Friday, September 4, 2015

bulk chapters updated every tuesday / friday - அத், 1 முதல் 5 வரை

திரைப்பட வியூகத்தில்
ஒரு நாவல்

வசிகரப் பொய்கள்
அத்தியாயம் 1

காய்கறி மார்க்கெட் பரபரப்பாய் இருக்கிறது. வரிசையான கடைகள். வாகனங்கள், மனிதர்கள் வழியை அடைத்தபடி நடந்து போகிறார்கள். ஒரு சரக்கு வண்டி ஊடே கடக்கிறது. ஆ அள்ளு. பிஞ்சுக் கத்திரி. போனா வராது பொழுது விடிஞ்சா கிடைக்காது, என ஒரு வியாபாரக் குரல்.
“வணக்கம் சார். வாங்க வாங்க. உங்களைத் தான் எதிர்பார்த்திட்டிருந்தேன்…“ என்கிறான் கடைக்காரன். ராமசாமி புன்னகை செய்தபடியே கடையை நோக்கி வருகிறான். கூட மகன்.
“யாரு? உங்க பையனா? உன் பேர் என்னப்பா?“
“கோகுல்.“
கெட்டிக்காரப் பையன்… என்ன படிக்கறே?“
”மூணாங் கிளாஸ்.”
பேசியபடியே வெண்டைக்காயை நிறுத்து ராமசாமியின் கூடையில் போடுகிறான் கடைக்காரன். “உங்களுக்காகவே தனியா பொறுக்கி எடுத்து வெச்சிருந்தேன் சார்.“
“நான் நேத்தே உன் கனவுல வந்திட்டேன் போலருக்கு. யாரு ஏமாளி, தலைல கட்டலாம்னு நீ தேடிட்டு இருக்கியாக்கும்?“
கடைக்காரன் சிரிக்கிறான். “உங்க வேலையைக் குறைக்கலாம்னு தான். சார் தமாஷா பேசறீங்க. பேங்க் ஆபிசர் ஆச்சே. உங்களை ஏமாத்த முடியுமா? பல சோலிக்காரர் நீங்க. வந்தமா வாங்கினமா போனமான்னு இருக்க வேணாமா?. அதான்…“
“நாட்ல பாதிப்பேர், உங்களை ஏமாத்த முடியுமா?...ன்னு சொல்லியே… ஏமாத்திர்றாங்க.“
பையனுக்கு ஒரு கேரட் தருகிறான் கடைக்காரன். கடித்தபடியே கூட வரும் மகன். வீடு நோக்கித் திரும்புகிறார்கள். கடந்து போகும் ஒரு சைக்கிள், மணி அடித்து எச்சரிக்கிறது. நின்று கவனித்து பிறகு போகிறார்கள்.
தூரத்தில் இருந்தே அவர்களின் அடுக்ககம் தெரிகிறது. எட்டுமாடிக் குடியிருப்பு. முகப்புக்கு வந்து மின்தூக்கிப் பொத்தானை அழுத்திவிட்டுக் காத்திருக்கிறார்கள். ராமசாமியின் கூடையில் தொங்கியபடி கறிவேப்பிலை கொத்துமல்லி நீட்டித் தெரிகிறது. கூட அன்றைய நாளிதழ்.
மின்தூக்கி கதவு திறக்கிறது. பூஜ்யம் முதல் எட்டு வரை அதில் எண்கள் இரு வரிசைகளாகத் தெரிகின்றன. “அப்பா தூக்கி விடு. நான் அழுத்தறேன்.“ கோகுலை அவன் தூக்கி விடுகிறான். ஏழாவது மாடி பொத்தானை கோகுல் அழுத்துகிறான். மின்தூக்கி மேலே கிளம்புகிறது.
“ஏம்ப்பா அம்மா உன்னைத் திட்டிட்டே இருக்காங்க?“
“அது அவ சுபாவம்டா மகனே.“
“அம்மாகிட்ட திட்டு வாங்கறா மாதிரியே ஏம்ப்பா நீயும் நடந்துக்கறே?“ பெருமூச்சு விடுகிறான் ராமசாமி. “அது என் தலை எழுத்துடா மகனே.“
மின்தூக்கி நிற்க வெளியே வருகிறார்கள். பொது வழியில் பக்கத்து பிளாட்காரர். நடுத்தர வயது “என்ன, மார்க்கெட் போயிட்டு வராப்லியா?“
வீட்டுக்குள்ளே இருந்து சிகாமணி வருகிறான். ராமசாமியின் மனைவி திலகாவின் தம்பி. “எப்பிடி சார் கரெக்டா கண்டுபிடிச்சீங்க? சூப்பர் சார் நீங்க“ என ஆச்சர்யம் போலக் கேட்டு கேலி செய்கிறான். ராமசாமியின் கையில் இருந்த கூடையை வாங்கிக் கொள்கிறான். அதை அக்காவிடம் தந்துவிட்டு நாளிதழின் சினிமா விளம்பரப் பக்கத்தைப் பார்க்கிறான் சிகாமணி.
“இந்தக் கரிசனத்துக்கெல்லாம் குறைச்சல் இல்லை. சும்மா சினிமாக்கதை எழுதறேன், டைரக்சன் பண்ணப் போறேன்னு வெட்டியாப் பொழுது போக்கறதுக்கு, ஏண்டா, காலைல இந்த மாதிரி உதவியெல்லாம் நீ செய்யலாம் இல்லே?”
“எங்க தலைவர் அப்துல் ரகுமான் சொல்லியிருக்கிறார்…“
“யாரு?“
“கவிஞர்.“
சொல்லு. என்ன சொல்லியிருக்கிறார்?“
“சிற்பிகள் அம்மி கொத்தக் கூடாது.“
“அட அது. சினிமாவுக்கு நான் வர மாட்டேன்னு அவர் சொன்னதுடா… நீ வீட்டு வேலைக்கு உதவி செய்டான்னா கதை விடறே?“
“அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறமா பாத்துக்கலாம்…“ என்றபடியே உள்ளே போகிறான் சிகாமணி. “இன்னிக்குப் புதுசா ஒரு கதை யோசிச்சேன் அத்தான். இதுவரை யாருமே பண்ணாத சப்ஜெக்ட்“
“அவ்வளவு மோசமாவா யோசிச்சே? உனக்கு அதுக்கெல்லாம் காலைல நேரம் இருக்கு. எங்களுக்கு இல்லியே?“ என்றபடி சட்டையைக் கழற்றுகிறான் ராமசாமி. முதுகுக்குப் பின்னால் இருந்து குரல். திலகா காய்கறிக் கூடையை சோதிக்கிறாள். “இன்னிக்கும் வெண்டைக்காய் தானா? இது தவிர உங்களுக்கு வேற காயே தெரியாதா?“
ராமசாமி திரும்பாமல், “வெண்டைக்காய் அத்தனையும் மூளைடி“ என்கிறான். “மண்ணாங்கட்டி“ என்று முணுமுணுக்கிறாள் திலகா. மகன் கோகுல் அப்பாவைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். “அத்தனையும் முத்தல். உங்களை நல்லா ஏமாத்தி யிருக்கிறான் கடைக்காரன். தனியா உங்களுக்காகவே எடுத்து வெச்சிருக்கான் போலருக்கு…“ கோகுல் சிரித்தல். “அத்தனையும் உங்களுக்கே போடறேன். அப்பவாவது மூளை வேலை செய்யுதான்னு பாப்பம்.“
“இப்படி ஆட்கள் தான் அக்கா திடுதிப்னு எதாவது சாதிப்பார்கள்…“ என்கிறான் சிகாமணி. திரும்பி ராமசாமியைப் பார்த்து, “அத்தான் ஒரு நூறு ரூபா கொடுத்திட்டுப் போங்க.“
”நூறு ரூபாயா? எதுக்கு?“
“திருப்பித் தந்திருவேன் அத்தான். கவலைப் படாதீங்க…“
“நல்லாத் தந்தே போ. என்ன செலவுடா உனக்கு?“
“ரோஜா புரொடக்சன்ஸ்ல புதுப்படம் ஆரம்பிக்கறாங்க. போயி உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்கலாம்னு பார்க்கிறேன்.“
“உங்க அக்காவை எனக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்தப்ப, கூட உன்னையும் அனுப்பி வெச்சிட்டார் உங்க அப்பா. கட்டுச்சாதத்து கூட பெருச்சாளியையும் அனுப்பி வெச்சா மாதிரி. அன்னிலேர்ந்து நீயும் கம்பெனி கம்பெனியா சினிமா சான்ஸ் கேட்டு அலையறே…“
“தடைக் கற்கள் எனக்கு படிக் கற்கள். எனக்கு ஒரு காலம் வரும் அத்தான். அப்ப எல்லாருமே மூக்குல விரல் வைக்கப் போறீங்க…“
“அதுக்கு ஒரு காலம் வரணும்ன்றது இல்லை. சளி பிடிச்சாலே எல்லாரும் மூக்குல வெரல் வைப்பான்…“
சாப்பாட்டு மேசை. வங்கிக்குக் கிளம்பத் தயார் உடையில் ராமசாமி. சட்டை பட்டன் போட்டுக் கொண்டபடி மேசைக்கு வருகிறான். கண்ணாடியில் தன் அழகைப் பார்த்தபடி சிகாமணி. இருவரும் சாப்பிட உட்கார்கிறார்கள். இருவருக்கும் தட்டில் இட்லி பரிமாறுகிறாள் திலகா.
“இந்த முறை எப்பிடியும் கம்பெனியில் சேர்ந்துருவேன் அத்தான். அதுக்காகவே அவங்க கிட்ட சொல்ல ஒரு புது சீன் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். சொல்லவா?“
“வேணாம்.“
“ரொம்பப் புதுசா இருக்கும் அத்தான். கேட்டுப்பாருங்க…“ அவன் கேட்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்கிறான். “ஒரு காதலன் காதலி அத்தான்.“
“ரொம்பப் புதுசா இருக்கே?“
“கேளுங்க. கடற்கரைல சந்திக்கறாங்க…“
“இது அதைவிடப் புதுசு.“
“‘அப்ப ஒரு முறுக்கு விற்கிற பையன் பக்கத்தில் வருகிறான். அவளோ எனக்கு சுண்டல்தான் வேணும்னுர்றா. ஒரு படத்தில் ரஜினி கிட்ட மீனா பட்டாம்பூச்சியைப் பிடிச்சித் தான்னு கேப்பா இல்லியா?“
“பட்டாம்பூச்சியை சுண்டலா ஆக்கிட்டியா?“
“அது பெரிய படம் அத்தான். இது லோ பட்ஜெட் இல்லியா? கேளுங்க. சஸ்பென்ஸ் என்னாலயே தாள முடியல்ல. இப்பதான் டிவிஸ்ட். காதலன் சுண்டல் விற்கிற ஆளைத் தேடி இருட்டில் போகிறான். போறானா…?“
“தொட்டுக்க சுண்டல்… ச்சீ மிளகாய்ப் பொடி போடவா?“ என இடைமறிக்கும் திலகா.
“காதலன் திரும்பி வர்றான், அப்பதான் டிவிஸ்ட்…“
“என்னாச்சி?“
“இருட்டுல… காதலி பக்கத்துல… ஹி ஹி வேற யாரோ உட்கார்ந்திருக்கிறான்… எப்பிடி?“ என சிரிக்கிறான் சிகாமணி,
“இனிமே இவன் கூட எனக்குத் தட்டு வைக்காதே“ என ராமசாமி எழுந்து போகிறான். சிகாமணி முகம் மாறி அவனையே பார்க்கிறான்.
அலுவலகத்துக்கு நேரமாகி விட்டது. மதிய உணவு. கைக்குட்டை. பர்ஸ் எல்லாம் மனைவியிடம் இருந்து வாங்கிக் கொண்டு கிளம்புகிறான். “என்ன பண்ணினாலும் கிளம்ப லேட் ஆயிருது. உன் தம்பி என் வாழ்க்கைலயே பெரிய டிவிஸ்ட்டுடி“ என பரபரப்புடன் வெளியே போகிறான் ராமசாமி.
மின்தூக்கிக்குக் காத்திருக்கும் ராமசாமி. உள்ளே சிகாமணியும், திலகாவும். வெளியே குரல்.. பக்கத்து வீட்டுக்காரர். “என்ன ஆபிசுக்கா?“ சிகாமணி உள்ளறையில் அக்காவிடம், “நம்ம பக்கத்து வீட்டுக்காரருக்கு அபார மூளைக்கா… எப்பிடி ஒவ்வொண்ணையும் சரியாச் சொல்றார் பாரு.“
மின்தூக்கி. எட்டு முதல் பூஜ்யம் வரை எண்கள். பூஜ்யத்தை அழுத்துதல். நேரமாகிவிட்ட பதட்டத்துடன் பார்க்கிங் பக்கம் வேகமாகப் போகிறான். ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்புகிறான். கிளம்ப மறுக்கிறது. உர்ர்ரென்று நின்று விடுகிறது. எரிச்சலுடன் அதை விட்டுவிட்டு வெளியே பரபரப்பாகப் போகிறான்.
வங்கி. மின் விசிறி சுழல்கிறது. அதன் பின்பக்கமாக கடிகாரம். மணி ஒன்பதே முக்கால். வங்கி மேலாளர் அறை. அங்கேதான் வருகைப் பதிவேடு. அவசர அவசரமாய் உள்ளே நுழைகிறான். மேலாளர் மேசையில் அவர் பெயர் கே. ராமகிருஷ்ணன் என எழுதிய பலகை. மேலாளர் கோபமாக அவனைப் பார்க்கிறார். தன் கைக்கடிகாரத்தை அவனைப் பார்க்கக் காட்டுகிறார். “இப்ப மணி என்னய்யா?“
“எட்டரை.“
“என்னய்யா உளர்றே?“
“உங்க கடிகாரம் ஓடல்ல சார்.“ தன் கடிகாரத்தைப் பார்க்கிறார். “ஓ.“ அவனைத் திரும்பப் பார்க்கிறார். “ஏன் லேட்டு?“
“என் கடிகாரமும் ஓடல்ல சார்.“
“அடிக்கடி லேட்டா வர்றே நீ?“
“கடிகாரத்தை மாத்திர்றேன் சார்.“
“இல்லாட்டி, நான் உன்னையே வேறு ஆபிசுக்கு மாத்திருவேன்.“
“சாரி சார். தேங்ஸ் சார்.“ வெளியே வருகிறான். முதுகுக்குப் பின் மேலாளர், “லாக்கர் திறக்க நிறையப் பேர் காத்திட்டிருக்காங்க. என்னன்னு பாரு“ என்கிறார். “இதோ உடனே பாத்திர்லாம் சார்…“ என அவன் குரல் மாத்திரம் அறைக்கு வெளியே கேட்கிறது.
தன் இருக்கைக்குத் திரும்பும்போது பக்கத்து இருக்கை ரமேஷ் புன்னகை செய்கிறான். “என்ன, மேனேஜர் நல்லா டோஸ் விட்டாரா?“ என்று கேட்கிறான். “அந்த அளவுக்குக் கூட அவர் கோபப் படாட்டி அவர் தலைல மொளகா அரைச்சிருவாங்க. இவரு எவ்வளவோ பரவால்ல. இவருக்கு முந்தி இருந்தாரே கிருஷ்ணராஜ். அந்தாள் மகா லொள்ளு.“
“குலைச்சிட்டே இருப்பார்.“
“நாய்ப் பிறவி. அவர்கிட்ட யாருமே நல்ல பேர் வாங்க முடியாது.“
காத்திருக்கிற நபரிடம் ஒரு லெட்ஜரை நீட்டி, “லாக்கர்ல எதும் எடுக்கணுமா?“ என்று விசாரிக்கிறான்.
“ஆமா சார்.“
“இதுல கையெழுத்துப் போடுங்க…“
அவர் குனிந்து கையெழுத்து போடுகிறார். “இவ்ள லேட்டா வரீங்களே? அரை மணியா காத்திருக்கிறேன்“ என வாடிக்கையாளர் குறைப்படுகிறார்.
“எட்டரை டு பத்து ராகு காலம். அதன்பிறகு லாக்கரைத் திறந்தா உங்களுக்கு தான் சார் நல்லது.“
வாடிக்கையாளர் ஆச்சர்யமாய் “அப்படியா நல்லதாப் போச்சு“ என்கிறார். “இப்ப நான் திறக்கலாமா?“
“நான்  வந்திட்டாலே உங்களுக்கு நல்ல காலம் தான். வாங்க.“ இருவருமாக லாக்கர்கள் இருக்கும் அறைக்குப் போகிறார்கள். போகிற வழியில் பெரிய அம்பேத்கார் படம். எப்பவோ அவருக்குப் போட்ட மாலை சருகாய் ஆடுகிறது. தூரத்தில் இருந்தே அவருக்கு லாக்கரை ‘தன்-சாவி‘யால் பாதி திறந்து விடுவது தெரிகிறது. இனி அவரது சாவியால் மீதி திறக்க வேண்டும்.
அவரைத் தனியே விட்டுவிட்டு வெளியே வருகிறான் ராமசாமி.
குடி நீர் கேன் போட்டுவிட்டுப் போகிறான் பையன் ஒருவன்.
வேலை செய்தபடியே பணம் கொடுக்கும் கவுன்ட்டர் பக்கம் காத்திருக்கும் நபர்களை நோட்டம் விடுகிறான் ராமசாமி. ஒரு பெண்மணி. அவளுடன் கூட கிட்டத்தட்ட ரெண்டு வயசுக் குழந்தை. பையன் அவளை “வாம்மா வீட்டுக்குப் போகலாம்…“ என தொந்தரவு செய்கிறான். “பேசாம வீட்டுல இருன்னா இருக்கியா? வரேன் வரேன்னு என்னோட கிளம்பறே. வெளியே வந்தால் வீட்டுக்குப் போலாம்னு பிடுங்கறே…“ என்கிறாள் அந்தப் பெண்.
பியூன் வந்து வேறொரு லெட்ஜரை ராமசாமி மேசையில் வைததுவிட்டுச் செல்கிறான். “ஒரு ஐந்நூறு ரூபாய் இருந்தா தாங்க சார். நாளைக்குத் தர்றேன்…“
“ஒரே நாள்ல என்ன ஐந்நூறு செலவு. அதையும் ஒரே நாள்ல எப்பிடி திருப்பித தருவே நீ?“ என்றபடியே சட்டைப் பையில் இருந்து எடுக்கிறான் ராமசாமி.
“தேங்ஸ் சார். தாத்தா…“
“தாத்தா செத்திட்டார்னு போன வாரம் லீவு போட்டியேடா நீ அநியாயமா நல்லா இருக்கற தாத்தாவை வம்புக்கு இழுக்காதே.“
பியூன் சிரித்தபடி போகிறான்.
வாடிக்கையாளர்களில் ஒருவர். “சார் இந்த சலான் நிரப்பித் தரீங்களா?“
“வாங்க“ என நிரப்பித் தருகிறான்.
“ஐய இதைவிட என் கையெழுத்தே தேவலை. நானே எழுதியிருப்பேன் சார்“ என அவன் வாங்கிப் போகிறான்.
“தேவைதான். உதவி செஞ்சதுக்கு எப்பிடிச் சொல்லிட்டுப் போறார் பாருப்பா“ என்கிறான் ராமசாமி நண்பன் ரமேஷிடம்.
“உன் கையெழுத்து, நீ போடற நம்பர் எதுவுமே யாருக்குமே விளங்கல்லியேப்பா… ஆனால் கையெழுத்து நல்லா இல்லாதவங்களுக்கு எல்லாம் தலை எழுத்து நல்லா இருக்கும்னு சொல்வாங்க.“
“அதுவேற. அது யாரோ கையெழுத்து நல்லா இல்லாதவன் தனக்குத் தானே ஆறுதலுக்குக் கட்டிவிட்ட கதைடா. பொழுது போயி பொழுது வந்தால் மாற்றமே இல்லாத வாழ்க்கை தான் தெரியுது. கம்யூனிஸ்டுகள் கிட்ட கேளு. மாறும் என்பது தவிர எல்லாமே மாறும்பாங்க…“
“ஆனா கொண்ட கொள்கையை விட்டு கம்யூனிஸ்டுகள் மாறவே மாட்டாங்க“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
லாக்கர் அறைக்குப் போனவர் திரும்பி வருகிறார். “ஒரு கல்யாணம். அதான் நகை தேவைப்படுது என் மனைவிக்கு…“ என்கிறார்.
“திரும்பி வந்த நேரத்தைப் பதிவு செய்துட்டுப் போங்க…“
வந்து குனிந்து கையெழுத்து - நேரம் இடுகிறார். “தேங்ஸ் சார்.“
“வெல்கம்.“
அவர் போனதும், ராமசாமி ரமேஷிடம், “போற ஆளைப் பார்த்து வெல்- come னு சொல்றது சரியாப் படல்ல. வெல்- go னு சொல்லலாமா?“
“இந்த ஆட்டத்துக்கு நான் வரல்ல“ என்கிறான் ரமேஷ்.
*
வீட்டில் இருந்து ராமசாமிக்கு அலைபேசி அழைப்பு. இவ வேற, திடீர்னு அவளுக்கு நான் ஆபிஸ்ல தான் இருக்கேனான்னு அடிக்கடி சந்தேகம் வந்துரும்… என்று சொல்லியபடியே எடுக்கிறான்.
எதிரே வாடிக்கையாளர், “யார் சார் உங்க மனைவியா?“ என ஆவலாய் விசாரிக்கிறார். கடுப்புடன் எழுந்து போகிறான். “என்ன விஷயம் திலகா?“
“வரும்போது மறக்காமல் காபிப் பொடி வாங்கிட்டு வாங்க.“
“மறக்காம அதான் நீ ஆபிஸ் நேரத்தில் போன் பண்ணணுமா? என்னை ஆபிஸ்ல எல்லாரும் கேலி பண்றாங்க.“
“என்னன்னு?“
“அவரு எல்லாமே அந்தம்மா சொன்னாதான் செய்வாருன்னு…“
“சொன்னாக் கூட நீங்க செய்யறது இல்லை. உங்களுக்கு எதுக்கும் நேரம் இல்லை. ஆனால் என் கூட சண்டை போட மாத்திரம் நேரம் இருக்கு. நான் வெச்சிர்றேன்.“
அழைப்பு துண்டிக்கப் படுகிறது. எப்பவுமே சட்னு எதாவது சொல்லிட்டு வெச்சிர்றா இவ… என்றபடி தன் இருக்கைக்குத் திரும்புகிறான். எதிரில் இன்னும் அந்த வாடிக்கையாளர். அவர் எதோ சொல்ல வருமுன் அவருக்கு அழைப்பு. அவனைப் பார்த்துவிட்டு, “இது என் ஒய்ஃப் சார்“ என எழுந்து போகிறார்.
மாலை வீடு திரும்புதல். வழியில் ஒரு ஆட்டோமொபைல் மெக்கானிக் கடை. “ரமணி. வண்டில எதோ கோளாறு. காலைல கிளம்பாமல் படுத்தி விட்டது. வந்து எடுத்திட்டுப் போறியா?“
“பையனை அனுப்பறேன் சார்.“
வீடு திரும்புகிறான். மின்தூக்கி. பூஜ்யம் முதல் எட்டு வரை பொத்தான்கள். மாடி யேறுதல். வெளியே வருகிறான். பக்கத்து அடுக்ககக்காரர் வெளியே காத்திருக்கிறார். சிகாமணி அதே சமயம் இவர்கள் வீட்டில் இருந்து வெளியே வருகிறான். சிகாமணி அவரிடம், “ஆமாம். ஆபிஸ் விட்டுத்தான் வர்றாரு“ என்கிறான். அவர் சிரித்தல். “தம்பி ரொம்ப புத்திசாலி“ என்கிறார்.
உள்ளே நுழைந்ததுமே பையை வாங்கிப் பார்க்கிறாள் திலகா.
“என்ன பார்க்கறே?“
“காபிப்பொடி…“
“மறந்திட்டது“ என அசடு வழிகிறான். “கிளம்பும்போதே வண்டி ரிப்பேர். மெக்கானிக் கடைல எடுத்துட்டுப் போகச் சொல்ல ஞாபகம் இருந்தது. இது… விட்டுட்டது.“
“சொன்னால் கோபம் மட்டும் வருது.“
“சரி. ரொம்ப டயர்டா இருக்கு. காப்பி போடு…“ என்று சொல்ல வந்தவன், சமாளித்து “வேணடாம். இட்ஸ் ஆல்ரைட்“ என்கிறான்.
“இட்ஸ் ஆல் ராங்“ என்கிறாள் திலகா.
வீடு. இரவு. வாயில் சோறு வாங்கிக் கொண்டே மகன் கோகுல் வீட்டுப் பாடம் எழுதுகிறான். டி.வி.யில் ஜெயலலிதா என்னவோ பேசுகிறார். சிகாமணி என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறான்.
ராமசாமி எப்பவுமே அன்றைய நாளின் முடிவில் டைரி எழுதும் பழக்கம் உள்ளவன். போய் தன் டைரியை எடுத்து வந்து மேசையில், சிகாமணி அருகே அமர்கிறான்.
பின்னால் அவன் மனைவியின் குரல். “ரொம்ப முக்கியமா எதும் நடந்தால் டைரி எழுதலாம். அப்படி தினசரி எழுத என்ன இருக்கு?“ என்றபடி ஒருவாய் கோகுலுக்கு ஊட்டுகிறாள்.
“அது ஒரு பழக்கம்டி. இன்றைய நாள் காலைலேர்ந்து ராத்திரி வரை எப்பிடிப் போச்சுன்னு திரும்பி ஒருதடவை யோசித்துப் பார்க்கறது நல்ல பழக்கம் இல்லியா?“
“அப்ப ஆபிஸ் விட்டு கிளம்பும்போது ஒரு நிமிஷம் யோசிச்சி காபிப் பொடி வாங்கிட்டு வந்திருக்கலாம் இல்லே?“ என பழிப்பு காட்டுகிறாள் திலகா.
“பாயின்ட்“என்கிறான் சிகாமணி. “அத்தான் உங்க கையெழுத்து தான் சரி கிடையாது. ஆனால் படம் ரொம்ப ஜோரா வரையறீங்க.“
“அப்பா, நீ வரைஞ்சு கொடுத்த பிராஜக்ட் சூப்பர்னு மிஸ் சொன்னாங்க.“
ராமசாமி திரும்பி கோகுலைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். அவன் பின்னால் சுவரில், அவன் மனைவி திலகாவை அவன் வரைந்த படம்.
அத்தியாயம் 2
ராமசாமி கண்ணாடி பார்த்து பவுடர் போட்டுக் கொண்டே பேசுகிறான். சிகாமணி என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறான். “நேத்து எதோ சினிமா கம்பெனிக்குப் போனியே என்னடா ஆச்சி?“
“செமத்தியா ஒரு காமெடி சொன்னேன். சே, அவங்களுக்கு ரசனையே இல்லை அத்தான்…“
“நீ காமெடியைச் சொல்லு. ரசனையை நாங்க பாத்துக்கறோம்…“
“ஒரு ஜவுளிக்கடை அத்தான். ஒண்ணு வாங்கினால் ஒண்ணு இலவசம்னு விளம்பரம் போட்டிருக்காங்க.“
“சரி.“
“நம்ம ஆள் போயி ஒண்ணை எடுக்கிறான். இதுக்கு எது இலவசம்?-னு கேட்கிறான். இதுன்னு ஒரு சட்டையைக் காட்டறாங்க. அதை முதல்ல எடுத்துக்கறான். பிறகு அதுக்கு இது இலவசம்னு சொல்லி ரெண்டையும் கேட்கிறான்… ஹி ஹி!”
“இதுவரை யாருமே யோசிக்காத காமெடி இல்லியா?“
“ஆமாம் அத்தான்.“
“போடா சனிக்குப் பொறந்தவனே. கரகாட்டக்காரன் காமெடியை உல்ட்டா பண்ணிட்டு கதை விடறே நீ.“
“அதான் அத்தான் சினிமா! கரகாட்டக்காரன் கதையே உல்ட்டான்றாங்க.“
“உன்கிட்ட விஷயம் இருக்கோ இல்லியோ. நல்லாப் பேசறே. மெக்கானிக் ரமணி வருவான். இல்லை ஆள் அனுப்புவான். ஸ்கூட்டர் ரிப்பர். என்னனு பார்க்கச் சொல்லு. வீட்லதானே இருப்பே?“
“இருப்பேன் அத்தான். இப்ப ஒரு கதை எழுதிட்டிருக்கேன். ஒரு திருவிழால அப்பா அம்மா குழந்தையைத் தொலைச்சிர்றாங்க. நல்லா விறுவிறுப்பா போயிட்டிருக்கு. ஒரு புது கிளைமாக்ஸ்…“
“இதுவரை சினிமா இன்டஸ்ட்ரியே பார்க்காதது… இல்லியா?“
“எப்பிடி அத்தான் கரெக்டா சொல்றீங்க?“
“உன் கதை எல்லாமே அப்பிடித்தானே? நீ அப்பிடித்தானே சொல்றே? இனியும் அதை இன்டஸ்ட்ரி பாக்காம இருந்தால், இன்டஸ்ட்ரிக்கு நல்லது…“ என கிளம்புகிறான்.
“இப்ப கரெக்டா பக்கத்து வீட்டு கணபதி வாசலுக்கு வந்து, என்ன ஆபிஸ் கிளம்பியாச்சா?...ன்னு கேப்பார் பாருங்க“ என்று சிகாமணி சிரிக்கிறான்.
“பாவம்டா அவரு. நல்ல மனுசன். நம்ம பிளாட்டுக்கு வர்றதுக்கு முன்னால, மூணு நாலு வருஷம் முந்தின்னு வெய்யி… அவரும் அவர் சம்சாரமும் கடற்கரைக்குப் போயிருந்தப்ப… அந்தக் கூட்டத்தில்… அவங்க குழந்தை தொலைஞ்சி போச்சு. “
“ஐயோ. நம்ம கதையை ஏற்கனவே யாரோ வாழ்க்கைல காப்பி அடிச்சாப் போல இருக்கே. குழந்தையோட பீச்சுக்குப் போயிட்டு, கவலையோட திரும்பி வந்தாங்களா?“
“அந்த துக்கத்துலேர்ந்து அவங்க ரெண்டு பேரும் அதைத் தாண்டி வந்ததே பெரிய விஷயம். அந்தம்மா பாவம் ரொம்ப நொந்து போயி, அதுலேர்ந்து யாரிட்டயும் சரியா பேசறது கிடையாது. அவர் வேற மாதிரி ஆயிட்டாரு. யார்கூடயாவது அவருக்கு எதாவது பேசிட்டே இருக்கணும்னு அவர் ஆசைப்படறாரு. அதுக்காக நீ அவர்கிட்ட போயி உன் சினிமாக் கதையெல்லாம் எடுத்து விட்றாதே. அப்பறம் அவருக்குப் பேசற ஆசையே போயிரும்…“
“ஆனால் இந்த சிச்சுவேஷனே அருமை அத்தான். கடற்கரை. கூட்டம். ஒரு தம்பதி. குழந்தை தொலைந்து போகிறது. ஆண் குழந்தையா பெண் குழந்தையா அத்தான்?“
“பொண்ணு.“
“அப்பதான் நல்லா இருக்கும். வீட்ல வந்து படுத்திருக்காங்க. அம்மான்னு குழந்தை கூப்பிடறாப்ல ஒரு குரல். விறுவிறுன்னு அவள் எழுந்து ஓடோடிவந்து கதவைத் திறந்து பார்க்கறாங்க. வாசல்ல யாருமே இல்லை. வயலின் பிழிஞ்சிர்றேன் அத்தான். பி. சுசிலா பாட்டு ஒண்ணு கூட வைக்கலாம். கண்ணே கண்மணியே என் உயிருக்கு நெல்மணியே… எப்பிடி அத்தான்? “
“தாகூர் குழந்தைகளைப் பத்தி அருமையாச் சொல்லியருக்கார்டா.“
“யாரு?“
“ரவிந்தரநாத் தாகூர். குழந்தையைத் தூக்கிக் கொண்டால் கை வலிக்கிறது. இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது.“
“சூப்பர்.“
“இப்ப நீ எழுதிட்டிருந்த கதையும் குழந்தை தொலைஞ்சி போற கதையா?“
“அது வேற கதை. அதுல இப்படி குழந்தை காணாமல் போன ஒருத்தர்… அந்த ஷாக்ல கோமாவுல படுத்திர்றாரு…“
“ஐயோ.“
“அப்பதான் கதைல நல்ல ஈர்ப்பு கிடைக்கும் அத்தான்.“
“ஒருத்தர் கோமாவுல படுத்திருக்கார். அப்ப அவர்மனைவி காணாமல் போயிர்றா. உடனே அவர் கோமாவுல இருந்து எழுந்து உட்கார்ந்துட்டார், அப்டின்னு எழுதுடா. புதுசா இருக்கும்…“ என்கிறான் ராமசாமி. “உங்க அக்கா கோவிலுக்குப் போயிருக்கா. சாமியை பயமுறுத்தாமல் இருக்கணும். கதவைச் சாத்திக்க. மெக்கானிக் வருவான். அவனை கவனி….“ என்றபடியே கிளம்புகிறான் ராமசாமி.
அப்புறம்தான் அந்த ஆச்சர்யமான விஷயம் நடக்கிறது.
ராமசாமி வெளியே வருகிறான். பக்கத்து பிளாட்காரர் வெளியே இல்லை. தாண்டிப் போகிறான். அவர் வீட்டு வாசலில் அன்றைய நாளிதழ். போடப்பட்டு எடுக்கப் படாமல் கிடக்கிறது. எடுத்து கதவு அளி வழியாக உள்ளே போட்டுவிட்டு மின்தூக்கிக்கு வருகிறான்.
உள்ளே போய் நின்று பொத்தான்களைப் பார்க்கிறான் ராமசாமி. பூஜ்யம் முதல் எட்டுவரை காட்டும் மின்தூக்கி. அதில் புதிதாய் இப்போது ‘மைனஸ் 1‘ காட்டுகிறது!
மைனஸ் 1. அதிர்ச்சி அடைகிறான் ராமசாமி. அவன் தலையில் திடீரென்று பல்பு ஒன்று எரிகிறது. கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி, நட்சத்திரங்கள் தெறிக்கின்றன. கண்ணை ஒருமுறை உருட்டிப் பார்க்கிறான்.
சந்தேகமே இல்லை. மைனஸ் 1 காட்டுகிறது பொத்தான்.
உடல் நடுங்குகிறது. மைனஸ் 1 எண்ணைத் தொடப் போகிறான். பயமாய் இருக்கிறது. கை உதறுகிறது. திரும்ப பூஜ்யத்துக்கு நகரும் கை. சட்டென என்ன தோன்றியதோ, மைனஸ் 1 பொத்தானை அழுத்துகிறான்.
லிஃப்ட் இறங்குகிறது. மைனஸ் 1 தளத்தில் அவனை வெளியே விட்டுவிடுகிறது. ஒரு குகைவழி போன்ற இருட்டான இடம். பதறிப்போய் அவன் திரும்ப லிஃப்ட்டைப் பார்க்கிறான். லிஃப்ட் அங்கே இல்லை. லிஃப்ட் பொத்தானை அழுத்த தேடுகிறான். ஒரே இருட்டாய்க் கிடக்கிறது.
ஹலோ… என இருளில் கத்துகிறான். ஹலோ, யாராவது இருக்கீங்களா?
பதில் இல்லை. ஹலோ நான் எங்க இருக்கேன்? அதற்கும் பதில் இல்லாத மௌனம்.
ஹ்ம். எனக்கு நானேதான் பதில் சொல்லிக்கணும் போலருக்கே.
அந்த இருளில் கண்ணால்தேடி கையால் துழாவிப் பார்க்கிறான். தூரத்தில் வெளிச்சம் புள்ளிபோல் தெரிகிறது. மெல்ல அதை நோக்கித் தடுமாறிப் போகிறான். கிட்டே போகப் போக வெளிச்சம் பிரகாசம் அடைகிறது.
அது ஒரு சந்துக்குக் கொண்டு விடுகிறது. அத்தோடு பிரதான சாலைக்கு வருகிறான். அவ்ளதான்… என தலையை உதறிக் கொள்கிறான். ஊர் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தாண்டிப் போகையில் பிளாட்பார மரத்தடியில் சோசியக்காரன் ஒருவன். சந்தனம் குங்குமம் பூசிய அமர்க்களமான முகம். உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்… என அவன் எதிரே பலகை. இவன் பார்ப்பதைப் பார்த்ததும், புன்னகை செய்கிறான் அவன். “சோசியம் பார்க்கறீங்களா சார்?“
புன்னகையுடன் அவனைத் தாண்டிப் போகிறான் ராமசாமி. திரும்ப தான் வந்த சந்தை ஒருமுறை பார்க்கிறான். அதிலேயே திரும்பிப் போனால் என்ன, என யோசிக்கிறான். கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறான். தலையை உதறி மறுத்துக் கொள்கிறான். திரும்பி சாலையில் நடக்கிறான். டவுண் பஸ் வருகிறது.
கண்டக்டர் 4,50 டிக்கெட் தருகிறான். அவனுக்கு ஆச்சர்யமாய் இருக்கிறது. 50 பைசா வழக்கொழிந்து கொள்ளைக்காலம் ஆகிறதே. அதைவிட ஆச்சர்யம், டிக்கெட் விலையும் குறைவு.
“பசார் தெருவுக்கு டிக்கெட் சார். கம்மியான டிக்கெட் குடுத்திருக்கீங்க“ என திரும்பவும் கண்டக்டரிம் கேட்கிறான். “அதுக்குதான் டிக்கெட் குடுத்திருக்கிறேன்“ என்கிறான் கண்டக்டர். திரும்ப மீதி சில்லரை 50 காசைத் தந்துவிட்டுப் போகிறான்.
ராமசாமி அவனை ஆச்சர்யமாய்ப் பார்க்கிறான்.
வங்கிக்கு வருகிறான் ராமசாமி. அங்கே அவனுக்கு முதல் அதிர்ச்சி. வாசலில் செக்யூரிட்டியைப் பார்க்கிறான். அவன் இறந்து போனவன். எப்படி இப்போது உயிரோடு வந்தான்?
“வணக்கம் சார்.“
“ஏம்ப்பா நீ எப்பிடி உயிரோட வந்தே?“
“என்ன சார்?“
“ஒண்ணில்ல. தீர்க்காயுசா இருப்பா“ என்றபடி உள்ளே போகிறான்.
உள்ளே பழைய மேனேஜர் இருக்கிறார். அவர் மேசையில் பெயர்ப் பலகை. எஸ். கிருஷ்ணராஜ். “என்ன சார் திரும்ப டிரான்ஸ்ஃபர்ல வந்திட்டீங்களா?“ என்று கேட்கிறான்.
“நான் இங்கியே தான் இருக்கேன். நீதான்  டிரான்ஸ்ஃபர்ல போகப் போறே…“
“ஒருநாளைப் போல லேட்டா வரே?“
“இன்னிக்கு எனக்கு என்னவோ எல்லாமே சரியா இலலை சார்.“
“உன்னால எங்களுக்கு தான் எல்லாமே தப்பா ஆகுது. இங்க பாரு, மூணும் எட்டும் ஒரே மாதிரி எழுதறே நீ. நேத்து டே புக் டேலி ஆகாமல் ஒருமணி நேரம் மண்டைய உடைச்சிட்டிருந்தோம்.“
“சாரி சார். டாக்டர் செலவை வேணா நான் குடுத்திர்றேன்…“
“எதுக்கு?“
“என்னாலதானே உங்க மண்டை உடைஞ்சது.“
“ஜோக்கா?“
“சாரி சார்.“
“மாணவர்களுக்கு நம்ம வங்கி கல்விக்கடன் கொடுத்திருக்கு இல்லியா? அதோட ஸ்டேட்மென்ட் கேட்டாங்களே. ரெடி பண்ணிட்டியா?“
“இதோ பாத்திர்றேன் சார்.“ என வெளியே வருகிறான்.
வழியில் ஒருவர் நிற்கிறார். “என்ன வேணும்?“
“மேனேஜரைப் பார்க்கணும் சார்.“
“என்ன விஷயம்?“
“ஒரு லோன் விஷயமா…“
“போய்ப் பாருங்க.“
“அவர் நல்ல மூடுல இருக்காரா சார்?“
“அவரை நல்ல மூடுல நீங்க என்ன, நாங்களே பார்க்க முடியாது. போய்ப் பாருங்க.“
ராமசாமி தன் இருக்கைக்குப் போகிறான். அவன் நண்பன் ரமேஷ் வருகிறான். “என்னடா ஆச்சி உனக்கு?“
“இன்னிக்கு நடக்கிறது ஒண்ணுமே புரியலடா எனக்கு.“
“ஏன்?“
அப்போது அங்கே அலுவலகத்தில் கூட வேலை செய்யும் ராதிகா வருகிறாள். அவளும் இங்கேயிருந்து, திருமணமானபின் ஊர் மாற்றல் வாங்கிப் போனவள் தான்.
“என்ன சார் அப்பிடிப் பார்க்கறீங்க?“ என ராதிகா ஆச்சர்யப் படுகிறாள்.
“இல்ல. நீ கல்யாணம் ஆகி பெங்களூர் போகல்லியா?“
“என்னை சார் விளையாடறீங்க? எனக்கு செவ்வாய் தோஷ ஜாதகம்னு கல்யாணம் தள்ளிப் போயிட்டே இருக்கே சார்.“
“சனி வக்ர கதியில, அதாவது பின்னோக்கி சுத்துதா எனக்கு?“ என்கிறான் ராமசாமி.
ராதிகா போனதும் அப்படியே வேலை செய்யாமல் குழப்பமாய் உட்கார்கிறான். தனக்குள்ளே, இங்க நடக்கிறதையெல்லாம் பார்க்கிற போது, எனக்கே கல்யாணம் ஆயிருச்சா இல்லையான்னு யாரையாவது கேட்கணும் போல இருக்கு…
அப்படியே தன் செல்ஃபோனை எடுத்து மனைவிக்குப் பேச முயல்கிறான். தொடர்பு எல்லைக்கு வெளியே. நாட் ரீச்சபிள், என்று வருகிறது. ஆகா, எத்தனை அருமையான நாள், என்று சத்தமாய்ச் சொல்கிறான்.
பக்கத்து இருக்கை ரமேஷ், “என்னடா இது? மொபைல் புதுசா இருக்கே? எப்ப வாங்கினே?“ என்கிறான்.
“இது என் மொபைலா என்னன்னே சந்தேகமா இருக்குடா…“
“என்ன சொல்றே நீ?“
“அது சரி. மேனேஜர் வேற மாணவர்களின் கல்விக்கடன் ஸ்டேட்மென்ட் எடுக்கச்சொல்றாரு. அந்த வேலையே புரியல.“
அப்போது வங்கியில் பணம் எடுக்க ஒரு பெண் வருகிறாள். வயிற்றுப் பிள்ளைக்காரி. ஆகா இவளை நேற்று பார்த்திருக்கிறேன், என சட்டென நினைவு வருகிறது.
“டேய் ரமேஷ் இவளை நான் நேத்து நம்ம பாங்க்ல பாத்தேன்.“
“அதுக்கென்ன?“
“அதுல ஒரு விசேஷம் உண்டு.“
“என்ன?“
“நேத்து இவ இவள்பையன் கூட வந்திருந்நதாள்.“
“இவளா? சான்ஸே இல்லை.“
“ஏன்?“
“இவ முழுகாமல் இருக்காளே. ஒருவேளை வேற குழந்தையோட வந்திருப்பாளோ?“
“நேத்து இவள் இப்படி வயித்தைத் தள்ளிக்கிட்டு வரல்லியே…“ என்கிறான் ராமசாமி. சட்டென யோசனை வந்தா மாதிரி கேட்கிறான். “ரமேஷ் இன்னிக்கு என்ன தேதி?“
“பதினஞ்சு.“
“சரிதான்.“
“மாதம்?“
“மே.“
“அதுவும் சரிதான்…“
ரமேஷ் எழுந்து போகிறான். அவனிடம் அவனைநிறுத்தி ராமசாமி கேட்கிறான். “வருஷம்?“
“அடச் சே. 2014. ஏண்டா?“
“இல்லடா இது 2016 ஆச்சே…“
“ச். நல்லாதானே இருந்தே நீ? இது 2014 தான்…“ என எழுந்து போகிறான்.
பியூன் ஒரு லெட்ஜரை எடுத்துக் கொண்டு வருகிறான். “நேத்து ஒரு ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கினியே ரத்தினம்?“
“நானா?“
“ஆமா.“
“உங்ககிட்டியா?“
“ஏன்?“
“நான் நேத்து வேலைக்கே வரல்லே சார்…“
“அப்பிடியா?“ என்றவன் நிறுத்தி, “இது எந்த வருஷம் ரத்தினம்?“ என்று கேட்கிறான். “2014 தான் சார். அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?“
அவனுக்கு ஆடுத்த இருக்கையில் ரமேஷ் மேசைத் தொலைபேசி ஒலிக்கிறது. ரமேஷ் எடுத்துப் பேசியபடி “ராமு உனக்குதான்…“ என அழைக்கிறான்.
மதுரையில் இருந்து அவன் மாமனார். “மாப்ளே எப்பிடி இருக்கீங்க?“
“சொல்லுங்க மாமா.“
“அதான் மாப்ளே, திலகாவை ஊருக்கு அனுப்பிட்டு ஜாலியா இருந்தீங்களா ரெண்டு நாளா?“
“திலகாவா? மதுரைக்கு வந்திருக்காளா?“
”ஏம் மாப்ளே, நீங்கதான் வந்து ரயில் ஏத்திவிட்டதாச் சொன்னாளே? உங்களுக்குள்ள எதும் மனஸ்தாபமா மாப்ளே?“
“நீங்களா எதும் இடைல கலாட்டா பண்ணாமல் இருந்தா சரி மாமா.“ என அசடு வழிகிறான். “சரி. திலகா சௌக்கியமா?“ என்று கேட்கிறான்.
“இன்னிக்கு பாண்டியன்ல ஏத்தி விடறேன் மாப்ளே. நாளைக்குக் காலைல எக்மோர் வந்து அழைச்சிட்டுப் போங்க.“
“சரி“ என தொலைபேசியை வைக்கிறான்.
ஆமாம். இது 2014 தான், என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறான்.
மனசில் காட்சிகள், லிஃப்ட். மைனஸ் 1. இருள் வழி. எல்லாம் தெரிகிறது.
*
அத்தியாயம் 3
நேரே நடந்து கொண்டிருக்கும் ராமசாமி. சட்டென நின்ற இடத்தில் நிற்கிறாப் போலிருக்கிறது. பிறகு அப்படியே பின்நோக்கி நடந்து வருகிறாப் போல அவனுக்குத் தோன்றுகிறது. தலையை உதறிக் கொள்கிறான். உள்ளே யிருந்து மேனேஜரின் குரல். “என்னய்யா, கல்விக்கடன் லிஸ்ட் எடுத்திட்டியா இல்லியா?“
“இதோ பண்ணிர்றேன் சார்…“ மேசையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடிக்கிறான்.
“சீக்கிரம் பண்ணு. அதுக்கு வேற நாள் நட்சத்திரம் பாக்கிறியா?“
ரமேஷ் சிரிக்கிறான் வாயைத் துடைத்துக்கொண்டே அவனைப் பார்த்து. ராமசாமி “என்னடா?“ என்று கேட்கிறான். “நீ ரெண்டு வருஷம் முந்தின வேலையையே இப்பதான் பார்க்கிறே. அது அவருக்குத் தெரியாது. தெரிஞ்சால் உன் நிலைமை என்ன?“
“உனக்குக் கிண்டலா இருக்காடா?“
“சாரி. சாயந்தரம் பேசலாம் இவனே…“ என்கிறான் ரமேஷ்.
வேலை வேலை என்று ராமசாமி பரபரப்பாகிறான். அவன்பின்னே ஓடிக் கொண்டிருக்கும் மின்விசிறி சட்டென சுதாரித்தாப் போல முன்னைவிட வேகமாகச் சுழல்கிறது! படபடவென அவன்பின்னே இருக்கும் காலண்டர் தாள்கள் உயர்ந்தெழும்பிப் பறக்கின்றன. டோக்கன் செவன். ட்டூ. த்ரீ.. என காஷ் கவுண்டரில் இருந்து அழைப்பொலி. “ரத்தினம், கிளியரிங் செக் எதும் இருக்கா? பெட்டியில பாரு. நேரம் ஆச்சி. இனி யாரும் போட்டால் நாளைக்குதான்“… என ராதிகாவின் குரல். மானேஜர் அறையில் அவர் பார்க்கிற மாதிரி சிசிடிவி காமெரா. மேனேஜர் யாரோ கிளையன்ட்டிடம் சத்தமாகப் பேசுகிறார். “உங்க OD limit தாண்டிட்டது சார். மினிமம் பேலன்ஸ்சுக்கே இன்னும் ரெண்டு லட்சம் கட்டணும். ஒரு செக் வேற வந்திருக்கு. மூணு லட்சம் அரை மணியில கட்டிறணும் நீங்க. லேட் பேமென்ட்டுன்னால் பெனால்ட்டி வரும். செக்கும் பௌன்ஸ் ஆயிரும். அதுக்கு வேற ஃபைன் போட வேண்டியதா ஆயிரும் இல்ல? அப்பறமா வந்து நீங்க எங்களைக் குறை சொல்லக் கூடாது. Avoid unpleasantness.“
பியூன் ரத்தினம் மேனேஜர் அறைக்குள் வந்து தேநீர் வைத்துவிட்டுப் போகிறான். அது அப்படியே ஆவி யடங்கி ஆறி ஏடு படிகிறது.
மாலை நாலரை மணி. வங்கியே காலியாய்க் கிடக்கிறது. வாசல் ஷட்டர் பாதியளவு சாத்தியிருக்கிறது. ரமேஷ் வேலையை முடித்துவிட்டுக் காத்திருக்கிறான். அவனைப் பார்த்ததும் ராமசாமி அவனும் கூடவே கிளம்புகிறான். செக்யூரிட்டி கதவைத் தூக்கித் திறக்க வெளியே வருகிறார்கள்.
வாசலில் ஏ டி எம். யாரோ அதில் பணம் எடுக்க உள்ளே நுழைகிறார்கள். பரபரப்பாய் இருக்கிறது வெளி உலகம்.
“வேலையின்னா முடிவே இல்லாத வேலைடா நம்ம வேலை. யாராவது கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். நாம ஓடிட்டே இருக்கணும். போன ஜென்மத்துல குதிரையா பொறந்து பழகியவன் தான் பாங்க் வேலைல சமாளிக்க முடியும். என்ன சொல்றே?“
“ரமேஷ். நீ என் நல்ல நண்பன் தானே?“
“அதுல என்ன சந்தேகம்? வண்டி எடுத்திட்டு வரேன். உன்னை பஸ் ஸ்டாப்ல விட்டுறட்டுமா?“
 “நானும் கூட வரேன்.“ என வாகன ஸ்டாண்டு வரை ராமசாமி போகிறான். “எனக்கு மாத்திரம் இப்பிடி ஆயிட்டதா... என்னன்னே புரியல்லியேடா?“
“என்னது?“
“இன்னிக்கு உண்மையில் தேதி என்ன தெரியுமா?“
“அதான் நாம பேசிட்டமே ராமு. இங்க பாரு. சில சமயம் இப்பிடி, மனசில் வேற எதாவது அழுத்தம் இருந்தால், சின்ன அளவில் குழப்பம் வரும்… மூளை பிளாக் ஆயிரும்.
“எனக்கு மூளைல அப்பிடி பிளாக் ஆயிருக்குன்றியா?“
“நீ வேற. மூளை இருக்குன்றதே சந்தோஷமான விஷயம்டா. நாட்ல எனக்கு எல்லாம் மூளை இருக்குன்றதையே யாரும் நம்ப மாட்டேங்கறான்.““
“என் பிரச்னை என்னன்னால்… நாள், மாதம் அதே தான் இவனே. வருஷம் தான்.“
“இது 2016ன்னு நீ நினைக்கறே.“
“அதான் உண்மை. நிகழ்காலத்தில் இருந்து எப்பிடியோ நான்மாத்திரம் இறந்த காலத்துக்கு வந்திருக்கிறேன்.“
“தப்பு.“
“தப்பா?“
“ஆமாம். இது 2014 தான். நீ சொல்றது உண்மைன்னால்… நீ எதிர்காலத்தில் இருந்து நிகழ்காலத்துக்கு வந்திருக்கே. சரியா?“ என்றபடியே வண்டியை உதைத்துக் கிளப்புகிறான். “உட்காரு இவனே.“
அவனையே பார்க்கிறான் ராமசாமி. “ம். உன் கணக்கில் அது சரி.“ என்றபடி ஏறி உட்கார்ந்து கொள்கிறான். வண்டி தெருவில் போகிறது.
“ஒரு விஷயம்டா.“
“சொல்லு.“
“இதோ இந்த மொபைல். நேத்து – அதாவது உன் நாள்கணக்குப் படி நேத்து, என்கிட்ட இருந்ததா? நீயே இந்த மொபைல் புதுசான்னு கேட்டியா இல்லியா?“
“பாயிண்ட்…“ என்கிறான் ரமேஷ்.
“நான் வேணா உனக்கு என் வீட்டில் இருக்கிற ஃபோன் வாங்கின பில்லைக் கூட காட்டுவேன்…“
“ஹா ஹா“ என ரமேஷ் சிரிக்கிறான்.
“ஏண்டா சிரிக்கறே?“
“ஒரு வாதத்துக்கு நீ இப்பிடி வேற காலத்துல வந்து சேர்ந்துக்கிட்டதா வெச்சிக்குவோம்…“
“வாதம் இல்லை. அதான் உண்மை.“
“சரி சரி. அதுதான் உண்மைன்றது தான் உன்னோட வாதம். இப்ப திரும்ப நீ எப்பிடி உன் ‘அந்தக்‘ காலத்துக்குப் போகப் போறே?“
“ஹ்ம். அதுதான் பயம்மா இருக்கு. உண்மையில் நான் இருட்டில் இறக்கி விடப் பட்டதும் என் பயமே அதுதான். எக்கு தப்பா எங்காவது மாட்டிக்கிட்டமான்னு இருந்தது…“ என நிறுத்துகிறான். “இந்நேரம் என் பையன் பள்ளிக்கூடம் விட்டு வந்திருப்பான்.“
“இப்ப அவன் ஒண்ணாங் கிளாஸ் தானே?“
“அவன் மூணாங் கிளாஸ் படிக்கிறான். இப்ப நான் அவனைப் பார்க்கிற போது, அவன் மூணாங் கிளாசா ஒண்ணாங் கிளாசான்னே தெரியாது எனக்கு.“
அவனையே பார்க்கிறான் ரமேஷ். “இப்ப என்ன பண்ணப் போறே?“
“நீ என்னை நம்பறியா இல்லியா?“ ராமசாமி அழுதுவிடுவான் போலிருந்தது. ரமேஷ் அவன் முகத்தைப் பார்த்துவிட்டு “சரி. நம்பறேன்“ என்கிறான்.
நான் ஆபிஸ் வந்ததும் இவளுக்கு, திலகாவுக்கு ஃபோன் பண்ணிப் பார்த்தேன்.“
“கிடைச்சாளா?“
“கிடைக்கல்ல.“
“என்ன சேதி வந்தது?“
“சில சமயம் டவர் கிடைக்கல்ல. சில சமயம் நாட் ரீச்சபிள்னு பதிவிட்ட குரல் வந்தது.“
“கடவுளின் பூரண அருள் உனக்கு இருக்குன்னு அர்த்தம்டா.“ ரமேஷ் சிரிக்கிறான். “மாப்ளே, ஒய்ஃப்ன்ற வார்த்தைக்கே புது அர்த்தம் சொல்றாங்க, தெரியுமா?“
“என்ன?“
“NEWS ன்றதை நார்த் ஈஸ்ட் வெஸ்ட் சௌத்னு பிரிக்கிறா மாதிரி, WIFE ன்னால் ஒரிஸ் இன்வைடட் ஃபார் எவர்ன்றாங்க.“
“குட் ஜோக். சிரிப்புதான் வரல்ல.“
“ஆபரேஷன் சக்சஸ். பேஷன்ட் DIED ன்றாப் போல.“
 ஐம் மோர் சீரியஸ்.“
“மோர் சீரியசும் வேணாம். தயிர் சிரியசும் வேணாம்… மொபைல்ல டிரை பண்ணினே. நாட் ரீச்சபிள். ஆபிஸ் லேன்ட்லைன் போன்ல பேச முயற்சி பண்ணினியா?“
“அது லாயக் படாது.“
“ஏன்?“
“அதுல என் மனைவிகூட, ரெண்டு வருஷம் முன்னாடி தான் பேச முடியும்…“
“அப்பிடியா சொல்றே? நீ முயற்சி பண்ணவே இல்லியேடா.“
“இன்னிக்கே என் மாமனார்கிட்டே யிருந்து போன் வந்தது. இல்லியா?“
“ஆமாம்.“
“அது ரெண்டு வருஷம் முந்தைய கால் தான்டா. இப்ப என் மனைவி வீட்ல இருக்கிறாள். அவதான சாப்பாடு – இப்ப மதியம் நான் சாப்பிட்டேனே, அந்தச் சோத்து மூட்டையை கட்டிக் குடுத்தனுப்பினாள்… ரெண்டு வருஷமாச்சி. சமையல்ல அவள் இன்னும் தேறவே இல்லைடா!“
“அதுவா பிரச்னை இப்ப?“ என்கிறான் ரமேஷ்.
“என் மாமனார் பேசினார் இல்லியா? என்ன பேசினார்? திலகாவை பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல ஏத்தி விடறேன்றார். ஒரே சமயத்தில் எனக்கு ரெண்டு மனைவி. அதுவும் ஒரே பேர்ல. ஒருத்தி மதுரைல. இன்னொருத்தி இங்க.“
“டேய், வேற வேற மனைவியா இருந்திருக்கலாம்ன்றியா?“
“ஒத்தைத் தலைவலி ரெட்டைத் தலைவலியா ஆயிட்ட மாதிரி இருக்கு எனக்கு.“
நீ சொல்றது எனக்குப் புரியல்ல. ஒத்துக்கறேன். நீ என்ன பண்றே… போயி பேசாமல் படுத்து நிம்மதியா, மனசில் எதையும் போட்டுக்காமல் தூங்கு. காலைல விஷயம் உனக்கே தெளிவாயிரும். நாளைக்கு வந்து சொல்லு…“
பஸ் நிறுத்தம். ஓடிப்போய் பஸ் ஏறுகிறான் ராமசாமி.
வீடு நோக்கி வருகிறான். குட்டி வெள்ளைகருப்பு புள்ளியுள்ள நாய் ஒன்று அவனைப் பார்த்துக் குரைக்கிறது. நாய் என்றால் அவனுக்கு பயம். ச்சீ. ச்சீ… எனற்படியே விறுவிறுவென்று நடக்கிறான்.
அந்த சோசியக்காரன் இருந்த இடம் காலியாய் இருக்கிறது. லேசான இருட்டு. “இங்கதான் இப்ப ரமணி மெக்கானிக் கடை போட்டிருக்கிறான்…“ என நினைத்துக் கொள்கிறான். ரமணியின் மெக்கானிக் கடை அப்படியே உருமாறி, மரத்தடியாகி சோசியன் இருந்த இடமாக மாறுகிறதாக நினைத்துக் கொள்கிறான்.
தான் நுழைந்த அந்த சந்தைப் பார்க்கிறான். பிறகு தலையாட்டி மறுத்து வழக்கமாக தான் வீடு திரும்பும் வழியிலேயே போகிறான். தூரத்தில் இருந்தே அவன் வசிக்கும் எட்டு மாடிக் கட்டடம் தெரிகிறது. வாசலுக்கு வந்து மின்தூக்கியை அடைகிறான். லிஃப்ட் சமத்தாக, மைனஸ் 1 காட்டாமல் பூஜ்யம் முதல் எட்டு காட்டி நிற்கிறது. ஆச்சர்யம். ஏழாவது மாடி பொத்தானை அழுத்துகிறான். கையில் மொபைல் வைத்திருக்கிறதைப் பார்க்கிறான். அதில் இதுவரை டவர் இல்லாமல் இருக்கிறது. இப்போது திடீரென்று டவர் கிடைக்கிறது. ஆச்சர்யம்.
ஏழாவது மாடி. வெளியே வருகிறான். “வாங்க. ஆபிஸ் முடிஞ்சதா?“ என்று வரவேற்கிறார் பக்கத்து வீட்டு கணபதி. “ஆ! நிகழ்காலம்தான்“ என அவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.
“என்ன சொல்றீங்க?“
“ஒண்ணில்ல ஒண்ணில்ல…“ என மகிழ்ச்சியுடன் தன் வீட்டுக்குள் நுழைகிறான். மனைவி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதில் நரேந்திரமோடி தலையில் தலைப்பாகை கட்டி என்னவோ இந்தியாவுக்கே பொற்காலம் என் ஆட்சி என்கிறாப் போல தோரணை காட்டிக் கொண்டிருக்கிறார்.
உள் அறைக்குப் போய் சட்டையைக் கழற்றுகிறான் ராமசாமி.
இரவு. சிகாமணி காதில் மாட்டிக்கொண்டு மொபைலில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ரசனையில் தலை ஆடிக் கொண்டிருக்கிறது. அடுப்பில் இருந்து இட்லியை எடுக்கிறாள் திலகா. கோகுல் “எனக்கு ஒரு படம் வரையணும் அப்பா“ என்று சொல்லிக் கொண்டே ஒரு புத்தகத்தை எடுத்து வருகிறான்.
“மூணாங் கிளாஸ்னு பேரு. நீங்க படம் வரைஞ்சி குடுத்துக் காமிச்சிட்டீங்க. அதான் மிஸ் ஆ வூன்னா உங்களுக்குப் படம் வரைய குடுத்து அனுப்பிர்றா…“ திலகா மெலிந்த கரண்டியால் இட்லிகளை எடுத்து தட்டில் போடுகிறாள்.
“அப்பா ராத்திரி வரைஞ்சி வைக்கிறேன்டா. நீ பாடம் படி போ…“ என அதை வாங்கிக் கொள்கிறான். பிறகு டைரியை எடுக்கிறான். எழுத ஆரம்பிக்கிறான்.
இன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகள் எதுவுமே எனக்கு விளங்கவில்லை. எல்லாமே நம்ப முடியாத விஷயங்கள். யாரும் வாழ்வில் சந்தித்திராத விஷயங்கள். எதிர்பார்க்கவே முடியாத, யூகிக்கவே முடியாத விஷயங்கள்…
எழுதிக் கொண்டே வந்தவன், நிறுத்திவிட்டு யோசிக்கிறான். விரலைச் சுண்டுகிறான். அட ஆமாம், என மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டிக் கொள்கிறான். பரண் மேல் பழைய டைரிகள். சட்டென ஸ்டூல் போட்டு ஏறுகிறான். 2014 டைரியை எடுக்கிறான். கீழே இறங்கி மேசையில் அந்த டைரியைப் பரபரவென்று பக்கங்களை ஓட்டுகிறான். இதே நாள் இரண்டு வருடம் முன்பு எழுதியதைத் தேடுகிறான்.
“என்ன செய்யறீங்க?“ என்று திலகாவின் குரல்.
டைரியில் இவன் இப்போது எழுதிய அதே வரிகள் ஆரம்பிக்கின்றன.
இன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகள் எதுவுமே எனக்கு விளங்கவில்லை. எல்லாமே நம்ப முடியாத விஷயங்கள். யாரும் வாழ்வில் சந்தித்திராத விஷயங்கள். எதிர்பார்க்கவே முடியாத, யூகிக்கவே முடியாத விஷயங்கள்…
ஆச்சர்யமாய் அதைப் பார்க்கிறான் ராமசாமி.
லிஃப்ட் அவனை வெளியே இறக்கி விட்டுவிட்டுப் போய்விடுகிறது. இருளடர்ந்த வெளி. ஹலோ… என ராமசாமி கத்துகிறான். பதில் இல்லை. ஆனால் இப்போது முதல் தடவை மாதிரி அத்தனை கலவரமாய் இல்லை அவனுக்கு. மெல்ல விசில் அடிக்கிறான். “எலெக்ட்ரிக் ட்ரெய்ன் பிச்சைக்காரன் போல ஆயிட்டேனே…“, கையை இருளில் துழாவியபடி பாடுகிறான். “தர்மம் தலை காக்கும்…“  நேற்றைய அந்த பயம் இப்போது இல்லை. உற்சாகமான குரல். “ரெண்டு கண்ணுந் தெரியாத கபோதிம்மா. ஐந்நூறு ரூபா தர்மம் பண்ணுங்க.“
அப்படியே தூரத்து வெளிச்ச்ம் பார்த்து நடந்து போகிறான். சந்து வருகிறது. வெளியே வந்தால், மரத்தடி சோசியன். அவனைப் பார்த்துப் புன்னகை செய்கிறான்.
“ஒருநாள் பாருங்க சார். எல்லா சோசியரும் இறந்த காலம் சரியாச் சொல்வாங்க. நான் எதிர்காலத்தையே சொல்லுவேன் சார்…“
“என் எதிர்காலம் எனக்கே தெரியும்…“ புன்னகை செய்தபடி ராமசாமி போகிறான்.
அலுவலகம். நண்பன் ரமேஷ் அவனை எதிர்கொள்கிறான். “இப்ப எப்பிடி இருக்கு உன் பிரச்னை?“
“என்ன பிரச்னை?“
“நேத்து என்னவோ சொன்னே?“
“என்ன சொன்னேன்?“
“வருஷக் குழப்பம், அது இதுன்னு?“
“அதுவா? சாரி. நேத்து உன்னைத் தொந்தரவு பண்ணிட்டேன். இல்லே? இனி பண்ண மாட்டேன்…“
“நேத்து நல்லா தூங்கினியா?“
“சூப்பர்.“
“இப்ப இது 2014 தானே?“
“ஆமாம்.“
“2016 இல்லியே?“
“எவன் சொன்னான்?“ என்கிறான் ராமசாமி. இருவரும் சிரிக்கிறார்கள்.
“நேத்து என்ன நடந்ததுடா உனக்கு?“
ஒண்ணும் நடக்கல்லியே.“
“சரி. அதை விட்டுறலாம்…“ என்கிறான் ரமேஷ்.
“விட்டுறலாம்.“ என்கிறான் ராமசாமி.
உள்ளே யிருந்து மேனேஜரின் குரல். “கல்விக்கடன் லிஸ்ட் எடுத்திட்டியா?“
“ஆச்சி சார். வரேன்“ என்றபடி ரமேஷைப் பார்க்கிறான். “இன்றைய நாள் ஆரம்பித்து விட்டது.“ அவன் மேனேஜர் அறைக்கு ஒரு ஃபைலை எடுத்துக் கொண்டு போகிறான்.
*
அத்தியாயம் 4
வாடிக்கையாளர் ஒருவர் ராமசாமியிடம் “டிராஃப்ட் ரெடியா சார்?“ என்று கேட்கிறார். “இதோ அஞ்சி நிமிஷம். தந்திர்றேன்…“
வந்து அவர் டிராஃப்ட்டைப் பெற்றுக் கொண்டு போகிறார். திடீரென்று ஞாபகம் வந்தாப் போல நெற்றியில் தட்டியபடி அவரைக் கூப்பிடுகிறான். “சார் ஒரு நிமிஷம்… அந்த டிராஃப்டைக் குடுங்க.“
“என்னடா கையெழுத்து போட விட்டுட்டியா?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“இல்லை. தேதி தப்பாயிட்டது…“
ரமேஷ் சிரிக்கிறான். “தேதி இல்ல. வருஷம். சரிதானா? ரெண்டு வருஷத்துக்கு அப்பறமா தேதி போட்டுட்டே. இல்லியா? மருந்துக்குதான் இப்பிடி எக்ஸ்பிரி டேட்  ரெண்டு வருஷம் தள்ளிப் போடுவாங்க!“
“நாம அப்பிடிப் போட்டால் டிராஃப்ட் இப்பவே காலாவதி ஆயிரும் “ என்றபடி அவன் வேறு டிராஃப்ட் தயாரித்துக் கொடுக்கிறான்.
“சரியாயிட்டதுன்னியே.“
“என்னது?“
“வருஷக் குழப்பம்.“
“சரி ஆயிரும்.“ ராமசாமி புன்னகை செய்கிறான்.
“இது எந்த வருஷம்?“
“விளையாடாதே. நான் அடுத்த டிராஃப்ட் எழுதணும்“ என்கிறான் ராமசாமி.
டோக்கன் நம்பரைச் சொல்கிறது டெல்லரின் ஒலிபெருக்கி. வங்கி அலுவல்கள் மும்முரமாய் நடக்கின்றன. சுவரில் காந்தியின் போதனை. கஸ்டமர் இஸ் ஆல்வேஸ் ரைட். சலானை பிராசஸ் பண்ணிப் பண்ணி பக்கத்தில் இருக்கும் ட்ரேயில் போடுகிறார் மேலாளர்.
“இன்னிக்கு என்ன சாமி அமைதியா இருக்கு? மௌன விரதமா?“ என்று கேட்கிறான் ரமேஷ்.
“அவருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வருது, இன்னும் ஒண்ணு ரெண்டு மாசத்துலன்னு வதந்தி அடிபடுது. அதான் இவரே அடிப்பட்டாப் போல ஆயிட்டாரு. மூடு அவ்ட்டு.“
“நம்மளை யெல்லாம் மூணே வருஷத்தில் பெட்டியைத் தூக்கச் சொல்றாங்க. அதிக பட்சம் ஆறு வருஷம். இவர் பாத்தியா? சென்னைக்குள்ளியே நாலு ரவுண்டு வண்டி ஓட்டிட்டாரு. சாமர்த்தியம் தான்.“
அப்போது ரமேஷின் மேசையில் இருக்கும் தொலைபேசி அடிக்கிறது. பேசிவிட்டு அவன் “ராதிகா, உங்களுக்குத் தான் அழைப்பு“ என்று போனை ஒரு லெட்ஜர் மேல் வைக்கிறான் ரமேஷ். ராதிகா வந்து போனை எடுத்துப் பேசுகிறாள். ராமசாமிக்கு முதுகு காட்டியபடி அவள் பேசுகிறாள். அதைப் பார்த்துப் புன்னகை செய்து கொள்கிறான் ராமசாமி.
“இப்ப பார் வேடிக்கையை…“ என ரமேஷிடம் மெல்லச் சொல்கிறான் ராமசாமி. அவள் பேசி முடிக்கிறாள். ராமசாமி பக்கம் திரும்புகிறாள்.
“என்ன ராதிகா பெர்மிஷனா?“ என்று கேட்கிறான் ராமசாமி.
“உங்களுக்கு எப்பிடித் தெரியும்? நான் இன்னும் மேனேஜர் அறைக்குப் போகவே இல்லியே?“ என ராதிகா ஆச்சர்யப் படுகிறாள்.
“தெரியும். அதுக்கு மேலயும் தெரியும்.“
“என்ன?“
“உன்னைப் பொண்ணு பாக்க வராங்க. கரெக்டா?“
“நான் ரொம்ப மெல்லமாத் தானே பேசிட்டிருந்தேன். எப்படிக் கண்டுபிடிச்சீங்க?“ என ராதிகா சிரிக்கிறாள்.
“கவலைப்படாதே. இந்தக் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிரும். கல்யாணம் எங்க நடக்கும்னு கூட சொல்லவா? எல் கே எஸ் கல்யாண மண்டபம். ஜாம் ஜாம்னு நடக்கப் போகுது. பார்…“
“போங்க சார். இப்பதான் பொண்ணு பாக்க வராங்க. அதுக்குள்ள கல்யாண மண்டபத்தைப் பத்திப் பேசறீங்க?“
ராதிகா வெட்கப்படுவது அழகாக இருக்கிறது. அவனைத் தாண்டி மேனேஜர் அறைக்குப் போகிறாள்.
“கல்யாணம்னு பேச்சு எடுத்தாலே பொண்ணுக ஒரு பூரிப்பா ஆயிர்றாங்க. இல்லே? பாவம். செவ்வாய் தோஷம்னு ரொம்பக் கவலைப்பட்டுக் கிட்டு இருந்தாள். அது சரி. டேய் நீ என்ன அவளை இந்தப் போடு போடறே? விட்டால் அவளுக்கு எத்தனை குழந்தைன்னு கூட சொல்லிருவே போலுக்கே…“ என்று சொல்கிறான் ரமேஷ்.
“தெரியாது. அவதான் டிரான்ஸ்ஃபர் ஆயிப் போயிருவாளே?“ என சிரிக்கிறான் ராமசாமி.
“GOOD GUESS“ என்கிறான் ரமேஷ்.
பியூன் ரத்தினம் வருகிறான். “சார் எப்பிடி சார் அவ்ளோ நம்பிக்கையாச் சொல்றீங்க? உங்களுக்கு சோசியம் தெரியுமா?“
“தெரியும்.“
“எனக்கு எப்ப கல்யாணம்?“
“உனக்கு கல்யாணமே ஆகாது“ என்கிறான் ராமசாமி. ரமேஷ் கடகடவெனச் சிரிககிறான்.
மாலையில் காற்றாட நடந்து வந்து ஒரு கடையில் தேநீர் அருந்துகிறார்கள் ரமேஷும் ராமசாமியும். நேர் எதிரேதான் அந்த சோசியக்காரன் அமர்ந்திருக்கிறான். “இந்த இடத்தில் இப்ப ஒரு மெக்கானிக் ஷெட் இருக்குடா. மரத்தைத்தான், ச், வெட்டிட்டாங்க. எத்தனை பெரிய மரம் இல்லியா?“
“மரத்தை வெட்டிட்டாங்களா? என்ன சொல்றே?“
“வருஷக் குழப்பம்.“
“இன்னும் தீரல்லியா உனக்கு?“
“அப்பப்ப தீரும். அப்பப்ப திரும்ப வந்திரும்.“
ரமேஷ் அவனைக் குழப்பமாய்ப் பார்க்கிறான். தேநீர்க் கடைக்கு ஒரு டூ வீலர் வந்து நிற்கிறது. அதை நிறுத்த வழி விட்டு ஒதுங்குகிறார்கள்.
“ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க“ என்று குரல்.
”நீ கவலைப்படாதே ரமேஷ்“ என்று அவன் தோளில் கை போட்டபடி ராமசாமி சிரிக்கிறான். திரும்ப வங்கியை நோக்கி நடக்கிறார்கள். “உன் பிரச்னை தீரல்ல போலுக்கேடா?“
“அது – நீ சொன்னியே? அதற்கான கேள்வியை நான் நேத்தி உன்கிட்ட கேட்டுட்டேன். பாவம் நீ என்ன பண்ணுவே? அதன் பதிலையும் நானே தான் சொல்லணும். அதை இப்ப புரிஞ்சிக்கிட்டேன்.“
“அப்ப பதில் சொலலு.“
“இப்ப நான் முன்னைவிட தெளிவாயிட்டேன். அதுதான் பதில். உனக்குச் சொல்ற அளவுக்கு தெளிவான பதில் சொல்லணுமானால் கொஞ்ச நாள் போகட்டும்டா. நானே பதில் சொல்வேன் அல்லது நீயே புரிஞ்சிக்குவே.“
“நில்லு இவனே. நேத்தி ராத்திரி… என்னாச்சி?“
“ஒண்ணும் ஆகல்லியே?“
“அப்டின்னால்?“
“அப்டின்னா அப்டிதான்.“
“திரும்ப நீ உன் காலத்துக்குப் போயிட்டியா?“
“திரும்ப வந்துட்டேனே…“ என சிரிக்கிறான் ராமசாமி.
“நில்லு இவனே?“
அவன் நிற்கிறான். “என்ன?“
“உன்னை நம்பறதா வேணாமான்னு தெரியல்ல எனக்கு.“
“நம்ப வேணாம். அதான் நல்லது.“
“அதெல்லாம் சரி.  உனக்கு பயமா இல்லியா?“
“முன்ன இருந்தது. இப்ப இல்லை“ என்கிறான் ராமசாமி. அப்படியே திகைத்து நிற்கும் ரமேஷை அணைத்தபடி “வா. போகலாம். நீ ஒரு உதவி செய்யணும் எனக்கு…“
“என்ன?“
“நாம ரெண்டு பேரும் பேசிக்கறோமே… அதை வேற யார்கிட்டயும் நீ பகிர்ந்துக்க வேணாம்.“
“ஏன்?“
“பாவம் அவங்களையும் நாம குழப்ப வேணாம் இல்லியா? ஏன் குழப்பணும்?“
“பாயிண்ட்“ என்றவன் சிரித்து, “நான் படறது பத்தாதா…“ என்கிறான் ரமேஷ். “நீ என்னை மாத்திரம் இப்பிடி குழம்ப விட்டுட்டியே.“
“மறந்துரு எல்லாத்தையும்.“
“நல்லா மறக்கறது போ. இந்த மருந்து குடிக்கும் போது குரங்கை நினைச்சிக்கப்டாதுன்னு சொல்லி அனுப்பினாராம் டாக்டர். அந்தக் கதை. சரியா. மருந்துக் குப்பியைத் திறந்தாலே சட்னு குரங்கு ஞாபகம் தன்னைப் போல வந்துரும். அதைப்போல நீ மறந்துருன்னு சொல்லி அனுப்பறே. எதை மறந்து போகணும்னு ஞாபகம் வெச்சிக்கிட்டே இருக்கறதா?“
ராமசாமி சிரிக்கிறான்.
“பெரிசா இதைப்பத்தி நான் யோசிக்கப் போறது இல்லை. தெளியற போது தெளியட்டும். உனக்கே அப்டித்தான் இருக்கும் பாவம்.“
“தட்ஸ் குட்“ என்கிறான் ராமசாமி. “எனக்கே அப்டிதான் இருக்கு.“
அடிக்கடி அவனையே பார்த்தபடி வேலை செய்யும் ரமேஷ். ராமசாமி சிரித்தபடி தன் மேசையில் செல்ஃபோனை வைக்கிறான். அதைக் கண்ணால் காட்டிச் சிரிக்கிறான். புரியாத புதிர் உன் அனுபவம், என்கிற அளவில் உதட்டைப் பிதுக்குகிறான் ரமேஷ்.
‘இரண்டு பேரும் ஒரே சமயத்தில் என்னவோ பேச வருகிறார்கள். ”நீ சொல்லு“ என்கிறான் ராமசாமி. “இல்ல. நீ என்னவோ சொல்ல வந்தியே?“ என்கிறான் ரமேஷ்.
“என்னை நம்ப ஆரம்பிச்சிருக்கியா?“
“இல்… ஆமா“ என்கிறான். “நம்பறதா வேணாமான்னு குழம்பிக்கிட்டிருக்கிறேன்.“
“உன் செல்போன்ல கால் போகுது. என் போன்ல போக மாட்டேங்குது…“
“அட அதெல்லாம் விஷயம் இல்லை…“ என்கிறான் ரமேஷ். அவன் பக்கமாகத் திரும்பி “அவ கல்யாணம் நடக்கிற மண்டபம் கூட சொன்னியே? அவளை உற்4சாகப் படுத்தலாம்னு சொன்னியா?“ என்று கேட்கிறான்.
“எனக்கு சோசியம் தெரியும்“ என்று ராமசாமி சிரிக்கிறான். “இனிமே எல்லாத்தையும் உன்கிட்ட பகிர்ந்து உன்னைக் குழப்ப மாட்டேன். அவசியப்பட்டதை மாத்திரம் அதுவும் அவசியமானால் மாத்திரம் சொல்றேன் …“
“சரி. என்னை லூசாக்கி விட்றாதே.“
“நாம ரெண்டு பேருக்கு மாத்திரம் தெரிஞ்ச இந்த விஷயம், இதை வேற யார்கிட்டயும் மூச்சு விடக் கூடாது. சரியா?“
“மூச்சு விடாட்டி நான் செத்துருவேனே?“ என்று சிரிக்கிறான் ரமேஷ்.
அலுவலகம் முடிகிற வேளை. “அடடா“ என்கிறான் ராமசாமி. “இன்னிக்கு என்ன நாள்?“
“திங்கள்“ என்கிறான் ரமேஷ்.
“அதில்லைடா. இன்னிக்கு என் மனைவியின் பிறந்த நாள். மறந்தே போயிட்டேன்…“
“அடேடே. அப்பிடியா? எத்தனை முக்கியமான விஷயம். வீட்டுக்குப் போனா உன்னை அவ சும்மா விடுவாளா?“
“சரி. ஒரு புடவை எடுத்துக்கிட்டுப் போலாம். அப்பதான் சமாதானம் ஆகும் அவளுக்கு. நான் கிளம்பறேன்…“ என எழுந்து கொள்கிறான் ராமசாமி.
ரங்கநாதன் தெரு. வியாபார நெரிசல். ஊடு புகுந்து போகிறான். ஒரு ஜவுளிக்கடையில் சேலை வாங்க என நுழைகிறான்.
“என்ன வெரைட்டி பாக்கறீங்க?“
“எது நல்லா இருக்கும்?“
“ஷிபான். கார்டன் சில்க். மைசூர் சில்க். சந்தேரி காட்டன். கோட்டா சாரி. ஆர்கென்சா… நம்ம கடைல எல்லா வெரைட்டியும் இருக்கு.“
“எதுவுமே விக்கலியா?“ என்றவன் அவர் முகத்தைப் பார்த்துவிட்டு, “சாரி. ஜோக்“ என்கிறான். “கடைசியா என்ன சொன்னீங்க?“
“ஆர்கென்சா.“
“அதை எடுத்துப் போடுங்க.“
“என்ன ரேன்ஜ்ல பாக்கறீங்க?“
“ஆயிரம் ரூபாய் அளவில்.“
“இதோ“ என்று அவன் முன் புடவைகளைக் குவிக்கிறான் கடைக்காரன். சட்டென சுவாரஸ்யப்பட்டு, ஒரு பெண் அவன் முன்னால் குவிந்திருக்கும் புடவைகளைப் பார்க்கிறாள். “அதெல்லாம் என்ன விலைங்க?“
“நீங்க வேற வெரைட்டி பாத்தீங்களே?“
“இல்லை இது சொல்லிக் குடுங்க.“
“நம்மகிட்ட ஃபிக்சட் பிரைஸ். ஆனால் நாங்களே பத்து பெர்சன்ட் தள்ளுபடி தர்றோம்!“
“குட் ஜோக்“ என்கிறான் ராமசாமி. ‘ஒரு நீலப் புடவையைத் தேர்வு செய்கிறான் ராமசாமி. அதையே அந்தப் பெண் பார்க்கிறாள். சிரித்தபடி வெளியே வருகிறான் ராமசாமி.
வீடு திரும்பும் இரவு. லிஃப்டில் இருந்து வெளியே வருகிறான். பக்கத்து வீட்டு கணபதி கண்ணில் படவில்லை. உள்ளே விளக்கு எரிகிறது. கையில் புடவையைப் பார்த்துக் கொள்கிறான். மகிழ்ச்சியுடன் தன் வீட்டு அழைப்பு மணியை அடிக்கிறான்.
கதவைத் திறக்கிறாள் திலகா. அவன் கண்ட காட்சி அவனைத் திகைப்பில் ஆழ்த்துகிறது. அவள் அவன் வாங்கி வந்திருக்கும் அதே போன்ற புடவையை – நீலப் புடவையை  அணிந்திருக்கிறாள்.
“என்ன ஆச்சர்யமாப் பாக்கறீங்க?“
“புடவை…“
“பரவால்லியே? நீங்க ரெண்டு வருஷம் முன்னால என் பிறந்த நாள்னு எடுத்துக் குடுத்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா?“
“ஞாபகம் இல்லாமல் போச்சு“ என அசடு வழிந்தபடியே தன் கையில் இருக்கும் புடவையை முதுகு பின்னால் மறைத்துக் கொள்கிறான்.
“அந்த ஒரு வருஷம்தான் என் பிறந்த நாள்னு உங்களுக்கு ஞாபகம் இருந்தது…“ என சிரிக்கிறாள். அதுவும் ஞாபகம் இல்லை, என தனக்குள் சொல்கிறான். “சேர்ந்து வெளிய போகலாம்னு பார்த்தேன். உங்க மொபைல்…“
“தொடர்பு எல்லைக்கு அப்பால்னு வந்ததா?“
“ம். இன்னிக்கு ஏன் வீட்டுக்கு வர இவ்ளோ லேட்டு?“
அவன் பதில் சொல்லாமல் வாஷ்பேசினில் முகம் கழுவிக் கொள்கிறான்.
“ஆபிஸ்ல வேலை சாஸ்தியா?“
“உன்கிட்ட ஒரு சௌகர்யம்டி. கேள்வியும் நீயே கேட்டுப்பே…“ சிரிக்கிறான். “பதிலும் டக்குனு அழகா… நீயே சொல்லிருவே.“
மொட்டை மாடியில் காற்று வாங்க உட்கார்ந்திருக்கிறார்கள் சிகாமணியும் ராமசாமியும். ராமசாமியின் மடியில் குழந்தை கோகுல் தூங்கி விட்டான். திலகா அருகே அமர்ந்திருக்கிறவள் கொட்டாவி விடுகிறாள்.
“அக்கா பாவம் நீங்க வருவீங்க வருவீங்கன்னு காத்திட்டிருந்தாங்க அத்தான்.“
“அவ பொறந்த நாள். மிஸ் ஆயிட்டது. நம்ம கல்யாண நாளைக் கொண்டாடிருவோம் திலக்.“
“உங்களுக்கு ஞாபகம் இருந்தால்…“ என்கிறாள் திலகா. “வாங்க. கீழே போலாம்.“
“நான் இங்கியே படுத்துக்கறேன் அத்தான். காத்து நல்லாருக்கு.“
அவளுக்கு மாத்திரம் கேட்கும்படி, “நல்ல சகுனம்“ என்றபடியே குழந்தையைத் தூக்கிக் கொள்கிறான் ராமசாமி. அவள் சிரிக்கிறாள். பின் சொல்கிறாள். “கோகுலும் தூ‘ங்கியாச்சி…“
“அதுவும் நல்ல சகுனம் தான்“ என்கிறான் ராமசாமி. அவள் கொட்டாவி விடுகிறாள் மீண்டும். “ஏ நீ தூங்கிறப் போறே…“
திலகாவின் சிரிப்பொலி. மாடியில் அவர்கள் இறங்கிப் போவதைப் படுத்தபடி சிகாமணி பார்க்கிறான். அவர்கள் இருவரின் தேகமும் கீழிருந்து மேலாய் மெல்லக் கரைந்து இறங்கி காணாமல் போகிறது.
ராமசாமி வீடு. விளக்கு எரிகிறது. சுவரில் அவன் திலகாவை வரைந்த படம். அதில் உள்ள ஆணியில் அவன் போய்ச் சட்டையை மாட்டுகிறான். பக்கத்து வீட்டில் இன்னும் டிவி ஓடிக் கொண்டிருக்கும் சத்தம்.
“திலகா தூங்கிட்டியா?“
“ஆமாம்.“
“நான் இன்னும் தூங்கலடி… எனக்குத் தூக்கம் வரல்ல.“
“ஏன்?“
“தூக்கம் வரல்ல. மூடுதான் வருது.“
“எனக்குத் தூக்கம் வருது.“
“நீ பாட்டுக்குத் தூங்கு.“
““நீங்க தூங்க விடணுமே…“
“அதுசரி. திலகா… ஒரு விஷயம் சொல்லணும் உன்கிட்ட…“
“ம்“
“நான் சொல்லப் போறதை நீ நம்புவியா?“
“நம்பற விஷயமாச் சொல்லுங்க.“
“நீ நம்ப மாட்டே…“
“அப்ப சொல்லாதீங்க.“
“இப்ப?“
“என் தூக்கம் போச்சு…“ என்கிறாள் திலகா. விளக்கு அணைக்கப் படுகிறது.
SONG SONG SONG SONG
அவன் – (உன்மத்தமாய்) உள்ளம் சொக்கும் பொழுது
அவள் (உறக்கச் சடவுடன்) கண்கள் சொக்கும் இரவு
அத்தியாயம் 5
குளித்து விட்டு ஈரத் துண்டோடு வந்து ராமசாமி துணி அலமாரியைத் திறக்கிறான். சமையல் அறைப் பக்கமாகப் பார்த்து “திலக், டிபன் ரெடியா?“ என்று ஒரு குரல் கொடுக்கிறான். தலையில் ஈரத் துண்டோடு திலகா. அவளைப் பார்த்ததும், “தலைக்குக் குளிச்சியா? என்ன விசேஷம்?“ என்று கேட்கிறான்.
“தெரியாத மாதிரி கேட்கறீங்க?“
“ஏன்? என்ன?“
“விசேஷம் இன்னிக்கு இல்லை.“
“பின்னே?“
“நேத்திக்கு…“
“ஓகோ. ஓகோகோ.“ சிரிக்கிறான்.
“அடேய் என் ஆம்பளை படுவா… சிரிக்கவேற செய்யறியா?“ என அவளும் சிரிக்கிறாள்.
“தேங்க் யூ திலக்.“ என்கிறான்.
“பிளஷர் இஸ் மைன்….“
“அவர்ஸ்.“
கையைத் தூக்கி பவுடர் அடித்துக் கொள்கிறான். வாயில் என்னவோ பாடல். சொர்க்கமே என்றாலும்… அது பான்ட்ஸ் பௌடர் போலாகுமா?
“தினசரி லேட்டாப் போறதா மேனேஜர் கிருஷ்ணராஜ் திட்டறார். இன்னிக்காவது சரியாகப் போக முடியுமா பார்க்கிறேன்.“
“கிருஷ்ணராஜா?“ என்கிறாள் திலகா.
“ஏன்?“ என்று திரும்பிப் பார்க்கிறான் ராமசாமி. “அவர் மாற்றலாகிப் போயி வருஷக் கணக்காறதே…“ என்கிறாள் திலகா. “ஆமாம்“ என அசடு வழிகிறான் ராமசாமி. பிறகு சிரியசாகிறான்.
“இல்லைன்னும் பதில் சொல்லலாம் இதுக்கு.“
“அப்டின்னா? என்ன சொல்ல வரீங்க?“
“அதைத்தான் நேத்தே சொல்ல வந்தேன். நீ கேட்கல்ல.“
“இப்ப சொல்லுங்க.“
அவன் ஆரம்பிக்க வருகிறான். அப்போது வாசல் கதவு தட்டப் படுகிறது. கையில் காகிதத்துடன் சிகாமணி உள்ளே வருகிறான்.
“மாடில உட்கார்ந்து கதை எழுதிட்டு வரியா“ என்று கேட்கிறான் ராமசாமி. “அந்த, குழந்தை தொலைஞ்சி போன கதை தான் அத்தான்.“
“கோமாவில் இருந்து அந்தத் தகப்பன் எழுந்துட்டானா?“
“கிளைமாக்ஸ்ல தான் எழுந்திருப்பார். நடக்கிறது எல்லாமே அவருக்கு விளங்கும். ஆனால் அவரால் எதுவும் செய்ய முடியாது. அவர் அப்படியே கிடந்த படுக்கையாக் கிடப்பாரு…“
“அந்த காரக்டர்ல நடிச்சவருக்கு இந்த வருடம் சிறந்த நடிகர் அவார்ட் கிடைக்கும்டா.“
“தேங்ஸ் அத்தான்.“
“அவருக்கு லவ்வு கிவ்வு உண்டா கதையில்?“
“ம். அவர் கனவில்….“
“அடப்பாவி. நீங்க விட்டால் சாமியார் கதையிலேயே லவ் சாங், கனவில் வெச்சிருவீங்க.“
“நல்ல ஐடியா. சாமியாரையே எத்தனை படங்கள்ல வில்லனா கடைசில ஆக்கிர்றோம். சனங்க எதிர்பாராத கிளைமேக்ஸ் வேணும். அதான் சினிமால முக்கியம்.“
“சினிமான்னாலே கோமா, பிளட் கான்சர்னு அவசரத்துக்கு எடுத்து விட்டுர்றீங்களேடா.“
“அப்பதான் கதைல கிரிப் கிடைக்கும். முடிவுலயும் நல்ல டிவிஸ்ட் வைக்கலாம்.“
“சாமர்செட் மாம் கதைல வராத டிவிஸ்ட்டாடா? ஒரு சின்னக் கதை…“
“சொல்லுங்க.“
“முதலாளி ஒரு வேலைக்காரனை எதோ சாமான் வாங்கிவர பஜாருக்கு அனுப்பறார். அங்க அவனுக்கு நேர் எதிரா எமன் வந்து நிக்கறான்…“
“ஐயோ.“
“வேலைக்காரன் பதறியோடி திரும்ப முதலாளிகிட்ட வர்றான். ஐயா நான் எமனைப் பாத்திட்டேன். அவன் என்கிட்ட என்னவோ சொல்ல வந்தாப்ல இருந்தது. பயந்துபோய் நான் ஓடிவந்திட்டேன்…னு நடுங்கினான்.“
சிகாமணி தலையாட்டுகிறான்.
“முதலாளி அவனை ஆறுதல் படுத்தினார். கவலைப்படாதே. உனக்கு நிறையப் பணம் தரேன். அதை வெச்சிக்கிட்டு நீ உடனே திருநெல்வேலிக்குப் போ. உங்க ஊருக்குப் போயி ஒளிஞ்சிக்கோ… அப்டின்னாரு. அவனும் பணத்தை வாங்கிட்டு தப்பிச்சோம் பிழைச்சோம்னு உடனே ரயில் ஏறிட்டான்.“
“சரி.“
“முதலாளிக்கு எமனைப் பார்க்க ஆசையாயிட்டது. அவர் கிளம்பி பஜார்ப் பக்கமாப் போனார். அங்கே அவர் எமனை சந்திச்சார்….“
“யார் கதை அத்தான் இது?“
“சாமர்செட் மாம். கேளு கதையை. அவர் எமன் கிட்ட கேட்டார். என் வேலைக்காரனை நீ பாத்தியாமே? ஆமாம். அவனை இங்க பார்த்தது எனக்கு ஆச்சர்யமாயிட்டது. இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கே. நாளைக்கு சாயந்தரம் நான் உன்னை திருநெல்வேலியில சந்திக்கறதா தானே விதின்னு கேட்க நினைச்சேன்- அப்டின்னானாம் எமன்.“
“சூப்பர் அத்தான்.“
“இதை சினிமாவுல எடுப்பியா?“
“எடுக்கலாமே.“
“எப்பிடி?“
“அவன் முதலாளியைப் பார்க்க நேரா ஓடி வரக் கூடாது அத்தான். வர்ற வழில எதிரே வர்ற சைக்கிளைத் தள்ளி விட்டுட்டு… ஒரு பொண்ணு மேலே மோதிட்டு… மாடிப்படியில குடத்தில் தண்ணி கொண்டு வர்ற ஒருத்தியோட குடத்தைத் தட்டிவிட்டு… குடம்  மாடிப்படியில உருளணும்… அப்பதான் எஃபெக்டிவ்வா இருக்கும்.“
“கதைல கூட வராத, நம்ப முடியாத அநேக விஷயங்கள் நம்ம வாழ்க்கையிலேயே நடக்குதுடா…“
அருகில் கிடக்கும் நாளிதழை எடுத்துப் புரட்டுகிறான் சிகாமணி.
“நேத்து பேப்பர்ல பாத்தியா? ஒரு தோப்புக்குள்ளேர்ந்து குழந்தையோட சிரிப்புச் சத்தம் கேட்டிருக்கு. ஊரே பேய் பேய்னு பயந்திட்டது…“
“அப்படியா? அப்பறம் என்னாச்சி?“
“தோட்டக்காரன் மரத்தடில செல்ஃபோனை விட்டுட்டுப் போயிருக்கான். அதுல ரிங் டோன் எதுன்றே? அதான் குழந்தையோட சிரிப்புச் சத்தம். அது அப்பறந்தான் தெரிஞ்சது…“
சிகாமணி “நல்லா இருக்கு. என் கதையிலேயே வைக்கலாம் போலருக்கே“ என்கிறான்.
“எப்பிடி?“
“அப்பா கோமாவில் படுத்திருக்கிறார். அவரை எழுப்ப என்னென்னவோ முயற்சி பண்ணிப் பார்க்கறாங்க. அவர்குழந்தையோட குரலை ரெகார்டு பண்ணி, அப்பா எழுந்திருப்பா, அப்பா எழுந்திருப்பா…ன்னு போட்டு அவர் பக்கத்தில் சத்தமா வைக்கறாங்க.“
“அஞ்சலி படம் மாதிரியா?...“
“அஞ்சலி படத்தில் அந்தக் குழந்தையை மத்த குழந்தை, ஏந்துரு அஞ்சலி, ஏந்துரு…ன்னு திரும்பத் திரும்ப எழுப்பும். படம் முடிஞ்சிட்டதுன்னு தியேட்டர்ல ஆடியன்ஸ் எல்லாரும் எழுந்துருவாங்க.“
“இங்க, கோமால கெடக்கிற பேஷன்ட் தவிர, பக்கத்து பெட், எதிர் பெட்னு எல்லாரும் எழுந்துர்றாங்க. அவர் மாத்திரம் அப்படியே கெடக்காரு… அதானே?“
“தேசிய விருது கிடைக்குமா அத்தான்?“
“உன்கிட்டப் போயி பேசிட்டிருக்கேன் பாரு. என்னைச் சொல்லணும். திலகா? டிபன் ரெடியா?“
“வரலாம்…“ என்கிறாள் திலகா. எழுந்து போகிறான் ராமசாமி.
சிகாமணி நாளிதழைப் பிரித்து சினிமா செய்திகள் வாசிக்கிறான். “நடிகை இம்சிகா ரகசியத் திருமணம். ஏற்கனவே ரகசியம் இல்லாமல் ஒரு கல்யாணம் பண்ணிட்டதாலே இது ரகசியத் திருமணம் போலருக்கு…“
அவனிடம் இருந்து நாளிதழை வாங்கி தன் பையில் வைத்துக் கொள்கிறான் ராமசாமி. “இன்றைய பேப்பரை இன்னும் நீங்க வாசிக்கலையா அத்தான்?“
“வாசிச்சாச்சு.“
“பின்ன எதுக்கு ஆபிசுக்கு எடுத்திட்டுப் போறீங்க?“
“அதுல ஒரு வேடிக்கை பண்ணலாம்னு பார்க்கிறேன்…“ என்று வெளியே கிளம்புகிறான்.
வங்கிக்குள் நுழைகிறபோதே முதல் சந்தோஷம். கைக்கடிகாரத்தில் மணி பார்க்கிறான் ராமசாமி. அலுவலகம் துவங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது. மணி 09,20. உற்சாகமாக மேனேஜர் அறைக்குள் நுழைகிறான்.
அவர் மேசையில் அன்றைய நாளிதழ் இருக்கிறது. புன்னகை செய்து கொள்கிறான்.
மேனேஜர் கிருஷ்ணராஜ் “என்னய்யா திருந்திட்டியா? சீக்கிரமே வந்தாச்சு?“ என்றவர் முன்னே குனிந்து “வீட்ல எதும் பிரச்னைன்னு சீக்கிரமே வந்திட்டியா?“என சிரிக்கிறார். “ஜஸ்ட் KIDDING. நான் ரொம்ப கடுமையா நடந்துக்கறேன்னு எல்லாரும் ஃபீல் பண்றீங்க. இல்லியா?“
“இல்… ஆமா சார்.“
மேசையில் கிடக்கிற நாளிதழையே பார்க்கிறான் ராமசாமி. கை தன்னைப்போல தன் பையில் இருக்கிற நாளிதழை நிமிண்டுகிறது. மனசின் குரல். பழைய, ரெண்டு வருஷம் முந்தைய பேப்பரை எடுத்திட்டு, இந்தப் பேப்பரை வைக்கிறேன். அவர் கண்டுபிடிக்கிறாரா பார்ப்போம்…
ஒரு நல்ல சேதி.“ என்கிறார் மேனேஜர்.
“என்ன சார்? உங்களுக்கு மாற்றல்… வந்திட்டதா?“
“அது உங்களுக்கு வேணா நல்ல சேதி. எனக்கு என்ன?“
“சாரி சார். கெட்ட சேதி என்ன? சொல்லுங்க…“ அவர் முகம் மாறுகிறதைப் பார்த்துவிட்டு, ‘’KIDDING’’ என்கிறான்.
“நம்ம சென்னையின் சிறந்த கிளைன்னு அவார்டு வாங்கியிருக்கோம். அது எப்பிடி வந்தது? என்னோட அட்மின்ஸ்ட்ரேஷன்னால தானே?“
“அப்பிடியா வெரி குட் சார். வாழ்த்துக்கள் சார்.“
அவர் தன் மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து அண்ணாந்து குடிக்கிறார். சட்டென தன் பைக்குள் இருந்த நாளிதழை எடுத்து மேசையில் இருந்த ரெண்டு வருடம் முந்தைய ‘அன்றைய‘ நாளிதழை மாற்றி வைக்கிறான்.
“என்ன?“ என்கிறார் மேனேஜர்.
“ஒண்ணில்லியே…“
அவர் நாளிதழை வாசிக்கக் காத்திருக்கிறான். அவர் தொடர்ந்து தன் புகழ்  பாட ஆரம்பிக்கிறார். “மொதல்ல ஒரு அப்பா தன் மகன்கிட்ட கடுமையா நடந்துக்கறா மாதிரிதான் பையனுக்குத் தோணும். போகப்போகத் தான் தெரியும்…“
“அப்பாவுக்கே தான் நடந்துக்கறது தப்புன்னு…“
அவர் முறைக்கிறார். “சாரி சார்.“ தொடர்கிறான். “நம்ம வங்கியைப் பொறுத்த மட்டில், எனக்கும் எங்க அப்பாவுக்கும் நாலே வருஷ வித்தியாசம் தான் சார்.“
“எல்லாத்தையும் சொல்லிட்டு ஒரு சாரி சொல்லிர்றே… இப்பவே இந்த ஆட்டம் ஆடறீங்களே? நான் ஸ்ட்ரிக்டா இல்லாட்டி?“
“ஊருக்கே ராஜான்னாலும் குழந்தை மார்ல எத்தும்னு சொல்லுவாங்க. உங்க குழந்தைகள் உங்களுக்கு பயப்படுமா சார்?“
“நம்ம ஆபிஸ் விஷயம் பேசலாம்…“
“அப்ப பயப்படாதுன்னு தெரியுது... இன்னிக்கு என்ன தலைப்புச் செய்தி சார்?“ என்கிறான் அடக்க மாட்டாமல். பேப்பரை எடுத்துப் பாரேண்டா, என்கிறான் மனதுக்குள்.
“ஹெஹ்ஹே“ என அவர் சிரிக்கிறார். “நாமதான் சென்னையின் சிறந்த கிளை. இதைவிட என்ன தலைப்புச் செய்தி?“ என்கிறார்.
“HEADLINE சரி NECKLINE என்ன சார்?“
“அது… இனிமேதான் பேப்பர் படிக்கணும்… வேலைநேரம் ஆரம்பிச்சாச்சி.“ ஆனால் அவர் நாளிதழைப் பிரிக்கிறார். “பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு. பாகிஸ்தானில் குண்டு வெடிக்காத நாள் உண்டா ராமு?“
“இல்லை சார்.“
“சரி. நீ போ உன்  வேலைக்கு… பேப்பர் படிச்சிட்டு உட்கார்ந்திருக்க முடியாது. கிளையன்ட்ஸ் வர ஆரம்பிச்சிருவாங்க“ என நாளிதழை மூடிவிட்டு எதற்கோ எழுந்து போகிறார்.
தன்னிடம் உள்ள பழைய பேப்பரை எடுத்து தலைப்புச் செய்தி வாசிக்கிறான் ராமசாமி. அதே தலைப்புச் செய்தி.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு.
“பாகிஸ்தானில் குண்டு வெடிக்காத நாளே இல்லை“ என தனக்குள் சொல்கிறான் ராமசாமி. நாளிதழை திரும்ப மாற்றி வைத்து விட்டு வெளியே வருகிறான்.
இரவில் வீட்டில் கோகுல் வீட்டுப்பாடம் அம்மாவிடம் வாசித்துக் காட்டுகிறான். ராமசாமி உள்ளே வருவதைப் பார்த்துவிட்டு, “இருடா. அப்பாவுக்குக் காபி கொடுத்துட்டு வரேன்“ என திலகா உள்ளே போகிறாள்.
“சம்பள நாள்னா எல்லாம் நல்லபடியா நடக்கும்“ என்கிறான் ராமசாமி. “பிராகிரஸ் ரிப்போர்ட் வந்ததாடா?“
“இன்னும் வரலப்பா.“
“உனக்கு என்னடா நல்ல மார்க் வாங்குவே. என் பிள்ளையாச்சே…“ என்கிறான். அம்மா முறைப்பதைப் பார்ததுவிட்டு, “யார் டியூஷன்? திலகாவாச்சே“ என்கிறான். கோகுல் வந்து அவன் மடியில் அமர்ந்து கொள்கிறான்.
காபியை வாங்கிக் கொள்கிறான். “எங்க உன் அருமைத் தம்பி?“
“கடைக்கு அனுப்பினேன்.“
‘அவன் தரும் சம்பளத்தை வாங்கி அப்படியே உள்ளே கொண்டு போகப் போனவள், என்ன தோன்றியதோ அங்கேயே எண்ணுகிறாள். “என்னங்க சம்பளம் குறையறாப்ல இருக்கே?“
“ஆகா, ரெண்டு வருஷத்துக்கு முந்தைய சம்பளம்டி இது.“
“என்ன உளர்றீங்க? எதும் ஏடாகூடம் பண்ணி ரெண்டு இன்கிரிமென்ட் கட்டாயிட்டதா?“ அவன் என்ன சொல்ல தெரியாமல் அவன் விழிக்கிறான். “யாருக்காவது கடன் கிடன் குடுத்தீங்களா?“ சட்டென பிரகாசம் ஆகிறான். “திலகா. நீ ஜீனியஸ்“ என்கிறான் ராமசாமி. “உன்கிட்ட ஒரு சௌகர்யம்டி. கேள்வியை சடார்னு நீ கேட்டருவே. நான் பதிலை யோசிக்கறதுக்குள்ள… சரியான பதிலை, அழகா நீயே சொல்லிருவே…“
“எத்தனை தடவை சொல்லியிருக்கேன்.“
“நீ பதில் சொல்றதைச் சொல்றியா?“
“அவன் கேட்டான். இவன் கேட்டான்னு இப்பிடி கேட்டவனுக்கெல்லாம் கடன் கொடுத்தால்…“
“கேட்காதவனுக்குக் குடுக்க மாட்டேன்“ என ராமசாமி சிரிக்கிறான்.
“நீ படிக்க வாடா. எப்படா எழுந்து ஓடலாம்னு இருக்கான். இவன் ஒருத்தன். அப்பனை மாதிரியே, ஒரே ஏமாத்து பேர்வழி…“
“அப்பன்னா தப்புடி…“
“அப்பனை மாதிரியே-ன்னால் இவன் ரெண்டு பேர்னு சொல்லணும். இவன் ஒருத்தன்றியே…“
“உங்களுக்கு ஜோக் அடிக்க நேரம் காலமே கிடையாதா?“ என்றவன் கோகுலைப் பார்த்து, “நீ ஏண்டா ஹி ஹின்னு இளிக்கறே?“ என திரும்புகிறாள்.
“ஒண்ணு என்கூடப் பேசு. இல்லை அவன்கூடப் பேசு. ஒரே டயத்தில் ரஜினி நாலு பேர்கூட சண்டை போடற மாதிரி நீ ஆர்ப்பாட்டம் பண்றே…“
“எவ்வளவு கடன் குடுத்தீங்க?“
“எவ்வளவு குறைஞ்சது?“
“ரெண்டாயிரம்…“
“கணக்கெல்லாம் கரெக்டா வெச்சிருக்கே. உன்னை ஏமாத்த முடியுமா?“
“எப்ப திருப்பித் தரேன்னு சொன்னான்?“
“தந்திருவான். சரி. அவன் கூடவே பேசு.“ என எழுந்து போகிறான் ராமசாமி.
*
(updated every friday)
91 97899 87842

No comments:

Post a Comment