்ன சொன்னாலும் அத்தான் பதிலே பேச மாட்டேங்கறாரே அக்கா…“ அவள் பேசாமல் அவன்கூடப் பேச விருப்பம் இல்லாத மாதிரி எழுந்து போகிறாள். சிகாமணி பின்னாடியே போகிறான். ராமசாமி தலை வாரிக் கொண்டிருக்கிறான். “நாம சொன்னாலும் அவர் நினைச்சதைத் தான் செய்கிறார்“ என்கிறான் சிகாமணி. ராமசாமி பௌடர் போட்டுக் கொள்கிறான்.
அக்கா அழுகையூடே பேசுகிறாள். “இப்பிடிப் படுத்தினால் என்ன பண்றது? சின்னக் குழந்தையா இருந்தால் நாலு அடி போடலாம். இப்ப… நாம தான் நம்ம தலைல அடிச்சிக்க வேண்டியிருக்கு.“ ராமசாமி அவர்களைப் பார்த்து அசட்டுச் சிரிப்புச் சிரிக்கிறான்.
“இந்த அசட்டுச் சிரிப்புக்கு என்ன அர்த்தம் அத்தான்?“
“அவர் அசடுன்னு அர்த்தம்“ என்கிறாள் திலகா.
“நேத்தி நானே போயிட்டு படாத பாடு பட்டுட்டு வந்திருக்கறேன். இவ வீட்ல பேசாமல் கதவைச் சாத்திக்கிட்டு உம்மாச்சி காப்பாத்துன்னு சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்திருக்கா. இதுக்கு இந்த அலட்டல் தேவையா?“
“அப்பிடிச் சொல்லாதீங்க அத்தான். உங்களை யாரு மைனஸ் 1 போகச் சொன்னா?“
“உங்களுக்குப் புரியாது…“
“இப்ப பழைய காலத்துக்குப் போயி எதைச் சாதிச்சீங்க?“
ராமசாமி சிகாமணியைப் பார்க்கிறான்.
“எங்களுக்குக் கொஞ்சம் அதைப் புரிய வைங்க“ என்கிறான் சிகாமணி விடாமல். ராமசாமி உடம்பில் ஒரு விரைப்பு தெரிகிறது. “பாருடா… இத்தனை தூரம் நான் புலம்பறேன். எதாவது இவருக்கு மனசில் இறங்குதா பாரு. எதோ மேல மழை பேய்ஞ்சாப் போல…“
“எருமை மாட்டு மேல…‘ என்கிறான் சிகாமணி.
“டேய்“ என்கிறான் ராமசாமி. “உங்களை இல்ல அத்தான். எருமை மாட்டைச் சொன்னேன். அதுவும் வெளியே இப்ப வெயில் தானே அடிக்கிறது…“ என அவன் பக்கம் வருகிறான். “ஏன் அத்தான் இப்பிடி வீணா நேத்தி வேற போயி ரெண்டாவது வாட்டி மாட்டிக் கிட்டீங்க…“
“அதுல நிறையக் கணக்கு இருக்குடா சிகாமணி.“
“நீங்க கணக்குல வீக் ஆச்சே.“
“ஆமாம். அது மத்த நாள் எதையும் விட நேத்தி ஸ்பஷ்டமாத் தெரிஞ்சது..“
“டிபன் ரெடி…“ திலகா வந்து ணங்கென்று மேசையில் தட்டை வைத்து விட்டுப் போகிறாள். “நேத்தி ராத்திரி பூரா லைட்டைப் போட்டுக்கிட்டு எதையோ குடாய்ஞ்சிக்கிட்டே இருந்தார்… என்னன்னு கேட்டால் சொல்லவே இல்லை. என்னன்னு கேளுடா.“
“என்ன அத்தான் அது?“
“ஏன் அவள் கேட்க மாட்டாளாமா?“ என்கிறான் ராமசாமி. அப்புறம் யாரும் பேசிக் கொள்ளவில்லை. சட்டென மலர்கிறான். “நேத்து… தேடினேனே… கிடைச்சிட்டது.“
“என்ன அது?“ என்று சிகாமணி கேட்கிறான். திலகா திரும்பிப் பார்க்கிறாள்.
“அது சஸ்பென்ஸ். அதைக் கடைசியில் உடைக்கிறேன்… சிகாமணி நீயும் சாப்பிட வர்றியா?“
“கொஞ்சம் போகட்டும் அத்தான். இப்ப என்ன அவசரம் எனக்கு…“
“சிகாமணி நீயும் என் கூட வரே…‘ என்கிறான் ராமசாமி.
“எங்க அத்தான்?“
“கமிஷனர் ஆபிசுக்கு.“
“போலிசுக்கா?“ என சீரியசாகிறாள் திலகா. “இவன் எதுக்கு?“
“நீங்க எதுக்கு?“ என்று அவனைக் கேட்கிறான் சிகாமணி.
“நேத்தி என்கொயரி நடந்தது இல்லே? அதோட எக்ஸ்டென்ஷன்…“
“இவனையும் கடந்த காலத்துக்கு அழைச்சிட்டுப் போகப் போறீங்களா?“ என்கிறாள் திலகா. “அது எப்படி முடியும்?“ என்கிறான் ராமசாமி.
“பின்னே? ரெண்டு வருஷம் முந்திய என்கொயரிக்கு இப்ப எதுக்கு போலிசுக்குப் போகணும்?“
“திலகா… இவனுக்கும் தோசையைப் போடு..“ என்கிறான் ராமசாமி. “வா கண்ணா. வந்து உட்காரு.“ புன்னகை செய்கிறான். “உங்க அத்தான் பயந்த சுபாவம் தான். ஆனால் முட்டாள் அல்ல. கேட்டியா?“
“வாசல்ல எழுதிப் போடலாம். QUOTABLE QUOTE. வர வர கூத்தடிக்க ஆரம்பிச்சிட்டாரு இவரு.“
“நேத்தி நான் ஒரு கணக்குப் போட்டேன்…“
“அது சரி அத்தான். நேத்தி உங்களால அந்த ROBBERY யைத் தடுக்க முடிஞ்சதா?“
“நான் முயற்சி பண்ணினேன்.“
“முடிஞ்சதா?“
ராமசாமி சிகாமணியைப் பார்க்கிறான்.
“முடியாது. நான்தான் சொன்னேனே. கடந்த கால நிகழ்வை மாத்த முடியாது.“
“ஆனால் ஒரு விஷயம் சிகாமணி… நான் என்ன நினைச்சேன்னு சொல்லிர்றேன்.“
“எதாவது குண்டக்க மண்டக்க நினைச்சீங்க. “ என்கிறாள் திலகா. “பொறுமையாக் கேளுடி‘‘ என்கிறான் ராமசாமி.
“சொல்லுங்க அத்தான்.“
“அந்த சின்னக்கனி…“
“தெய்வம்னுட்டானாம். அதுல இவருக்கு ஒரு இது. என்னிக்கு அவன் உங்களைக் கல்லைத் தூக்கி அடிக்கப் போறானோ?“
“இரு அக்கா. சொல்லுங்க. அவர் என்ன சொல்றாருன்னு பாப்பம்…“
“ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி… அவன் என் வாழ்க்கையில இருந்தானா?“
“இல்லை.“
“இப்ப நான் போனப்ப… அவன் எப்பிடி வந்து சேர்ந்தான்?“
“அதான் பேசினோமே அத்தான். அது வேற ஒரு தொடர் நிகழ்வில போயி… நீங்க இந்தக் கண்ணியை விட்டு வெளியேறி… அந்தக் கண்ணியில சேர்ந்துட்டீங்க…“
“இவனும் ஆரம்பிச்சிட்டானே“ என்கிறாள் திலகா.
“அப்பா பத்தி சேதி வந்து, அநத் ஃபோன் காலை நீங்க எடுக்கணும். அதைத் தவிர்க்க நினைச்சீங்க. அப்ப வேற ஒரு கண்ணி புதுசா உருவாயிட்டது. இல்லியா?“
“ALTERNATE REALITY.“
“ஒரு ரியாலிடியே இங்க டண் டணக்கா. இதுல இன்னொண்ணா?“
“அதேதான். இப்ப இந்த எபிசோட்ல சின்னக்கனியை நான் முடிச்சுப் போட்டுப் பார்த்தேன். ஆபிஸ்ல நடக்கப் போற இந்த ROBBERY. இது ரமேஷைத் தவிர யாருக்குமே தெரியாது. சின்னக்கனி, அவன் கூட மணி. அவர்களை தெருவில் தயாரா வெச்சிருந்தேன். நானும் ரமேஷும் ஆபிசுல பதுங்கி யிருக்கலாம். அவங்க ரெண்டு பேர் தான். நாங்க நாலு பேர். அவங்களுக்கு நாங்க காத்திருக்கறது தெரியாது. சமாளிச்சிறலாம்னு ஒரு கணக்கு…“
“புதுசா சின்னக்கனி வந்ததால, ஒருவேளை உங்களால இதை முறியடிக்க முடியும்னு பாத்தீங்களா?“
“அதே தான்…“ என்கிறான் ராமசாமி.
“நல்லவேளை அத்தான். அவங்க வந்த ஜோரில் சி சி டி வி காமெராவை அடிச்சி நொறுக்கிட்டாங்க. இல்லாட்டி என்னாயிருக்கும்?“
“என்ன?“ என்கிறான் ராமசாமி.
“நீங்க இங்க உள்ள யிருந்து சின்னக்கனிக்கு கை காட்டறது அது இதுன்னு எல்லாம் அதுல பதிவாயிருக்கும். ஆக இந்தக் கொள்ளையில உங்களுக்கும் தொடர்பு இருக்குன்னு  விசாரணை ஆரம்பிச்சிருப்பாங்க.“
“ஐயோ“ என்கிறான் ராமசாமி.
“அவன் வேற தாதா ஆச்சே. ரொம்ப பலமா முடிச்சு போட்டுருவாஙுக.“
“ஏற்கனவே அந்தத் திருட்டுப் பசங்க கட்டிப் போட்டதே இன்னும் வரி வரியா இருக்குடா‘‘ என்கிறான் ராமசாமி.
“என்ன ஆச்சி? நீங்க எதிர்பார்த்த நேரத்தில் ஏன் அந்தக் கொள்ளை நடக்கல்ல?“
“அதுவா…“ என வெட்கத்துடன் சிரிக்கிறான் ராமசாமி. “எதாவது தப்பு பண்ணினால் கரெக்டா இப்பிடித்தான் அவர் சிரிப்பார்“ என்கிறாள் திலகா.
“கொள்ளை எத்தனை மணிக்குன்னு சொல்லிட்டுப் போனேன்?“
“11 23.“
“எத்தனை மணிக்கு நடந்தது தெரியுமா?“
“சொல்லுங்க.“
“ 11 28.“
“ஆகா. உங்க கையெழுத்து உங்களையே காலை வாரிட்டதா?“
“அதைத்தான் கணக்குல வீக்னு சொன்னீங்களா அத்தான்.“
“உங்க அஜாக்கிரதைனால அத்தனை முயற்சியுமே பாழாயிட்டது…“ என்கிறாள் திலகா.
“நல்லவேளை…“ என சிரிக்கிறான் சிகாமணி. “நீ என்ன சொல்லப் போறே?“ என்று திரும்பிப் பார்க்கிறான் ராமசாமி. “தேதியை 28க்கு பதிலா 23ன்னு நீங்க பாத்திருந்தீங்கன்னா?... அந்த ROBBERY அஞ்சு நாள் கழிச்சி நடதிருக்கும்! “
“தேதி அது மனப்பாடமா எனக்கே ஞாபகம் இருக்குடா சாம்பிராணி…“ என்கிறான் ராபமசாமி ஆத்திரமாய்.
“இருந்து என்ன?“ என நக்கல் அடிக்கிறான் சிகாமணி. “மொத்தத்தில் இந்த முயற்சியே தோல்வி.“
“இல்லை“ என்கிறான் ராமசாமி.
“இல்லையா?“
“தோல்வில ஒரு வெற்றி…“ என்கிறான் ராமசாமி புன்னகையுடன். “ஒரு விஞ்ஞானி கிட்ட கேட்டாங்க. 200 சோதனை செஞ்சிட்டீங்க. இன்னும் ரிசல்ட் வரல்ல. இப்ப உங்க சோதனை எல்லாம் பிரயோசனப்படாத தோல்வி தானேன்னு கேட்டாங்க.“
“தோல்விதான்“ என்கிறான் சிகாமணி.
“அதுக்கு அந்த விஞ்ஞானி பதில் சொன்னார் பாருடா. அது ரொம்ப முக்கியம். “என்னோட இந்த சோதனையை நாளை இன்னொருத்தன் முன்னெடுத்துச் செய்யலாம். அவன் இந்த 200 சோதனைகளையும் விட்டுட்டு 201 வதில் இருந்து ஆரம்பிப்பான். அவனுக்கு இது பயன்படும் – அப்டின்னாராம். உலகத்தில் எதும் வேஸ்ட் கிடையாது சிகாமணி.“
“நானும் வேஸ்ட் இல்லைன்றீங்க?“ என்று சிகாமணி சிரிக்கிறான்.
“நீ வேஸ்ட்தான். முயற்சி முக்கியம். ரிசல்ட்டை விட… நம்பிச் செய்யாத முயற்சி அது வேஸ்ட்“ என்கிறான் ராமசாமி.
“ஒருநாள் நான் சினிமால சாதிப்பேன் அத்தான். மனசுல இப்ப ஒரு கதை வந்திட்டிருக்கு..“
“என்ன?“
“நாயகன் பார்ட் ட்டூ.“
“யாருடா? சின்னக்கனி கதையா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “என் கதைக்கு வருவோம்… சிகாமணி, ஒராளை ஒரு தடவை பார்த்தால் மறந்துரும். இதுல அவங்களை நான் ரெண்டு வாட்டி பார்த்திருக்கேன்… இன் ஃபாக்ட் மூணு வாட்டி.“
“என்ன சொல்றீங்க?“
“இதுவரை இந்தக் கேசில துப்பு கிடைக்கவே இல்லை போலிசுக்கு.“
“அதுக்கு?“
“என்கிட்ட ஒரு ருசு கிடைச்சிருக்கு.“
“அதைத் தான் நேத்தி ராத்திரி தேடினீங்களா அத்தான்?“
திலகா திரும்பிப் பார்க்கிறாள். “என்ன அது?“ என்கிறாள் திலகா.
“விஷயம் நல்லபடியா முடியட்டும். அப்பறமா சொல்றேன். திரும்ப கணக்கு கிணக்கு தப்பா ஆயிட்டால்?“
“அதை அப்பறமா நாங்க சொல்வோம்… கணக்கும் நீங்களும்னு…“
“வாடா. கிளம்பு“ என்கிறான் ராமசாமி.
“எங்க அத்தான்?“
“கமிஷனரைப் பார்க்கலாம்.“
“ஏங்க ருசுவை அங்க ஒப்படைக்கப் போறீங்களா?“
“ரெண்டு வருஷம் முன்னால நடநத விஷயம். இதுநாள்வரை அதுக்கான ருசு நம்ம கிட்டியே நம்ம வீட்லயே இருந்திருக்குன்றாரே…“. என யோசிக்கிறாள் திலகா.
“அது எனக்கே தெரியாது…‘‘ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“அவ்வளவு அழகா கணக்கு போடறீங்க“ என்கிறாள் திலகா.
“நான் ரெடி அத்தான்…“ என்று வந்து நிற்கிறான் சிகாமணி.
ஸ்கூட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது. சிகாமணிக்கு அது என்ன ருசு என்று யோசித்து மாளவில்லை. “என்ன அது? “ என அவன் பின்னால் ஸ்கூட்டரில் அமர்ந்தபடி அவனைக் கேட்டுக் கொண்டே வருகிறான். “விடிஞ்சா தெரியும் மாப்பிள்ளை குருடுன்னு பழமொழி. கொஞ்சம் பொறுத்துக்கோ. கமிஷனர் கிட்டக் குடுக்கும் போது நீ பார்க்கத்தானே போறே…“ என்கிறான் ராமசாமி. “நம்ம கதை எப்பிடிப் போகுதுடா?“
“வசிகரப் பொய்கள்…“ என்று சிகாமணி சிரிக்கிறான்.
கமிஷனர் அலுவலகம். நீண்ட வராந்தாக்கள்.
“வாங்க“ என அவனை உள்ளே அழைத்து உட்காரச் சொல்கிறார் கமிஷனர்.
“சார் நான் ராமசாமி. நேஷனல் பேங்க்.“
“ஆமா. ஆமா சார். ரெண்டு வருஷம முன்னாடி… அந்த ROBBERY… ஆளுங்க சிக்கவே இல்லியே சார்.“
“கிடடத்தட்ட சிக்கினா மாதிரி தான் சார்…“ என்கிறான் ராமசாமி மகிழ்ச்சியுடன்.
“என்ன சொல்றீங்க?“
தன் கைப் பெட்டியில இருந்து ஒரு காகிதத்தை எடுக்கிறான் ராமசாமி. சாப்பிட்ட பின் துடைக்கிற டிஷ்யூ பேப்பர்.
“டிஷ்யூ பேப்பர். எதுக்கு இது?“
“சார் இந்த ஆளை நான் ஒரு சில மாசம் முன்னால் ஒரு ஹோட்டலில் பார்த்தேன். இவனை எங்கயோ பார்த்திருக்கறதா எனக்கு அப்பவே சந்தேகம் சார். அப்பறம் தான் சட்னு பொறி தட்டியது… என்னைக் கட்டிப் போட்டான் பாருங்க பாங்க்ல… இவன்தான் சார்.“
“கிரேட் கிரேட்…“
“அவன் முகத்தை அத்தனை தூரத்தில் இருந்து வரைஞ்சிருக்கேன் சார். ஆனால் அதைவிட நல்ல விஷயம், முக்கியமான விஷயம்…“
“என்ன?“
“அவன் ஓட்டிட்டு வந்த பைக். அதன் நம்பரையும் இந்தப் படத்தில் குறிச்சி வெச்சிருக்கேன் பாருஙுக.“
அதைக் கையில் வாங்கிப் பார்க்கிறார். “TN 22 அண்ணாநகர் RTO வருது…“ என்கிறார். “எக்சலன்ட்…“ என உடனே எழுந்து கொள்கிறார் கமிஷனர். அறையை விட்டு பரபரப்புடன் வெளியே போகிறார்.
“எக்சலன்ட்…“ என கை கொடுக்கிறான் சிகாமணி.
“ஒரு தடவை பார்த்தபோது ஞாபகம் குறைவாவே இருக்கும்டா. ரெண்டாவது வாட்டி அந்தக் குழந்தையை…“
“யாரை அத்தான்?“
“ராணியை.“
“ஓ பக்கத்து வீட்டு கணபதியோட பொண்ணை…“
“அப்படியே வரைஞ்சேன். அவருக்குக் குழந்தை கிடைச்சாளா இல்லியா?“
“கிரேட் கிரேட்.“
“இப்ப… இவனை மூணு முறை பார்த்திட்டேன். பாங்கல் ரெண்டு வாட்டி.“
“ஹோட்டல்ல… எங்களோட மூணாவது வாட்டி…“
“நேத்தி அந்த ROBBERY யை நான் விட்டிருந்தால் இது நடக்குமா சிகாமணி?“
அவன் பதில் சொல்லுமுன் கமிஷனர் திரும்ப உள்ளே வருகிறார். “என்ன சாப்பிடறீங்க?“ என புன்னகையுடன் கேட்கிறார். “காபி? டீ? வல் டிரிங்1?“
“எல்லாமே“ என்கிறான் சிகாமணி.
“இட்ஸ ஆல்ரைட் சார்… எதுவும் வேணாம்“ என்கிறான் ராமசாமி.
“அந்த வண்டி நம்பர்… அதை டிரேஸ் பண்ணச் சொல்லியாச்சி. TRAFFIC ALERT குடுத்திருக்கோம். உள்ளூர்லியே அவன் இருந்தால் ஒரு மணி, ரெண்டு மணி நேரம். இல்லாட்டி கூட இன்னும் நாலைஞ்சி மணி நேரத்தில் ஆள் கிடைச்சிருவான்… முதல்ல அவன் ஆர் சி நம்பர் வெச்சி அட்ரஸ்ல பார்க்க ஆரம்பிச்சி… அதெல்லாம் வேட்டையாடிருவோம். பார்க்கலாம்“ என்று கை கொடுக்கிறார் கமிஷனர். “குற்றவாளியைப் பிடிச்சிருவோம்னு நம்பிக்கை வந்திட்டது மிஸ்டர் ராமசாமி.“
வெளியே வருகிறார்கள். வராந்தாவைத் தாண்டும்போது ஒரு சிறுவன் கூல் டிரிங்ஸ் எடுத்துப் போவதை சிகாமணி பார்க்கிறான். “நமக்கா அத்தான்? நாம வெளிய வந்திட்டோமே?“ என்கிறான். “வாடா…“ என அவனை இழுத்துக் கொண்டு வெளியே வருகிறான் ராமசாமி.
வீடு. திலகாவும் சிகாமணியும் மாத்திரம் இருக்கிறார்கள். கோகுல் வெளியே ராணியுடன் விளையாடும் ஒலிகள் கேட்கின்றன. கடிகாரத்தில் மணி மாலை ஆறரை. “அக்கா… அத்தானை என்ன நினைச்சே….“ என்று ஆரம்பிக்கிறான்  சிகாமணி. “கமிஷனர் அத்தானை ரொம்பப் பாராட்டினார்… இன்னிக்கு தான் அக்கா கமிஷனர் ஆபிசையே நான் பார்க்கிறேன். ரொம்பப் பெரிசு. உள்ள போகவே பயந்து கெடக்கு. டக் டக்னு பூட்ஸ கால் நடக்கிற சத்தமே   எதிரொலியா கேட்குது…“
“கமிஷனர் என்ன சொன்னார்? அதைச் சொல்லுடா…“
“கூல் டிரிங்ஸ் சாப்பிடுங்கன்னார். அத்தான் வேணான்னுட்டார்…“
“ரொம்ப முக்கியம். அந்த PROOF? அதை அத்தான் குடுத்தாரா?“
“குடுத்தார் குடுத்தார். அது நம்ம மூணு பேருக்குமே தெரிஞ்சது தான்…“ என்று சிரிக்கிறான்.
“என்ன அது?“
“அன்னிக்கு நாம வீட்ல GAS தீர்ந்து போயி வெளிய சாப்பிடப் போனோமாஈ“
“அந்த ஹோட்டல் பில்லா?“
“அப்ப ஒரு ஆளைப் பார்த்து அததான் சீரியசானாரா?“
“அவனைப் படம் கூடப் போட்டார்… கோகுல் அதைப் பார்த்துட்டு, என்னையும் வரையறியாப்பான்னு கேட்டான்.“
“அதே தான்.‘ யார் அந்த ஆள் தெரியுமா?“
“யாரு?“
அப்போது தொலைபேசி அடிக்கறிது. “நல்ல சகுனம் போயி எடு அக்கா…“
திலகா பேசுகிறாள். ”ஆமாங்க. ராமசாமி ஐயா வீடுதான். நானா? அவர் மனைவி… சரிங்க. சரிங்க…. வந்ததும் சொல்லிர்றேன்…‘ தேங்ஸ்“ என போனை வைக்கிறாள். முகம் நிறையச் சிரிப்பு.
“அந்த ஆளைப் பிடிச்சிட்டாங்களாம்…“
“எந்த ஆளை?“
“GAS தீர்ந்து போயி… நாம ஹோட்டலுக்குப் போயி…“ என சிரிக்கிறாள் திலகா. “சரி அவனை எதுக்கு இப்ப அவசரமாத் தேடினாங்க?“
“அவன்தான் அக்கா பேங்க்ல கொள்ளையடிக்க வந்த ரெண்டு பேரில் ஒருத்தன்.“
“அடேடே.“
“ரெண்டு வருஷமா மாட்டாத ஆள்  அக்கா. கரெக்டா ரெண்டு வருஷத்தில் மாட்டியிருக்கிறான்…“ என்று சிரிக்கிறான் சிகாமணி.
“யாரால?“ என நெஞ்சு நிமிர்த்துகிறாள் திலகா.
“ஆகா. என்ன அக்கா அப்பிடியே ரெகார்டைத் திருப்பிப் போடற?“
“ஆமாம். நான்தான் அவருக்கு இன்னிக்கு பாங்க் ROBBERY ன்னு ஞாபகப் படுத்தினேன்.“
“காலைல இது பத்தி கண்ணைக் கசக்கினே அக்கா. இப்ப?…. பல்லை இளிக்கிறே. இதுவே ALTERNATE REALITY போலத்தான் இருக்கு அக்கா.“
‘அதை விடுறா…“ அவனை பாபர்த்து ஆர்வமாய்க் கேட்கிறாள். “காலை பேப்பர்ல வருமாடா?“
“காலைல பேப்பர் வரும். அது தான் தெரியும் அக்கா…“ என்கிறான் சிகாமணி.


அத்தியாயம் 35

வங்கி. நிகழ்காலம். மேனேஜர் ராமகிருஷ்ணன். நிமிர்ந்து சட்டென முகம் மலர்கிறார். “வாய்யா ஹீரோ சார்…“ வெட்கத்துடன் வருகைப் பதிவில் கையெழுத்திட உள்ளே வருகிறான் ராமசாமி. “என்ன சார்?“
“என்ன… சாரா? நாட்ல இப்ப எங்க பார்த்தாலும் உன் பேச்சு தான்யா…“
“அப்பிடியா சார்“ என சிரிக்கிறான்.
“அது சரி. ரெண்டு வருஷம் கழிச்சி… எப்பிடிய்யா உனக்கு அவன் முகம் ஞாபகம் வந்தது?“
“அதாவது சார்…“ என அவன் எதோ சொல்லுமுன், “அதான் ராமசாமி. நமக்கெல்லாம் நேத்து நடந்ததே மறந்து போகிறது…“ என்றபடியே உள்ளே வருகிறான் ரமேஷ். “உங்க வரைக்கும் செய்தி வந்தாச்சா?“ என்கிறான் ராமசாமி. “பின்னே?“ என்கிறான் ரமேஷ். “நீ சொன்ன பைக் நம்பரை வெச்சி முதல்ல அந்த ரௌடிகளில் ஒருத்தனை மடக்கியிருக்காங்க. எங்கியோ ஓ எம் ஆர் ரோடுப் பக்கம் மாட்டியிருக்கான். அவனை அடிச்சி உதைச்சி விசாரிச்சதில் அந்த ரெண்டாவது திருடனைப் பத்தி துப்பு கிடைச்சிருக்கு…. அவன் சோழிங்கநல்லூர்ல மாட்டியிருக்கான். அப்படியே அந்தக் கார் டிரைவர்… அவனும் இன்னிக்குப் பிடிபட்டாச்சு.“
“எல்லா விவரமும் எனக்கு முன்னே உங்களுக்கு வருதேய்யா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“பெரிய விஷயம் ராமு. களவு போன பணம் சுமார் பதிமூணு லட்சம். எவ்வளவு திரும்ப பணமா கைக்கு வருது பார்க்கலாம். நல்ல வேளை நகை லாக்கர் பக்கம்லாம் கை வைக்கல. என்னவோ அத்தோட போயிட்டாங்க…“ என்கிறார் மேனேஜர்.
“ஆமா சார். ரெண்டு வருஷமா அவங்களைப் பிடிக்க முடியல்ல. எனக்கே அவங்க கிடைப்பாங்கன்னு நம்பிக்கை இல்லை. அத்தோட இப்பிடி அதுக்கு நான் பயன்படுவேன்னு சத்தியமா நினைக்கல்ல சார்…“
“ஆச்சர்யமா இருக்கு. சொல்லுய்யா. அவனை நீ ஒரு ஹோட்டல்ல பார்த்தே… அது எப்போ? ஒண்ணரை ரெண்டு மாசம் இருக்குமா? திடுதிப்னு இப்ப அவன் ஞாபகம் எப்பிடி வந்தது? எப்பிடி அந்த வரைஞ்ச படத்தை நேத்து தேடினே? தேடி எடுத்து போலிசுகிட்ட குடுக்கலாம்னு எப்பிடி உனக்குத் தோணித்து…“ என்று அடுக்கடுக்காய்க் கேட்கிறார் ராமகிருஷ்ணன். அவன் பதில் சொல்லுமுன், “ஒருவேளை அவன் தான் திருடன்னு நீ தப்பா அடையாளம் காட்டியிருந்தால்?“ என்று சேர்த்துக் கொள்கிறார்.
“தெளிவா எனக்கு அவன்தான்னு மனசுக்குத் துல்லியப் படும் வரை நான் அதை போலிசுகிட்ட தந்திருப்பேனா சார்?“
அப்போது ஃபோன் வருகிறது. ராமகிருஷ்ணன் எடுத்து “நேஷனல்?“ என்று பேசுகிறார். “ஆமா சார். நம்ம கிளைதான் சார்… அதைக் கண்டுபிடிச்சதும் நம்ம ஸ்டாஃப் தான் சார்… இருக்கார் சார்… இதோ சார்…“ என்றவர் ரிசிவரைப் பொத்திக் கொண்டு, “ரீஜனல் ஆஃபிஸ்லேர்ந்து… ஏ ஜி எம் பேசறார்…“ என்கிறார். ராமசாமி தொலைபேசியை வாங்கிக் கொள்கிறான். “ஆமா சார். நான்தான் சார். தேங்ஸ் சார். I’M HONOURED SIR. SO KIND OF YOU SIR. நேர்ல வரேன் சார். சரி சார்“ என தொலைபேசியை வைக்கிறான்.
“எல்லாருக்குமே இந்தச் செய்தி பரபரப்பா ஆயிட்டது“ என்கிறான் ரமேஷ். “பேப்பர்ல வந்திருக்கே…“ என்கிறார் ராமகிருஷ்ணன். “நேத்து சாயந்தரம் கமிஷனர் ஆபிஸ்லேர்ந்து ஃபோன்னதும் எனக்கு ஒண்ணுமே விளங்கல்ல. நீயாவது என்கிட்ட இந்த மாதிரி நான்  கமிஷனர் கிட்ட போயிருந்தேன்னு ஒரு வார்த்தை சொன்னியா?“
“எப்பிடியும் திருடனைப் பிடிச்சிருவாங்க. அவரே உங்க கிட்ட சொல்லணும்னு இருந்தேன் சார்.“
வெளியே வருகிறான். டிராஃப்ட் வேலைகள் காத்திருக்கின்றன. “சார் உங்க பிரான்ச் தானே? இன்னிக்குப் பேப்பர்ல நியூஸ் பார்தேன்…“ என ஒருத்தன கேட்கிறான். “அதுக்கு துப்பு குடுத்ததே சார் தான்“ என்கிறான் ரமேஷ்.. “அப்பிடியா சார்…“ என கை கொடுக்கிறார்கள். ராமசாமி வெட்கமாய்த் தலையாட்டிவிட்டு வேலையில் மும்முரப் படுகிறான். ரமேஷ் அருகே. அவனும் வேலை மும்முரத்தில் இருக்கிறான்…
ராமசாமி தலையைத் தூக்கிப் பார்க்கிறான். மணி 11 45. “ரமேஷ்?“ என்று கூப்பிடுகிறான் ராமசாமி. “என்னடா?“ என்று ரமேஷ் திரும்புகிறான். “ரெண்டு நாள் முன்னாடி… இதே நேரம்…“
“ஒரு நேரமும் இல்லை. ரெண்டு நாள் முன்னாடி நீ வேலைக்கே வரல்ல. யாரோ உன்னை ஃபோன்ல கேட்டாங்க… யார்னு தெரியல்ல.“
“இவதான் கூப்பிட்டிருப்பா… நான் ஏன் வேலைக்கு வரல்ல? ANY GUESS?“
“கேட்டால் என்ன சொல்வே? நான் வந்திருந்தேன், அப்பிடிம்பே.  என்ன வேலை பார்த்தேன்னால், இதோ இதே வேலைதான்…னுவே.“
“அதில் சிறு மாற்றம்… இன்னிக்குத் தேதிப்படி ரெண்டு நாள் முன்னால்… என்ன நாள்?“
“ம்… இன்னிக்கு செப்டம்பர் 25. ரெண்டு நாள் முன்னாடி? செப்டம்பர் 23.“
“வருஷம்?“
“போரடிக்காதே. 2016.“
“அப்ப ரெண்டு வருஷம் முன்னாடி…“
“என்ன?“
“ரமேஷ். நீ மறந்திட்டே. ரெண்டு வருஷம் முன்னாடி செப்டம்பர் 23 அன்னிக்கு தான் நம்ம பேங்க்ல ROBBERY.“
“ஏ ஆமாண்டா ஆமாண்டா.“ பரபரப்புடன் கிட்டே வருகிறான் ரமேஷ்.
“இப்ப மணி என்ன?“
“11 50.“
“கிட்டத்தட்ட இந்நேரம் தான் என்னை அறைந்து அப்படியே ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டான் அந்தத் திருடன்.. நேரா என்னைப் பார்க்க துப்பாக்கியை நீட்டினானா? பயத்துல உடம்பெல்லாம் உதற ஆரம்பிச்சிட்டது…“
“ரெண்டு வருஷம் முந்தி…“
“ரெண்டு நாள் முந்தி…“ என்கிறான் ராமசாமி புன்னகையுடன்.
“சார் டிராஃப்ட் ரெடியா?“ என ஒரு பெண் வந்து கேட்கிறாள்.
“இவள் தான் கடைசி. இவளை அனுப்பிட்டு வெளியே போய்ப் பேசுவோம்…“ என்கிறான் ராமசாமி.
“சரி. நான் வெளியே காத்திருக்கிறேன்…“ என ரமேஷ் எழுந்து போகிறான்.
ராமசாமி வெளியே வருகிறான். “DO YOU WANT TO SMOKE?“
“இல்ல. வேணாம்…“ என்கிறான் ரமேஷ்.
“ஏன்டா இப்பல்லாம் வேணான்னுர்றே?“
“சிகரெட்டை விட்டுட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.“
“வெரி குட்“ என்கிறான் ராமசாமி.
“செப்டம்பர் 23. அந்த நாளை நான் மறந்தே போயிட்டேன்டா…“ என்றபடியே கூட வருகிறான். “சரி. அந்த நாளில் தான் வங்கிக் கொள்ளைன்னு தெரியுமே… தெரியும்னு நீ இப்ப சொல்றே. ஒருவேளை அது ஞாபகம் இல்லாமல் பழைய காலத்துக்குப் போயிட்டியா?“
“தெரியும். நல்லா ஞாபகம் இருந்தது. தெரிஞ்சே தான் போனேன் ரமேஷ்…“ என ராமசாமி புன்னகை செய்கிறான்.
“எதுக்கு அப்பிடி ஒரு ரிஸ்க் எடுத்தே இவனே?“
“இல்லடா. நம்மால அதைத் தடுக்க முடியலாம்னு ஒரு நப்பாசை… அத்தோட… என்னைக் கட்டிப் போட்டான் பாரு ஒருத்தன். அவனைத் திரும்ப கிட்டத்தில் பார்க்க… இன்னொரு வாட்டி பார்க்க, நான் நினைச்சேன்.“
“ஐயோ. எத்தனை பெரிய ரிஸ்க் டா அது…“
“இருக்கட்டும்… பயமாத்தான் இருந்தது. இருந்தாலும் துணிஞ்சிறலாம்னு… எனக்கு இப்பிடி ஒரு சான்ஸ். ஒரே முகத்தை, தெரியாத முகத்தை இன்னொரு வாட்டி பார்க்க வாய்க்கிறது… அதும் நாம தேடிட்டிருக்கிற ஒருத்தன். விட்டுற முடியுமா அதை?“
“உன் உயிருக்கு எதும் அதுனால் ஆபத்து வந்திருந்தால்?“
“முதல் தடவை உயிருக்கு ஆபத்து வரல்லியே…“
“அட உன்னையே அறியாமல் எதும் நிகழ்வை மாத்தியிருந்தால் நீ மாட்டியிருக்கவும் கூடும். அப்ப நீ ஒரு ALTERNATE REALITY யில மாட்டியிருந்தால் என்ன பண்ணுவே? நமக்கே என்ன நடக்கப் போகுதுன்னு அப்ப யூகிக்க முடியாத நேரம் அது… இல்லியா?“
ராமசாமி அவனைப் பார்க்கிறான்.
“இல்லடா. நீ சொன்னியே? நீ ரெண்டு வருஷம் முன்னாடி சந்திக்காத ஒருத்தனை…“
“சின்னக்கனி…“
“இந்த வாட்டி சந்திச்சியா இல்லியா? அது மாதிரி புதுக் குழப்பம் வரலாம் இல்லியா?“
“ஒரு அசட்டு தைரியம் இவனே…“ என்று சிரிக்கிறான் ராமசாமி. “இந்த ரெண்டு திருடர்களையும் பிடிக்க… சின்னக்கனியையும் தயாரா உதவிக்கு வெச்சிருந்தேன்…“
“அடப்பாவி.“
“ரிஸ்க்தான்… IN MY MIND ACTUALLY IT WAS ANYBODY’S GAME.“
“என்ன ஆச்சி? பின்னே? கொள்ளையர்களைப் பிடிச்சிட்டீங்களா?“
“இல்லை.“
“ஏன்?“
“மூணு எட்டு குழப்பம் ஆயிட்டது… அதை விட்றா…“ என்று சிரிக்கிறான்.
“அதுனால தான் நடந்தது பழசு மாறாமல் அப்பிடியே திரும்ப நடந்திருக்குன்னு படுது… அப்பிடியும் இருக்கலாம்.“
“அதுவும் நல்லதுதான்… ஆனால் அந்த ரௌடியைக் கிட்டத்தில் பார்த்ததுமே எனக்கு அவன்தான்னு பிடிபட்டுட்டது. சி சி டி வி கேமெராவை நொறுக்கியதும், கைல கிளவுஸ் போட்டுக்கிட்டதுமா உஷாராத் தான் இருந்தாங்க. எல்லாரையும் ஒரு அறையில் போட்டு அடைச்சி வெளியே தாள் போட்டுட்டாங்க.“
“ஐயோ. என்னையும் தான் உள்ள அடைச்சாங்க.“
“நாந்தான் ஒரு குவியல் லெட்ஜருக்குள்ள ஒதுங்கிக் கிடந்தேன். நான் எழுந்துக்கறதுக்குள்ள அவங்களை உள்ளே போட்டு அடைச்சிட்டாங்க. நான் வேற வழியில்லாமல் படுத்துக் கிடந்தேன்… அப்ப அவங்க கேஷ் கவுன்டருக்குள்ள போனபோது முகத்திரையை அவுத்தாங்க. சி சி டி வி இல்லியேன்னு தைரியம்.. என்னை ஒருத்தன் கண்டுபிடிச்சதும் திரும்ப திரை போட்டுக்கிட்டு என்னைப் பார்க்க ஓடி வந்தான்… என்னை அடிச்சி உதைச்சி ஒரு நாற்காலியில் கட்டிப் போட்டான்…“
“அவங்க போனதும் போலிஸ் எப்பிடி வந்ததுடா?“
“உனக்கு ஞாபகம் இருக்கா ரமேஷ்? எப்பிடி வந்தது தெரியல்ல. உன் கூடத்தானே எல்லாரும் ஒரு அறையில் இருந்தாங்க…அவங்கள்ல யாராவது செல் ஃபோன்ல போலிசைக் கூப்பிட்டாங்களா?“
“இருக்கலாம். பாசிபிள்… எனக்கு ஞாபகம் இல்ல. என் செல் ஃபோன் என் மேசை டிராயர்லயே விட்டிருந்தேன் நான். அது ஞாபகம் இருக்கு…“
“ம். அதான் என் அட்வென்சர்… ரெண்டு வாட்டி திருடன் கிட்ட அடி வாங்க வேண்டியதாயிட்டது… பரவால்ல. பிடிச்சமே?“
“இல்லடா. இப்ப ஒண்ணு புரியல எனக்கு. ஏன் நீ பழைய காலத்துக்கே போயி இதே தகவலை போலிஸ்கிட்டக் குடுத்திருக்கக் கூடாதா?“
“நான் கூட அதை யோசிச்சேன். ஆனால்… என்ன தெரியுமா?“
“கொள்ளை அடிச்ச பணத்தோட அவங்க நிச்சயம் ஊரை விட்டே எங்காவது தாண்டிப் போயிருப்பாங்க. அவங்க மூணு பேரும் காரில் இருப்பாங்க. இந்த நேரம் இந்த பைக் நம்பரை வெச்சி என்ன பண்ண? நிகழ்காலம்னால்… அவனும் நாம தேடறதை எதிர்பார்க்க மாட்டான்… அத்தோட….“
“இதுவரை நல்லா பேசினே… அதுசரி. அது என்ன அத்தோட…? அதுக்கு என்ன அர்த்தம்?“
“பழைய காலத்தில் நாம அவனைப் பிடிச்சோமா?“
“இல்லை.“
“இப்ப பழைய காலத்திலேயே முயற்சி பண்ணினால்… நம்ம வெற்றி FIFTY FIFTY அப்டின்னு ஒரு பயம் எனக்கு. இதை நிகழ்காலத்துக்கு எடுத்துட்டு வந்து கையாளறதுல வெற்றி சதவிகிதம் அதிகம்னு ஒரு கணக்கு… எப்பிடி?“ என்று சிரிக்கிறான்.
“சில கணக்கை ரொம்ப அழகாப் போடறே. சில கணக்கை கோட்டை விடடுர்றே…“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
அப்போது ராமசாமியின் செல் போனில் அழைப்பு வருகிறது. தெரியாத எண்.
“யார்றா?“ என்கிறான் ரமேஷ். “தெரியல. புது நம்பர்“ என்றபடியே ராமசாமி பதில் அளிக்கிறான். “ஹலோ?“
“ராமு? நான் கிருஷ்ணராஜ் பேசறேன்…“
“சார் நீங்களா?“
“ஆமாம். இப்ப புனேல வேலை பார்க்கறேன்… எப்பிடி இருக்கே?“
“உங்க ஆசிர்வாதம் சார்…“
“அதே பிரான்ச்லதான் இருக்கேன்னு கேள்விப்பட்டேன்…“
“எப்பிடி சார்?“
“ரீஜனல் ஆபிஸ்ல சொன்னாங்க. சேதில்லாம் கேள்விப் பட்டேன். நம்ம பீரியடுல நடந்த அந்த ROBBERY…“
“ஆமா ஆமா சார்.“
“BEST PERFORMANCE AWARD வாங்கிட்டு கடைசியா இப்பிடி ஒரு திருட்டுலயும் நம்ம கிளை மாட்டிக்கிட்டதுன்னு இருந்தேன்… இப்ப என்ன? அவங்க மூணு பேருமே மாட்டிக்கிட்டாங்களாமே?“
“ஆமா சார்.“
“பரவால்லய்யா. நீ அவங்களை எப்பிடியோ நினைவு வெச்சிக்கிட்டு…“
“உங்க கீழே வேலை பார்த்த GOOD PERFORMERS ல ஒருத்தன் சார் நான்…“
“நல்ல விஷயம். நல்ல விஷயம்… என்கிட்ட தகவல் சொல்லி உன்னைப் பத்திக் கேட்டாங்க.“
“என்னன்னு சார்?“
“யாரு என்ன எப்பிடின்னு விவரம் கேட்டாங்க…“
“எதுக்கு சார்?“
“எதுக்கா?“ சிரிக்கிறார் கிருஷ்ணராஜ். “ஒரு மாசம் ரெண்டு மாசத்தில்… உனக்கு PROMOTION வந்தால் ஆச்சர்யப் படறதுக்கு இல்லை. என்னோட ADVANCE CONGRATULATIONS“ என்கிறார் கிருஷ்ணராஜ்.
ராமசாமிக்கு முகமே மகிழ்ச்சியில் பெரிதாகி விடுகிறது. “அது வருதோ இல்லியோ… உங்க ஆசிர்வாதம்… அது ரொம்பப் பெரிய சந்தோஷம் சார். என் நம்பரை இன்னும் வெச்சிருந்தீங்களா?“
“பின்ன? YOU ARE ONE OF THE GOOD PERFORMERS“ என்று சிரிக்கிறார்.
“சார்… கூட ரமேஷ் நிற்கிறான். பேசறீங்களா?“
“குடு. குடு…“ என்கிறார் கிருஷ்ணராஜ். “வணக்கம் சார்“ என அலைபேசியை வாங்கிக் கொண்டு அப்பால் போகிறான் ரமேஷ். ராமசாமி காத்திருக்கிறான். அதற்குள் புதிதாய் ஒருவன் அவன் பக்கம் வந்து, “நேஷனல் பேங்க சார் தானே?“ என்று கேட்கிறான். ராமசாமி தலையாட்டுகிறான். “பேப்பர்ல பார்த்தேன் சார்.“ அவன் போகிறான்.
ரமேஷ் திரும்ப வருகிறான். “பரவயில்லைடா. பழைய காலத்துக்குப் போகும் வாய்ப்பு கிடைச்சதை சரியா பயன்படுத்திக்க உனக்குத் தெரியுது…வெல்டன்.“
“SO FAR SO GOOD. MILES TO GO BEFORE I SLEEP…“ என்கிறான் ராமசாமி.
“நாளைக்கு உன் படத்தோட சேதி வருதாமே?“
சிரிப்புடன் திரும்புகிறான் ராமசாமி. “அதுக்குள்ள உனக்கு எப்பிடிடா தெரிஞ்சது?“
“காலைல உன் வீட்டுக்கு யாரோ ரிப்போர்ட்டர் வந்து புகைப்படம் கேட்டு வாங்கிட்டுப் போனானாம்… கேள்விப் பட்டேன்…“
“சிகாமணியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“இருக்கட்டும்டா. வீட்ல உன் கொடியை ஏத்திட்டே ராமு. ஒரு ஹீரோ ஆயிட்டு வர்றாப்ல இருக்கு… ஏற்கனவே சின்னக்கனிக்கு நீ தெய்வம்… I MEAN… AS YOU HAVE STATED… நான் எங்க அவனைப் பார்த்திருக்கேன்?“ என்கிறான் ரமேஷ்.
“இன்னும் எனக்கு பழைய காலத்தில் சில வேலைகள் இருக்கு…“ என்று நெற்றியைத் தேய்த்துக் கொள்கிறான் ராமசாமி. “இருக்கட்டும். இருக்கட்டும்… என்னடா கிருஷ்ணராஜ் PROMOTION அது இதுன்னாரு? வாழ்த்துக்கள்…“ என்கிறான்.
“அவர் மனசாரச் சொல்றாரு… நம்ம மேனேஜர் எழுதியனுப்பி, அது பரிசிலனை ஆகி…“
“வரட்டும். வந்தால் வேணான்னுருவியா?”
“அப்ப பார்க்கலாம்… அத்தைக்கு மீசை முளைக்கட்டும்“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
அவர்கள் அலுவலகம திரும்புகிறார்கள். “கேஷ் எட்டு லெட்சம் வரை கைப் பற்றி யிருக்கிறார்கள்னு தெரியுது…“ என்கிறார் ராமகிருஷ்ணன். “ஏ ஜி எம் சொன்னாரு… அவர் உன்னைப் பத்தி விசாரிச்சார்“ என்கிறார்.
ரமேஷ் அர்த்தத்துடன் ராமசாமியைப் பார்த்துப் புன்னகை செய்கிறான்… “அத்தைக்கு மீசை அரும்பிட்டு வருதப்போவ்…“ என்று அவனைக் கிள்ளுகிறான்.

91 97899  87842
*
Single episodes available at

Vasikarapoikal.blogspot.com

No comments:

Post a Comment