Monday, September 7, 2015

(Bulk chapters updated every Tuesday & Friday) அத். 6 முதல் 10 வரை

திரைப்பட வியூகத்தில் ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்
எஸ். சங்கரநாராயணன்

அத்தியாயம் 6
ராமசாமி அலுவலகத்துக்குக் கிளம்பும்போது லிஃப்ட்டில் ஏற்கனவே பக்கத்து வீட்டு கணபதி இருக்கிறார். “வாங்க வாங்க“ என அவர் அவனை உள்ளே கூப்பிடுகிறார். உள்ளே புகுந்து ராமசாமி பொத்தான்களைப் பார்க்கிறான். சமத்தாய் அது, பூஜ்யம் முதல் எட்டு வரை காட்டுகிறது.
“எங்க ஆபிசுக்கா?“
“இன்னும் கேட்கல்லியேன்னு நினைச்சேன்…“ என்றபடி அவன் லிஃப்ட் பொத்தான்களையே பார்க்கிறான்.
“என்ன பார்க்கறீங்க?“
“அதிசய லிஃப்ட் சார் இது…“
“ஏன்?“
“எனக்கு மட்டும்….“ என்றவன் நிறுத்தி, “ஒண்ணில்ல“ என்கிறான்.
“உங்களுக்கு மட்டும்னா ஒண்ணு. எனக்கும் சேர்த்துன்னா ஒண்ணில்ல… ரெண்டு“ என்கிறார் கணபதி. கீழே தரைத் தளம் வருகிறார்கள். “எங்க கிளம்பிட்டீங்க கணபதி சார்?“
“கோவில் வரைக்கும் போறேன். சனிக்கிழமைக்கு சனிக்கிழமை சனிஸ்வரனுக்கு எண்ணெய்க்கிழி போடுவேன்.“
“இன்னிக்கு சனியா? வர வர கிழமையே ஞாபகத்தில் இல்லைன்னு ஆயிட்டது என் நிலைமை.“
“இன்னிக்கு உங்களுக்கு அரை நாள் தானே?“
“ஆமாம். என்ன பிரார்த்தனை?“
சட்டென கணபதி கண் கலங்குகிறார். “தெரியாமல் கேட்டுட்டேன்…“ என அவர் கையைப் பிடித்துக்  கொள்கிறான். “பரவால்ல. என் பொண்ணு காணாமல் போன நாள்லேர்ந்து யாரோ சொன்னாங்கன்னு நான் சனிஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையானால் எண்ணெய்க்கிழி போடறதுன்னு செஞ்சிட்டு வரேன்…“
“அப்படிச் செஞ்சால் பொண்ணு திரும்பக் கிடைப்பாள்னு சொன்னாங்களா?“
“ஆமாம்.“
“எத்தனை வருஷமா கோவிலுக்குப் போயிட்டு வரீங்க?“
“மூணு வருஷமா.“
“அட பாவமே.“
“கடவுள் இன்னும் கண் திறக்கல்ல…“
“மூடல்லன்னு சொல்லுங்க.“
“ஏன்?“
“சனிஸ்வரன் கண் திறந்தால் நல்லது இல்லை. திறந்த கண்ணை அவர் மூடிக்கொண்டால் நல்லது…“ என்றபடி ஸ்கூட்டரை ஸ்டாண்டில் இருந்து எடுத்து உதைக்கிறான். “அடி உதவறா மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான். இந்த ஸ்கூட்டரும் அப்படித்தான். உதைச்சாதான் கிளம்புது சார்…“
கணபதி சிரித்தபடி டாடா காட்டுகிறார்.
நிகழ்காலம் 2016. அலுவலகத்தில் ரமேஷ் அவனைப் பார்த்ததும் ஓடி வருகிறான். “ஏண்டா நாலு நாளா வேலைக்கு வரல்ல?“
“அப்பிடியா?“
“என்ன நொப்படியா? நான் உன்னைத் தேடி வீட்டுக்கு வரலாமான்னு பார்த்தேன். உன் மொபைல் வேற….“
“தொடர்பு எல்லைக்கு வெளியேன்னு வந்ததா?“
“லீவு கூடச் சொல்லாமல் விட்டுட்டியேடா?“
“அது ஒரு பெரிய கதை… ராமாயணம். அப்பறமாச் சொல்றேன்…“
“ராமாயணம் எனக்குத் தெரிஞ்ச கதை தான்.“
“அப்ப மகா பாரதம்…“ என்றபடி மேனேஜர் அறை பார்க்கப் போகிறான்.
உள்ளேபோய் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இடுகிறான். மேனேஜர் அறையில் தற்போதைய மேனேஜர். கே. ராமகிருஷ்ணன் என பெயர்ப் பலகை இருக்கிறது. “வாய்யா மாப்ளை… லீவு எடுத்தால் சொல்றது கூட இல்லையா?“
“பல் வலி சார்.“
“உன் ஒய்ஃப்ட்டச் சொல்லி அவளை லீவு சொல்லச் சொல்லி யிருக்கலாமில்லே?“
“அவளுக்கு தான் சார் பல் வலி. நான், கூட இருந்தேன்“ என்று வெளியே போகிறான் ராமசாமி.
“நாலு நாள் வேலை பாக்கி நிக்குது உனக்கு“ என்கிறான் ரமேஷ். “அதெல்லாம் கடகடன்னு முடிச்சிருவேன். கவலைப் படாதே.“
“நாலு நாள்ல உன்கிட்ட என்னவோ மாற்றம் தெரியுதேடா?“
“என்ன மாற்றம்?“
“உற்சாகமாய் இருக்கே. உன் வயசில் ரெண்டு வருஷம் குறைஞ்சாப் போல…“
“ஹா ஹா. தெரியுதா? தெரியுதா?“ என அவன் தோளைத் தட்டுகிறான் ராமசாமி. “நான் நினைச்சால் எனக்கு ரெண்டு வயசு குறைஞ்சிரும்…“
“சவடால் சிங்காரம்.“ அவனை ரமேஷ் கேலி செய்கிறான். “பேசிக்கிட்டே டிராஃப்ட்ல ரெண்டு வருஷம் முந்திய தேதி போட்றாதே, அப்பனே சுப்பராயா?“
“நல்ல வேளை. ஞாபகப் படுத்தினே. நான் அப்பபடித்தான் போட இருந்தேன்,“ என டிராஃப்ட் எழுதுகிறான் ராமசாமி.
வேலை மும்முரப் படுகிறது. தன் முன்னால் யாரோ நிற்பதைப் போல பொறி தட்டுகிறது. நிமிர்ந்து பார்க்கிறான் ராமசாமி. அந்த லோன் பார்ட்டி. ஏற்கனவே இரண்டு வருடம் முன்னால் பார்த்தவன்.
“என்ன சார் வேணும்?“
“மேனேஜரைப் பார்க்கணும்.“
“என்ன விஷயம்?“
“ஒரு லோன் விஷயமா…“
“நேத்து கூட வந்திருந்தீங்க போலுக்கே?“
“நான் ரெண்டு வருஷமா அலையிறேன் சார்.“
“தெரியும்.“
“போய்ப் பாக்கலாமா சார்?“
“பாருங்க.“
“நல்ல மூடுல இருக்காரா சார்?“
“அதையும் போயி நீங்களே பாருங்க…“ என கையால் உள்ளே காட்டி அனுப்பி வைக்கிறான். அவர் உள்ளே போகிறார்.
டீக்கடையில் ரமேஷும் ராமசாமியும் டீ அருந்துகிறார்கள். எதிரே மெக்கானிக் ஷெட். ரமணி வணக்கம் சொல்கிறான். “வண்டி சரியாப் போகுதா சார்?“ தலையாட்டுகிறான் ராமசாமி. டீ கிளாஸை உயர்த்தி அவனுக்கு டீ வேணுமா, என்று கேட்கிறான் ஜாடையாய். வேணாம் சார், என ஜாடையிலேயே மறுக்கிறான் ரமணி.
“உங்க அப்பாவுக்கு உடம்புக்கு எப்பிடி இருக்கு ரமேஷ்?“
“கஷ்டப்படறாரு. எழுந்து நடமாடவே சிரமப்படறாரு. வயசாயிட்டது. உதவிக்கு யாரையாவது வைக்கலாம்னா கூட அண்ணன் விட மாட்டேங்கறான். அவனுக்கு அப்படியே அப்பா பணத்தைச் சுருட்டிறணும்னு ஒரு இது…“
“ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு மாதிரி.“
“உன்னைப் பார்க்கற வரை, எனக்கு அண்ணனே இல்லியேன்னு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன்.“
“உன்னைப் பார்த்தப்போ உனக்கு அண்ணன் இல்லியேன்னு நான் சந்தோஷப் பட்டேன்.“
“உன் அப்பா இறந்துட்டார்னா இந்த சொத்தையே அவன் அமுக்கிக்கிட்டு உன்னை வெளிய போகச் சொல்வான்னு தோணுதுடா.“
“அதான் எனக்கும் பயமா இருக்கு. ஆனால் இது பூரா அப்பாவின் சொந்த சம்பாத்தியம். அப்பாவைப் பாத்துக்க அவனால முடியாது. அவரோட சொத்து மாத்திரம் வேணும் அவனுக்கு.“
 “சரி. என் கதை தீராத கதை. விட்டுத் தள்ளு“ என்கிறான் ரமேஷ்.
“இந்த இடத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. ஞாபகம் இருக்கா உனக்-கு ரமேஷ்?“
“அதன் அடியில ஒரு கை ரேகை சோசியன் கூட உட்கார்ந்திருப்பான். ஞாபகம் இருக்கு. அதுக்கு என்ன?“
“இல்ல. உனக்கு ஞாபகம் இருக்கான்னு கேட்டேன்.“
“அவன் ஒருநாள் உனக்கு ஒரு பலன் சொன்னான். அது சரியா பலிச்சதுன்னு சொன்னே நீ…“
“என்ன சொன்னான்? எனக்கு தீயில கண்டம்னு சொன்னான் ஒருநாள். அதுதான் ஞாபகம் இருக்கு. வேற என்ன சொன்னான்?“
“மரத்தை வெட்டிட்டாங்க. அவனும் காலி பண்ணிப் போயிட்டான்… அவன் கதை நமக்கு என்னத்துக்கு? நீ ஏண்டா நாலு நாளா அப்க்ஸ்கேன்ட் ஆயிட்டே? என்னாச்சி உனக்கு?“
“சஸ்பன்ஸ்“ என்கிறான் ராமசாமி.
“உன் சஸ்பென்ஸ் நாசமாப் போக. ரெண்டு வருஷமா இதே சோலி உனக்கு. எதாவது சொல்லி என்னைக் குழப்புவே. அப்பறம் அதையெல்லாம் மறந்துரு. சாரி. டே இட் ஈசி-ன்னுவே.“
“இதையும் டேக் இட் ஈசி.
“எதையும்?“
“ஒருவேளை நாளைக்குக் கூட நான் மட்டம் போடலாம்…“
“ஏன்?“
“சஸ்பென்ஸ்.“
“ஆரம்பிச்சிட்டாண்டா…“
“ஆனா ஒண்ணு. நான் லீவுன்னா, தயவு செஞ்சி என் வீட்டுக்கு மாத்திரம் போன் பண்றதோ, நேர்ல வந்து விசாரிக்கறதோ, செய்யாதே. சரியா?“
“ஏன்?... சஸ்பென்ஸ்- அதானே?“
“அதேதான்.“
அலுவலகத்துக்குள் நுழைகிறார்கள். மணி 3,00. மேனேஜர் கூப்பிடுகிறார். அவனிடம் ஒரு கவரைத் தருகிறார். “இதுல ஒரு கையெழுத்து போடு.“ ஒரு லெட்ஜரைக் காட்டுகிறார்.
“என்ன சார்?“
“உன் சம்பளம்.“
“சம்பளமா?“
“என்?“
“நான் நேத்தே வாங்கிட்டேனே சார்.“
“நேத்தி நீ வேலைக்கே வர்லியேப்பா?“
“ஆமா சார். நான் வேலைக்கு வரல்ல சார்…“
“என்னாச்சி உனக்கு?“
“பல் வலி சார்.“
“உன் மனைவிக்குத் தான் பல் வலின்னே?“
“ஆமா சார். நான் கூட இருந்தேனா. எனக்கும் வந்திட்டது.“
“பல் வலி தொத்து வியாதியா என்ன? நான் கேள்விப்பட்டதே இல்லை.“
“நானும் கேள்விப்பட்டது இல்லை சார். அது திடீர்னு சம்பளம்னு கூப்பிட்டுக் குடுத்தீங்களா… அதான்.“
“அதுனால பல் வலி கூட வருமா?... சம்பளப் பணம் கவர்ல போட்டு மாசாமாசம் குடுக்கறது தானே?“
“இந்த மாசம் ஸ்பெஷல் சார்.“
“உனக்கு என்னவோ ஆயிட்டது. எண்ணிக்கோ.“
“எவ்வளவு இருந்தாலும் எக்ஸ்ட்ரா தான் சார். திலக், உன் கடனை அடைச்சிட்டேன்“ என்கிறான் உற்சாகமாய்.
“யார் திலக்?“
“என் பொண்டாட்டி. திலகா சார்.“
“அவகிட்டியே கடன் வாங்கினியா?“
“சஸ்பென்ஸ்“ என்றபடி உற்சாகமாக வெளியே போகிறான்.
நடையில் துள்ளலுடன் ராமசாமி தன் இருக்கைக்குத் திரும்புகிறான். ரமேஷ் அவனைப் பார்க்கிறான். “ரொம்ப உற்சாகமா இருக்கியேடா.“
‘சம்பள கவரில் இருந்து ரெண்டாயிரம் வெளியே எடுக்கிறான். “இது அவளுக்கு. கடன்.“ மீதியை கீழ்ப் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறான். “இது? இனி இதுமாதிரி சம்பளக் குறைவு வந்தால் போட்டு இட்டுக்கட்ட… சரிதானே?“
“சரியில்லை.“
“என்ன சரி இல்லை?“
“நீ செய்யறது… கேட்டால், என்ன சொல்லப் போறே?“
“சஸ்பென்ஸ். அதேதான்“ என்கிறான் ராமசாமி. வெளியே போய் ஸ்கூட்டரை உதைத்த உதையில் உற்சாகம் தெரிகிறது.
மொட்டை மாடி. சிகாமணியும் அவனும் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். “ஒரு கதை சொல்லவா சிகாமணி?“ என ஆரம்பிக்கிறான் ராமசாமி.
“அத்தான். வழக்கமா நாந்தான் உங்களுக்குக் கதை சொல்லுவேன்… இன்னிக்கு நீங்களா ஆரம்பிக்கறீங்க?“
“நீ நம்புவியா நம்ப மாட்டியான்னே தெரியல்லியே இந்தக் கதையை…“
“நம்ப முடியாத கதை ஒண்ணை வெச்சிக்கிட்டு அதை நம்பறாப்ல சொல்லணும் அத்தான். அதான் சினிமா.“
“அப்பிடியா?“
“நாளைக்கு ஒரு கம்பெனில வரச் சொலலி யிருக்காங்க. அதுக்கு இபபிடி ஒரு கதை தயார் பண்ணிக்கிட்டு இருக்கேன்.“
“அந்த… கோமால ஒரு அப்பா, அந்தக் கதை என்னாச்சி?“
“அது பாதி வரை யோசிச்சி வெச்சிருக்கேன். இது வேற கம்பெனி. வேற மாதிரியா எதிர்பார்க்கறாங்க… நம்ம சரத்குமார்னாலும் தயாரா இருக்கணும். கமல்னாலும் தயாரா இருக்கணும். இல்லியா அத்தான்?“
“ஒரு ஃபான்டசி கதைடா.“
“ஃபான்டசியா?“
“ஆமாம். நடக்கவே நடக்காதுன்னு நினைக்கறது எல்லாம் சில சமயம் நம்ம வாழ்க்கைலயே நடந்துருது. ஆச்சர்யமான விஷயம், இல்லியா?“
“அப்படியெல்லாம் நடந்தாதான் அது சுவாரஸ்யம் இல்லியா அத்தான். சரி. நீங்க என்ன யோசிச்சீங்க?“
“ஒருத்தன்… எதிர்பாராமல் அவன் தன் இறந்தகாலத்துக்குப் போக முடியுது…“
“அதெப்பிடி முடியும்?“
“முடியுது. அதான் கதைடா. ஒரு நதி. அதைத் தாண்டி இராத்திரி இருட்டில் போகிறான். திடீர்னு அவன் வேற உலகத்துக்குப் போயிர்றான்…னு சொல்றாமாதிரி… இவன், வேற காலத்துக்குப் போயிர்றான்.“
“எத்தனை வருடம் பின்னாடி?“
“ரெண்டு வருடம்டா. ஏன்?“
‘வெரி குட். அப்பதான் அவனுக்கு மாத்திரம் கால வித்தியாசம் தெரியும். கூட இருக்காங்களே, பழைய காலத்துல தானே அவங்க இருக்காங்க. அவங்களுக்கு, சட்டென்ற  ஒரு பார்வையில், வித்தியாசம் தெரியாது…“
“கதைக்கு அது கூட நல்ல விஷயம்ன்றியாக்கும்?“
“அத்தான்…. எத்தனை வருஷம்?“
‘ரெண்டு வருஷம்.“
“வெரி குட். இப்ப இன்டர்வல் பிளாக்…“
“என்ன அது?“
“லீப் வருடம் கான்செப்ட்டை வெச்சி வளையாடலாம் அத்தான்.“
“லீப் வருடமா?“
லீப் வருடம்னால் என்ன, நாலு வருஷத்துக்கு ஒரு தரம் வரும். அந்த வருஷம் பிப்ரவரி 29 நாள் வரும். இல்லியா?“
“ஆமாம்.“
“அவன் பழைய காலத்துக்குப் போகிறான். அன்னிக்கு லீப் வருடத்தில் பிப்ரவரி 28. எதிர்பாராமல் அவன் அந்த நாளே திரும்பி வர முடியாமல் ஆயிட்டது. மறுநாள் பிப்ரவரி 29 பழைய காலத்தில். ஆனால் வர வேண்டிய காலம்? அது லீப் வருடம் இல்லை. ஆகவே நிகழ்காலத்துக்கு அவன் திரும்பி வரணுமானால்… என்ன ஆகுது? இன்னும் நாலு வருஷம் காத்திருந்தால் தான் அவன் நிகழ்காலத்துக்கு வர முடியும். அதான் அத்தான் இடைவேளை. ஜனங்க எல்லாம் அவசர அவசரமா ஒண்ணுக்குப் போயிட்டு திரும்ப உள்ள வருவாங்க… எப்பிடி அத்தான்“
“நீ வேற பயமுறுத்தாதே. எனக்கே பயத்தில் ஒண்ணுக்கு வரும் போலருக்கு. வா கீழே போகலாம்“ என்கிறான் ராமசாமி.

அத்தியாயம் 7
காலை அலுவலகம் கிளம்பும் நேரம். ராமசாமி சட்டையில் பட்டன் போட்டுக் கொண்டபடியே உள்ளே பார்க்கிறான். சிகாமணி நாளிதழைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ராசி பலன் பகுதியை அவன் மேய்கிறான்… “இன்று நாள் எப்படி?“ என உரக்க வாசிக்கிறான். “இதுல என்ன போட்டிருக்கோ அதைப் பாத்திட்டுப் போனால், அதும்படி நடக்குமா அத்தான்?“
“அதும்படி நடக்குமோ நடக்காதோ, இன்றைய நாளை முன்கூட்டி தெரிஞ்சிக்க என்கிட்ட வேற யோசனை இருக்கு…“
“அப்படியா?“
சட்டென பரண் மேல் ஏறி டைரியை எடுக்கிறான். இரண்டு வருடம் முந்தைய டைரி.
“என்ன தேடறீங்க அத்தான். பஞ்சாங்கமா?“
“எதுக்கு?“
“இன்றைய நாள் விசேஷம் பார்க்க…“
“அதைவிட துல்லியமான கணிப்பு இது….“
“எது?“
“என்னோட பழைய டைரி.“
“ஆரம்பிச்சிட்டீங்களா உங்க டைரி புராணத்தை…“ என முணுமுணுத்தபடியே சாப்பாட்டு மேசையில் இருந்து சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை உள்ளே எடுத்துப் போகிறாள் திலகா. “டைரில எதையாவது எழுதறது. அதை பொழுது போகாமல் திரும்ப எடுத்து வாசிக்கிறது… அதுல என்ன சுவாரஸ்யம் இருக்குதோ?“
“அத்தானுக்கு இருக்கே. சில பேர் டைரின்னா, வந்த கடன், வாங்கிய கடன், வராத கடன்னு வெறும் கணக்கா எழுதி வைப்பான்… நீங்க என்ன எழுதுவீங்க அத்தான்?“
“அவன் உலகத்தை சந்தையாய்ப் பார்க்கிறவன். நான் அனுபவமாப் பார்க்கிறேன்.“ சத்தமாய் வாசிக்கிறான். “இன்று மழை பெய்து கொண்டிருந்ததால் நனைந்தபடி அலுவலகம் போக வேண்டியதாகி விட்டது.“ திரும்பி சிகாமணியிடம், “குடை எடுறா…“ என்கிறான்.
“குடையா? எதுக்கு?“
“மழை வரும்டா இன்னிக்கு.“
“வெளிய பாருங்க வெயில் பட்டையைக் கிளப்புது.“
“ஆனாலும் நான் மழைல நனையறாப்ல ஆயிரும்.“
“ரமணன் சொன்னாரா? அப்ப கண்டிப்பா வராது.“
“ரமணன் அறிக்கை இல்லை இது. ராமசாமி அறிக்கை. டைரில இருக்கே…“ அவனே போய் குடையை எடுத்துக் கொண்டு போகிறான். அவனை ஆச்சர்யமாய்ப் பார்க்கிறான் சிகாமணி.
ராமசாமி அறையை விட்டு வெளியேறுகிறான். “அக்கா, அத்தானுக்கு என்னமோ ஆயிட்டது… ஏன் இப்பிடி நடந்துக்கறார்னு தெரியல. வெயில் படு போடு போடுது. அவரானா மழை வரும்னு குடை எடுத்துக்கிட்டுக் கிளம்பறார்.“
“எனக்கு என்னவோ பயமா இருக்குடா. ஒரே வீட்ல உன்னையும், அவரையும் வெச்சிக்கிட்டு… ரெண்டு பைத்தியங்களை எப்படி சமாளிப்பேன்?“
“பழகிக்கோ அக்கா. வேற வழியில்லை. உன் நன்மைக்காக என்னவோ சொல்ல வந்தேன் பாரு. நீ என்னையே காலை வார்றே.“
“கவலைப்படாதே சிகா. விடிஞ்சா தெரியும் மாப்பிள்ளை குருடுன்னு பழமொழி. அவரு தானா என்கிட்ட விஷயத்தைச் சொல்வாருடா. என்கிட்டேயிருநிது அவரால எதையும் மறைக்க முடியாது.“
“அவர் உன்னைப் பார்த்து நின்னாரானால்… உனக்கு அவர் முதுகு தெரியாதே அக்கா… சினிமா ஸ்டைல் டயலாக் இது. ஹா ஹா.“
“நான் நிலைக் கண்ணாடி வழியா அவரைப் பார்த்துக்கிட்டே யிருப்பேன்டா. நான் யார்னு நினைச்சே? உன் அக்கா.“
“அடங் கொக்க மக்கா…“ என்கிறான் சிகாமணி.
லிஃப்ட். அது இறங்க இறங்க மெல்ல ஒரு குளிர் காற்று லிஃப்ட்டில் ஊடுருவுகிறது. குளிரில் நடுங்குகிறான் ராமசாமி. தெருவில் போகையில் நல்ல காற்றும் மழையும். நிறையப் பேர் வாகனங்களை நனையும்படி நிறுத்திவிட்டு கிடைத்த கூரையடியில் ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பஸ் நிறுத்தம் மனிதர்களால் நிரம்பி வழிகிறது. கார் ஒன்று நடுவழியில் நின்று விட்டது. டிரைவர் அந்த மழையில் கீழே இறங்கி முன்பக்கம் திறந்து பார்க்கிறான்.
வங்கி. மேனேஜர் அறை. கிருஷ்ணராஜ் “வா ராமு. குட் மார்னிங்“ என்கிறார்.
ஆச்சர்யமாய் இருக்கிறது. கையெழுத்து போட்டுவிட்டு தன் இருக்கைக்கு வருகிறான். ரமேஷ் அவனைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “மேனேஜர் ரொம்ப திட்டினாரா?“
“இல்லை.“
“அதுல விஷயம் இருக்குடா. அவருக்கு வேலை மாற்றல் வர்றது உறுதி ஆயிட்டது. போறபோது நல்ல பேர் வாங்கிக்கிட்டுப் போகலாம்னு பார்க்கறாரு அவர்.“
“நல்ல விஷயம் ஆச்சே. ரமேஷ். உன்னைக் கொஞ்சம் குழப்பவா?“
“காலைலியேவா?“
“நேத்து நான் வேலைக்கு வந்தேனா?“
“வந்தியே.“
“வந்தேன். ஆனால் நேத்து வேலைக்கு வந்தது நான் இல்லை…“
“அப்பன்னா?“
“ரெண்டு வருஷம் முந்தைய நான் அது…“
“அப்ப இப்ப என் முன்னால நிக்கிற நீ?“
“இதுவும் நான்தான். 2016ல் இருந்து, ரெண்டு வருஷம் முன்னாடி வந்திருக்கேன்…“ என ராமசாமி புன்னகை செய்கிறான்.
“முடியல்லடா…“ என்று பரிதாபமாகப் பார்க்கிறான் ரமேஷ். அவனே “சரி. ஒரு WILD GUESS. நீ நேத்து 2016ல இதே ஆபிஸ்ல வேலைக்கு வந்தியா?‘ ஆமாம்னு சொல்லிறாதே…“
“ஆமாம். ஆமாம்“ என அவன் கையைப் பிடித்துக் குலுக்குகிறான் ராமசாமி.
அப்போது ராதிகா அந்தப் பக்கம் வருகிறாள். அவனைப் பார்த்ததும் புன்னகை செய்கிறாள். “வாழ்த்துக்கள் ராதிகா“ என்கிறான் ராமசாமி.
“தேங்கஸ் சார். நீங்க போகும்போதே நல்லா வாழ்த்தி அனுப்பினீங்க சார்.“
“கவலையே வேணாம். கல்யாணம் ஜாம் ஜாம்னு ஜாம்பசார்ல நடக்கும். நாங்க வந்து நடத்தித் தர்றோம். என்ன உதவின்னாலும் கேட்கலாம் எங்க கிட்ட… என்னடா?“ என்று ரமேஷ் பக்கம் திரும்புகிறான்.
“நிச்சயமா“ என்கிறான் ரமேஷ். பிறகு ராமசாமியிடம் “சொல்லுடா. நாம போயி நிசம்மாவே நடத்தித் தந்தமா? நீ முக்காலமும் உணர்ந்தவன் ஆச்சே…“
“இன்னிக்கு நீ இந்த அளவு குழம்பினால் போதும் ரமேஷ்“ என்று சிரிக்கிறான்  ராமசாமி.
சிகாமணி ஒரு திரைப்பட கம்பெனி வாசல் போர்டு பார்த்துவிட்டு உள்ளே நுழைகிறான். தயாரிப்பாளர். இயக்குநர். ஒரு விநியோகஸ்தர் என மூவர் அமர்ந்திருக்கிறார்கள்.
“வித்தியாசமான கதையா இருக்கணும்ப்பா. அரைச்ச மாவையே அரைக்கக் கூடாது.“
“அப்படி ஆள் இல்ல சார் இந்த சிகாமணி. என் கதைகள் படமா வர ஆரம்பிச்சால், ஹாலிவுட்லேர்ந்தே நம்ம தமிழ்நாட்டுக்கு ரைட்ஸ் வாங்க கியூல வந்து நிப்பாங்க சார்.“
ஒருவர் குறுக்கிட்டு “ஆனால் நீங்க மட்டும் ரைட்ஸ் வாங்காமல் காபி அடிப்பீங்க…“ என கிண்டல் செய்கிறார். மற்றவர், “அடேங்கப்பா. ஒரே ஒரு சீன் மாத்திரம் சொல்லு முதல்ல… கதையை அப்பறமாப் பார்ப்போம்“ என அவனைத் தூண்டுகிறார்.
“ரயில்வே ஸ்டேஷன். எல்லாரும் ரயில் வர காத்திட்டிருக்காங்க. ரயில் வர்ற திசையை எல்லாரும் உத்து உத்து ரயில் வருதான்னு பாக்கறாங்க….“
மூவரும் ஆவலாய் கவனிக்கிறார்கள்.
“நம்ம கதாநாயகன் மாத்திரம் எதிர்ப்பக்கமாப் பாத்திட்டிருக்கான்…“
“ஏன்?“
“அந்தக் கூட்டத்தில் ஒருத்தர் அவன்கிட்ட கேட்கறார். ரயில் எந்தப் பக்கம் வரும் சார்? – அந்தப் பக்கம் – பின்ன நீங்க இந்தப் பக்கமா உத்துப் பாத்துக்கிட்டிருக்கீங்க?... நான் ரயில்வே சிக்னலைப் பார்க்கறேம்ப்பா… என்கிறான் அவன். சிக்னல்ல பச்சை மாறினால், ரயில் வர்றது தன்னால தெரிஞ்சிருமே சார்.“
“பரவால்லியே.“
“படம் பார்க்கிற ஆடியன்ஸை சிந்திக்க வைக்கணும் சார். ஒவ்வொரு சீன்லயும் அதுல உள்ள ஒரு வித்தியாசமான ஒண்ணைக் கண்டுபிடிச்சி அதை ஆடியன்சுக்கு எடுத்துக் குடுக்கணும் சார்…“
“ஓகோ.“
“எத்தனையோ அருமையான குட்டிக் கதைகள் நம்ம கிட்ட புழங்கி வந்திருக்கு. அதையெல்லாம் திரும்ப எடுத்துவிட்டாலே நம்ம தமிழோட பெருமை உலகம் பூரா பரவும் சார்.“
“எங்க ஒரு கதை சொல்லு…“
“என் கதையா சார்?“
“இல்ல. உனக்குப் பிடிச்ச குட்டிக்கதை…“
“ஒரு வேட்டுவத் தலைவன். ராஜாவுக்கு ஒரு பழம் கொண்டு வருகிறான்.“
“அந்தப் பழத்தில் என்ன விசேஷம்?“
“இந்தப் பழத்தைத் தினனால் மரணமே வராது… உங்களுக்காக இதைக் கொண்டு வந்தேன்னு மகாராஜா கிட்ட கொடுக்கிறான்.“
எல்லாரும் அவனையே பார்க்கிறார்கள்.
“ராஜாவின் பக்கத்துல நின்னுட்டிருந்த காவலன் ஒருத்தன். அடடா, சாவே வராதாமே இதை சாப்பிட்டால்னு அவனுக்கு ஒரே பரவசம் ஆயிட்டது. அந்தப் பழத்தை ராஜா வாங்கிக்கொள்ளு முன்… சட்னு அதை தான் எடுத்து வாயில் போட்டு தின்னுட்டான்…“
எல்லாரும் சிரிப்புடன் அவனைப் பார்க்கிறார்கள்.
“ராஜாவுக்கானால் கோபமான கோபம். யாரங்கே? இவன் செய்தது ராஜ துரோகம். இவனைக் கொண்டு போய்க் கழுவில் ஏற்றுங்கள்னு உத்தரவு போட்டான்.“
மௌனம்.
“அப்ப அந்தக் காவலன் கடகடன்னு சிரித்தான். ஏன்டா சிரிக்கிறாய் அற்பப் பதரே, என்றான் ராஜா கோபமாய். நான் தின்றது மரணத்தையே ஜெயித்த பழம். உங்கள் தண்டனையால் என்னைக் கொல்ல முடியாது மகாராஜா… என்றான்.“
மௌனம்.
“ராஜாவுக்கு என்ன சொல்ல தெரியவில்லை. அதையும் தான் பாத்திறலாம். நிச்சயம் இந்த தண்டனையில் நீ சாகப் போகிறாய்… என்றான் ராஜா. அப்பதான் அந்தக் காவலன் ஒரு கேள்வி கேட்டான்…“
“என்ன கேள்வி?“
“அப்படி நான் செத்திட்டால், அந்தப் பழம் மரணத்தை ஜெயித்த பழம் அல்ல. அந்தமாதிரியான ஒரு சாதாரணப் பழத்தைத் தின்றதற்கா எனக்கு மரண தண்டனை? இது நியாயமா ராஜா?...ன்னு ஒரு போடு போட்டான்…“
“நல்லாருககே. அந்தக் காவலனின் புத்திசாலித்தனத்தை மெச்சி ராஜா அவனை விட்டுட்டானாக்கும்…“ என்ற தயாரிப்பாளர் “ஏ இந்தாளு கிட்ட விஷயம் இருக்கும் போலுக்கப்பா. நீ அடுத்த வாரம் நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வா. உன் செல் நம்பர் குடுத்திட்டுப் போ. கூப்பிடறோம். உதவி இயக்குநர் மாதிரி எங்கயாவது ஒட்டிக்கோ. போகப் போகப் பார்க்கலாம்.“
உற்சாகமாக வெளியே வருகிறான் சிகாமணி. வெளியே இருந்து அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண் அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்.
“லவ்வா?“ என்கிறான் கிறக்கமாய்.
“எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிட்டது…“
“அப்ப ஒன் சைட் லவ்.“
“யாருக்கு?“
“எனக்கு…“ என்றபடி வெளியேறுகிறான் சிகாமணி.
ராமசாமி அலுவலகம் முடிந்து வெளியே வந்தவன், அடாடா, என்று திரும்ப உள்ளே போய்க் குடையை எடுத்துக் கொண்டு வருகிறான். வழியில் ஒரு பர்ஸ் கிடக்கிறது. குனிந்து எடுக்கிறான். உள்ளே நிறையப் பணம் இருக்கிறது. அதில் ஒரு முகவரியும் கிடைக்கிறது.
அதை அதன் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கலாமா, என யோசிக்கிறான். கைக்கடிகாரத்தைப் பார்க்கிறான். அப்படியே பர்சைத் தன் பேன்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடக்கிறான்.
பஸ் நிறுத்தத்தில் நிற்கிறான். பக்கத்து டீக்கடையில் நாளிதழ்கள் தொங்குகின்றன. தலைப்புச் செய்தியாக போஸ்டர் வாசிக்கிறான். பிளஸ் டூ தேர்வு முடிவுகள்…
அதற்குள் பஸ் வருகிறது. ஓடிப் போய் ஏறுகிறான்.
“அத்தான் ஒரு நல்ல சேதி“ என அவன் வீட்டுக்குள் நுழைந்தும் நுழையாமலும் ஒடி வருகிறான் சிகாமணி.
“நீ சேதியைச் சொல்லு. நல்லதா கெட்டதான்னு நாங்க தீர்மானிச்சிக்கறோம்…“
“ஒரு கம்பெனியில் என்னை வரச் சொல்லி யிருக்காங்க.“
“வேலைக்கு எதும் எழுதிப் போட்டியா? நல்ல விஷயம் ஆச்சே.“
“இல்ல அத்தான். சினிமா கம்பெனில…“
“அதானே. நீ உருப்பிட்டுருவியோன்னு நினைச்சேன்…“
“அவங்க எல்லார்த்துக்குமே என்னைப் பிடிச்சிட்டது அத்தான். நீங்க சொல்வீங்களே. அதுல ஒரு குட்டிக்கதையைச் சொன்னேன்…“
“எவனாவது காபிரைட் கேஸ் போடாமல் பாத்துக்கோ.“
“நீங்க போடாமல் இருந்தால் சரி. நாளைக்கு ஒரு குட்டிக்கதை சொல்லுங்க அத்தான்…“
“அவர் இப்பதான் வந்திருக்கார்டா. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.“
“அடேடே இது கனவா நினைவா? இது நம்ம வீடுதானா? திலகாவே டபுள் ஆக்ட் குடுக்கறாளா?“
“டபுள் ஆக்ஷன் கதை ஒண்ணு. நாளைக்கு அவங்க கிட்ட சொல்லப்போறேன் அத்தான்.“
“அப்பிடியா?“ என்றபடியே காபியை வாங்கிக் கொள்கிறான்.
“அண்ணன் தம்பி ரெண்டு பேர்.“
“மொத்தம் மூணு பேரா?“
“இது பழைய ஜோக் அத்தான். கேளுங்க. அண்ணனும் தம்பியும் அச்சு அசலா ஒரே மாதிரி இருப்பாங்க.“
“டபுள் ஆக்ஷன் ஆச்சே.“
“அண்ணன் நல்லவன். தம்பி கெட்டவன். எல்லாரும் அண்ணனைப் பாராட்டிப் பேசறாங்க. இவனைத் திட்டித் தீர்க்கறாங்க. எப்பிடி இருக்கு அத்தான்?“
“காபி தானே? சூப்பர்.“
திலகா சிரிக்கிறாள். ராமசாமி அவளைப் பார்த்து, “கதையை விட காபி தேவலைன்னு சொன்னேன்“ என்கிறான்.
சிகாமணி கதையைத் தொடர்கிறான். “எல்லாரும் அண்ணனைப் பாராட்டிப் பேசறாங்க. அந்த ஆத்திரத்தில் தம்பி அண்ணனையே கொன்னுர்றான்.“
“ஐயோ.“
“இன்னும் ஐயோ ஸ்கொயர் வெச்சிருக்கேன் அத்தான்.“
“கொன்னுட்டு தம்பிதான் செத்துட்டதா அவனே அண்ணனா நாடகம் ஆடறான்.“
“டிவிஸ்ட்டு?“
“மகா டிவிஸ்ட் ஆச்சே…“
“இதுவரை இன்டஸ்ட்ரி காணாத டிவிஸ்ட்டு இல்லியா? அப்பறம் என்னாவுது?“
“எல்லாரும் இந்தக் கெட்டவனை, தம்பியை, அண்ணன்னு நினைச்சி பாராட்டிப் பேசப் பேச, தானே இவன் நல்லவனா மாறுகிறான்…“
“ஆண்டவா. தமிழ் இனட்ஸ்ட்ரியைக் காப்பாத்து…“ என எழுந்து போகிறான் ராமசாமி.


அத்தியாயம் 8
அழகான மாலை நேரம். முன்னால் கோகுலை நிறுத்திக் கொண்டு பின்னால் மனைவியை ஏற்றிக்கொண்டு ராமசாமி. “யப்பா, இன்னிக்காவது உங்களுக்கு எங்களை வெளியே கூட்டிட்டுப் போகணும்னு தோணிச்சே“ என முதுகு பின்னே திலகாவன் உற்சாகக் குரல்.
“GAS தீர்ந்து போச்சின்னே. சரி. வெளில சாப்பிடலாம்னு கிளம்பினோம்… வேற வழி? உனக்குப் பசிக்கலைன்னாலும் எனக்குப் பசிக்குமே. இவனுக்குப் பசிக்குமே…“
“ஆசையாக் கூட்டிட்டுப் போறீங்களாக்கும்னு சந்தோஷப் பட்டேன். அதுக்கும் வேட்டு வெச்சிட்டீங்க…“
“ஆசையாத் தான் கூட்டிட்டுப் போறேன். எனக்கு மாத்திரம் ஆசை இருக்காதா என்ன? எத்தன்னாள் உன் சாப்பாட்டையே சாப்பிடறது…“
அப்படியே அவன் இடுப்பில் நறுக்கென அவள் கிள்ளுகிறாள். “ஏய் வண்டிய எங்காவது விட்றப் போறேண்டி…“ என அவன் நெளிகிறான்.
ஹோட்டலில் ஒரு மேசையைத் தேர்ந்தெடுத்து உட்கார்கிறார்கள். நாலுபேர் உட்காரும் மேசை. “எங்க உன் தம்பி?“
“அவன் நேரா ரெஸ்ட்டாரன்ட்டுக்கு வரேன்னுட்டான். எதோ இங்கிலீஷ் பட டிவிடி வாங்கணும்னு போனான்..“
சிகாமணியை அலைபேசியில் அழைக்கப் போகிறான். அதற்குள் அவனே வந்துவிட்டான். “ஹாய் அத்தான்…“
“உனக்காகத்தான் காத்திருக்கோம். வாடா. எல்லா வெளிநாட்டுப் படமும் பார்க்கறே. பாத்திட்டு, அத்தான், ஒரு கதை. இதுவரை இன்டஸ்ட்ரியே பார்க்காததுன்னு என்கிட்ட சவடால் வேற.“
“எல்லாப் படமும் பார்ப்பேன். பார்த்துவிட்டு அது மாதிரி இல்லாமல் நான் யோசிக்கிறேன் அத்தான்.“
“பேனா குடுங்கன்னு கேட்டான் ஒருத்தன். இது எழுதாதுங்கன்னான் அடுத்தவன். பரவால்ல குடுங்க. காது குடையத்தான் கேட்டேன்னானம் முதல் ஆள். அந்த மாதிரிப் பேசறே நீ… என்ன பல்டி அடிச்சாலும், சினிமாவுக்குன்னு ஒரு இருபது முப்பது வகை இருக்குடா. அதைத் தாண்டி கதை சொல்லவே முடியாது. எப்பிடி க்ரைம்னா பொண்ணு, இல்லாட்டி பொருள், இதைத் தாண்டி குற்றங்கள் எதுவுமே நடக்காதோ, அது மாதிரி.“
“அப்பிடிப் பார்த்தா, மனுச ஆசாபாசங்களைத் தாண்டி வாழ்க்கை இல்லை. சினிமாவும் இல்லை அததான். ஆனாலும் இன்னும் வாழ்க்கைல அறிஞ்சிக்க எவ்வளவோ இருக்கே. அதானே வாழ்க்கையை இன்னும் சுவாரஸ்யமாக்குது.“
“இன்னும் திலகாவைப் பத்தியே எனக்கு முழுசாத் தெரியாது…“
திலகா முறைக்கிறாள். ”எப்பிடியும் என் பக்கமா பந்தைத் திருப்பி விடாமல் இவருக்குப் பொழுது போகாதுடா.“
“இல்ல. என்னைப் பத்தியும் உனக்குத் தெரியாத ஆயிரம் விஷயம் இருக்குன்னு சொல்ல வர்றேன்.“
சர்வர் வருகிறான். “கோகுல் உனக்கு என்ன வேணுமோ கேளு.“
கோகுல் யோசிக்கிறான். சிகாமணி சிரிப்புடன் எடுத்துக் கொடுக்கிறான். “எது உனக்கு ரொம்பப் பிடிக்கும்?“
“பஞ்சு மிட்டாய்“ என்கிறான் கோகுல். எல்லாரும் சிரிக்கிறார்கள். “அதெல்லாம் ஹோட்டல்ல கிடைக்காதுடா. பூரி சாப்பிடறியா?“
“எனக்குப் பஞ்சு மிட்டாய்தான் வேணும்…“
“அவன்ட்ட கேட்டது தப்பாப் போச்சு. ஏய் நீ பூரி சாப்பிடு. வெளில போயி உனக்கு பஞ்சு மிட்டாய் வாங்கித் தரேன்… உனக்கு என்ன வேணும்டி?“
“நெய் ரோஸ்ட். அப்பறம் ஃபலூடா.“
“அதுல டான்னு வந்தா இவளுக்குப் பிடிக்குது“ என்கிறான் ராமசாமி. “ஃபலூடாடான்னு சொல்லாம விட்டாளே…“
“உனக்கு என்னடா வேணும்?“
“போண்டா“ என்கிறான் சிகாமணி.
“எனக்கும் ஃபலூடா“ என்கிறான் கோகுல்.
“பெரிய பிரச்னை தீர்ந்து விட்டது. அவன் மனசு மார்றதுக்குள்ள கொண்டு வாப்பா. எங்க ரெண்டு பேருக்கும், என்னடா போண்டா சொல்லிறலாமா?“
சிகாமணி தலையாட்டுகையில், அவனுக்குப் பின்புறமாக தூரத்தில் ஒரு குறுந்தாடிக்காரனைப் பார்க்கிறான் ராமசாமி. அவன் முகம் மாறுகிறது. “இவனை எங்கியோ பார்த்திருக்கேண்டா நான்… எங்க எங்க?“ என நெற்றியில் தட்டிக் கொள்கிறான்.
“வந்த இடத்தில் இவர் இப்பிடித்தான் திடீர்னு இப்படி எதாவது ஏடாகூடம் ஆரம்பிச்சிருவாரு… ஒருநாள் ஒரு பாட்டின் சரணத்தை வெச்சிக்கிட்டு, இதன் பல்லவி என்ன என்னன்னு ஒரே யோசனை. வீடு திரும்பற வரை பேசவே இல்லை.“
சட்டென ராமசாமி கை துடைக்க என்று சாப்பாட்டு மேசையில் வைத்திருந்த அந்த டிஷ்யூ காகிதத்தில் அந்த குறுந்தாடிக்காரனை கிடுகிடுவென்று வரைகிறான்.
“அப்பா என்னையும் வரையறியா?“
“உன்னை வீட்டுக்கு வந்தப்பறம் வரையறேண்டா…“
“இவனை எங்க பார்த்திருப்பீங்க அத்தான். மார்க்கெட்ல. கடையில. பீச்ல… உங்க பேங்க்ல?...“
“பேங்க்ல ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வராங்க போறாங்க. அவர் வேலையே அப்பிடி. இதுல யாரை எப்பிடி ஞாபகம் வெச்சிக்க முடியும் அவரால?“ என்கிறாள் திலகா.
பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த குறுந்தாடிக்காரன் வெளியே போகிறான். இங்கிருந்து அவன் வெளியே நிறுத்தி யிருந்த வண்டி எண் தெரிகிறது. ட்டி என் 22 எக்ஸ் 1848. வண்டியில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பிப் போகிறான் குறுந்தாடிக்காரன். ராமசாமி அந்த வண்டி எண்ணையும் அவன் வரைந்த படத்தில் குறித்துக் கொள்கிறான்.
“அந்த வண்டியையும் எங்கயாவது பாத்திருக்கீங்களா அத்தான்?“ என சிகாமணி கிண்டல். “எங்காவது டிராஃபிக்ல உங்க கூட சண்டை போட்டிருப்பானா?“
“தெரியல. யோசிக்கிறேன். யோசிக்கிறேன்…“
கடகடவென்று சாப்பிடடு முடிக்கிறார்கள். ஃபலூடா வருகிறது. “நீங்க கொஞ்சம் எடுத்துக்கறீங்களா?“ என கேட்கிறாள் திலகா. “நிறையவே எடுத்துக்கறேன்…“ என்கிறான் ராமசாமி. ஒரு ஸ்பூனில் ஃபலூடாவை எடுத்து ராமசாமிக்கு ஊட்டுகிறாள் திலகா. “அம்மா எனக்கும் ஊட்டி விட்டுர்றியா?“ என்று கேட்கிறான் கோகுல். எல்லாரும் சிரிக்கிறார்கள்.
பரணில் பழைய டைரிகள் நாலைந்து அடுக்கிக் கிடக்கின்றன. கூடவே பழைய நாளிதழ்களும் கட்டிக் கிடக்கின்றன. அலுவலகம் கிளம்புமுன் நாள் காட்டியைப் பார்க்கிறான் ராமசாமி. நிகழ்காலத்தில் சுவரில் காலண்டரில் மே 25. இரண்டு வருடம் முந்தைய டைரியை எடுக்கிறான். அப்போது சிகாமணி அங்கே வருகிறான்.
“அத்தான் அன்னிக்கு நீங்க குடை எடுத்திட்டுப் போனீங்களே?“
“ஆமாம்.“
“உங்க டைரி வாக்குப்படி மழை வந்ததா?“
“வந்தது.“
“எங்க வந்தது? வெயில்தான் படு போடு போட்டது. நான் கூட அன்னிக்குதான் ஒரு சினிமாக் கம்பெனிக்குப் போனேன்…“
“நான் படிச்சது ரெண்டு வருஷம் முந்தைய டைரி.“
“அதுனால?“
“ரெண்டு வருஷம் முந்தி மழை வந்தது.“
“அதுக்கு இப்ப குடை எடுத்திட்டுப் போனா எப்பிடி? ஹா ஹா…“ என சிகாமணி சிரிக்கிறான். “எப்பவோ தொலைச்ச பணத்தை இப்ப போயி தெருவுல தேடிப் பார்க்கிறா மாதிரி…“
“என் டைரி பத்தி உனக்குத் தெரியாது சிகாமணி. அது முக்காலமும் சொல்லும்…“
“சரி. அத்தான். இன்னிக்கு என்ன ராசி பலன்னு டைரி சொல்லுது… பழைய டைரி பாக்கறீங்க. ஏன் பழைய பேப்பர் பார்க்க மாட்டேன்றீங்க?“
“பேப்பரா?“
“அதுல ராசி பலனே வருதே அத்தான்…“
“சிகாமணி நீ ஜீனியஸ்டா.“
“தேங்ஸ் அத்தான்.“
“பேப்பர்ல செய்தி பார்க்கணும்னால், அன்றைய நாளிதழ்ல தேடக் கூடாது. ஒருநாளின் சேதி வேணும்னால் அதுக்கு அடுத்த நாள் பேப்பர் பாக்கணும். இன்றைக்கு என்ன தேதி?“
“மே 25.“
“மே 25 நடந்த விஷயத்தை என்னிக்குப் பேப்பர்ல பார்க்கணும்? மே 26ல். அப்படித்தானேடா?“
பரணில் ஏறி மே 26, இரண்டு வருடம் முந்தைய செய்தித்தாளை எடுக்கிறான். பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நாளிதழ்.
“எங்க மாமா பொண்ணு கூட அந்த வருஷம் நல்ல ரேங்க் வாங்கி, பேப்பர்ல படம் வந்தது அத்தான்.“
“வெரி குட்.“
“உங்க படம் என்னிக்கு வரும் அத்தான்…“
“நான் பிளஸ் டூ படிச்சே நாளாச்சிடா. இனிமேல் போட மாட்டாங்க…“
அதில் ஒரு செய்தியைப் பார்க்கிறான். முகம் இறுகுகிறது. சிகாமணி அந்தச் செய்தியை எட்டிப் பார்ககிறான். மதிப்பெண் குறைந்த மாணவி தற்கொலை.
“அடிக்கடி இதுமாதிரி ஆகுது அத்தான்… என்ன எழுந்துட்டீங்க?“
ராமசாமி விறுவிறுவென்று உடை மாற்றிக் கொள்கிறான். அவசர அவசரமாக வெளியே போகிறான்.
“அக்கா அத்தான் ஏன் இத்தனை அவசரமாக வெளியே ஓடுறார்?“
“நீ எதும் ஜோக் அடிச்சியாடா?“ என்று உள்ளிருந்தபடியே கேட்கிறாள் திலகா.
லிஃப்ட். மைனஸ் 1 அழுத்தப் படுகிறது. தெருவில் இறங்கி பரபரப்பாக நடக்கிறான். கையில் நாளிதழ். அவன் போகிற போதே அவன் வாசித்த நாளிதழின் செய்தி மனசில் நிழலாடுகிறது.
மதிப்பெண் குறைந்து பெற்றோர் திட்டியதால் பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவி சுகன்யா (வயது 17) தற்கொலை செய்துகொண்டார். சென்னை மணிமேகலை நகர் நாலாவது தெருவைச் சேர்ந்த சுகன்யா நேற்று அறைக்குள் போய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு பஸ்சில் அவசரமாக ஏறி, இறங்குதல். விறுவிறுவென்று போகிறான். ஓரிடத்தில் ஒருவரிடம் கேட்கிறான். “இந்த முகவரி எங்க இருக்கு?“ என நாளிதழைக் காட்டுகிறான்.
“இது என்னிக்குப் பேப்பர் தம்பி?“
“நாளைய பேப்பர்…“
“நாளைய பேப்பரா? அது எப்பிடி உங்க கையில?“
“அதெல்லாம் அப்பறம்.. இந்த முகவரி எங்கே?“
“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது தம்பி. முகவரியை வாசிங்க…“
“மணிமேகலைநகர் நாலாவது தெரு…“
“இது மணிமேகலை நகர் இல்லங்க. தப்பா வந்திட்டீங்க. நேரா போயி…“
விறுவிறுவென்று போகிறான். அங்கே ஒருத்தரிடம் விசாரிக்கிறான். “இது மணிமேகலை அவின்யூ தம்பி. நகர்னு இங்க எங்க … பக்கத்துல கேளுங்க.“
ஓடுகிறான். ஒருவர் வழியில் அவனை நிறுத்துகிறார். “என்னய்யா?“
“இந்த முகவரி எங்க இருக்கு? கொஞ்சம் வழி சொல்லுங்க.“ அவர் ஒரு காகிதத்தை நீட்டுகிறார். போடாங்- என அவரை உதறி விட்டு மேலும் வேகமாகப் போகிறான். கையில் நாளிதழ். ஒருநிமிடம் நின்று நாளிதழில் வெளிவந்திருக்கிற சுகன்யாவின் படத்தைப் பார்ககிறான். உன்னை சாக விடமாட்டேன்… என கத்துகிறான்.
“இது நாலாவது சந்து சார்.. நாலாவது தெரு… அதோ…“
மூணாவது தெரு தாண்டியதும் திரும்பும்போதே தெரிகிறது. ஐந்தாறு கதவிலக்கங்கள் தள்ளி ஒரு வீட்டு வாசலில் ஆம்புலன்ஸ் நிற்கிறது. ஹோவென்று அழுகைச் சத்தம்.
கையில் இருக்கும் நாளிதழைப் பார்க்கிறான். அவனுக்கும் அழுகை வருகிறது.
யாரோ கிட்ட வருகிறார்கள். “நீங்க அவங்களுக்குச் சொந்தக்கார்ருங்களா?“
இல்லை என தலையாட்டுகிறான்.
“பாவம் சார். வயசுப் பொண்ணு. எதோ மார்க்கு குறைஞ்சிட்டது போல.“
“பொண்ணு பேரு சுகன்யா.“
“உங்களுக்கு அவங்களைத் தெரியுமா சார்?“
“தெரியாது.“
“பின்ன எப்பிடி விவரம்லாம் சொல்றீங்க?“
“பேப்பர்ல பார்த்தேன்.“
“அதுக்குள்ள பேப்பர்ல வந்திட்டதா? செய்திகளை முந்தித் தர்றாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். இவ்வளவு முந்தியா?“
அந்த நபர் ராமசாமியின் கையில் இருக்கும் நாளிதழைப் பார்க்கிறார். அந்தப் பக்கமும் அதில் சுகன்யாவின் படமும்.
“இது என்னிக்குப் பேப்பர் சார்?“
அவன் வரும் ஆட்டோவைக் கூப்பிடுகிறான். “நாளைக்குப் பேப்பர்“ என்று கிளம்புகிறான்.
“நாளைக்குப் பேப்பரா? சார். என்ன சொல்றீங்க?“ என அவர் கைநீடடி நிறுத்துமுன் ஆட்டோ போய்விடுகிறது.
வீடு. சிகாமணி தயங்கித் தயங்கி அக்காவிடம் வருகிறான்.
“என்னடா? பணம் வேணுமாக்கும்?“
“இல்லக்கா“ என தயங்குகிறான். “அக்கா அத்தானோட போக்கே வர வர சரி இல்லை. பாத்துக்கோ…“ என்கிறான் சிகாமணி.
“என்னாச்சி?“
“உங்கிட்ட சொல்ல வேணாம்னு பார்த்தேன்.“
“அட சனியனே. அதான் ஆரம்பிச்சிட்டியே. சொல்லித் தொலை…“
“அன்னிக்கு…“
“அன்னிக்குன்னா என்னிக்கு?“
“நாலைஞ்சு நாள் முன்னாடின்னு வெய்யி…“
“சரி சொல்லு.“
“அத்தானைத் தேடி பாங்க்குக்குப் போனேன்…“
“நீ ஏன் அங்க போனே?“
“இப்ப அதுவா முக்கியம்?“
“அதுவும் முக்கியம் தாண்டா…“
“ஒரு நூர் ரூவா கேட்கலாம்னு போனேன். போதுமா?“
“நூர் ரூவா நீ கேட்டது. போதுமான்னு என்னைக் கேட்டால்?“
“அதில்லக்கா. விஷயத்துக்கு வா நீ. அன்னிக்கு பாங்குக்குப் போனேனே… அவர் வேலைக்கே வரலைன்னுட்டாங்க.“
“என்னிக்குடா?“
“நாலைந்து நாள் முன்னாடின்றேனே?“
“வேலைக்கே வரலைன்னாங்களா?“ அட எருமை மாடே எத்தனை முக்கியமான விஷயம். இதை ஏன் முன்னாலயே சொல்லல என்கிட்ட?“
“சாரிக்கா.“
“இப்ப எதுக்கு சொல்றே?“
“அன்னிக்கு என்னடான்னா வெயில் காயுது, குடை எடுத்திட்டுப் போறார். இன்னிக்கு பழைய பேப்பரை எடுத்துக்கிட்டு வெளிய ஓடறார்… என்ன ஏது ஒண்ணும் புரிய மாட்டேங்குது.“
“அவர் வரட்டும் கேட்டுறலாம்“ என்கிறாள் திலகா. கொஞ்சம் அப்படியே யோசிக்கிறாள். “சே நீ பயப்படறா மாதிரில்லாம் பெரிசா ஒண்ணும் இருக்காதுடா“ என்கிறாள். “ஒருவேளை பெரிசா இருக்குமாடா?“ என்கிறாள்.
“கேள்வியும் நீயே கேட்டுக்கறே. பதிலும் நீயும் சொல்லிக்கறே. உடனே சந்தேகத்தையும் கேட்கறே. நல்லா இருந்த ஆளும் உன்கிட்ட பேசினால் குழம்பிருவான் அக்கா.“
“போடா நீ ஒருத்தன்…“ என உள்ளே போகப் போனவள் அங்கே இருந்த தொலைபேசியில் ராமசாமிக்குப் பசே முயல்கிறாள். எண் கிடைக்கவில்லை. “எப்ப பார்த்தாலும் தொடர்பு எல்லைக்கு வேளியேன்னு தான் வருதுடா.“
பிறகு வங்கியின் லென்ட்லைனுக்கே அழைக்கிறாள்.
“ஹலோ… நேஷனல் வங்கியா?“
“எஸ். சொல்லுங்க.“
“மிஸ்டர் ராமசாமியோட பேசணும். நான் அவரோட மிசஸ்.“
“அவர் இன்னிக்கு ஆபிசுக்கே வரலம்மா“ என்கிறார்கள் போனில்.
“தம்பி நான் மோசம் போயிட்டேண்டா“ என அழ ஆரம்பிக்கிறாள் திலகா.
அப்போது வாசல் கதவு தட்டப்படுகிறது. “அவர்தான்… வந்திட்டார்“ என கதவைத் திறக்கிறாள்.
“GAS“ என தோளில் சிலிண்டருடன் ஒரு நபர் நிற்கிறான்.


அத்தியாயம் 9
டி.வி.யில் கல்யாணப் பரிசு தங்கவேலு நகைச்சுவைக் காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சிகாமணி “அக்கா உன் வாழ்க்கையும் கல்யாணப் பரிசு கதையாட்டம் ஆயிட்டதே. அதுலயும் தங்கவேலு வேலைக்கே போகாமல் காலைல சாப்பாட்டைக் கட்டிக்கிட்டு ஒரு பூங்காவுக்குப் போவான். சாய்ந்தரமானால், வேலைக்குப் போயிட்டுவந்தா மாதிரி ஹாயா உள்ளே வருவான்…“ என்கிறான். “அது மன்னார் அன்ட் கம்பெனி., இது நேஷனல் பேங்க். அதான் வித்தியாசம்.“
“அத்தனைக்கு நான் ஏமாளி இல்லடா. வரட்டும் அவர்“ என கையில் விளக்குமாற்றை எடுக்கிறாள். “ஐயோ அக்கா அவ்வளவு கோபம் வேணாம் உனக்கு…“ எனப் பதறுகிறான் சிகாமணி. “நீ வேற. வீட்டைப் பெருக்கலாம்னு பார்க்கறேன். தள்ளு“ என அவனை விலக்குகிறாள். தொலைக்காட்சியில் “நீங்க எங்க வேலை பாக்கறீங்க? – மன்னார் அன்ட் கம்பெனி“ என வசனம் வருகிறது. “அதை முதல்ல அணைடா. இருக்கற கடுப்புல இது வேற…“
“தங்கவேலு நகைச்சுவையில் கடுப்பான ஒரே ஆள் நீயாத்தான் இருக்கும்“ என அதைப் போய் அணைக்கிறான். அக்கா வீட்டைப் பெருக்க ஆரம்பிக்கிறாள்.
சட்டென அமைதி சூழ்கிறது. வாசல் கதவை யாரோ தட்டுகிறார்கள். சிகாமணி அக்காவைப் பார்க்கிறான். “இஸ்திரிக்காரனா இருப்பானோ?“ எனப் பேசிக்கொண்டே அவனே போய்க் கதவைத் திறக்கிறான்.
ராமசாமி உள்ளே வருகிறான். ரொம்ப வருத்தமான முகம். அலைந்து திரிந்து களைத்த முகம். வந்து அப்படியே சோபாவில் சரிகிறான். கோபமாய்ப் பேச காத்திருந்த திலகாவுக்குக் கவலையாகி விடுகிறது.
அலுவலகம் போகிற அளவில் அவன் எடுத்துப் போகிற பையைக் கையில் எடுக்கிறாள். அது கனம் குறையாமல் அப்படியே இருக்கிறது. உள்ளே யிருந்து டிபன் பாக்ஸைத் திறக்கிறாள். கட்டிக்கொடுத்த சாம்பார் சாதம் அப்படியே இருக்கிறது.
“என்னாச்சிங்க சாப்பிடல்லியா?“
“சாப்பாடு நல்லா இல்லியா?“ என்கிறான் சிகாமணி.
“நான் இன்னிக்கு வேலைக்கே போகலடி…“ என்கிறான் ராமசாமி.
அவன் ஒத்துக் கொண்டதில் திலகா ஆறுதல் படுகிறாள். சிகாமணியைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள். கண்மூடிக் கிடக்கிற ராமசாமியைப் பார்த்தபடியே அருகே இருக்கும் சிகாமணியிடம் “அவருக்குப் பொய் சொல்லவே தெரியாதுடா“ என மெல்லச் சொல்கிறாள். பிறகு ராமசாமியைப் பார்த்து “எங்கயோ அலைஞ்சிட்டு வரீங்க போல…“ என்கிறாள்.
“ஆமாம். ஒரு தற்கொலை. ஆகப் போகுதுன்னு முன்னாலயே தெரிஞ்சிட்டது எனக்கு… காப்பாத்தலாம்னு வேக வேகமாப் போனேன்… முடியாமல் போயிட்டது..“
“தற்கொலையா?“ என்று ஆச்சர்யமாய்க் கேட்கிறான் சிகாமணி. “தூக்கா, தூக்க மாத்திரையா?“
“அதுவா இப்ப முக்கியம்?“ என்கிறாள் திலகா. “சூடா தோசை வார்த்துத் தரவா? பாவம் சாப்பிடாமல் வந்திருக்கீங்க…“ என்கிறாள்.
“முதல்ல காபி.“
அவள் உள்ளே போகிறாள். சிகாமணியும் அவனும் தனித்து விடப் படுகிறார்கள்.
”அத்தான். காலைல நீங்க அந்தப் பேப்பரை பரண்லேர்ந்து எடுத்துப் பாத்தீங்களே, அந்தப் பொண்ணா?“
“ஆமாம்.“
“அது பழைய பேப்பர் ஆச்சே.“
“ஆமாம்.“
“அவளை இப்ப போயி எப்பிடி நீங்க காப்பாத்துவீங்க?“
“அதான்… முடியல்லடா.“
“அது எப்பத்திய பேப்பர்?“
“ரெண்டு வருஷம் முந்தின பேப்பர்…“
“ஹா ஹா. அத்தான் நீங்க என்கிட்ட ஒரு கதையை ஆரம்பிச்சிங்க இல்லே? அதும் மாதிரி இருக்கே…“
“அதேதான்.“
“நல்ல தமாஷ் அத்தான்.“
“நான் வருத்தமா இருக்கேன். தமாஷ்ன்றியே சிகாமணி….“
“அது ரெண்டு வருஷம் முந்தைய கதை. நடந்து முடிந்த கதை. அதைத் திரும்ப இப்ப போஸ்ட்மார்ட்டம் பண்றா மாதிரி வெளியே கொண்டு வர முடியுமா?“
“அதான் எனக்கே ஆச்சர்யம்.“
“அப்பன்னா, நாம அந்தக் காலத்துக்கே போனால் தானே அது முடியும்?“
“நான் போனேன்டா.“
“நல்லாதானே இருக்கீங்க அத்தான். இது எத்தனை?“ என மூணு விரல்களைக் காட்டுகிறான்.
“நாலு.“
“ஐயோ அத்தான். இது மூணு…“
“அது மூணுதான். எனக்குத் தெரியும். நான் தெளிவாத்தான் இருக்கேன்.“
திலகா காபியுடன் வருகிறாள். மெல்ல எழுந்து கொள்கிறான். “நல்லா சூடா இருக்கா?“
“அக்காவும் சூடாத்தான் இருக்காங்க. உங்க மேல…“
“ஷ்“ என்கிறாள் சிகாமணியைப் பார்த்து. “மொதல்ல அவர் காபியைக் குடிக்கட்டும்.“
“நீங்க பேசினதெல்லாம் நான் கேட்டுக் கிட்டிருந்தேங்க.“
“சந்தோஷம்.“ ராமசாமி காபியை உறிஞ்சுகிறான். “சிகாமணி, நான் இறந்த காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மாத்த முயற்சி பண்ணினேன்...“
“முடியல்ல.“
“ஆமாம். என்னால அது முடியல்ல. ஆனால் கண் முன்னால அது நடக்கப் போகுதுன்னு நடக்கும் முன்னே தெரியறது இருக்கில்லையா? அது பயங்கரம்டா. அனுபவிச்சா தான் தெரியும் அந்த வலி.“
“கடந்த காலத்தை மாத்த முடியாது அத்தான்.“
“ஆனால் முயற்சி செய்யாமல் எப்பிடி இருக்க முடியும் சிகாமணி? கையைக் கட்டிக்கிட்டு நம்மால ஆகாதுன்னு இருக்கறதா?“
“என்ன சொல்ல வரீங்க?“ என்கிறாள் திலகா.
“திலகா, இப்பிடி பக்கத்தில் உட்காரு…“ என சற்று நகர்ந்து சோபாவில் இடம் அளிக்கிறான். “இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. இதை நான் விளக்கவும் முடியாது…“
“பயப்படாதீங்க… அப்டின்னு நீங்க ஆரம்பிக்கறீங்க பாருங்க. அப்பதான் பயமே வருது.“
“குழம்பிக்கவும் வேணாம். முதல்ல என்னைப் பேச விடுங்க.“
“அதில்ல அத்தான்…“
“அவர் பேசட்டும்டா.“
ராமசாமி கொஞ்சம் மௌனம் சாதிக்கிறான். “நான் உங்க ரெண்டு பேர் கிட்டயுமே இதைச் சொல்ல வந்தேன். சந்தர்ப்பம் சரியா அமையல. நீங்களும் காது குடுத்துக் கேட்கத் தயாரா இல்லை.“
“இப்ப சொல்லுங்க“ என்கிறாள் திலகா. சிகாமணியும் தலையாட்டுகிறான்.
என்னால ரெண்டு வருஷம் முன்னால போக முடியுது…“
“என்ன சொல்றீங்க?“ என்கிறாள் திலகா.
“அவர் பேசட்டும் அக்கா.“
“காலைல சுத்திப்போடணும் இவருக்கு…“
“நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்… இதோ“ என சட்டைப் பையில் இருந்து பஸ் டிக்கெட்டை எடுக்கிறான்.
“எனன இது?“ என வாங்கிப் பார்கக்கிறாள். “பஸ் டிக்கெட். நான் பார்த்ததே இல்லைன்றா மாதிரி இதைக் காட்டறீங்க?“
“அதில்லை. இப்ப நான் வீட்டுக்குத் திரும்பி வந்த டிக்கெட்.“
“சரி. அதுக்கென்ன?“
“சரியாப் பாருங்க. அது 04,50 டிக்கெட். இப்ப 50 காசு டினாமினேஷன் இருக்கா?“
“எந்த மடையன் குடுத்தது இதை. அத்தான், நம்ம பஸ்லயே கள்ள டிக்கெட் ஓடுது போல.“
“ஹா“ என ஆயாசமாய் மூச்சு விடுகிறான் ராமசாமி. “நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும்டா.“
“நம்பறா மாதிரி சொல்லுங்க…“ என்கிறாள் திலகா.
“சரி. நான் கொஞ்சம் தூங்கறேன்“ என்கிறான் ராமசாமி. சிகாமணி உள்ளே போய் ஒரு தலையணை கொண்டு வருகிறான். சோபாவிலேயே அப்படியே உறங்க ஆரம்பிக்கிறான் ராமசாமி.
போய்ப் போர்வை ஒன்றை எடுத்து வந்து அவனுக்குப் போர்த்தி விடுகிறாள் திலகா.
விளக்கை அணைத்து விட்டு இருவரும் மாடிக்குப் போகிறார்கள். மொட்டை மாடியில் மாலை வெயில். “கோகுல் வர்ற நேரம் ஆயிட்டதா அக்கா?“
“இன்னும் அரை மணி இருக்குடா.“ திலகா அவனைப் பார்க்கிறாள். “என்னடா இவர் என்னென்னவோ சொல்றாரு?“
“சினிமான்னா நல்லா இருக்கும் அக்கா. இது வாழ்க்கை. அவர் சொல்றதை எப்படி ஏத்துக்கறது?“
“என்னவோ ரெண்டு வருஷம் முன்னாடி ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம். அதை இவர் பேப்பர்ல படிச்சாராம். காப்பாத்தப் போனாராம். முடியல்லியாம்… ஒண்ணுக்கும் இன்னொண்ணுக்கும் ஒட்டவே இல்லியே.“
“ஆனால் நிசம்மாவே வருத்தப்படாறார் அக்கா. என்ன ஆச்சி அத்தானுக்கு?“
“பார்க்கலாம். நல்லா அசந்து தூங்கறார். தூங்கி எழுந்தால் சரியாய்ப் போகலாம்.“
“நான் எங்க இருக்கேன்?...னு  எழுந்திருப்பார்ன்றியா அக்கா?“
“இது கடந்த காலமா, நிகழ் காலமான்னு கேட்டாலும் கேட்பார்.“
“என்கிட்ட ஒரு கதைன்னு ஆரம்பிச்சார் அக்கா. ஒருத்தரால ரெண்டு வருஷம் முன்னாடி பயணம் செய்ய முடியுதுன்னார்.“
“அந்தப் பேப்பர் எத்தனை வருஷம் முந்தியது?“
“ரெண்டு வருஷம்னுதான் அவரே சொல்றார்…“
“டைரியும், பேப்பருமா அவரை ஒரு வழி பண்ணுதுன்னு தெரியுதுடா.“
“டிக்கெட் வேற காட்டறார். அதான் ஆச்சர்யம்.“
“எப்பிடி ரெண்டு வருஷம் முன்னாடி போகிறார், அது இன்னொரு ஆச்சர்யம்.“
“அவர் நல்லா பேசறா மாதிரிதான் தோணுது. நமக்கு தான் பைத்தியம் பிடிச்சிருமோன்னு இருக்கு…“
“இப்ப எதுவும் கேட்காதே அக்கா. காலைல பேசிக்கலாம்…“
“கோகுல் வந்திறப் போனான். நான் கீழ போயி ஆட்டோ வருதான்னு பாக்கட்டுமா?“ என்று கேட்கிறான் சிகாமணி.
தலையாட்டுகிறாள். இருவருக்கும் இடையே திடீரென்று கனமாய்க் கவிந்த மௌனம். “பயப்படாதே அக்கா“ என்கிறான் சிகாமணி.
“அட நாயே, இதுவரை நான் பயப்படாமல் இருந்தேன். பயப்படாதேன்னு சொல்லியே என்னை பயமுறுத்தறே நீ…“
“அப்படியே அலட்சியம் பண்ணிறவும் முடியாது அக்கா. அன்னிக்கு என்னாச்சி?“
“என்ன?“
“நான் அன்னிக்கே உன்கிட்ட சொன்னேன்…“
“அட தெளிவாச் சொல்லித் தொலை.“
“வெளில வெயில் காயுது. அத்தான் டைரி பார்த்தார். அப்புறம், மழை பெய்யும்னு குடையை எடுத்திட்டுப் போனார்.“
“குடையைத் திரும்பக் கொண்டு வந்தாரா?“
“இப்ப அதுவா முக்கியம்?“
“இல்லடா. அவருக்கு மறதி ஜாஸ்தி.“
“அவர் பிரச்னை மறதின்னால், உன் பிரச்னை எதையுமே லேசில விடமாட்டே நீ. மறக்கவே மாட்டே.“
“சரி சொல்லு.“
“வெயில் அடிக்கும் போது குடை எதுக்கு?“
“வெயில் ஜாஸ்தின்னு எடுத்திட்டுப் போனால்?“
“மழை வரும்னு சொல்லி எடுத்திட்டுப் போனால்?“
“இங்க பாரு. நம்மளா குழப்பிட்டிருக்க வேணாம். அவரா சொல்லுவார்.“
“அவர் சொல்றதுலதான் இத்தனை குழப்பம் அக்கா.“
“சரி. கோகுல் வந்திறப் போறான்… நீ கீழ போ.“
சிகாமணி நின்று திரும்பி, “பயப்படாதேக்கா…“ என்கிறான்.
“அட நாயே.“
“எனக்கு பயமா இருக்கு அக்கா.“
“எனக்குந் தாண்டா“என்கிறாள் திலகா.
கோகுல் பள்ளி விட்டு வீட்டுக்குள் வருகிறான். கூடம் விளக்கு அணைக்கப்பட்டு இருட்டிக் கிடக்கிறது. “என்னம்மா, லைட் எரியல்லியா?“ என்றபடியே கோகுல் சாக்ஸைக் கழற்றுகிறான். உள்ளே வந்து, “ஐ அப்பா“ என்கிறான். அப்பா சோபாவில் படுத்திருக்கிறார். “ஷ். அப்பாவை எழுப்பாதே…“ என்கிறாள் திலகா. அப்படியே அவனைக் கையைப் பிடித்து உள்ளே சத்தம் இல்லாமல் அழைத்துப் போகிறாள்.
காலை சோபாவிலேயே கண் விழிக்கிறான் ராமசாமி. கண் திறந்த ஜோரில் குளித்து மங்களமாய் திலகா. தலையில் ஈரத் துண்டு. “என்ன விசேஷம் இன்னிக்கு?“
“ஒண்ணில்லையே.“
“நேத்திக்கும் ஒண்ணும் இல்லை. அப்பறம்?“
“இப்ப உடம்பு தேவலையா?“
“என்ன?“
“நேத்து ரொம்ப அலுப்பாய் இருந்தீங்க…“
“இப்ப மணி என்ன?“
“ஒன்பது.“
“அவ்வளவு ஆயாச்சா?“
“எழுந்துக்க வேணாம். நானே உங்க ஆபிசுக்கு லீவு சொன்னேன். இன்னிக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க.“
“மேனேஜர் என்ன சொன்னார்?“
“பல் வலி எப்படி இருக்குன்னு என்கிட்ட கேட்டாரு…“ என சிரிக்கிறாள்.
எழுந்து உட்கார்கிறான். “தலையே ஒரே பாரமா இருந்தது. இப்ப பரவாயில்லை.“
“சரி ஆயிரும்… எப்பிடி இப்பிடி உங்களுக்குத் தோண ஆரம்பிச்சது?“
“எப்படி?“
“ரெண்டு வருஷம் முன்னாடி போறா மாதிரி?“
“அதுவா… அது பொய். அதை நம்பாதே. எனக்கே இப்ப தெளிஞ்சிட்டது.“
“நீங்க தினசரி டைரி படிக்கறீங்க. பழைய டைரி. திடீரென்று டைரியை விட்டுட்டு பேப்பர் வாசிக்க ஆரம்பிச்சீங்க. பழைய பேப்பர். அதான் இபபிடி ஆயிட்டதுன்னு நினைக்கிறேன்…“
ராமசாமி புன்னகை செய்கிறான்.
“அதுனால…“
“அதுனால?“
“உங்க பழைய டைரி, பேப்பர் எல்லாத்தையும்…“
“என்ன பண்ணினே?“
“எடைக்குப் போட்டுட்டேன்“ என்கிறாள் திலகா.
பதறிப் போய் பரணைப் பார்க்கிறான். பரணில் டைரிகள், பழைய நாளிதழ்கள் இருந்த இடம்… காலியாய்க் கிடக்கிறது.


அத்தியாயம் 10
கோவில் வளாகம். திலகா மகிழ்ச்சியாக இருக்கிறாள். “இப்படி எதிர்பாராமல் லீவு எடுத்துக்கிட்டீங்கன்னா தான் நாம வெளிய கிளம்பவே முடியுது…“ என்கிறாள்.
“உங்களுக்கு வீட்டில இருக்கிற நல்ல புடவையை எடுத்துக் கட்டிக்கிட்டு நாலு பொண்ணுக முன்னால தலை நிமிர்த்தி வளைய வரணும். அதுக்கு கோவில், பிரார்த்தனைன்னு ஒரு சாக்கு. புருஷன் சபரிமலைக்கு மாலை போட்டு, படு சிரத்தையா விரதம் இருப்பான். அவன் பூஜை பண்ணும்போது கூட நீங்க பட்டுப்புடவை என்ன, தலை நிறையப் பூ என்னன்னு பண்ற அட்டகாசம். அவன் விரதத்தையே கலைச்சிர்றாப்ல பாடு படுத்திர்றீங்க“ என்கிறான் ராமசாமி.
“பரவால்ல. இந்த இடக்குப் பேச்சு பேசினால் நீங்க நார்மலா இருக்கீங்கன்னு அர்த்தம்…“
“கோவணங் கட்டாத ஊரில் கோவணங் கட்டினவன் கோமாளின்னு வசனம். ஊர் எப்பிடியோ அப்பிடிப் போயிறணும். அதுல புதுசா எதும் நடந்தால் வாயை மூடி தன்னளவில் வெச்சிக்கணும். ஆல் இந்தியா ரேடியோ. சென்னை வானொலி நிலையம்னு ஒலிபரப்பு செய்தால் இதான் வினை…“
“இப்ப என்ன சொல்ல வரீங்க?“
“வாழ்க்கைல நமக்குப் புரியாத அநேகப் புதிர்கள் இருக்கு திலக். நாம அறிஞ்ச வாழ்க்கையை ஒரு வகையா புரிய வைக்க தர்க்கம் முயற்சி பண்ணுது. அது நம்பற ஒண்ணை உண்மைன்னு அது முன் வைக்கப் பார்க்கிறது.“
“இன்னிக்கு சிகாமணி, கூட இல்லையாக்கும்…“
“சரி. விடு….“
“சொல்லுங்க சொல்லுங்க.“
“இல்ல. இப்பிடி யோசிச்சிப் பாரு இவளே. உண்மைன்னு நாம நம்பறதையே இன்னொருத்தன் வந்து பொய்னு காட்டிட்டுப் போயிர்றான். அதே போல பொய்னு நாம நினைக்கறதே கூட உண்மையாவும் ஆயிறக் கூடும். எல்லாமே தர்க்கத்திலும், அதை நாம புரிஞ்சிக்கறதிலும் இருக்கு. புரிஞ்சிக்கறதுக்கு முடிவே கிடையாது. எத்தனையோ கோணம்,, எத்தனையோ திசை இருக்கு அதுக்கு.“
“போதும்னா விடவா போறீங்க?“
“உனக்குப் புரியறா மாதிரி ஒரு விஷயம். இப்ப மணி என்ன?“
“மாலை ஆறே முக்கால்.“
“அது சரியா?“
“சரிதான்.“
“அது உண்மையா?“
“உண்மைதான்.“
“ஆனால் பக்கத்து நாட்டிலேயே இப்ப மணி ஆறே முக்கால் கிடையாது. மாறிப் போகுது. இல்லியா?“
திலகா அவனைப் பார்க்கிறாள்.
“இங்க இப்ப இராத்திரி. பூமியின் அந்தப் பக்கம்? இப்ப பகல். இல்லியா?“
“நானே சொல்லிர்றேன். இது நமக்கு மேற்கு. அங்க இருக்கறவனுக்கு? இதுவே கிழக்கு. அதானே?“
“அட என் சமத்துச் சக்கரைக் குட்டி… அதேதான். ஆக உண்மையே இங்க டான்சாடிட்டிருக்கு.“
“அதுக்காக இறந்த காலத்துக்கு நான் போனேன். எதிர்காலத்துக்குப் போனேன்றது…“
“ஏன் முடியாது? நம்ம காலக் கணக்கு, சூரிய ஒளி நம்மை வந்தடையற வேகத்தில் நாம நம்ம கண்ணால பார்க்கிற இந்த உலகத்தின் கணக்கு. அதைவிட வேகமா நாம பயணப் பட்டால், நாம மத்தவங்களுக்கு முந்தியே அதே காலத்துக்குப் போயிற மாட்டமா? அது சாத்தியமா இல்லியா?“
“இந்த அஞசநேயர்… நான் இவரைத் தான் நம்பியிருக்கேன்.“
“எதுக்கு?“
“உங்களுக்கு சீக்கிரம் குணம் ஆகணும்னு…“
“வடை மாலை சாத்தப் போறியா?“ என்று சிரிக்கிறான் ராமசாமி.
“தர்க்கத்தை வெச்சே தர்க்கத்தைக் கேலி செய்யற உதாரணங்களும் உண்டு“ என்கிறாள் திலகா.
“அப்பிடியா?“
“ஓ எஸ். கடவுள் யாருமே தாண்ட முடியாத ஒரு சுவரைக் கட்டுவாரான்னு கேட்பார்கள்.“
“ஓகோ. அதுல என்ன?“
“அவர் சர்வ வல்லமை உள்ளவர் ஆச்சே. கண்டிப்பா கட்டுவார்னு ஒரு பதில் சொல்லலாம் இதுக்கு. உடனே அடுத்த கேள்வி. அப்படின்னா அந்த சர்வ வல்லமை உள்ளவரால அந்தச் சுவரைத் தாண்ட முடியுமா முடியாதா?...ன்னு வரும்.“
“வெரி குட். கோழி முந்தியா முட்டை முந்தியான்றதே பெரிய கேள்வி தானே?“
“அதையெல்லாம் விடடுருவம். நீங்க என்ன செய்யறீங்க. நீங்களும் குழம்பாமல், எங்களையும் குழப்பாமல் இருக்கணும். சரியா?“
“முயற்சி செய்கிறேன். உங்களைக் குழப்பறது இல்லை என் வேலை. உங்களுக்குப் புரிய வைக்க முடியாத பட்சம், அது… அப்படித்தான் எடுத்துக் கொள்ளப் படும்னு எனக்குத் தெரியுது. என்னை நீங்க நம்ப வணோம். என்னைப் பற்றி பயப்படவும் வேணாம். ஏ…. இது எந்தத் தெரு?“
அவர்கள் நிற்கிறார்கள். “ஆஞ்சநேயர் கோவில் வடக்குத் தெரு.“
“இந்தத் தெரு தான்…“
“என்ன?“
“ஒரு பர்ஸ்… எடுத்தேன்.“
“எங்க?“
“ஆபிஸ் விட்டு வர்ற வழியில்… அதில் இந்தத் தெரு முகவரி தான் இருந்தது.“
பேன்ட் பாக்கெட்டில் இருந்து பர்சை எடுக்கிறான். அதில் ஒரு மூதாட்டியின் படம் இருக்கிறது. முகவரியை வாசிக்கிறான். “கதவு இலக்கம் 21.“
“நான் கூட கேட்கணும்னு இருந்தேன். ஏது இந்தப் பர்சுன்னு… அதுக்குள்ள கலாட்டா ஆயிட்டது.“
“ஒரு கலாட்டாவும் இல்லை. வா.“
கதவு இலக்கம் 21 கண்டுபிடிக்கிறார்கள். கதவைத் தட்டவும் “யாரது?“ என வயதான குரல். “சார்? ஒரு நிமிஷம்…“
“யார் நீங்க?“ என அவர் மீண்டும் கேட்குமுன் இருமல் சத்தம் வருகிறது. மெல்ல நிதானமாய் அவர் வெளியே வருகிறார். “என்ன வேணும்? வீடு வாடகைக்குக் கேட்டு வரீங்களா?“
“இல்லை சார். இந்தப் பர்ஸ்?...“
“பர்சா?“ என்றவர் “உள்ளே வாங்க“ என்றபடி அவர் தள்ளாடி உள்ளே போகிறார். “நான் பர்சே வெச்சிக்கர்றது இல்லை. என் பர்ஸ் ஒரு தடவை தொலைஞ்சி போச்சி…“
“ரெண்டு வருஷம் முந்திதானே?“
திலகா ஆச்சர்யத்துடன் அவனைத் திரும்பிப் பார்ககிறாள். அவன் புன்னகைக்கிறான். அவர் ஆச்சர்யத்துடன் திரும்பி அவனைப் பார்க்கிறார்.
“உனக்கு எப்பிடித் தெரியும்?“
“இதுவா பாருங்க“ என நீட்டுகிறான்.
“ஆகா, இதே தான். தம்பி… இது தொலைஞ்சதில் இருந்து எனக்கு உடம்பே ஷீணமாயிட்டது ஏன் தெரியுமா?“
“அந்தப் படம். அது உங்க மனைவியா?“ என்று கேட்கிறாள் திலகா.
“ஆமாம்மா. ரெண்டு வருஷம் முந்தி அவ என்னைத் தனியா விட்டுப் போயிட்டாள். இறந்து போயிட்டாள். அவ படம்னு என்கிட்ட இருந்தது இந்த ஒரு படம் தான். பர்சில் வெச்சிருந்தேன்… அந்தப் பர்சில் அதிகம் பணம் ஒண்ணும் இல்லை. ஆனால் அதில் அவ படம் இருந்தது. அது காணாமல் போனது தான் எனக்குப் பெரிய விஷயமா இருந்தது…. அது இத்தனை வருஷம் கழிச்சி… அது எப்பிடி தம்பி? உங்க கையில எப்பிடி வந்தது?“
“அதான் சார் எனக்கே ஆச்சர்யம். திரும்ப உங்க மனைவி படத்தோட உங்க கைக்கு வந்தது பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம் பார். வா திலக். போகலாம்…“ என வெளியேறுகிறான்.
கூட வருகிறாள் திலகா. “என்னங்க இது?“
“எல்லாம் உன ஆஞ்சநேயர் அருள்தான்…“ என்று புன்னகைக்கிறான்.
“பர்சு?“
“ஆமாம்.“
“மணிரத்தினம் படம் மாதிரி இருக்குங்க டயலாக். இந்தப் பர்சை எப்ப கண்டுபிடிச்சி எடுத்தீங்க?“
“ரெண்டு நாள் முந்தி…“
“அவர் தொலைச்சது ரெண்டு வருஷம் முந்தின்றாரே?“
“அதுவும் சரிதான்.“
“ரெண்டு நாள் ரெண்டு வருஷமாயிட்டதா?“
“எப்பிடி வேணா வெச்சிக்கோ.“
“அப்ப அந்த சுகன்யா? தற்கொலை முயற்சி?“
“அதே அதே. ஆனால் நீ இதையெல்லாம் மறந்துரு இவளே. எனக்கு என்னவோ ஆகுது. நானே அதில் இருந்து தெளிந்து தேறி வருவேன்… கவலைப்படாதே.“
“கவலைப்படாதேன்றீங்க பாருங்க….“
“அப்பதான் கவலையே வருதுன்றியா?“ என சிரிக்கிறான் ராமசாமி. “ஒரு வகையில் நீ அந்த டைரியையும் பேப்பர்களையும் எடைக்குப் போட்டதே கூட நல்லதுதான். எனிவே இனிமே நானும் அதைப் புரட்டிப் பார்க்க நினைக்கல்ல.“
“ஏன்?“
“ரெண்டு விஷயம்.“
“என்ன?“
“ஒண்ணு. பழைய காலத்தை நம்மால மாத்த முயற்சி பண்ணியும் முடியவில்லை. அது தெரிஞ்சிட்டது. கடந்த கால சோகங்களை எதுக்கு மனசில் போட்டு அடைச்சிக்கணும். வருத்தப்படணும்…“
“வேரி குட். ரெண்டாவது?“ என்று கேட்டாள் திலகா.
“ம். ரெண்டாவது?“ என யோசிக்கிறான். “ஆ நினைவு வந்திட்டது. ரெண்டாவது. இந்த ரெண்டு வருஷத்தில் முக்கியமான விஷயம் எதும் நடந்திருந்தால் எனக்கே அது ஞாபகத்தில் இருக்கும். அதை நானே மீட்டெடுப்பேன். என்ன ஒரு ரெஃபரன்ஸ்னுதான் நான் டைரியையோ, பேப்பரையோ பார்ப்பேன். அது இல்லாட்டியும் தேவலை…“
“பேப்பரைத் தான் போட்டேன். டைரியை நான் வெச்சிருக்கேன்“ என்றாள் திலகா.
“என்னடி சொல்றே?“
“ஆனால் அதை உங்க கிட்ட தர மாட்டேன்.“
“பின்ன உனக்கு எதுக்கு?“
“நான் தனியே படிச்சிப் பார்க்கலாம்னு வெச்சிருந்தேன். ஆனால்… நீங்க சொன்னா மாதிரி, அது தேவையற்ற வருத்தத்தையோ சஞ்சலத்தையோ தந்தால்? அதுனால அதை நானும் வாசிக்கப் போறது இல்லை…“
“அதை எங்க வெச்சிருக்கேன்னு நானும் கேட்கப் போறது இல்லை…“ என்கிறான் ராமசாமி.
“சரி. இப்பிடி முதல்ல எப்ப நடந்தது?“
“அது ஒரு பத்து நாளுக்குள்ள…“
“முதல் அனுபவம்… அது எப்பிடி இருந்தது உங்களுக்கு?“
“முதல்ல எனக்கே பயமாய் இருந்தது. ஆனால் இதன் அடி முதல் நுனி வரை நான் அலாசிப் பார்க்காமல் விடப் போறது இல்லை…ன்னு எனக்குள்ள பயத்தை நானே தெளிய வெச்சிக்கிட்டேன்.“
“இது எந்த வருஷம்?“
“2016 தான். ஏன்?“
“நீங்க போட்ட போடுல, எனக்கே குழம்புது.“
“உன் ஆஞ்சநேயர் உன்னைக் கைவிட மாட்டார்.“
“சரி“ என பயத்துடன் தலையாட்டுகிறாள்.
“அவர்கிட்ட இருந்த ஒரே படம். திரும்ப அவர்கிட்ட வந்து சேர்ந்தது நல்ல விஷயம் தானே திலகா?“
“அதுவே கனவா நிஜமான்னு இருக்கு எனக்கு.“
தெரு திரும்புகிறார்கள். தூரத்தில் அவர்களது அடுக்ககம். எட்டு மாடிகள். இருளில் அடுக்ககத்தில் விளக்கெரிவது தெரிகிறது.
காலையில் ராமசாமி அலுவலகம் கிளம்புகிறான். கூடவே வெளியே வருகிறாள் திலகா. “என்ன திலகா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“நான் உங்களை நம்பறேன்“ என்கிறாள்.
“சந்தோஷம்.“
“ஆனால்…“
“ஆனால்னா நம்பலைன்னு அர்த்தம். நம்பாட்டியும் சந்தோஷம் தான். நீங்க இயல்பா இருங்க. அது போதும் எனக்கு. இன ஃபாக்ட்…“
“என்ன?“
“நானே ஒரு நல்ல மன நல மருத்துவரைப் போய்ப் பார்க்கலாம்னு நினைக்கிறேன்…“
“அது நல்லது தான். சரி. முக்கியமான கேள்வி…“
“ம்“
“எப்பிடி நீங்க பழைய காலத்துக்கு இங்கேயிருந்து போறீங்க?“
“அப்…ப்பா. இப்பதான் இதை நம்பி, என்கிட்ட இதைக் கேட்கறே. சொன்னால் நீ நம்ப மாட்டே.“
“நம்பறேன்.“
“ஆனால்…“ என அவன் சிரிக்கிறான்.
“ஒரு ஆனாலும் இல்லை.சொல்லுங்க.“
“இங்க வா… கிட்ட வா“ என அழைக்கிறான். “இந்த லிஃப்ட் வழியாதான்…“
“இது வழியாவா“
“ஆனால்…“
“வேணாம். சொல்லுங்க.“
“எனக்கு மாத்திரம் தான் அப்பிடி நடக்குது…“
“எப்பிடி?“
“இங்க வா இவளே… உள்ளே வா.“
திலகா வருகிறாள். “இதுல எததனை தளத்தின் பொத்தான் இருக்கு?“
“பூஜ்யம்ன்றது தரைத்தளம். ஒண்ணு லேர்ந்து எட்டுவரை. ஒன்பது பொத்தான்.“
“வேற யாருக்கும் அப்படித்தான் காட்டுது. எனக்கு மட்டும்… மைனஸ் 1 வந்தது. வருது.“
“இப்ப வர்லியே?“
“வர்ல.“
“ஏன்?“
“நீ கூட இருக்கியே…“
“அதுனால?“
“அதுனால வராது. இதை நானே தற்செயலா கண்டுபிடிச்சேன்…“
“எப்போ? எப்பிடி?“
“பக்கத்து விட்டு கணபதி சார் என்கூட ஒரு நாள் லிஃப்ட்ல வந்தார். அப்ப எனக்கு மைனஸ் 1 காட்டவில்லை.“
“ஆனால்…“
“நீ நம்ப வேணாம் இவளே. எனக்கு வேலக்கு நேரம் ஆச்சி. நான் கிளம்பறேன். நீ கூட வா.“ இருவருமாய்க் கீழே இறங்குகிறார்கள். பூ4யம் வர வெளியே வருகிறார்கள். அவன் போய் ஸ்கூட்டரை எடுக்கிறான்.
“இன்னிக்கு அலவலகத்துக்கு லீவு போடறாப்ல ஆகாதுடி“ என்கிறான்.
“சந்தோஷம்“ என்கிறாள் திலகா. “ஆனால்?“ என சிரித்தபடியே வண்டியைக் கிளப்பிப் போகிறான் ராமசாமி.
*

91 97899 87842

No comments:

Post a Comment